நரகத்துக்குப் போவோர் யார்? யார் ? குமரேச சதகம் ஆராய்ச்சிக் கட்டுரை-6 (Post No.14,470)

Written by London Swaminathan

Post No. 14,470

Date uploaded in London –  4 May 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

 நரகத்துக்குப் போவோர் யார்? யார் ? குமரேச சதகம் ஆராய்ச்சிக் கட்டுரை-6 (Post No.14,470)

குமரேச சதகம் ஆராய்ச்சிக் கட்டுரை-6

நரகத்துக்குப் போவோர் பற்றி குருபாததாசர்

யார், யார் நரகத்துக்குப் போவார்கள் என்று மனு, திருமூலர், கம்பன், அருணகிரிநாதர் பாடி இருக்கிறார்கள். குமரேச சதகம் எழுதிய குருபததாசரும் இந்த விஷயத்தை விடவில்லை . அவரது பட்டியலில் மேலும் சில பாவிக்களும்  சேர்ந்துள்ளனர்

முதலில் பாடலை பார்ப்போம்

18. நரகில் வீழ்வோர்

மன்னரைச் சமரில்விட் டோடினவர், குருமொழி

     மறந்தவர், கொலைப்பாதகர்

மாதா பிதாவைநிந் தித்தவர்கள் பரதாரம்

     மருவித் திரிந்தபேர்கள்

அன்னம் கொடுத்தபே ருக்கழிவை யெண்ணினோர்

     அரசடக்கிய அமைச்சர்

ஆலயம் இகழ்ந்தவர்கள் விசுவாச காதகர்

     அருந்தவர் தமைப்பழித்தோர்

முன்னுதவி யாய்ச்செய்த நன்றியை மறந்தவர்

     முகத்துதி வழக்குரைப்போர்

முற்றுசிவ பத்தரை நடுங்கச்சி னந்தவர்கள்

     முழுதும்பொய் உரைசொல்லுவோர்

மன்னொருவர் வைத்தபொருள் அபகரித்தோர் இவர்கள்

     மாநரகில் வீழ்வரன்றோ

மயிலேறி விளையாடு குகனேபுல் வயல் நீடு

     மலைமேவு குமரேசனே.

பொருள்

அரசர்களைப் போரிலே கைவிட்டு ஓடிய கோழைகளும்,

குரு/ ஆசிரியர் ஆணையை மறந்தவர்களும்,

கொலை செய்த பாவிகளும், பெற்றோரைப் பழித்தவர்களும், அயலார் மனைவிகளைக் கலந்து திரிகின்றவர்களும், உணவளித்தவர்கட்குக் கெடுதி  நினைத்தவர்களும், அரசர்களை அழித்த மந்திரிகளும், இறைவர் திருக்கோயிலைப் பழித்தவர்களும்,  நட்பைக் கெடுத்தவர்களும், உயர்ந்த துறவிகளை இகழ்ந்தவர்களும்,

துன்பமுற்ற காலத்திலே துணைபுரிந்த நன்றியை மறந்து விட்டவர்களும்,  தம்மைப் புகழ்ந்து கூறுவோர் சார்பாக (ஓரவஞ்சகமாக) வழக்குக் கூறுகின்றவர்களும், முதிர்ந்த

சிவனாடியவரை மனம் கலங்கக் கோபித்தவர்களும்

முழுப்பொய் கூறுவோர்களும், (தம்மிடம்) நிலையாக ஒருவர் வைத்த பொருளைக் கவர்ந்தவர்களும், ஆகிய இவர்கள்

கொடிய நரகில் வீழ்வார்கள் அல்லவா?

இவற்றில் பெரும்பாலானவற்றை முன்காலத்தில் வள்ளுவர், திருமூலர், மனு ஆகியோரும் செப்பியுள்ளனர்

***

மாமிசம் தின்போர் நரகத்துக்குப் போவார்கள்-   திருமூலர் எச்சரிக்கை

இதோ அந்தப் பாடல்

கொன்றிலாரை கொலச் சொல்லிகூறினார்

தின்றிலாரை தினச் சொலி தெண்டித்தார்

பன்றியாய் படியில்பிறந்து ஏழ் நரகு 

ஒன்றுவார் அரன் ஆணை! இது உண்மையே!

Those who ask others to kill animals (for meat)

Those who force others to eat meat

Will be born as pigs and suffer in seven types of hell

This is the order by Lord Siva! True indeed!

***

கொல்லிடு குத்தென்று கூறிய மாக்களை,

வல்லடிக் காரர் வலிக்கயிற் றாற்கட்டிச்,

செல்லிடு நில்லென்று தீவாய் நரகிடை,

நில்லிடும் என்று நிறுத்துவர் தாமே  —திருமந்திரம் > முதல் தந்திரம் > 6 கொல்லாமை > பாடல்: 198

English translation of verse 198:

The men who shouted,”Kill and stab,”

Them with strong ropes Death’s ruffians bind;

And stationing them at the fire-gates of Hell,

The agents yell, “Stand, go; and in the fire pit roast.”

xxxx

மாமிசம் தின்பவன் நரகத்துக்குப் போவான் என்பதை வள்ளுவரும் அடித்துக் கூறுகிறார்

உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊனுண்ண

அண்ணாத்தல் செய்யாது அளறு.–255

If flesh you eat not, life’s abodes unharmed remain;

Who eats, hell swallows him, and renders not again.-255

xxxx

இதோ வள்ளுவர் கிண்டல் !

வள்ளுவர் புத்த மதத்தினரைக் கிண்டல் செய்கிறார் ; ஏனெனில் அவர் தீவிர ஹிந்து; பெளத்தர்கள் மற்றவர்கள் அடித்துக்கொன்று கொடுத்தால் சாப்பிடுவார்கள் ; இலங்கையில் புத்த குருமார்கள் இதற்காகவே சாலை  ஓரங்களில் காத்து நிற்பார்களாம்; மஹா பாவிகள் !

தினற்பொருட்டால் கொல்லாது உலகெனின் யாரும்

விலைப்பொருட்டால் ஊன்றருவா ரில்.

‘We eat the slain,’ you say, by us no living creatures die;

Who’d kill and sell, I pray, if none came there the flesh to buy?

நான் ஹாங்காங் சென்ற பொழுது பய பக்தியுடன் புத்தர் கோவிலுக்குப் போனால், எல்லோரும் பன்றிக்குட்டியைத் தோலுரித்து பாலிதீன் கவர்களில் போட்டுக்கொண்டு வந்து படையல் செய்ததைப் பார்த்து திகைத்து நின்றேன் ; புத்தர் மட்டும் உயிரோடு இருந்தால் 100 முறை தற்கொலை செய்துகொள்வார்.

 xxxx

நூறு அஸ்வமேதம் செய்யும் பலன் , மாமிசம் தின்னாத புண்ணியவானுக்குக் கிடைக்கும் என்று மனுவும் (5-53) செப்புகிறார்

வர்ஷே வர்ஷே அஸ்வமேதேன யோ யஜேத சதம் சமாஹா

மாம்சானி ச ந காதேத் யஸ்தயோஹோ புண்யபலம் சமம் –மனு –5-53

वर्षे वर्षेऽश्वमेधेन यो यजेत शतं समाः ।
मांसानि च न खादेद् यस्तयोः पुण्यफलं समम् ॥ 5-५३ ॥

varṣe varṣe’śvamedhena yo yajeta śataṃ samāḥ |
māṃsāni ca na khāded yastayoḥ puṇyaphalaṃ samam ||5- 53 Manu ||

If a man performs the Aśvamedha Sacrifice every year, for a hundred tears,—and another does not eat meat,—the merit and reward of both these are the same.—(5-53.) 

xxxx

அருணகிரிநாதர்:  தரும்  பட்டியல்

யார், யார் நரகத்துக்குப் போவார்கள் என்று ஒரு சுவயான பட்டியலைத் தருகிறார் அருணகிரிநாதர்: 

ஓதுவித்தவர் கூலிகொடாதவர்

மாதவர்க்கு அதிபாதகமானவர்

ஊசலில் கனலாய் எரி காளையர்         மறையோர்கள்

ஊர்தனக்கு இடரே செயும் ஏழைகள்

ஆர்தனக்கும் உதாசினதாரிகள்

ஓடி உத்தமர் ஊதிய நாடினர் இரவோருக்கு

ஏதும் இத்தனை தானம் இடாதவர்

பூதலத்தினில் ஓரமதானவர்

ஈசர் விஷ்ணுவை சேவை செய்வோர்தமை இகழ்வோர்கள்

ஏகசித்த தியானமிலாதவர்

மோகமுற்றிடு போகிதம் ஊறினர்

ஈனர் இத்தனை பேர்களும் ஏழ்நரக உழல்வாரே

பொருள்: குரு தட்சிணை கொடுக்காதவர்கள், தவ வலிமை மிக்க பெரியோர்களுக்கு ஊறுவிளைவிப்போர், காம வெப்பத்தில் நெருப்பாய் எரியும் இளையோர், வேதம் அறிந்த பார்ப்பனர் ஊர்களுக்கு கெடுதி செய்வோர், எல்லோரையும் உதாசினம் செய்து பேசுவோர், உத்தமர்களின் செல்வத்தை ஏமாற்றிப் பறிப்போர், பிச்சை கேட்போருக்கு தானம் இடாதவர், பூவுலகில் பாரபட்சமாகப் பேசுவோர், சிவனையும் விஷ்ணுவையும் க்உம்பிடுவோரை கேலி செய்வோர், ஒரு முகப் பட்ட மனத்துடன் தியானம் செய்யாதவர்கள், மோகத்தில் மூழ்கி காமத்தில் திளைப்பவர்கள், இன்னர்கள் இத்தனை பேரும் ஏழுவகை நரகங்களில் துன்புறுவார்கள்.

****

இதோ கம்பன் தரும்  பட்டியல் :-

உய்ய,’நிற்கு அபயம்’என்றான் உயிரைத் தன் உயிரின் ஓம்பாக்

கையனும், ஒருவன் செய்த உதவியில் கருத்து இலானும்,

மை உறு நெறியின் நோக்கி மாமறை வழக்கில் நின்ற

மெய்யினைப் பொய் என்றானும்மீள்கிலா நரகின் வீழ்வார்.         6.4.115

பொருள்

நான் உய்யுமாறு உன்னைச் சரண்புகுந்தேன்   என்று   வந்த  ஒருவனுடைய உயிரினைத்   தன்னுயிராகக் கருதிப்   பேணிக் காப்பாற்றாத   கீழ்மகனும், நன்றி மறந்தவனும்,   சிறந்த வேத நெறிப்படி நின்றொழுகும்   உண்மை   நெறியைப்  பொய் என்று கூறுபவனும்; மீண்டு  வரமுடியாத கொடிய நரகத்திலே வீழ்ந்து துன்புறுவர்.

xxx

விவேக சிந்தாமணி தரும்  பட்டியல்

விவேக சிந்தாமணி எழுதிய ,பெயர் தெரியாத ஆசிரியர்,  வேறு ஒரு பட்டியலை நம் முன் சமப்பிக்கிறார்

தந்தையுரை தட்டினவன் தாயுரை இகழ்ந்தோன்,

அந்தமறு தேசிகர்தம் ஆணையை மறந்தோன்,

சந்தமுறு வேதநெறி மாறினவர் நால்வர்,

செந்தழலின் வாயினிடை சேர்வது மெய் கண்டீர்.

பொருள்

தந்தை சொல் மீறி நடந்தவன், தாயின் சொல்லை இகழ்ந்து பின்பற்றாது இருப்பவன், அழிவில்லாத மெய்ஞான குருவின் உபதேசத்தை மறந்தவன், வேதநெறிப்படியான வாழ்க்கையிலிருந்து விலகியவன் ஆகிய நால்வரும் நரகத்தின் வாயிலில் சென்று சேர்வது உண்மை (நிச்சயம்).

xxxx

மனு நீதி நூல் தரும் பட்டியல்

யார் ஒருவன் அனுமதியில்லாமல் வேதத்தைக் கற்கிறானோ அவன் வேதத்தைத் திருடியவன் ஆவான்; அவன் நரகத்துக்குப் போவான் -2-116

அண்ணனுக்கு முன்னர் திருமணம்  செய்துகொள்ளும் தம்பி, அதை அனுமதித்த அண்ணன், அவர்களுக்குப் பெண் கொடுத்தவர்கள், அந்தத் திருமணத்தை நடத்திவைத்த புரோகிதர் ஆகிய ஐவரும் நரகில் வீழ்வார்கள் –மனு நீதி நூல் மூன்றாவது அத்தியாயம்-172

சிரார்த்தத்தில் புசித்து மீதியுள்ள அன்னத்தைக் கீழ்ஜாதிக்காரர்களுக்குக் கொடுத்தால் அந்த மூடன் கால சூத்ரம் என்னும் நரகத்தில் வீழ்வான் – 3-149

பிராமணர்கள், கீழ்ஜாதிக்காரர்களுக்கு நேரடியாக தருமதத்தை உபதேசிக்கக்கூடாது (வேறு ஒருவரைக் கொண்டு சொல்லித்தரலாம்) இதை மீறி தருமங்களையும் விரதங்களையும் உபதேசித்தால் இருவரும் அசம்விருதம் என்னும் நரகத்தில் வீழ்வார்கள் 4-81

ஸ்லோகங்கள் 4-87 முதல் நான்கு ஸ்லோகங்களில் 21 வகை நரகங்கள் பற்றி மநு எச்சரிக்கிறார்; ஒரு பேராசையுள்ள , சாஸ்திர விரோதமான அரசனிடமிருந்து, ஆட்சியாளரிடமிருந்து பரிசுகளைப் பெறும் பிராஹ்மணன் 21 வகை நரகங்களுக்குச் செல்வான் என்று மநு நீதி நூல் எச்சரிக்கிறது.

நரகங்களின் பெயர்கள் –தாமிஸ்ரம், அந்த தாமிஸ்ரம், மஹாரௌரவம் ,ரௌரவம், காலசூத்ரம், நரகம், மஹா நரகம், சஞ்ஜீவனம்,  தபனம் , மஹாவீசி,  சப் பிரதாபனம், சங்காதம், க்கோலம், குட்மலம்,  பிரதிமூர்த்திகம், லோஹங்கு, ருஜிஷம், பந்தானம், ஷால்மலீணாதி, அசிபத்ர வனம், லோகாதாரகம் ஆகிய நரகங்களில் வீழ்வார்கள் 4-87 TO 4-90

இந்த 21 வகை நரகங்களின் ஸம்ஸ்க்ருத அர்த்தத்தைப் பார்த்தால் விநோதமாக இருக்கும். ஏன் இப்படியெல்லாம் பெயர்கள் இடப்பட்டன என்பது நூல்களிலிலிருந்து ஆழமாக ஆராயப்பட வேண்டியவை. மநு தர்ம நூலுக்குப் பல உரைகள் இருப்பதால் அவைகளில் விளக்கம் கிடைக்கும்.

நரகங்களின் சம்ஸ்க்ருதப் பெயர்களின் மொழி பெயர்ப்பு:-

இருள், குருட்டு இருள், பெரிய புள்ளி மான், மான், காலம் என்னும் நூல் இழை, பெரிய நரகம், மீண்டும் உயிர்கொடுத்தல், அடித்துக்கொண்டு போதல், எரிச்சல், பெரிய எரிச்சல், நசுக்குதல், அண்டங்காக்கை இடம்,  மொட்டு போல மூடுதல், நாற்ற பூமி, இரும்பு முட்கள், கசடு, விரட்டி அடித்தல், முள் ஆறு, வாள் இலை மரக் காடு, இரும்பை வைத்து வெட்டும் நரகம்.

அபிதான சிந்தாமணி என்னும் தமிழ் என்சைக்ளோபீடியா நரகங்கள் பற்றிய விஷயத்தை விவரமாகச் சொல்கிறது:

பல புராணங்கள் 21 அல்லது 28 நரகங்களின் பெயர்களையும் அதில் என்ன என்ன பாவம் செய்தோர் புகுவர் என்றும் விவரங்கள் உள்ளன.

****

ஒரு பிராம்மணனைக் கொல்ல இன்னொரு பிராமணன் ஆயுதம் எடுத்தால் அவன் தாமிஸ்ரம் (முழு இருட்டு) என்ற நரகத்தில் விழுவான் 4-165

கொக்கு போலவும் , (ருத்திராட்ச) பூனை போலவும் கபட வேஷம் போடும் பிராமணன் அந்த தாமிஸ்ரம் என்னும் கடும் இருட்டு நரகத்துக்குப் போவான் (கொக்கு, பூனை கதைகள் பஞ்ச தந்திரக்கதைகளில் உள்ளது ) 4-197

எவன் பூஜை செய்து தானம் அளி க்கிறானோ எவன் பூஜை செய்து தானம் பெறுகிறானோ அவர்கள் இருவரும் சொர்கத்துக்குப் போவார்கள்; இவ்வாறு பூஜா பூர்வமாகக் கொடுக்காதவனும் தானம் வாங்கியவனும் நரகத்துக்குப் போவார்கள்  4-235

கடந்த காலத்தில் ஒருவன் செய்த வினைகள் எப்படி ஒருவனை நரகத்துக்கு இட்டுச் செல்லும்? அங்கே எப்படி யமன் சித்திரவதை செய்வான்? என்பதை சிந்தித்துப் பார்க்கவேண்டும் 6-61

நீதிமன்றத்தில் பொய் சாட்சி  சொல்பவன்  நரகத்தை அடைவான் 8-75

நியாயமற்ற தண்டனைகளைக் கொடுக்கும் மன்னன் சொர்க்கத்துக்குப் போகமாட்டான் 8-127

ஒரு மன்னன், மக்களுக்குப் பாதுகாப்பு வழங்காமல் வரி வசூலித்தாலோ , அபராதம் விதித்தாலோ நரகத்தை அடைவான் 8-307

துன்பப்படும் மக்கள் மன்னனை குறைகூறினால் அவன் பொறுத்துக்கொள்ள வேண்டும்; அப்போது அவனுக்குச் சுவர்க்கம் கிட்டும்;  பொறுத்துக்கொள்ளாவிடில் நரகம் கிட்டும் 8-313

ஆண் குழந்தைகள் பிறந்தால் அவர்கள் தந்தையை (இறந்த பின்னால்) புத் என்னும் நரகத்திலிருந்து விடுவிப்பதனால் அவனை புத்ரன் என்கிறோம் 9-138

முறையான பயிற்சி பெற்ற புரோகிதன், யாகக் கிரியைகளைச் செய்யவேண்டும் . அவர் வேதத்தில் கரைகண்டவராகவும் முத்தீ பேணுபவராகவும் இல்லாவிடில் நரகமே கிட்டும் 11-37

ஒரு பிராமணனை ஒருவன் மிரட்டினால் அவன் நூறு ஆண்டுகள் நரகத்தில் கிடப்பான்; அடித்தாலோ ஆயிரம் ஆண்டுகள் நரகத்தில் கிடப்பான் 11-207

ரத்தம் சொட்ட வைத்தால் அத்தனை துளிகளுக்கு ஏற்ப பல்லாயிரம் ஆண்டுகள்  நரகத்தில் கிடப்பான் 11-208

பன்னிரெண்டாவது — கடைசி- அத்தியாயத்தில் — தீய வினைகள் புரிந்தார் யமலோகத்தில் துன்பம் அடைவதை விவரிக்கிறது  அங்கு தீயவன் மேலும் ஒரு உடலைப் பெறுவான் ; தீய செயல்களுக்கான தண்டனை  முடிந்தவுடன் அந்த உடல் பஞ்ச பூதங்களில் கரைந்து விடும்12- 16/22

மாபாதகம் செயதோர் நீண்டகாலம் பயங்கர நரகங்களில் உழல்வார்கள் (தீவினைர்களுக்கேற்ப என்னென்ன மிருகங்களாகப் பிறப்பார்கள் என்பதை அடுத்துவரும் ஸ்லோகங்களில் மனு விவரிக்கிறார் ) 12-54

காம சம்பந்தமான பாவங்களைச்  செய்வோர் தாமிஸ்ரம், அசிபத்ரம் என்னும் நரகங்களில் வெட்டப்பட்டும், கட்டப்பட்டும் சித்ரவதைகளை அனுபவிப்பார்கள் -12-75

—SUBHAM—

Tags- குமரேச சதகம் ஆராய்ச்சிக் கட்டுரை-6,  நரகத்துக்குப் போவோர், வள்ளுவர், மனு, திருமூலர், அருணகிரிநாதர் , நரகம், குருபாததாசர் , கம்பன்

Leave a comment

Leave a comment