

Post No. 14,239
Date uploaded in Sydney, Australia – 24 February 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;
லண்டன் மாநகரிலிருந்து செய்திகளை வாசித்து வழங்குபவர் வைஷ்ணவி ஆனந்த்
அனைவருக்கும் வணக்கம்
இன்று ஞாயிற்றுக்கிழமை ; பிப்ரவரி 23- ஆம் தேதி ; 2025-ம் ஆண்டு
Collected from popular newspapers and edited for broadcast.
முதலில் மஹா கும்பமேளா செய்திகள்
55 கோடி பேர் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடல்
மகா கும்பமேளாவில் புனித நீராடிய பக்தர்கள் எண்ணிக்கை 55 கோடியை தாண்டியுள்ளதாக உத்தர பிரதேச மாநில அரசு தெரிவித்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் உள்ள திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளா கடந்த ஜனவரி 13 ஆம் தேதி தொடங்கியது. மூன்று நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர். இந்த மகா கும்பமேளாவில் இப்போது வரை 55 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் புனித நீராடியுள்ளனர்.
குறிப்பாக மகர சங்கராந்தி, மவுனி அமாவாசை, வசந்த பஞ்சமி ஆகிய நாட்களில் பக்தர்களின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் இருந்தது. அதிகபட்சமாக மவுனி அமாவாசை தினத்தில் 8 கோடி பக்தர்களும், மகர சங்கராந்தி அன்று சுமார் 3.5 கோடி பக்தர்களும், ஜனவரி 30 அன்று 1.7 கோடி பேரும், பிப்ரவரி 1 அன்று 2 கோடி பேரும் புனித நீராடினர். பிப்ரவரி 2 ஆம் தேதியான வசந்த பஞ்சமியன்று 2.57 கோடி பேரும், மாக் பூர்ணிமா தினமான பிப்.12 அன்று இரண்டு கோடிக்கும் அதிகமான பக்தர்கள் புனித நீராடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் பிப்ரவரி 26 ஆம் தேதிக்குள், திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியவர்கள் எண்ணிக்கை 60 கோடியை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.மகாகும்பமேளா திட்டமிட்டபடி பிப்ரவரி 26 ஆம் தேதி மகா சிவராத்திரி தினத்தில் முடிவடையும்’ என பிரயாக்ராஜ் மாவட்ட கலெக்டர் ரவீந்திர மந்தர் தெரிவித்துள்ளார்.
மாணவர்களுக்கு வருவாய்
உத்தர பிரதேசத்தில் புனித நீராடலுக்காக பக்தர்களை அழைத்து சென்று நாள் ஒன்றுக்கு ரூ.3 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை கல்லூரி மாணவ மாணவிகள் வருவாய் ஈட்டுகின்றனர். தினமும் கோடிக்கணக்கானோர் குவிந்து வருகின்றனர். இதனால், பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இந்த திருவிழாவில், மாணவ மாணவிகள் பக்தர்களுக்கு பக்தர்களுக்கு உதவி வருகின்றனர்.
கட்டுக்கடங்காத கூட்ட நெருக்கடியால், டாக்சி மற்றும் ரிக்சா சேவைகள் முடங்கியுள்ளன.இதனால், இரு சக்கர வாகன சேவையை கல்லூரி மாணவ மாணவிகள் தொடங்கி நடத்தி வருகின்றனர். இதற்காக மோட்டார் சைக்கிள்கள் முதல் ஸ்கூட்டர்கள் வரை பயன்படுத்தும் அவர்கள், ஒரு சவாரிக்கு ரூ.100 முதல் ரூ.1,000 வரை கட்டண தொகையாக பெற்று கொள்கிறார்கள். இதனால், நாள் ஒன்றுக்கு ரூ.3 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை வருவாய்கிடைக்கிறது என பீட்டர் என்ற முதுநிலை மாணவர் கூறுகிறார். இவர்கள் மட்டுமினிறி லடாக்கில் இருந்து விடுமுறைக்கு ஊருக்கு வந்த ராணுவ வீரர் லால் பகதூர் என்பவர் கூட இந்த பணியில் இறங்கியுள்ளார்.
90 ஆயிரம் கைதிகள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடல்
பிரயாக்ராஜ்:பிப்.20- உத்தரப்பிரதேச மாநிலத்தில் 75 சிறைகளில் உள்ள 90 ஆயிரம் கைதிகள் திரிவேணி சங்கம நீரில் குளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மகா கும்பமேளாவை முன்னிட்டு, சிறைக் கைதிகள் திரிவேணி சங்கம நீரில் குளிப்பதற்கான ஏற்பாடுகளை மாநில நீர் மேலாண்மை துறை செய்துள்ளது.
இதுகுறித்து மாநில சிறைத் துறை அமைச்சர் தாரா சிங் சவுகான் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், “பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்திலிருந்து புனித நீர் அனைத்து சிறைகளுக்கும் கொண்டுசெல்லப்படும். இதற்கான ஏற்பாடுகளை நீர் மேலாண்மை துறை மேற்கொள்ளும். அவ்வாறு கொண்டுவரப்படும் புனித நீர் அந்தந்த சிறை வளாகத்தில் உள்ள தண்ணீர் தொட்டியில் கலக்கப்பட்டு, கைதிகள் அதில் நீராட அனுமதிக்கப்படுவர் என்று கூறப்பட்டுள்ளது.
******

சிதம்பரம் கனகசபை வழக்கு: அறநிலையத்துறை ஐகோர்ட் உத்தரவு
அறநிலையத் துறை கனகசபையில் பக்தர்களை எந்தெந்த நேரங்களில் அனுமதிக்கலாம் என்பது குறித்தும், நெரிசலை தவிர்ப்பதற்கான மாற்று வழிகள் குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபை மீது நின்று பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதியளித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணையை எதிர்த்து பொது தீட்சிதர்கள் உள்ளிட்ட பலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, நடராஜர் கோயில் கனகசபையில் நின்று பக்தர்கள் தரிசனம் செய்ய எந்தெந்த நேரங்களில் அனுமதிக்கப்படுவர், என்ன நடைமுறை பின்பற்றப்படும் என்பது குறித்த திட்டம் வகுத்து தாக்கல் செய்யப்படும் என பொது தீட்சிதர்கள் தரப்பில் உறுதியளிக்கப்பட்டு இருந்தது.
இந்த வழக்குகள் மீதான விசாரணை நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், எஸ்.செளந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது. அப்போது பொது தீட்சிதர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஹரிசங்கர், ஆறுகால பூஜைகள் நடைபெறும் நேரங்கள் தவிர்த்து இடைப்பட்ட நேரத்தில் கனகசபையில் நின்று தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி வழங்குவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதற்கு ஏதுவாக சாய்தளப்பாதை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது எனக்கூறி அறிக்கை தாக்கல் செய்தார்.
அதற்கு ஆட்சேபம் தெரிவித்து அறநிலையத்துறை தரப்பில் ஆஜரான சிறப்பு அரசு வழக்கறிஞர் என்.ஆர்.ஆர்.அருண் நடராஜன், ‘‘பக்தர்கள் கனகசபையில் நின்று நேரடியாக சுவாமி தரிசனம் மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும். அதைவிடுத்து ஆறு கால பூஜை தவிர்த்து மற்ற நேரங்களில் ஒரு ஓரத்தில் நின்று பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர் என்பதை ஏற்க முடியாது. அதேபோல தற்போது கனகசபைக்கு கிழக்குப் பகுதியில் வருபவர்கள் சுவாமி தரிசனம் முடித்து மேற்குப்பகுதியில் இறங்கி செல்லும் வகையில் கிழக்கு நுழைவாயிலை திறந்து ஒருவழிப்பாதையாக மாற்றினால் மட்டுமே கூட்ட நெரிசலை தவிர்க்க முடியும் என்றார்.
அதையடுத்து நீதிபதிகள், ‘‘கோயில் திறக்கப்படும் 11.30 மணி நேரத்தில் ஆறு கால பூஜைகள் மற்றும் பால், நைவேத்தியம் போன்ற பிற பூஜைகள் தினமும் 8.30 மணி நேரத்துக்கு நடைபெறும் எனவும், எஞ்சிய 3 மணி நேரம் மட்டும் பக்தர்கள் கனகசபையில் நின்று தரிசனம் மேற்கொள்ள அனுமதிக்கப்படுவர் எனக் கூறப்பட்டுள்ளது.

எனவே, அந்த நேரத்தில் அதிக எண்ணிக்கையில் பக்தர்களை கனகசபையில் அனுமதிக்கும் விதமாகவும், பக்தர்கள் ஒரே வழியில் சென்று திரும்புவதை தவிர்க்கும் விதமாகவும் கட்டிடக்கலை வல்லுநர்களுடன் கலந்தாலோசித்து திட்டம் வகுத்து அதை பொது தீட்சிதர்கள் தரப்பு தாக்கல் செய்ய வேண்டும்” என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும் மார்ச 6-க்கு தள்ளி வைத்துள்ளனர். அதேபோல அறநிலையத் துறையும் கனகசபையில் பக்தர்களை எந்தெந்த நேரங்களில் அனுமதிக்கலாம் என்பது குறித்தும், நெரிசலை தவிர்ப்பதற்கான மாற்று வழிகள் குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளனர்.
*****

திருப்பதியில் சர்வதேச கோவில்கள் மாநாடு!
சர்வதேச கோவில்கள் மாநாடு மற்றும் கண்காட்சி இன்று (பிப்.17) திருப்பதியில் தொடங்கியது.
ஆன்மிக சுற்றுலாத்தலங்களை ஊக்குவிக்கும் நோக்கில், உலகளவில் பிரபலமான 32 லட்சம் கோவில்களை ஒரே கூட்டமைப்பின் கீழ் கொண்டு வரும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. டெம்பிள் கனெக்ட் மற்றும் மும்பையை தளமாக கொண்ட அந்தியோதயா பிரதிஷ்டான் அறக்கட்டளை 58 நாடுகளில் உள்ள 1581 பக்தி நிறுவனங்களின் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
கோவில்களின் மஹா கும்பமேளா என்றழைக்கப்படும் இந்த மாநாடு மற்றும் கண்காட்சி ஆந்திர மாநிலம் திருப்பதியில் பிப்.19ம் தேதி நிறைவு பெற றது.
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசியதாவது; நாட்டின் வளர்ச்சியில் ஆன்மிக சுற்றுலாவுக்கு என சிறப்பு இடம் உண்டு. ஏ.ஐ. பற்றியே இப்போது அனைவரும் பேசுகின்றனர். நாம் இப்போது தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும் என்ற அடுத்தக்கட்ட நகர்வுக்கு நாம் நகர வேண்டும்.
ஆண்டு முழுவதும் பொருளாதார செயல்பாடுகள் நடைபெறும் பகுதி கோவில்கள். இந்தியாவின் கோவில் பொருளாதாரத்தின் மதிப்பு ரூ.6 லட்சம் கோடி ஆகும். மற்ற எந்த பொருளாதார செயல்பாடுகளுடன் ஒப்பிட்டாலும் கோவில் பொருளாதாரம் என்பது நாட்டின் மிகப்பெரியது என என்னால் கூற முடியும்.
கோவில்களுக்கு சென்று தரிசனம் செய்தல், வழிபாட்டுடன் தொடர்புடைய நடைமுறைகள், கோவில்களை சுற்றி வளர்ந்து வரும் நகரத்தில் பொருளாதாரத்திற்கு பங்களிக்கும் பல்வேறு செயல்பாடுகள் என 365 நாட்களிலும் இது நடக்கிறது. நாம் அனைவரும் இதில் ஈடுபடுகிறோம். பக்தர்கள் ஒரு குறிப்பிட்ட காரணத்துக்காக நன்கொடை வழங்குகிறார்க . அந்த நன்கொடை பணத்தை அவர்களின் விருப்பங்களுக்காக செலவிட வேண்டும்.
கோவில்களை நிர்வகிப்பதில் நாம் தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும். ஏராளமான பக்தர்கள் கோடிக்கணக்கான ரூபாயை காணிக்கையாக தருகின்றனர். அவற்றை நாம் ஏழை, எளிய மக்களின் நலன்களுக்காக பயன்படுத்துகிறோம்.
கடவுளுக்கு சேவை செய்வது என்பது அனைத்திலும் சிறந்தது. கோடிக்கணக்கான பக்தர்களின் நம்பிக்கை திருப்பதி கோவில். ஆந்திராவில் உள்ள ஆலயங்களுக்கு வரும் பக்தர்களுக்கு அனைத்து வித வசதிகளும் செய்து தரப்படும்.
கோவில்களைச் சுற்றிலும் பசுமையாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 75 சதவீதம் பசுமை திருமலை பகுதியில் இருக்கும் என்பதை உறுதியாக கூறுகிறோம். நமது கலாசாரத்தை பேணி பாதுகாப்பதில் கோவில்கள் முக்கிய பங்காற்றுகின்றன.
2029ல் இந்தியா உலகில் 3வது பெரிய பொருளாதார நாடாகவும், 2047ல் முதல் இரண்டில் ஒன்றாகவும் மாறும். 2047ல் இந்தியர்கள் மிகவும் செல்வாக்கு மிக்க உலகளாவிய சமூகமாக உருவெடுப்பார்கள். வலிமையான, தன்னம்பிக்கை கொண்ட இந்தியாவை வடிவமைக்க நமது வளமான பாரம்பரியங்கள் மற்றும் நவீன கண்டுபிடிப்புகளை ஏற்றுக்கொள்வோம் என்றார்.ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு.
****

பிலிப்பைன்ஸ் நாட்டில் திருவள்ளுவர் சிலை
பிலிப்பைன்ஸ் நாட்டில் திருவள்ளுவர் சிலையை, அந்நாட்டுக்கான இந்தியத் தூதர் ஹரிஷ்குமார் ஜெயின் சிறப்பு விருந்தினராக பங்கேற்று திறந்து வைத்தார்.
இந்தியா – பிலிப்பைன்ஸ் நட்புறவு உருவாகி 75 ஆண்டுகள் பவளவிழா காண்பதை ஒட்டி, ஷிஃபு நகரில் உள்ள யுவிகுலாஸ் மருத்துவக் கல்லூரியில் கல்வி மற்றும் கலாச்சார விழா நடைபெற்றது.யுவிகுலாஸ் மருத்துவக் கல்லூரியின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் டேவிட் கே.பிள்ளை தலைமையிலும், விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் டாக்டர்
விஜி சந்தோசம் முன்னிலையிலும், உலகப் பொதுமறையைத் தந்த திருவள்ளுவரின் சிலை திறக்கப்பட்டது.
விழாவில் பங்கேற்ற விருந்தினர்களுக்கு திருவள்ளுவர் சிலை மற்றும் தமிழ், ஆங்கில திருக்குறள் நூல்கள் நினைவுப் பரிசுகளாக வழங்கப்பட்டன.
*****
மகா சிவராத்திரி: கன்னியாகுமரியில் பக்தி பரவசத்துடனான 110 கிமீ ‘சிவாலய ஓட்டம்

மகா சிவராத்தியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் பல நூற்றாண்டுகளாக நடைபெற்று வரும் சிவாலய ஓட்டம் வரும் 25-ந் தேதி தொடங்குகிறது. சிவாலய ஓட்டத்துக்கு பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தங்களை தயார்படுத்தி வருகின்றனர். மொத்தம் 110 கிமீ இந்த சிவாலய ஓட்டம் நடைபெறும்.
மகா சிவராத்திரி வரும் 26-ந் தேதி கொண்டாடப்படுகிறது. சிவராத்திரி நாளில் இரவு முழுவதும் கண்விழித்து அதிகாலையில் சிவபெருமானை வழிபடுவது வழக்கம். கன்னியாகுமரி மாவட்டத்தில் மகா சிவராத்திரியை முன்னிட்டு நடைபெறும் சிவாலய ஓட்டம் பிரசித்தி பெற்றது. சிவராத்திக்கு முந்தைய நாள் கன்னியாகுமரி முன்சிறை திருமலை சூலபாணி மகாதேவர் கோவிலில் இருந்து சிவாலய ஓட்டம் தொடங்கும். கன்னியாகுமரி மாவட்டத்தின் 12 சிவாலயங்களையும் சென்றடைந்து இறுதியாக திருநட்டாலம் சங்கரநாயனார் கோவிலில் முடிவடைவதுதான் இந்த சிவாலய ஓட்டம்
இந்த சிவாலய ஓட்டத்தில் பங்கேற்கும் பக்தர்கள் மாசி மாதம் ஏகாதசி நாளில் மாலை அணிந்து விரதத்தை தொடங்குவர். இந்த விரத காலத்தில் காலை. மாலை இருநேரங்களிலும் புனித நீராடி சிவாலயத்தில் வழிபாடு செய்வர்.
****
மே மாதம் சர்வதேச சைவ சித்தாந்த மாநாடு: தருமபுரம் ஆதீனம் தகவல்

மயிலாடுதுறை:”தருமபுரம் ஆதீனம், சென்னை எஸ்.ஆர்.எம்., பல்கலை இணைந்து நடத்தும் ஆறாவது அனைத்துலக சைவ சித்தாந்த மாநாடு, மே 3 முதல் 5ம் தேதி வரை சென்னை காட்டாங்கொளத்துாரில் நடைபெற உள்ளது,” என, தருமபுரம் ஆதீனம் தெரிவித்துள்ளார்.
தருமபுரம் ஆதீன திருமடத்தில், 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் அளித்த பேட்டி:
செந்தமிழும், சிவ நெறியும் வளர்க்கும் ஞானப்பண்ணையாக விளங்கி, சைவ சித்தாந்தத்தை உலகெங்கும் பரவ செய்யும் நோக்கோடு தருமை ஆதீனம் 26வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், 1984ம் ஆண்டு அனைத்துலக சைவ சித்தாந்த ஆராய்ச்சி நிறுவனத்தை துவங்கினார்.
இந்நிறுவனம் சார்பில் இதுவரை, தருமபுரம், மலேஷியா, வாரணாசி, மதுரை, சென்னை ஆகிய ஐந்து இடங்களில் மாநாடுகள் நடத்தப்பட்டுள்ளன.
சென்னை முதல் கன்னியாகுமரி வரை, தருமை ஆதீன சைவ சித்தாந்த மாலை நேர கல்லுாரியில் சித்தாந்த வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
தற்போது தருமபுரம் ஆதீனம், எஸ்.ஆர்.எம்., பல்கலை இணைந்து ஆறாவது அனைத்துலக சைவ சித்தாந்த மாநாடு, சென்னை காட்டாங்கொளத்துாரில் மே 3, 4, 5 ஆகிய தேதிகளில் நடத்தப்பட உள்ளது.
‘சங்க இலக்கியங்கள் முதல் சமகால இலக்கியம் வரை சித்தாந்த பதிவுகள்’ எனும் பொது தலைப்பின் கீழ் கருத்தரங்கம் நடைபெற உள்ளது.
மாநாட்டில், சைவ ஆதீனங்களின் குரு மகா சன்னிதானங்கள், பிரதமர், கவர்னர்கள், முதல்வர்கள், உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகள், உள்நாட்டு, வெளிநாட்டு அமைச்சர்கள், சிவாச்சாரியார்கள், பல்கலை பேராசிரியர்கள், சைவ சமய அறிஞர்கள், கோவில் அறங்காவலர்கள், சமய ஆர்வலர்கள் பங்கேற்க உள்ளனர்.
சிங்கப்பூர், மலேஷியா, இலங்கை, லண்டன், ஜெர்மன், சுவிட்சர்லாந்து, நியூசிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா, தென்னாப்ரிக்கா, நைஜீரியா, மொரீஷியஸ் உள்ளிட்ட நாடுகளில் இருந்து அறிஞர்களும், ஆர்வலர்களும் பங்கேற்கின்றனர்.
மாநாட்டுக்கான சிறப்பு மலர், ஆய்வாளர்களின் ஆய்வு கட்டுரைகள் அடங்கிய ஆய்வு கோவை மற்றும் 10க்கும் மேற்பட்ட நுால்கள் வெளியிடப்பட உள்ளன. முதற்கட்டமாக சிறப்பு மலர் குழு, கருத்தரங்க குழு, நுால் வெளியீட்டு குழு என, மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்று
தருமபுரம் ஆதீன திருமடத்தில், 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் கூறினார்.
****

திருப்பரங்குன்றத்தை போல துடியலூரிலும் எழுச்சி வரப்போகிறது – காடேஸ்வரா சுப்ரமணியம் பேட்டி!
கோவை துடியலூரில் தெருக்களில் தொழுகை நடத்துகிறார்கள். திருப்பரங்குன்றத்தில் எப்படி ஒரு எழுச்சி வந்ததோ அதேபோன்று ஒரு எழுச்சி துடியலூரிலும் வரப்போகிறது என கோவை ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜரான இந்து முன்னணி தலைவர் சுப்பிரமணியம் தெரிவித்தார்.
முக்கிய அம்சங்கள்:
துடியலூரில் தெருக்களில் தொழுகை நடத்துகிறார்கள்
திருப்பரங்குன்றத்தை போல துடியலூரிலும் எழுச்சி
இந்து முன்னணி தலைவர் சுப்பிரமணியம்
கோவையில் கடந்த 14ம் தேதி குண்டுவெடிப்பு புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி ஆர்.எஸ் புரம் பகுதியில் இந்து அமைப்புகளால் நடத்தப்பட்டது. அதில் பேசிய இந்து முன்னணியின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம், துடியலூர் பகுதியில் ஆடு வெட்டினால் நாங்கள் பன்றியை வெட்டுவோம் என்று பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் தொடர்பாக ஆர்.எஸ் புரம் போலீசார் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வர சுப்ரமணியம் மீது இரு மதத்தவர் இடையே பிரிவினையை தூண்டும் வகையில் பேசியதாக வழக்கு பதிவு செய்து நேரில் ஆஜராகும் படி சம்மன் அனுப்பி இருந்தனர்.
இதனையடுத்து இன்று மாலை இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கோவை ஆர்.எஸ் புரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி தனது விளக்கத்தை அளித்தார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியது: இன்று நடக்கும் அரசாங்கம் இந்துக்களுக்கு விரோதமாக நடந்து கொண்டு இருக்கிறது. இந்த அரசாங்கத்திற்கு ஏழரை சனி பிடித்து இருக்கிறது. 2026 ல் இந்த ஏழரை சனி என்ன என்பதை காட்டும். கடந்த 24 ம் தேதி கூட பெரியார் திராவிட கழகத்தினர் நாமம் போட்டு ஒரு ஆர்ப்பாட்டம் செய்தனர். அதற்கு புகார் கொடுத்தும் சி.எஸ்.ஆர் நகல் கூட கொடுக்கவில்லை. இந்து முன்னணி அலுவலகத்தின் மீது வெடிகுண்டு வீசி இருக்கிறார்கள். அதற்கும் புகார் கொடுத்து இருக்கிறோம். அதன் மீதும் தற்போது வரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கோவை துடியலூர் முத்துச்சாமி கவுண்டர் வீதியில் வெள்ளிக்கிழமை தோறும் பங்களாதேஷ் முஸ்லிம்கள் மற்றும் மற்ற முஸ்லிம்கள் சேர்ந்து தொழுகை நடத்துகிறார்கள். பல முறை இது சம்பந்தமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்து இருக்கிறோம். அதற்கும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுதொடர்பாக கடந்த 14 ம் தேதி நடந்த கூட்டத்தில் நான் கூறி இருந்தேன். அதற்காக வழக்கு பதிவு செய்து இருக்கின்றனர். இரவு ஒரு மணிக்கு வீட்டில் வந்து நோட்டீஸ் ஒட்டி சென்றதாக தெரிவித்தார்.
இதை பழிவாங்கும் நடவடிக்கையாக பார்க்கிறேன். திருப்பரங்குன்றத்தில் எப்படி ஒரு எழுச்சி வந்ததோ அதேபோன்று ஒரு எழுச்சி துடியலூரிலும் வரப்போகிறது. அதற்காகத் தான் அரசாங்கம் முயற்சி செய்கிறது. நாளை மற்றும் நாளை மறுநாளும் விசாரணைக்கு வரக் கூறியுள்ளனர். வந்த பிறகு தான் எதன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது என்பது தெரியவரும் என தெரிவித்தார்.
இத்துடன் செய்திகள் நிறைவடைந்தன.
உலக இந்துமதச் செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;
லண்டன் மாநகரிலிருந்து செய்திகளை வாசித்து வழங்கியவர் வைஷ்ணவி ஆனந்த் .
அடுத்த ஒளிபரப்பு ,
மார்ச் மாதம் இரண்டாம் தேதி லண்டன் நேரம் நண்பகல் 12 மணிக்கும்,
இந்திய நேரம் மாலை ஐந்தரை மணிக்கும்,
ஆஸ்திரேலிய நேரம் இரவு 11 மணிக்கும் ஒளிபரப்பாகும்.
வணக்கம்.
—SUBHAM—
Tags- ஞானமயம் , உலக இந்துமத செய்தி மடல் , 23-2-2025