Post No. 14,024
Date uploaded in Sydney, Australia – —28 DECEMBER 2024 .
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ராமாயணத்தில் வரங்கள் (24)
ராமாயணத்தில் வரங்கள் (24) இந்திரன் சீதைக்கு ஹவிஷ்யான்னம் கொடுத்தது!
ச. நாகராஜன்
.
ஆரண்ய காண்டத்தில் சில பிரதிகளில் ஐம்பத்தி ஆறாவது ஸர்க்கத்தில் காணப்படும் ஒரு சம்பவம் இது.
பலாத்காரமாக சீதையைக் கொண்டு சென்ற ராவணன் சீதையை அசோக வனத்தில் கோரமான ராக்ஷஸிகளின் பாதுகாவலில் சிறை வைத்தான்.
அசோகவனத்தில் சிறை வைக்கப்பட்ட சீதா தேவியார் உயிர் வாழ்வதற்கு இன்றியமையாததான அன்னத்தை உட்கொள்வதை விட்டு விட்டு அதை தியாகம் செய்தார்.
இதைக் கண்ட பிரம்மாவுக்குப் பெரும் கவலை உண்டாயிற்று. அவர் உடனே தேவேந்திரனை அழைத்து அவரை இலங்கைக்குச் சென்று சீதா தேவியாரை சமாதானப்படுத்தி உணவு உண்ணச் செய்யுமாறு கூறினார்..
தேவேந்திரன் உடனே தன்னுடன் நித்ரா தேவியை உடன் அழைத்துக் கொண்டு இலங்கைக்கு வந்தான். அங்கே நித்ரா தேவி அங்குள்ள அனைத்து ராக்ஷஸிகளையும் தன் வசப்படுத்தவே அவர்கள் ஆழ்ந்த உறக்கத்தில் ஆழ்ந்தனர்.
உடனே தேவேந்திரன் சீதை அருகே சென்று தான் வந்த காரியத்தைத் தெரிவித்தான்.
சீதையிடம் சென்ற இந்திரன், “நான் தேவராஜன் இந்திரன். உங்களுடைய உத்தமமான காரியம் சித்தி அடைவதற்காக உதவி புரிய வந்துள்ளேன்.” என்கிறான்.
மத்ப்ரஸாத் சமுத்ர ஸ தரிஷ்யாதி பலை: சஹ |
– ஸ்லோகம் 13
“எனது ப்ரஸாதத்தினால் அவர் (ராமர்) சமுத்திரத்தைக் கடந்து வருவார்.”
“நான் தான் இந்த ராக்ஷஸிகளை எனது மாயையால் நித்திரை வசப்படுத்தி இருக்கிறேன். நானே இந்த ஹவிஷ்யான்னம் எடுத்துக் கொண்டு நித்ரா தேவியுடன் உங்களிடம் வந்துள்ளேன்.”
ஏதத்த்ஸ்யஸி மத்தஸ்தாத்ர த்வாம் பாதிஷ்யதே சுபே |
ஸ்ருதா த் ருஷா வ ரம்போரு வர்ஷாணாமயுதைரபி ||
சுபமானவளே! என்னுடைய கையில் உள்ள இந்த ஹவிஷ்யான்னத்தை நீங்கள் எடுத்துக் கொண்டால் ஆயிரக்கணக்கான வருஷங்கள் வரை உங்களுக்கு பசி எடுக்காது; தாகமும் எடுக்காது!” என்று இப்படி இந்திரன் கூற சீதா தேவி இவர் இந்திரன் தானா என்று நினைத்தாள்.
உடனே இந்திரன் தேவதைகள் எந்த லக்ஷணங்களை ராமர் மற்றும் லக்ஷ்மணரிடம் பார்க்கிறார்களோ அதை அப்படியே தத்ரூபமாகக் காட்டவே சீதை இந்திரன் கையிலிருந்த ஹவிஷ்யான்னத்தை எடுத்து உண்டாள்.
இது வர தானமா அல்லது இந்திரனுடைய பலத்தின் பிரபாவமா?
எது எப்படி இருந்தாலும் ஹவிஷ்யான்னம் சீதைக்கு வந்த அனுக்ரஹம் என்று எடுத்துக் கொள்ளலாம்!
**