Post No. 14,161
Date uploaded in Sydney, Australia – –1 February 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஹெல்த்கேர் இதழில் பிரசுரமாகியுள்ள கட்டுரை
அனைவரும் படிக்க வேண்டிய ஒரு நூல்
ச .நாகராஜன்
போஜன குதூகலம்
நீண்ட காலம் ஆரோக்கிய வாழ்வுடன் வாழ உணவு மற்றும் அதை உண்ணும் முறை பற்றியும் கூடவே வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய வாழ்வியல் முறைகள் பற்றியும் அறிய வேண்டியது அவசியம்.
இதற்கு ஆதாரமாக உள்ள நுட்பமான விஷயங்களை விளக்கும் ஒரு அபூர்வமான நூல் போஜன குதூகலம் என்னும் நூல்.
இதை இயற்றியவர் இரகுநாதஸூரி என்னும் அறிஞர் ஆவார். வடமொழியில் அவர் இயற்றிய நூலின் ஒரு பகுதியான திரவியகுண தகனம் என்னும் பகுதி தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு போஜன குதூகலம் என்ற பெயரில் சரஸ்வதி மஹால் வெளியீடாக வந்துள்ளது.
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே என்றார் திருமூலர்.
அறச்செயலுக்கு உற்ற தலையாய கருவி உடலே ஆகும் என்றார் கவிஞர் காளிதாஸன்.
உணவுப் பொருள்களின் தன்மைகள், உணவுப் பண்டங்களைச் சமைக்கும் முறை, அவற்றைத் தூய்மைப் படுத்தும் முறை ஆகியவை மிகத் தெளிவாக இந்த நூலில் எடுத்துரைக்கப்பட்டுள்ளன.
இரகுநாதஸூரி
இரகுநாதஸூரி என்பவர் சத்ரபதி சிவாஜி மஹாராஜாவின் ஆசானாக விளங்கிய ஸ்வாமி ராமதாஸருடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தவர். இவர் கிருஷ்ணா நதியின் கிளை நதிகளில் ஒன்றான மான் நதிக் கரையில் ஸ்வாமி ராமதாஸரால் கட்டப்பட்ட ரகுபதி கோவிலின் பொறுப்பாளராகப் பல ஆண்டுகள் இருந்து வந்தார். கி.பி. 1678-ல் ஏகோஜி மன்னரால் தஞ்சாவூரில் மராட்டிய அரசு நிறுவப் பட்ட போது அவர் தஞ்சாவூருக்கு வந்து விட்டார்.
நரகவர்னணம் என்ற மராட்டிய நூலில் மன்னர் ஏகோஜியின் மனைவியான ராணி தீபாம்பிகை என்பவர் தனக்கு உதவி அனைத்தும் செய்து வந்ததாக அவர் குறிப்பிடுகிறார்.
இவரது தந்தையார் பெயர் ஹரிஹர பட்டர். இவரது ஆசிரியர் அனந்த தேவர். இதை அவரது பிரயோக ரத்தின பூஷா என்ற நூல் மூலம் அறிய முடிகிறது.
இவர் மராத்திய்ல் கார்ஹாடே இனத்தவர் என்றும் இவரது குடும்பத்தின் பட்டப் பெயர் நவஹஸ்தா என்றும் அறிய முடிகிறது.
நூல் தரும் விவரங்கள்
இந்த நூலில்
1) தானியங்கள் 2) தோலுள்ள தானியங்கள் 3) புல் வகை தானியங்கள் 4) தானியங்களின் பொதுத் தன்மைகள் 5) வெந்த உணவு 6) காய்கறிகள் 7) வற்றல் 8) ஊறுகாய் முதலியன 9) மசாலைப் பொருள்கள் 11) நெய் – செயற்கை 12) சர்க்கரை 13) பானகம் 14) கஞ்சி 15) பால் 16) தயிர், மோர் 17) வெண்ணெய் 18) நெய் 19) எண்ணெய் 20) கரும்பு 21) கரும்புச் சாற்றின் மாற்றங்கள் 22) தேன் 23) மது 24) மாமிசம் 25) நீர் 26) நஞ்சுள்ள உணவின் அறிகுறிகள் 27) விரோதமுள்ள பொருள்கள் 28) உணவு மாற்றம் 29) பத்தியத்தையும் அபத்தியத்தையும் மாற்றல் 30) இயல்பாகவே தன்மை தருபவை 31) இயல்பாகவே தீமை தருபவை 32) செயற்கையால் தீயவை 33) சாப்பிடும் வேளை 34) உணவுக் கலங்கள் 35) இலைகள் 36) உண்ணும்போது நினைக்கப்பட வேண்டிய தெய்வங்கள் 37) உண்ணும் முறை 38) உணவுக்குப் பின் 39) வெற்றிலை போடும் முறை 40) அரசர் வெற்றிலை போடும் முறை 41) உண்டபின் மேற்பூச்சு 42) உடை 43) முதற்பகுதியின் முடிவு
ஆகிய அத்தியாயங்கள் உள்ளன.
மேலே கூறப்பட்டுள்ள அத்தியாயத் தலைப்புகள் மூலமாகவே நாம் அறிய வேண்டிய அபூர்வமான விஷயங்களைப் பற்றி அறிகிறோம்.
பிள்ளையார், குரு, தன்வந்தரி ஆகியோரை வணங்கி விட்டு நூலாசிரியர் நூலை ஆரம்பிக்கிறார்.
அவர் தரும் முதல் ஐந்து அத்தியாயங்களில் கூரிய முனையுள்ள தானியங்கள் (நெல்), கோதுமை, பார்லி, சோளம், தோலுள்ள தானியம், உளுந்து, பயறு, கடலை, துவரை, கொள்ளு, மொச்சை, காட்டுப் பயறு, எளி, நாட்டாளி விதை, கடுகு, புல்வகை தானியங்கள், சாமை, வரகு, ஆகியவை பற்றிய நுட்பமான விஷயங்களை விளக்கமாகத் தருகிறார்.
பொரி, சத்துமாவு, அவல். வெந்த உணவு வகைகள், பால் பாயசம். தேங்காய் பாயசம், பருப்பு. பலகாரங்கள் பற்றிய விளக்கத்துடன் வடை, மோர்க்குழம்பு உள்ளிட்டவற்றைச் செய்யும் முறையும் தரப்படுகிறது.
அடுத்து கறிகாய்கள் என்ற அத்தியாயத்தில் ஆரம்பித்து இறுதி அத்தியாயம் வரை ஏராளமான விஷயங்கள் தரப்படுகின்றன.
700 உணவுப் பொருள்கள்
இறுதியில் அட்டவணையில் சுமார் 700 உணவுப் பொருள்கள் பற்றிய பட்டியலைக் காண்கிறோம். இத்தனை உணவுப் பொருள்களை இந்த நூல் விளக்குகிறது என்பது ஆச்சரியப்படும் விஷயம் தானே!
நூலில் கிரியா சாரம், ஜனார்தன மஹோதயம், தன்வந்தரீய நிகண்டு, பாரிஜாதம், பாவப்ரகாசம், இராஜ நிகண்டு, விஷ்ணு புராணம், ஹ்ருதய தீபம் ஆகிய நூல்களிலிருந்து மேற்கோள்கள் தரப்பட்டுள்ளன.
கேய தேவர், போஜன், வாக்படர், வ்ருத்த ஸூஸ்ருதர், வியாசர்,
ஸூச்ருதர், ஸுஷேணர், ஜெர்ஜெடர் ஆகிய அறிஞர்கள் மற்றும் மகான்கள் கூறியவையும் தரப்பட்டுள்ளன.
நூலை மொழிபெயர்த்தவர்
264 பக்கங்கள் உள்ள இந்த நூலை சரஸ்வதி மஹால் நூலகம் தனது வெளியீடாக 2005-ம் ஆண்டு வெளியிட்டுள்ளது. விலை ரூ 90/
இதை மொழிபெயர்த்திருப்பவர் வண்டுவராபதி சக்கரவர்த்தி சே.ந. இராகவன் (மன்னார்குடி) என்பவர். 1974-ல் இந்த மொழிபெயர்ப்பை அவர் செய்திருக்கிறார்.
மிக மிக கடினமான ஒரு பணியை மிக அற்புதமாகச் செய்திருக்கும் இவர் அனைவரது பாராட்டுக்கும் உரியவர். வடமொழியில் தரப்பட்டிருக்கும் அத்தனை உணவுப் பொருள்களையும் தமிழ் வழக்கில் உள்ளபடி தருவது ஒரு கடினமான காரியம். இதை அவர் சிறப்புறச் செய்திருப்பதோடு எளிமையான நடையில் தந்திருப்பதும் பாராட்டுக்குரிய விஷயமாகும். படிப்பதற்குக் குதூகலமான நூல் இது!
இதை சரஸ்வதி மஹால் நூலகம், தஞ்சாவூர்-லிருந்து பெறலாம். அல்லது https://archive.org/details/dli.jZY9lup2kZl6TuXGlZQdjZM3kZpy.TVA_BOK_0008542/page/n1/mode/2up
என்ற இணையதளத்திலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
நூலில் உள்ள சில அருமையான பகுதிகளை அடுத்துப் பார்ப்போம்.
– தொடரும்
tags–போஜன குதூகலம்!