சௌபாக்யம் அடைய, சங்கடங்கள் விலக, ஒரு எளிய வழி இதோ! (Post.14,142)

 

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,142

Date uploaded in Sydney, Australia – –26 January 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

சௌபாக்யம் அடைசங்கடங்கள் விலகமஹாபாதகம் நசிய ஒரு எளிய வழி இதோ!

ச. நாகராஜன்

மனித வாழ்க்கையில் ஆணாகவோ பெண்ணாகவோ பிறந்தால் எதிர்கொள்ள வேண்டிய பிரச்சினைகள் ஏராளம், ஏராளம்.

இவையெல்லாவற்றையும் எப்படி நீக்கி நாம் வாழ்க்கையில் முன்னேறுவது? சௌபாக்கியத்தை அடைவது?

இதற்கான எளிய வழியை நம் முன்னோர்கள் சொல்லி இருக்கிறார்கள்.

அதைப் பார்ப்போம்.

சௌபாக்யம் அடைய!

சௌபாக்யம் என்றால் என்ன?

ஐஸ்வர்யம்(பணம்,சொத்து), வீரம் அல்லது வலிமை, புகழ், அழகு, ஞானம், வைராக்யம் ஆகியவையே சௌபாக்யம் எனப்படும்.

லலிதா சஹஸ்ரநாமத்தில் 117வது நாமமாக அமைவது பக்த சௌபாக்யதாயினி என்ற நாமம். பக்தர்களுக்கு சகலவிதமான சௌபாக்கியத்தையும் கொடுப்பவள் என்று இதற்கு அர்த்தம்.

பகம் என்றால் ஶ்ரீ, காமம், மாஹாத்ம்யம், வீர்யம், யத்னம், அர்கம் (பிரகாசம்), கீர்த்தி ஆகியவற்றிற்குப் பெயராகும். இவைகளுக்கெல்லாம் லலிதாம்பிகை இருப்பிடமாகையால் ஸுபகா என்று அவளுக்குப் பெயர். அவளுடைய இயல்பான தன்மையே சௌபாக்யம்.

மங்களகரமான காரியங்களில் பயன்படுத்துவதால் அஸ்வத்த மரம், முளை விட்ட ஜீரகம், கொத்துமல்லி, இரண்டும், பசும்பால் (அதன் பேதங்களான தயிர், வெண்ணெய், நெய் உட்பட) மஞ்சள் நிறமான வஸ்துக்கள், புஷ்பம் உப்பு ஆகிய எட்டும் சௌபாக்யாஷ்டகம் என்று சொல்லப்படும்.

ஸூஷ்டு என்றால் சிறந்த என்று பொருள் பாக்கியம் என்றால் நியதி அல்லது அதிர்ஷ்டம். அதை உடைய பாக்கியம் சௌபாக்யம். இதை பக்தர்களுக்குக் கொடுப்பவள். அதாவது பக்தர்கள் எதிர்பார்க்காத ஐஸ்வர்யங்களைத் தருபவள் லலிதாம்பிகை. அம்பாளின் நாமங்கள் அனைத்தும் தருபவையாகும்.

ஆதி சங்கரர் சௌந்தர்ய லஹரியில் தேவியின் பூஜை மஹிமை பற்றிச் சொல்லும் போது ஸௌபாக்ய ஜநநீம் என்று கூறியருள்கிறார்.

இதை 5ம் ஸ்லோகத்திலும் மீண்டும் 51வது ஸ்லோகத்திலும் கூறி அருள்கிறார். சர்வ ஜன வசீகரணத்திற்கும் கீர்த்தி அடைவதற்கும் உச்சரிக்க வேண்டிய ஸ்லோகங்கள் இவை. இதில் ஸௌபாக்ய ஜனனீ என்று அவர் கூறுவது உற்று நோக்கத் தக்கதாகும். (நனனீ – தாய்; தாயினி – வழங்குபவள்)

இன்னும் பல அர்த்தங்கள் ஸௌபாக்யம் என்ற சொல்லுக்கு உள்ளது.

இதைப் பெற எளிய வழி. தினமும் காலை நேரத்தில்

உமா உஷா வைதேஹீ ரமா கங்கேதி பஞ்சகம் |\

ப்ராதரேவ ஸ்மரோந்நித்யம் சௌபாக்யவர்ததே சதா ||

என்று உச்சரிப்பதேயாகும்!

உமா, உஷா, வைதேஹீ,  ரமா, கங்கா என்ற ஐந்து நாமங்களையும் காலையில் உச்சரிப்பவர் என்றுமே சௌபாக்யத்துடனேயே இருப்பர் என்பது இதன் பொருள்

சங்கடங்கள் நீங்க

ஒருவரைப் பார்த்து வாழ்க்கையில் நீங்கள் அடையும் சங்கடங்களைச் சொல்லுங்கள் என்றால் ஒரு பெரிய பட்டியல் வரும். ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு பட்டியல் வரும். ஆகவே சங்கடங்களைப் பற்றிய விளக்கமே தேவை இல்லை. அனைவருக்கும் இது புரியும்.

ஆகவே சங்கடங்களை விலக்க ஒரு எளிய வழி:

தினமும் காலை நேரத்தில்,

 ஹரம் ஹரிம் ஹரிச்சந்த்ரம் ஹனுமந்தம் ஹலாயுதம் |

 பஞ்சகம் வை ஸ்மரோந்நித்யம் கோர சங்கட நாசனம் ||

என்று உச்சரிப்பதேயாகும்.

ஹரன், ஹரி, ஹரிச்சந்திரன், ஹனுமந்தன், ஹலாயுதன் ஆகிய ஐந்து பேரையும் உச்சரித்தால் கோரமான சங்கடங்கள் விலகும் என்பது இதன் பொருள்.

மஹாபாதகம் நசிந்து போக

மஹாபாதகங்களை நினைத்தாலேயே நடுக்கம் வரும். அவை எவை?

அந்தணரை (அந்தணர் உள்ளிட்டோரை) கொலை செய்வது, தங்கம் (உள்ளிட்டவற்றை) திருடுவது, மது அருந்துவது, குரு மனைவி (அல்லது இன்னொருவர் மனைவி)யுடன் தகாத உறவு கொள்வது), மேலே சொன்ன பாதகங்களைச் செய்தோருடன் தொடர்பு கொள்வது  ஆகியவை பஞ்சமகா பாதகம் என்று சாந்தோக்ய உபநிடதமும் உஸான ஸ்மிருதியும் கூறுகின்றன.

காம, க்ரோத, லோப,  மோஹ, மத, மாத்ஸர்யம், அஹங்காரம் ஆகிய ஏழும் சப்த தோஷங்கள் என்று கூறப்படுகின்றன.

இப்படி பல பாதகங்களும் தோஷங்களும் நம்மைச் சொல்லொணா துன்பங்களை அனுபவிக்க வைக்கும்.

இந்த மஹாபாதகம் நசிக்க ஒரு எளிய வழி – தினமும் காலையில்

அஹல்யா த்ரௌபதி தாரா குந்தி மண்டோதரி ததா |

பஞ்சகம் நாம ஸ்மரேந்நித்யம் மஹாபாதக நாஸனம் ||

என்று உச்சரிப்பதேயாகும்.

அஹல்யா, த்ரௌபதி,தாரா, குந்தி, மண்டோதரி ஆகிய ஐந்து நாமங்களையும் உச்சரித்தால்  மஹாபாதகம் நசியும் என்பது இதன் பொருள்.

அஹல்யா,தாரா, மண்டோதரி, சீதா, த்ரௌபதி என்று உச்சரிக்கலாம் என இன்னொரு ஸ்லோகம் மூலம் அறிகிறோம்.

ஆக இந்த மூன்று ஸ்லோகங்களையும் சில விநாடிகளில் கூறினால் நமது வாழ்க்கையில் சௌபாக்யம் பெறலாம்; சந்தோஷமாக கீர்த்தியுடன் வாழலாம்! இது ஆன்றோர் வாக்கு.

,இவற்றைக் காலையில் தினமும் உச்சரித்து, பலனை அடைந்து, இது சரிதான் என்பதை மெய்ப்பிக்க வேண்டியது நாம் தானே!

அந்தஸ்து, பால், இனம், ஜாதி, பணம் எதுவும் தேவையில்லை இவற்றை உச்சரிக்க! மனம் இருந்தால் மார்க்கமுண்டு -சில விநாடிகள் போதும் நாம் வளமாக வாழ! செய்வோம். செழிப்போம்!

***

Leave a comment

Leave a comment