
WRITTEN BY Brhannayaki Sathyanarayanan
Post No. 14,147
Date uploaded in Sydney, Australia — 27 January 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
லண்டன், ஆஸ்திரேலியா, இந்தியா ஆகிய நாடுகளிலிருந்து 26-1-2025 அன்று ஒளிபரப்பப்பட்ட ஞானமயம் நிகழ்ச்சியில் இடம் பெற்ற உரை.
ஆலயம் அறிவோம்!
வழங்குவது பிரஹன்நாயகி சத்யநாராயணன்.
பூவினுக்கு அருங் கலம் பொங்கு தாமரை
ஆவினுக்கு அருங் கலம் அரன் அஞ்சு ஆடுதல்
கோவினுக்கு அருங் கலம் கோட்டம் இல்லது
நாவினுக்கு அருங் கலம் நமச்சிவாயவே
திருநாவுக்கரசர் திருவடி போற்றி!
ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம்
பெறுவது தென்காசி திருத்தலமாகும்.
தமிழ்நாட்டில் திருநெல்வேலியிலிருந்து 53 கிலோமீட்டர் தொலைவில் இந்தத் திருத்தலம் உள்ளது.
இறைவர் : காசி விஸ்வநாதர்
இறைவி : உலகம்மை நாயகி
பொங்கி வரும் குற்றால நீர்வீழ்ச்சியிலிருந்து உருவாகி ஒடும் சிற்றாறு ஆற்றின் கரையில் அமைந்துள்ளது இந்தத் திருத்தலம். திருக்குற்றாலத்திற்கு ஆறு கிலோமீட்டர் முன்னதாகவே இந்தத் திருத்தலம் அமைந்துள்ளது.
இங்குள்ள காசி விஸ்வநாதர் ஆலயம் எழுந்தது குறித்து சுவையான ஒரு வரலாறு உண்டு.
பிற்காலப் பாண்டிய மன்னர்களில் பெரிதும் போற்றப்பட்டு நல்லாட்சி செய்தவன் பராக்கிரம பாண்டியன். கி.பி. 1422ம் ஆண்டு வாக்கில் இவன் தென்காசியைத் தலைமை இடமாகக் கொண்டு ஆட்சிப் பொறுப்பை ஏற்றான்.
அவன் வடக்கில் காசி சென்று விஸ்வநாதரைத் தரிசிக்க விழைந்த போது அவன் கனவில் சிவபிரான் தோன்றி எனக்கு தென்காசியில் ஒரு கோவில் கட்டுக என்று அருள் பாலித்துக் கூறினார்.
உடனே 15 ஏக்கர் பரப்பளவில் சுமார் 17 ஆண்டுகளில் மிகப் பெரும் கோவிலை அமைத்தான் பராக்கிரம பாண்டியன்.
ஒன்பது நிலைகள் கொண்ட இந்த கோபுரத்தின் உயரம் 178 அடி ஆகும்.
கோவிலின் முகப்பில் இரு யானைகள் உள்ளன. அடுத்து உள்ள திறந்த வெளியைத் தாண்டியதும் திருவோலக்க மண்டபம் உள்ளது. இங்கு நவகிரகங்கள் ஒரே கல்லில் செதுக்கப்பட்டு கிழக்கு நோக்கி காட்சி அளிக்கின்றன.
வேறெங்கும் காண முடியாத தமிழணங்கின் சிலைகள் இங்கு உள்ளன.
ஊர்த்துவ தாண்டவர், வீரபத்திரர், அக்கினி வீரபத்திரர், காளி, மன்மதன், ரதி ஆகியோரின் திருவுருவங்கள் அற்புத வேலைப்பாடுகள் கொண்டவை.
ஒரே வளாகத்துக்குள் சிவன் கோவிலை அடுத்து உலகம்மை திருக்கோவிலும், பால முருகன் கோவிலும் அமைந்துள்ளது.
திருஓலக்க மண்டபத்தை அடுத்து நந்தி மண்டபம் உள்ளது. அதை அடுத்து மணி மண்டபம் அமைந்துள்ளது.
இங்குள்ள மண்டபத்தில் உள்ள திருமாலின் கையில் கரும்பு இருப்பது இங்குள்ள ஒரு புதுமையாகும்.
ஶ்ரீ ராமர், அனுமன், சீதை, வாலி, சுக்ரீவன், கண்ணன், மார்க்கண்டேயர் சிவலிங்கத்தைத் தழுவுதல் உள்ளிட்ட ஏராளமான காட்சிகள் கல்லிலே கலைவண்ணமாக மிளிர்கின்றன.
மணிமண்டபத்தை அடுத்து மகா மண்டபம் உள்ளது. அங்கும் ஏராளமான சிற்பங்கள் உள்ளன. அதை அடுத்து அமைந்திருக்கும் கர்பக்ரஹத்தில் தான் காசி விஸ்வநாதர் எழுந்தருளியுள்ளார்.
இங்கு கன்னி விநாயகர் கோவில் கொண்டுள்ளார். கோயிலைச் சுற்றி உள்ள வீதிகளில் சுந்தர விநாயகர், செண்பக விநாயகர், வெயிலுகந்த விநாயகர், அம்பல விநாயகர், மெய்கண்ட விநாயகர் எனப் பல விநாயகர்களை தரிசிக்கலாம்,.
இங்குள்ள ஜுரதேவர் மூன்று கால், மூன்று கைகளுடன் காட்சி அளிக்கிறார். ஜுரத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வந்து இவரது நெற்றியில் மிளகு பற்று இட்டு, குளித்து, காய்ச்சலைப் போக்கிக் கொள்வது மரபாகிறது.
வடக்கே காசியில் கங்கையில் குளித்தால் முக்தி, ஆனால் தென்காசியில் பிறந்தாலே முக்தி என்பது ஐதீகம்.
இந்த தென்காசி தலத்திற்கு சச்சிதானந்தபுரம், முத்துத் தாண்டவ நல்லூர், ஆனந்த கூத்தனூர், சைவ மூதூர், தென்புலியூர், குயின் குடி, செண்பகப் பொழில், சித்தர் வாசம், சிவ மணவூர், சப்த மாதர் ஊர், சித்திர மூல ஸ்தானம், மயிலை குடி, கேசிகை உள்ளிட்ட பல பெயர்கள் உண்டு.
கோவிலை அமைத்த பராக்கிரம பாண்டியன் சிறந்த சிவ பக்தன். இந்தக் கோவிலில் ஏதேனும் பின்னொருகாலத்தில் பழுது ஏற்படுமாயின் அப்போது அதை நீக்கி கோவிலைப் புரப்பார்களுக்கு இப்போதே பணிந்து வணங்குகிறேன் என்று ஒரு பாடலாக கல்வெட்டில் செதுக்கி வைத்தான் அவன்.
ஆராயினும் இந்தத் தென்காசி மேவும் பொன் ஆலயத்து
வாராததோர் குறம் வந்தால் அப்போது அங்கு வந்து அதனை
நேராகவேயொழித்துப் புரப்பார்களை நீதியுடன்
பாரோர் அறியப் பணிந்தேன் பராக்கிரம பாண்டியனே
என்பது அவனது கல்வெட்டுச் செய்யுள் ஆகும்.
இன்னொரு பாடலில் இக்கோவிலில் ‘திரி சேர் விளக்கு’ எனக் காப்பவர்களின் பாதம் பணிகின்றேன் என்கிறான் பெரும் மன்னன்.
அரிகேசரிமன் பராக்ரம மாறன் அருளால்
வரி சேர் பொழில் அணி தென்காசிக் கோயில் வகுத்து,
வலம்புரி சேர் கடல் புவி போற்ற வைத்தேன்,
அன்பு பூண்டு இதனைத் திரி சேர் விளக்கெனக் காப்பார்
பொற்பாதம் என் சென்னியதே
என்பது அவனது பாடல் ஆகும்.
பராக்ரம பாண்டியனைப் பற்றிய ஏராளமான பாடல்கள் அவனது சிவபக்தியை வியந்து பாராட்டுகின்றன.
காலப்போக்கில் 250 ஆண்டுகளுக்கு முன்னர் தீவிபத்து ஏற்பட்டு இடி விழுந்து கோபுரம் இரண்டாகப் பிளந்தது. சமீப காலத்தில் 1982ல் திருப்பணி துவங்கி 1990இல் நிறைவுற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.
பல்லாண்டுகளாக ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் காசி விஸ்வநாதரும் உலகம்மை நாயகியும் அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம்.
தென்னாடுடைய சிவனே போற்றி!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!!
—subham—-
tags- தென்காசி தலம்.