பட்டினத்தார்! – 2 (Post.14,152)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,152

Date uploaded in Sydney, Australia – –29 January 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

26-1-2025 அன்று ஒளிபரப்பப்பட்ட ஞானமயம் நிகழ்ச்சியில் இடம் பெற்ற உரை. இங்கு இரு பகுதிகளாகப் பிரசுரிக்கப்படுகிறது. 

பட்டினத்தார்! – 2 

அங்கு ஈசனைப் பணிந்து வாழ்ந்து வரும் போது ஒரு நாள் தாகத்தினால் அவர் வருந்திய போது ஈசனே நீர் கொண்டு வந்து தர அதைப் பருகி மகிழ்ந்தார். 

அவரது தலைமைக் கணக்கராக இருந்த நந்தனார் என்பவரை அரசன் சிறைப்படுத்திய செய்தியைக் கேட்ட அவர் 

மத்தளை தயிர் உண்டானும் மலர்மிசை மன்னினானும்
நித்தமும் தேடிக் கானா நிமிலனே நீ இன்றேகிச்
செய்தகளை கயல்பாய நாங்கூர் சேந்தனை வேந்தன் இட்ட
கைத்தளை நீக்கி என்முன் காட்டு வெண் காட்டு ளானே -என்று பாடினார்.

 உடனே சிவகணங்கள் சேந்தனாரைச் சிறையிலிருந்து மீட்டு வந்து அடிகள் திருமுன் நிறுத்தின. சேந்தனாரும் மகிழ்ந்து அவரிடம் பல உபதேசங்களைப் பெற்றார். இந்த சேந்தனாரே ஒன்பதாம் திருமுறை ஆசிரியர் என்பது குறிப்பிடத்தகுந்தது. 

ஒரு சமயம் பட்டினத்தார் உஜ்ஜயினியில் இருந்த போது பிள்ளையார் கோவிலில் சிவபிரானை தியானம் செய்து கொண்டிருந்தார். அப்போது அரண்மனையில் கொள்ளையடித்த சில திருடர்கள் கொள்ளையடித்த மகிழ்ச்சியில் வழியில் இருந்த கோவிலை நோக்கி ஒரு முத்து மாலையை வீசினர். அது தியானத்தில் இருந்த பட்டினத்தார் கழுத்தில் விழுந்தது. அவரைக் கொள்ளைக்காரர் என்று கருதிய அரசன் அவரைக் கழுமரத்தில் ஏற்ற ஆணையிட்டான். அவர் சிவபிரானை நோக்கி வேண்ட கழுமரம் தீப்பிடித்து எரிந்தது. உண்மையை உணர்ந்த அரசன் அவரிடம் மன்னிப்புக் கேட்டதோடு அவரது அடிமையாகவும் ஆனான். அவனை திருவிடைமருதூர் செல்லுமாறு பட்டினத்தார் கூறினார். அந்த அரசரே பத்திரகிரியார் என்ற முனிவர் ஆனார்.

இவரே பர்த்ருஹரி என்ற அரசர் என்ற வரலாற்றுக் குறிப்பும் உண்டு.

 பல தலங்களிலும் சென்று ஆங்காங்கே அவர் பல பாமாலைகளைப் பாடி இறைவனைப் பரவி வந்தார்; சீர்காழி சென்று திருக்கழுமல மும்மணிக்கோவை என்ற பிரபந்தத்தை இயற்றினார். தில்லையின் கூத்தப் பிரான் மீது கோயில் நான்மணி மாலையைப் பாடினார். காஞ்சிபுரத்தில் கச்சித் திருவந்தாதி, திருவேகம்ப மலை, கச்சித் திருவகவல் ஆகிய பாடல்களைப் பாடினார்.

 திருக்கழுக்குன்றம், திருவாலங்காடு, திருக்காளத்தி உள்ளிட்ட தலங்களில் பல பாடல்களைப் புனைந்து தொழுதார். முதல்வன் முறையிடு, அருட்புலம்பல் என்னும் நூல்களில் தனது  அனுபவத்தை அவர் எடுத்துரைத்துள்ளார். 

கோயில் நான்மணி மாலை, திருக்கழுமல மும்மணிக்கோவை, திருவிடைமருதூர் மும்மணிக் கோவை, திருவேகம்பமுடையார் திருவந்தாதி, திருவொற்றியூர் ஒருபா ஒருபது ஆகிய இவரது ஐந்து நூல்கள் பதினோராந் திருமுறையில் சேர்க்கப்பட்டுள்ளன.

 பின்னர் திருவொற்றியூருக்கு இறைவனின் ஆணைப்படி அவர் சென்றார், 

அங்கு தங்கியிருந்த போது ஒரு நாள் கடற்கரையை அடைந்தார். அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களுடன் சேர்ந்து தானும் விளையாட ஆரம்பித்தார். திடீரென்று ஒரு மணல் குன்றில் மறைந்த அவர் வேறொரு மணல் குன்றிலிருந்து வெளிப்பட்டார். அதனைக் கண்டு வியப்புற்ற சிறுவர்கள் அவரை ஒரு மணல் குன்றில் மறைப்பதும் அவர் இன்னொரு இடத்தில் இருந்த  மணல்குன்றிலிருந்து வெளிவருவதுமாக விளையாட்டு தொடர்ந்தது.

ஒருநாள் இந்த விளையாட்டில் அவர் வெளிப்படாமலேயே மறைந்து விட்டார்.

அவரைக் காணாது திகைத்த சிறுவர்கள் அவர் இருந்த மணல்குன்றைத் தோண்டிப் பார்த்த போது அடிகள் சிவலிங்கமாக மாறி இருந்ததைக் கண்டு திகைத்தனர்.

 பட்டினத்தார் என்ற பெயரில் மூன்று புலவர்கள் வாழ்ந்ததை வரலாற்றில் நாம் காண்கிறோம்.

திருவெண்காடர் எனப்படும் பட்டினத்தாரின் வரலாற்றை புராண நூலாக ஒரு புலவர் தில்லையில் வாழ்ந்த வணிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இயற்றியுள்ளார். இந்தப் புலவர் யார் எனத் தெரியவில்லை. அதில் உள்ள செய்திகள் அனைத்தும் உண்மையே என அனைவராலும் நம்பப்பட்டு வருகிறது.

நாம் இதுகாறும் பார்த்து வந்த செய்திகள் அனைத்தும் அந்தப் புலவர்பிரானின் நூலில் உள்ளவையே.

பட்டினத்தாரின் பாடல்கள் அனைத்தும் பயின்றவர்கள் சிவபிரானின் திருவருளைப் பெறுவது திண்ணம்!

பட்டினத்தார் அருளிய படி,

 பொருளும் குலனும் புகழும் திறனும்

அருளும் அறிவும் அனைத்தும் – ஒருவர்

கருதா என்பார்க்கும் கறைமிடற்றாய் தொல்லை

மருதா என்பார்க்கு வரும்

என்று கூறி என் உரையை முடிக்கிறேன்.

நன்றி. வணக்கம். 

**

Leave a comment

Leave a comment