வில்லிப்புத்தூரார்! – 1 (Post No.14,289)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,289

Date uploaded in Sydney, Australia – –11 March 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

ஞானமயம் ஒளிபரப்பில் 9-3-2025 அன்று ஒளிபரப்பான உரை. இங்கு இரு பகுதிகளாக தரப்படுகிறது.

வில்லிப்புத்தூரார்! – 1

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே, திரு கல்யாண்ஜி அவர்களே, திரு லண்டன் சுவாமிநாதன் அவர்களே வணக்கம். நமஸ்காரம்.

மஹாபாரதத்தை அழகுறத் தமிழிலே தந்த வில்லிப்புத்தூரார் பற்றி இன்று சிந்திப்போம்.

நடுநாடென்று சொல்லப்படுகின்ற திருமுனைப்பாடி நாட்டில் சனியூரில் அந்தணர் குலத்தில் ஒரு வைணவ குடும்பத்தில் வீரராகவாசாரியார் என்பவருக்குத் திருக்குமாரராய் வில்லிப்புத்தூரார் அவதரித்தார்.

இவர் பதினான்காம் நூற்றாண்டில் இடைப்பகுதியில் வாழ்ந்ததாக வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.

இளமையில் வடமொழியிலும் தமிழிலும் நல்ல தேர்ச்சி பெற்று கவி பாடும் ஆற்றலை இவர் பெற்றார்.

சேர சோழ பாண்டியர் ஆகிய மூவேந்தர்களையும் சந்தித்து பாக்கள் புனைந்து அவர்களால் பெரிதும் மதிக்கப்பட்டார் வில்லிப்புத்தூரார்.

திருமுனைப்பாடிநாட்டில் வக்கபாகை என்னும் இடத்தில் இருந்து செங்கோல் செலுத்திய கொங்கர் குலத்து மன்னனான வரபதியாட்கொண்டான் என்பவன் இவரைப் பெரிதும் ஆதரித்து வந்தான். இவரை தனது ஆஸ்தான பண்டிதராகவும் அவன் நியமித்தான்.

ஒரு நாள் இவரை நோக்கி அவன், “வடமொழியிலே வேத வியாசர் இயற்றிய மஹாபரததத்தைத் தமிழில் நூலாக யாத்தருள வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தான்.

ஶ்ரீ கிருஷ்ணனுடைய சரித்திரம் என்பதால் இதற்கு இணங்கிய வில்லிப்புத்தூரார் நல்ல அழகிய தமிழ் நடையில் சொற்சுவையும் பொருட்சுவையும் தோன்றுமாறு பாரதத்தைப் பாடினார்.

இவர் பாடிய பாரதத்தில் 49 சர்க்கங்களில் 4337 பாடல்கள் உள்ளன. வியாசர் இயற்றி அருளிய மஹாபாரதத்தில் 18 பர்வங்கள் உள்ளன. ஆனால் வில்லிப்புத்தூரார் பத்து பர்வங்களையே பாடினார். கிருஷ்ணரது மறைவைக் குறித்து வரும் செய்திகளை இவர் பாட விருப்பம் கொண்டிருக்கவில்லை என்பதை இதனால் நாம் அறிய முடிகிறது.

தன்கவித் திறமையினால் ஆங்காங்கே கர்வத்துடன் இருந்த பல புலவர்களை வாதுக்கு அழைத்த இவர் அவர்கள் தோற்றுப் போனால் எப்போதும் தன் கையில் வைத்திருந்த ஒரு துறட்டுக்கோலால் அவர்களின் காதுகளை மாட்டி இழுத்து அறுப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இவர் பால் பெரிதும் அன்பு கொண்டிருந்த மன்னர்கள் இந்தச் செயலைத் தடுக்கவில்லை.

இவர் இப்படி காதை அறுத்து வந்ததை ஒரு தனிப்பாடல் நன்கு விளக்குகிறது.

குட்டுதற்கோ பிள்ளைப்பாண்டியனீங்கில்லை

குறும்பி அளவாக் காதை குடைந்து தோண்டி எட்டினமட்டறுப்பதற்கோ வில்லியில்லை

இரண்டொன்றா முடிந்து தலையிறங்கப் போட்டு வெட்டுதற்கோ கவி ஒட்டக்கூத்தனில்லை

விளையாட்டாகக் கவிதைதனை விரைந்து பாடித்

தெட்டுதற்கோ அறிவில்லாத் துரைகளுண்டு

தேசமெங்கும் புலவரெனத் திரியலாமே

என்ற பாடல் இவர் தம் செயலை விளக்குகிறது.

ஒரு சமயம் இவரது இந்தச் செயலைக் கேள்விப்பட்ட அருணகிரிநாதர் மன வருத்தமுற்றார். தான் அவருடன் வாதுக்கு வருவதாக அறிவித்தார். ஆனால் ஒரு எதிர் நிபந்தனையும் விதித்தார். வாதில் வில்லிப்புத்தூரார் தோற்றுவிட்டால் அவர் செய்தது போலவே அவர் காதும் அறுக்கப்படும் என்றார். இதை வில்லிப்புத்தூரார் ஏற்றுக் கொண்டார். அருணகிரிநாதர் முருகனைப் போற்றும் கந்தர் அந்தாதியைப் பாட ஆரம்பித்தார். உடனுக்குடன் வில்லிப்புத்தூரார் பொருள் சொல்லி வந்தார். 54ம் பாடலை ஒரே எழுத்தைக் கொண்டுள்ள ஏகாக்ஷரி பாடலாக அருணகிரிநாதர் அமைத்து இப்படிப் பாடினார்.

திதத்தத்தத் தித்தத் திதிதாதை தாததுத் தித்தத்திதா
திதத்தத்தத் தித்த திதித்தித்த தேதுத்து தித்திதத்தா
திதத்தத்தத் தித்தத்தை தாததி தேதுதை தாததத்து
திதத்தத்தத் தித்தித்தி தீதீ திதிதுதி தீதொத்ததே 

இதற்குப் பொருள் சொல்ல முடியாமல் வில்லிப்புத்தூரார் திகைத்து விழித்தார்.

அருணகிரிநாதர் பாடலுக்கு பொருளை விளக்கமாகக் கூற வில்லிப்புத்தூராரின் தோல்வி உறுதியானது.

பாடலின் பொருள் இது தான்: நடராஜ மூர்த்தியாகிய சிவபெருமானும் பிரம்மனும் இடைச்சேரியில் தயிர் உண்டு பாற்கடலையும் ஆதிசேஷனையும் பாயலாகக் கொண்டு யோக நித்திரை செய்யும் திருமாலும் வணங்குகின்ற ஆனந்த முதலே!, தேவயானையின் தாசனே! ஜனன மரணத்திற்கு இடமாய் சப்த தாதுக்கள் நிறைந்த பொல்லாத இந்த உடம்பை தீயினால் தகிக்கப்படும் பொழுது உன்னை துதித்து வந்த என் சித்தத்தை உன்னுடைய திருவடிக்கு நீ ஆட்படுத்த வேண்டும்.

ஆனால் அருணகிரிநாதர் வில்லிப்புத்தூராரின் காதுகளை அறுக்கவில்லை. “இந்தப் பழக்கத்தை இன்றோடு கைவிட வேண்டும்” என்று வில்லிப்புத்தூராரை அருணகிரிநாதர் கேட்க அவரும் மனம் நெகிழ்ந்து ஒப்புக் கொண்டார். அன்றிலிருந்து அவரது புலமைக் கர்வம் அகன்றது!

வில்லிப்புத்தூரார் படைத்த வில்லி பாரதத்திற்கு வரந்தருவார் என்ற அவரது மகனே சிறப்புப் பாயிரம் என்று 23 பாடல்களைத் தந்து சிறப்பித்தார்.

தென்னர் சேரலர் செம்பியர் எனப்பெயர் சிறந்த

மன்னர் மூவரும் வழங்கிய வரிசையால் உயர்ந்தோன்;

முன்னர் எண்ணிய முத்தழிழ்ப் பாவலர் எவரும்

பின்னர் வந்தொரு வடிவுகொண் டனரெனப் பிறந்தோன்

என்று இவர் வில்லிப்புத்தூராரின் சிறப்பைப் பெருமிதத்துடன் கூறுகிறார்.

அதுமட்டுமல்ல

“ஐந்து பாவுடை நால்வகைக் கவிக் கதிபதியாய்” என்று கூறுவதால் வில்லிப்புத்தூரார் வெண்பா, ஆசிரியப்பா, கலிபா, வஞ்சிப்பா, மருட்பா ஆகிய ஐந்து பாவினங்களிலும் ஆசு, மதுரம், சித்திரம், வித்தாரம் ஆகிய நால்வகைக் கவிகளிலும் சிறந்து விளங்கியவர் என்பதையும் நமக்கு அவர் கூறுகிறார்.

வடமொழிச் சொற்களை அழகுறத் தமிழ்ப் படுத்திப் பாடியது வில்லிப்புத்தூராரின் தனிச் சிறப்பாகும்.

இவர் அகஸ்திய கவி இயற்றிய பாலபாரதம் என்னும் இருபது சருக்கங்கள் கொண்ட நூலைப் பின்பற்றித் தன் பாரதத்தைப் படைத்தார் என்று சிலர் சொல்வர். ஆனால் வியாஸ பாரதத்தையே இவர் முதல் நூலாகக் கொண்டார். சுருக்கமாகப் பாடுவது என்ற ஒரே ஒரு கருத்தினை மட்டும் அகஸ்திய முனிவரிடமிருந்து எடுத்துக் கொண்டார் என்று சொல்லலாம்.

ஆங்காங்கே வியாஸ பாரதத்திலிருந்து சிறிது மாறுபட்டுத் தன் வழியில் இன்னும் சிறப்பாக இவர் பாக்களை இயற்றினார் என்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் இந்த நூலில் உண்டு.

to be continued…………………..

Leave a comment

Leave a comment