

Post No. 14,148
Date uploaded in Sydney, Australia – 27 January 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
(collected from popular national newspapers and edited by me)
செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;
லண்டன் மாநகரிலிருந்து செய்திகளை வாசித்து வழங்குபவர் வைஷ்ணவி ஆனந்த்
அனைவருக்கும் வணக்கம்
இன்று ஞாயிற்றுக்கிழமை ஜனவரி 26–ம் தேதி 2025-ம் ஆண்டு
****
அனைவர்க்கும் இந்தியக் குடியரசு தின வாழ்த்துக்கள் ; ஆஸ்திரேலியா தின வாழ்த்துக்களும் உரித்தாகுக .
*****
முதலில் கும்ப மேளா செய்திகள் :
கங்கையில் புனித நீராடினார் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்
உ.பி., மாநிலம் பிரயாக்ராஜில் நடக்கும் மகா கும்பமேளாவில் ஜனவரி 22-ஆம் தேதி அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தனது அமைச்சர்களுடன் கங்கையில் புனித நீராடினார்.
கங்கை, யமுனை, மற்றும் புராணங்களில் கூறப்படும் சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர். தவிர வெளிநாட்டினர், துறவிகள், ஆன்மிகவாதிகள் என தினம் தினம் லட்சக்கணக்கானோர் பிரயாக்ராஜ் நகரில் கூடி கங்கை நதியில் புனித நீராடி வருகின்றனர்.
திரிவேணி சங்கத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தனது 54 அமைச்சர்களுடன் கங்கையில் புனித நீராடினார். அவர்களுடன் அரசு உயரதிகாரிகளும் புனித நீராடினர்.
இதுவரை சுமார் 10 கோடி பேர் கும்பமேளாவிற்கு வருகை தந்து, திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர்.
கும்பமேளாவில் சிருங்கேரி சங்கராசார்யார்
சிருங்கேரி சங்கராசார்யார் வட இந்தியாவுக்கு விஜயம் செய்து மஹா கும்பமேளாவில் பங்கேற்கிறார்.
சிருங்கேரி ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகர பாரதீ, சுவாமிகள் ஜனவரி 16ம் தேதி முதல் பிப்ரவரி 13ம் தேதி வரை வட இந்தியாவில் விஜய யாத்திரை செய்கிறார்
பிரயாக்ராஜ் சிருங்கேரி மட கிளையில், ஸ்ரீ சாரதாம்பாள், கணபதி, ஆதிசங்கரர் எழுந்தருளி இருக்கும் கோவிலின் கும்பாபிஷேகத்தையும் சுவாமிகள் நடத்தி வைக்கிறார்.
பிரயாக்ராஜ் நகரில் ,ஜனவரி 24-ம் தேதி முதல் 30ஆம் தேதி வரை
ஸ்ரீ சந்திரமௌலீஸ்வர பூஜையும் செய்கிறரர் கும்பமேளாவில் சுவாமிகள் புனித நீராடுகிறார்.
.ஜனவரி 31ம் தேதி வாரணாசி சென்றடைகிறார்.
காசியில் அன்னபூர்ணா கோவிலின் கும்பாபிஷேகம், வேத சம்மேளனம் ஆகியவை ஸ்ரீ மடம் சார்பாக நடைபெற உள்ளன.
பிப்., 9 ல் அயோத்தி செல்லும் சுவாமிகள் 11-ம் தேதி வரை அயோத்தியில் தங்கி ஸ்ரீ ராமர் கோவிலில் தரிசனம் செய்ய உள்ளார். பின்னர், 11ம் தேதி கோரக்பூர் சென்றடைந்து பின் பிப்., 13ல் சிருங்கேரி வந்தடைகிறார்.
****
மேலும் ஒரு நற்செய்தி
கும்பமேளாவிற்கு வருகை தரும் மாற்றுத் திறனாளிகளுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில் நாராயண் சேவா சன்ஸ்தான் என்ற தனியார் தொண்டு நிறுவனம் செயலாற்றி வருகிறதுஒரு செயற்கை உடல் பாகத்தின் விலை சுமார் ரூ.90,000 ..இந்த செயற்கை உறுப்புகளை மகா கும்பமேளாவிற்கு வரும் மாற்றுத் திறனாளிகளுக்கு நாராயணசேவா சன்ஸ்தான் தொண்டு நிறுவனம் இலவசமாக வழங்கி வருகிறது. மேலும் அவர்களுக்கான சிகிச்சைகளையும் இலவசமாக வழங்குகிறது.
****
வள்ளலார் சர்வதேச மைய பணிக்கு உச்சநீதிமன்றம் தடை!

வள்ளலார் சத்திய ஞான சபை பெருவெளியில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகளுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.
கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலார் சத்திய ஞானசபை அருகே உள்ள பெருவெளியில் 100 கோடி ரூபாய் மதிப்பில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கப்பட்டு வருகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் மற்றும் பாஜக ஆன்மிக ஆலய மேம்பாட்டு பிரிவு மாநில செயலாளர் வினோத் ராகவேந்திரா, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.
அதனை விசாரித்த நீதிமன்றம், Site-A, Site-B என இரண்டாக பிரித்து Site-B பகுதியில் கட்டுமான பணிகளை தொடர தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. இதையடுத்து கட்டுமான பணிகளுக்கு தடை விதிக்க கோரி வினோத் ராகவேந்திரா உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், வள்ளலார் சர்வதேச மைய SITE-B கட்டுமான பணிகளுக்கு தடை விதித்து உத்தரவிட்டது.
*****
பிராமணர்களை இழிவுபடுத்துவதா? பொன்முடிக்கு ஹிந்து அமைப்பு கண்டனம்
மதுரை: ‘ஹிந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் சோலைகண்ணன் அளித்த பேட்டி:தி.மு.க., சட்டத்துறை மாநாட்டில் அமைச்சர் பொன்முடி, பிராமணர்களை இழிவுபடுத்தும்விதமாக பேசியுள்ளார்; அது கண்டிக்கத்தக்கது. நீதிபதிகள், வழக்கறிஞர்களாக வேறு ஜாதியினர் வரக்கூடாது என, எந்த பிராமணரும் சொல்லவில்லை. அவர்கள் படிக்கக் கூடாதென்றும் தடுக்கவில்லை. அம்பேத்கருக்கு குருவாக இருந்தவர் பிராமணர்.
பிராமணர்கள் மற்ற சமூகத்தினரை முன்னேறவிடவில்லை என பொய்யான குற்றச்சாட்டை அமைச்சர் வைத்தது, திட்டமிட்ட பேச்சு.
தி.மு.க.,வுக்கு வரவு செலவு பார்க்க ஆடிட்டராக, தேர்தல் வெற்றி பெற ஆலோசகராக, கட்சி நிகழ்ச்சி முதல் பிறப்பு, இறப்பு வரை அனைத்து குடும்ப நிகழ்ச்சிகளுக்கும் பிராமணர்கள் தேவை. ஆனால், மேடையேறினால் பிராமணர்கள் கசக்கிறார்கள்.தேச பக்தியுள்ள பிராமணரை வந்தேறிகள் என்கின்றனர். இதுதான் சமூக நல்லிணக்கமா?
தாழ்த்தப்பட்ட சமூகத்தை தவறாக பேசினால் எப்படி பி.சி.ஆர்., சட்டம் பாய்கிறதோ, அதேபோல, பிராமணர் சமூகத்தை தவறாக பேசினாலும் பாயும் வகையில், புதிய சட்டம் கொண்டு வர வேண்டும். இவ்வாறு சோலைக்கண்ணன் கூறினார்.
*****
திருப்பதியிலிரூந்து வரும் சுவையான செய்தி
திருப்பதியில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு இலவசமாக அன்னபிரசாதம் வழங்கப்பட்டு வருகிறது. வழக்கமாக சாம்பார், ரசம், மோர், பொரியல் போன்றவை தான் அன்ன பிரசாத மெனுவில் இடம் பிடித்திருக்கும். இது தவிர இரவு உணவின் போது உப்புமா, சப்பாத்தி, கற்கண்டு சாதம் போன்றவைகளும் வழங்கப்படுவது உண்டு. ரதசப்தமி நாளான பிப்ரவரி 4ஆம் தேதி முதல் பக்தர்களுக்கு மசால் வடையுடன் அன்னதானம் வழங்கப்படும் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது
இன்னுமொரு செய்தி
திருப்பதி வெங்கடாசலபதி கோவிலுக்கு
சென்னையை சேர்ந்த வர்தமான் ஜெயின் என்ற பக்தர் ரூ.6 கோடியை நன்கொடையாக வழங்கி உள்ளார்.
வர்தமான் ஜெயின் தனது மனைவியுடன் சென்று பெருமாளைத் தரிசனம் செய்த பிறகு, திருப்பதி தேவஸ்தான அதிகாரி செளத்ரியிடம், ரூ.6 கோடிக்கான டி.டி. யை வழங்கினார்.
****
இலவச டோக்கன் பற்றிய அறிவிப்பு
பெருமாளைத் தரிசனம் செய்வதற்கு பக்தர்களுக்கு முன்பு போலவே எந்த நாளுக்கு தரிசன டோக்கன் வேண்டுமோ அந்த நாளிலேயே தேதி, நேரம் குறிப்பிடப்பட்ட (டைம் ஸ்லாட் டோக்கன்) டோக்கன்கள் வழங்கப்படும் என்று திருப்பதி திருமலை தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
****

கோவில் நகரங்களில் மதுவுக்கு தடை- ம.பி.,யில் புதிய அறிவிப்பு
மத்தியபிரதேசத்தில், ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்த தலங்களாக கருதப்படும் 17 நகரங்களில் மதுவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மத்தியபிரதேசத்தில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்தும் நடவடிக்கைகளில் அம்மாநில பாரதீய ஜனதா கட்சி அரசு தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு கட்டமாக, 17 ஆன்மிக நகரங்களில் மதுவுக்கு தடை விதிக்கப்படுவதாக முதல்வர் மோகன் யாதவ் கூறி உள்ளார். நரசிங்கபூர் மாவட்டத்தில் நிகழ்ச்சி ஒன்றில் அவர் பங்கேற்ற போது இதை தெரிவித்தார்.
முதல்வர் மோகன் யாதவ் மேலும் கூறியதாவது;
ஆன்மிக நகரங்களின் புனிதத்தை காக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்து வந்தனர். அவர்களின் கோரிக்கைகளுக்கு ஏற்ப மத்திய பிரதேச மாநிலத்தில் எங்கெல்லாம் ராமர், கிருஷ்ணர் கோவில்கள் உள்ளதோ அங்கெல்லாம் மதுபானம் தடை செய்யப்படுகிறது என்று மோகன் யாதவ் கூறினார்.
***
சபரிமலை வருமானம் அதிகரிப்பு: கடந்த ஆண்டை காட்டிலும் ரூ.80 கோடி அதிகம்
சபரிமலையில், மகரவிளக்கு சீசனில் வருமானம் ரூ.440 கோடி கிடைத்து உள்ளது. இது கடந்த ஆண்டை காட்டிலும் ரூ.80 கோடி கூடுதல் . கேரள மாநில தேவசம் போர்டு துறை அமைச்சர் வாசவன் கூறியுள்ளார்
மகர விளக்கு காலத்தில் சபரிமலைக்கு கிடைத்த வருமானம் ரூ.440 கோடியாக அதிகரித்து உள்ளது. இது கடந்த ஆண்டை காட்டிலும் 80 கோடி ரூபாய் அதிகம் ஆகும். இக்காலகட்டத்தில் 6 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஒரு நாளில் அதிகபட்சமாக 1.8 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
பம்பை முதல் சன்னிதானம் வரை ROPE WAY ‘ரோப் வே’ திட்ட கட்டுமான பணிகள் அடுத்த மாதம் தொடங்கும்.ரூ.250 கோடியிலான இந்த திட்டம் 1½ ஆண்டுகளில் முடிக்கப்படும். ‘ரோப் வே’ சரக்குகளை கொண்டு வரவும், வயதான, நோய்வாய்பட்ட பக்தர்களை அழைத்து வரவும் பயன்படுத்தப்படும். பக்தர்களை சுமந்து செல்லும் டோலி சேவை ரத்து செய்யப்படும் என்றும் அமைச்சர் வாசவன் பகர்ந்தார்.
*****

கோமியம் விவாதம்
சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி கோமியம் குறித்து சமீபத்தில் பேசிய வீடியோ ஒன்று வைரலானது. இது பெரிதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் கிளம்பிய விவாதத்தில் எதிரும் புதிருமாகப் பலரும் பேசி வருகின்றனர். திராவிடப் பத்திரிகைகள் அவர் பேசியதை வேண்டுமென்றே திரித்து வெளியிட்டு வருகின்றன . கோமியம் என்பது பசு மாட்டின் சிறுநீர் ஆகும்
அவர் மீண்டும் இது பற்றிக்கூறியபோது தானே கோமியம் அடங்கிய பஞ்ச கவ்யத்தைச் சாப்பிட்டிருப்பதாகவும் இதில் ஆபத்து எதுவும் இல்லை என்றும் விளக்கியுள்ளார்.
காமகோடி சொன்னது புதியது இல்லை. சித்த ஆயுர்வேத மருத்துவ முறைகளில் எழுதப்பட்ட உண்மையை அவர் மீண்டும் எடுத்துரைத்துள்ளார் .
பசுவின் கோமியம் டாஸ்மாக்கைவிட மோசமானது இல்லை என பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
ஆயுர்வேதத்தில் பசுவின் கோமியம், அமிர்த நீர் என சொல்லப்பட்டிருக்கிறது. 80 வகையான நோய்களுக்கு பசுவின் கோமியம் மருந்தாக உள்ளது; .மாட்டு சாணம் கிருமி நாசினி என்றால், மாட்டு கோமியத்திலும் கிருமி நாசினி இருக்கிறது. மாட்டுக்கறியை சாப்பிடுகிறார்கள், மாட்டுச் சாணத்தை பயன்படுத்துகிறார்கள். விஞ்ஞான பூர்வ அமிர்த நீரான கோமியத்தை பயன்படுத்தக்கூடாது என ஏன் கூறுகிறார்கள்?
கோமியத்தில் ஆராய்ச்சி பூர்வமாக, நுண்ணுயிர் கிருமிகளை தடுப்பதை கண்டுபிடித்து இருக்கிறார்கள். அதனால்தான் வீட்டின் முன் தெளிப்பார்கள்.
எல்லா மிருகங்களையும் நாம் சொல்லவில்லை. பசுவின் சிறுநீருக்கு இந்த குணம் இருக்கிறது என்று ஆராய்ச்சி பூர்வமாக சொல்வதாகவும் மியான்மர் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் இதை எடுத்துக் கொள்கிறார்கள். இதை ஒட்டுமொத்தமாக புறந்தள்ள முடியாது. ஆயுர்வேதத்தில் மருந்தாக சொல்லப்பட்டிருக்கிறது. ஆராய்ச்சி பூர்வமாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
80 வகையான நோய்களுக்கு இதை பயன்படுத்தலாம் என்று ஆயுர்வேதம் சொல்கிறது. அதில் அவர் (காமகோடி) சொன்ன காய்ச்சல் 80 வகைகளில் ஒன்றாக இருந்திருக்கலாம்.காமகோடி ஒரு அறிவுப்பூர்வமாக விஞ்ஞானபூர்வமாக ஒரு தொழில்நுட்பக் கல்லூரியை தலைமை தாங்கி கொண்டிருப்பவர் சும்மா சொல்வாரா?
என் உணவு என் உரிமை என்று சொல்கிறீர்கள். ஒரு இடத்தில் மாட்டு இறைச்சிக் கொண்டு வீசுகிறீர்கள். விஞ்ஞானபூர்வமாக அது மருந்து என்று சொல்லும் போது ஏன் ஒத்துக்கொள்ள மாட்டேன் என்கிறீர்கள்?
பாரதீய ஜனதா கட்சி இல்லையென்றால் இந்திய பண்பாட்டு முறையில் எது சொன்னாலும் ஒத்துக்கொள்ள மாட்டார்கள். அவருக்கு என்ன உள்நோக்கம் இருக்க முடியும்? பஞ்சகவியம் என்பது ‘அமேசானில்’ கிடைக்கிறது. அதனால் இது அறிவியல் புறமாக நிரூபிக்கப்பட்டது. நான் அல்லோபதி படித்த டாக்டர். ஆனால் ஆயுஷ் integrated medicine ல் நம்பிக்கை இருக்கிறது.
.தமிழகத்தில் கோமியம் விற்பனை தூவங்கினால் மதுபானம் விற்பனை குறையும் என்று நினைக்கிறார்களா? ஒருவேளை அப்படி நினைக்கிறார்களோ என்னவோ? கோமியம் ஒன்றும் டாஸ்மாக்கை விட கெட்டதில்லை என்று நினைக்கிறேன். அதனால் டாஸ்மாக் பற்றி கவலைப்பட்டு கொண்டிருக்கிறார்கள் என பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.
*****
தைப்பூசத் திருவிழா –பாதயாத்திரை
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பிப்ரவரி 11-ஆம் தேதி தைப்பூச விழா நடைபெறபோகிறது , நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் பாத யாத்திரையாக வந்து வேண்டுதலை நிறைவேற்றிச் செல்வதால் திருச்செந்தூர் விழா கோலம் பூண்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த பக்தர் ஒருவர் 18 அடி உயரத்தில் பறந்தபடி பறவை காவடி எடுத்து பக்தி பரவசத்துடன் ஆடியது காண்போரை பரவசத்தில் ஆழ்த்தியது.
பழனி பால தண்டாயுதபானி கோவிலிலும் வரும் பிப்ரவரி மாதம் தைப்பூசம் திருவிழா நடைபெறுகிறது. இதனையொட்டி சாத்தான்குளம் ஸ்ரீ தண்டாயுதபாணி பழனி ஆண்டவர் திருக்கோவிலில் இருந்து பழனி மலை முருகன் கோவிலுக்கு காவடி எடுத்துச் செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது.
*****

திருப்பரங்குன்றம் சமணர் குகையை சேதப்படுத்தியவர்களுக்கு வலைவீச்சு
மதுரை அருகிலுள்ள திருப்பரங்குன்றம் மலையில் தொல்லியல் துறை கட்டுப் பாட்டிலுள்ள குகைகளை சேதப்படுத்தியவர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து, அவர்களைத் தேடி வருகின்றனர் திருப்பரங்குன்றம் மலையில் இந்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் சமணர் குகை மற்றும் குகை கோயில்கள் உள்ளன.
குகைகளில் அடையாளம் தெரியாத சில சமூக விரோதிகள், பச்சை நிற பெயின்ட்டை அடித்து அந்த இடத்தைச் சேதப்படுத்தி இருப்பது பராமரிப்புப் பணியின்போது தெரிந்தது. இது தொடர்பாக திருமயம் வட்ட தொல்லியல் துறை உதவி அலுவலர் சங்கர் திருப்பரங்குன்றம் காவல் நிலையத்துக்கு புகார் மனு அனுப்பினார். அதன் பேரில் குகைகளை சேதப்படுத்திய நபர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து அவர்களைத் தேடி வருகின்றனர்.
இன்னுமொரு செய்தி
”திருப்பரங்குன்றத்திற்கு அப்துல் சமது, நவாஸ் கனி வந்தது சட்டம் ஒழுங்கை சீர்கெடுக்கும் செயல்,” என, திருப்பரங்குன்றத்தில் பாரதீய ஜனதா கட்சி சட்டசபை குழு தலை வர் எம்.எல்.ஏ., நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
இங்கு மலைமீதுள்ள காசிவிஸ்வநாதர் கோவிலில் தரிசனம் செய்ய நயினார் நாகேந்திரன், ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வந்தனர். பின், நயினார் நாகேந்திரன் கூறியதாவது:
எம்.எல்.ஏ., அப்துல் சமது – எம்.பி., நவாஸ்கனி திருப்பரங்குன்றம் மலையில் ஆய்வு செய்துள்ளனர். இது, பதட்டமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. நான் கூட இங்கே வந்திருக்க மாட்டேன். அவர்கள் வந்ததால், நாங்களும் வர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விட்டது.. மலை மேல் முன்னர் அசைவம் சமைத்தது கிடையாது. புதிய பழக்கத்தை ஏற்படுத்த வேண்டாம். இதற்கு முன் என்ன பழக்கம் இருந்ததோ அதைக் கடைப்பிடிப்பதில் எங்களுக்கு மாற்றுக்கருத்து இல்லை.
அவர்கள் இது எங்கள் மலை, எங்களுக்கு சொந்தம். இப்பழக்கத்தை நாங்கள் நடைமுறைப்படுத்துவோம் என்பது, சட்டம் – ஒழுங்கை சீர்கெடுக்கும் என்று நயினார் நாகேந்திரன் கூறினார்.
காடேஸ்வர சுப்ரமணியம் கூறுகையில், ”மலை மீதுள்ள காசி விஸ்வநாதர் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு, நிர்வாகம் சார்பில் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்,” என்றார்.
*****

திருப்பரங்குன்றம் செல்லக்கூடாது; மதுரை ஆதினத்துக்கு போலீஸ் தடை
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் காசி விஸ்வநாதர் கோவில் அமைந்துள்ளது. இந்த மலையில் இருக்கும் தர்காவில், ஆடு, கோழி பலியிடுவோம் என்று கூறி, இஸ்லாமிய அமைப்பினர் சிலர் கிளம்பிய நிலையில் போலீசார் அதற்கு தடை விதித்தனர்.
எனினும், அவர்களில் சிலர், அசைவ உணவுகளை கொண்டு சென்று மலை உச்சியில் படிக்கட்டுகளில் வைத்து உண்ட படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின. இது, பக்தர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஹிந்து அமைப்பினர் கடும் கண்டனமும் தெரிவித்தனர்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இருக்கும் காசி விஸ்வநாதர் கோவிலுக்குச் செல்ல மதுரை ஆதினம் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. ஆனால் போலீசார் அதற்கு அனுமதி மறுத்து விட்டனர். கோவிலுக்குச் செல்ல மதுரை ஆதினத்துக்கு போலீசார் தடை விதித்துள்ளனர்.
அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் தடுக்கும் வண்ணம், அங்கு போலீசார் பாதுகாப்பு பணியிலும், கண்காணிப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
**********************************************************
இத்துடன் செய்திகள் நிறைவடைந்தன.
உலக இந்துமதச் செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;
லண்டன் மாநகரிலிருந்து செய்திகளை வாசித்து வழங்கியவர் வைஷ்ணவி ஆனந்த் .
அடுத்த ஒளிபரப்பு ,
பிப்ரவரி இரண்டாம் தேதி லண்டன் நேரம் நண்பகல் 12 மணிக்கும்,
இந்திய நேரம் மாலை ஐந்தரை மணிக்கும்,
ஆஸ்திரேலிய நேரம் இரவு 11 மணிக்கும் ஒளிபரப்பாகும்.
வணக்கம்.
—-subham—-
Tags- ஞானமயம் , உலக இந்துமத, செய்தி மடல் 26-1-2025