துறவிக்கு, வேந்தனுக்கு, வீரனுக்கு எவர் துரும்புக்குச் சமம்-part 1 (Post No.14,478)

Written by London Swaminathan

Post No. 14,478

Date uploaded in London –  6 May 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

குமரேச சதகம் ஆராய்ச்சிக் கட்டுரை 7

13. இவர்க்கு இது துரும்பு

தாராள மாகக் கொடுக்குந் தியாகிகள்

     தமக்குநற் பொருள் துரும்பு,

தன்னுயிரை யெண்ணாத சூரனுக் கெதிராளி

     தளமெலாம் ஒருதுரும்பு,

பேரான பெரியருக் கற்பரது கையினிற்

     பிரயோச னந்துரும்பு,

பெரிதான மோட்சசிந் தனையுள் ளவர்க்கெலாம்

     பெண்போகம் ஒருதுரும்பு,

தீராத சகலமும் வெறுத்ததுற விக்குவிறல்

     சேர்வேந்தன் ஒருதுரும்பு,

செய்யகலை நாமகள் கடாட்சமுள் ளோர்க்கெலாஞ்

     செந்தமிழ்க் கவிதுரும்பாம்.

வாராரும் மணிகொள்முலைவள்ளிதெய் வானையை

     மணம்புணரும் வடிவேலவா

மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு

     மலைமேவு குமரேசனே.

பொருள்

கச்சினாலிறுக்கப் பெற்ற மணிமாலை யணிந்த

முலைகளையுடைய வள்ளிக்குந் தெய்வயானைக்குங் கணவனே!,  அளவு செய்யாமல்

வழங்கும் வள்ளல்களுக்கு நல்ல பொருள்கள் துரும்பு போலாகும்;  தன்னுடைய உயிரைப் பொருளாக நினையாத வீரனுக்குப் பகைவரின் படைகளெல்லாம் ஒரு துரும்புக்குச் சமம்,  புகழ்பெற்ற பெரியோர்களுக்குத் தாழ்ந்த

மக்கள் கையாற் பயன்பெறுதல் துரும்புக்கு நிகராகும்,  உயர்ந்த வீடுபேற்றிலே நினைவுள்ளவர்களுக்குப் பெண்களாற் பெறும் இன்பம் துரும்புக்கு நேராகும்; எல்லாவற்றையும் வெறுத்துவிட்ட துறவிக்கு வெற்றியையுடைய அரசன் ஒரு துரும்புக்கொப்பாவான்.

 நன்மை தருங் கலை வடிவமான நாமகளின் அருள்

பெற்றவர்கட்கெல்லாம் செந்தமிழிலே செய்யுள் செய்தல்

துரும்பெனலாகும்—குமரேச சதகம்

****

குருபாததாசர் சொன்ன துரும்புகளை உண்மையென நிரூபித்த சில சம்பவங்களைப் பார்ப்போம் :

துறவிக்கு வேந்தன் துரும்பு!

போந்த உதாரனுக்குப் பொன் துரும்பு சூரனுக்குச்

சேர்ந்த மரணம் சிறு துரும்பு – ஆய்ந்த

அறிவோர்க்கு நாரியரும் துரும்பாமில்லத்

துறவிக்கு வேந்தன் துரும்பு”

பொருள்; வள்ளல் குணம்படைத்தவனுக்கு தங்கமும் துரும்பு போலாகும். வீரனுக்கு மரணம் துரும்பு; கற்று அதன் பயனாக ஞானம் அடைந்தவனுக்கு பேரழகிகளும் துரும்புதான். உலகையே துறந்தவனுக்கு அரசன் ஒரு துரும்புதான்.

யாருக்கு யார் துரும்பு. என்று அவ்வையாரின் இந்த செய்யுள் அழகாக விளக்குகிறது. எல்லோருக்கும் வாரி வழங்கும் உதார குணம் படைத்த வள்ளலுக்கு தங்கம் (பொன்) துரும்புக்குச் சமம். செத்தும் கொடுத்தான் சீதக்காதி பற்றிய கட்டுரையில் செத்த பிறகும் கல்லறையில் இருந்து தங்க மோதிரம் கொடுத்த கதையைப் பார்த்தோம். கர்ண மாமன்னன் தனது கவச குண்டலங்களைக் கழற்றிக் கொடுத்ததை அறிவோம்.

திருவள்ளுவர் காலத்தில் வாழ்ந்தவர் ஏலேல சிங்கன். அவர் பெரிய வணிகன். எவ்வளவு தானம் செய்தும் பணம் சேர்ந்துகொண்டே இருந்தது. அவைகளை எல்லாம் தங்கக் கட்டிகளாக மாற்றிக் கடலில் எறிந்தாராம். அவைகளை சுறாமீன்கள் விழுங்கின. அவற்றைப் பிடித்த மீனவர்கள் மீன்களின் வயிற்றை அறுத்துப் பார்த்தபோது தங்கக்கட்டிகளில் ஏலேல சிங்கன் முத்திரை இருபதைப் பார்த்து மீண்டும் அவரிடமே சேர்ப்பித்தனர் என்றும் அறிவோம்.

கேடும் ஆக்கமும் கெட்ட திருவினார் ஓடும் செம்பொன்னும் ஒக்கவே நோக்குவார்” என்ற பெரிய புராண வரிகளையும் நினைவு கூறுதல் பொருத்தம்.

ஓடும் இருநிதியும் ஒன்றாகக் கண்டாவர்கள்

நாடும் பொருளான நட்பே பராபரமே”— என்பார் தாயுமானவர்.

“ சங்கநிதி பதும நிதி இரண்டும் தந்து

தரணியொடு வானாளத் தருவரேனும்

மங்குவார் அவர் செல்வம் மதிப்போம் அல்லோம்— என்பார் அப்பர்.

பகவத் கீதையில் கண்ணபிரானும் யோகிகளுக்கு “சமலோஷ்ட காஞ்சனம்” (ஓடும் பொன்னும் ஒன்றே) என்பார் (அத்தியாயம் 6—8, அத்தியாயம் 14-24)

வீரன் பற்றி சேக்ஸ்பியர்

வீரனாகப் பிறந்தவனுக்கு சாவு (மரணம்) என்பது துரும்புக்குச் சமம்.  –கோழைகள் பலமுறை சாகின்றனர்; வீரனுக்கோ ஒரே முறைதான் சாவு—என்று ஜூலியஸ் சீஸர் நாடகத்தில் பிரபல ஆங்கிலக் கவிஞர்–நாடக ஆசிரியர் சேக்ஸ்பியர் கூறுகிறார். அதாவது வீரனுக்கு ஒரே முறை மரணம். கோழைகளுக்கு ஆயிரம் முறை மரணம். வீரர்கள் இறந்தபின்னர் சுவர்க்கத்துக்குப் போகிறார்கள் என்று பகவத் கீதையும் புறநானூறும் கூறுவதை ஏற்கனவே ஒரு கட்டுரையில் கொடுத்துள்ளேன்.

“Cowards die many times before their deaths; The valiant never taste of death but once.”?— சேக்ஸ்பியரின் ஜூலியஸ் சீஸர் நாடகம்

விவேகனந்தர் – பெண்கள் கதை

கசடறக் கற்று அதற்குத் தக நிற்போருக்கு பேரழகிகளும் துரும்புக்குச் சமம். வெளிநாட்டில் இருந்தபோது, சுவாமி விவேகானந்தரை மயக்கி அவப் பெயர் உண்டாக்க எத்தனையோ பெண்களை அனுப்பிப் பார்த்தும் அவர் மயங்கவில்லை. இன்னொரு பணக்கார அமெரிக்க மாது தனது “சொத்து சுகம் அனைத்தும் தங்களுக்கே” என்று (கெட்ட எண்ணத்துடன்) அர்ப்பணித்தபோது ‘நன்றி, சகோதரி’ என்று சொல்லி உதறிவிட்டார். விசுவாமித்திரர் போன்ற தவ சீலர்களும் முதலில் மேனகைக்கு மயங்கி தனது தவம் எல்லாவற்றையும் இழந்து, பின்னர் மீண்டும் தவம் செய்து, வசிஷ்டர் வாயால் ‘பிரம்ம ரிஷி’ பட்டம் பெற்றனர்.

அலெக்ஸாண்டர்—இந்துத் துறவி கதை

துறவிக்கு வேந்தனும் துரும்பு என்பதற்கு அலெக்ஸாண்டர்-இந்துத் துறவி சந்திப்பு ஒரு நல்ல உதாரணம். நிர்வாண சாமியார்களுடன்  அலெக்ஸாண்டர் என்ற எனது பழைய கட்டுரையில் இரண்டு சுவையான சம்பங்களை எழுதியுள்ளேன். இந்து மதத்தின் மீதும் இந்து சந்யாசிகளின் மீதும் பேரன்பு கொண்ட அலெக்ஸாண்டர் வலுக்கட்டாயமாக ஒரு இந்து சந்யாசியைக் கொண்டுபோக முயன்றபோது அவர் தீக்குளித்தார்.(மேல் விவரங்களை எனது கட்டுரையில் காண்க).

அகஸ்தியர்- நகுஷன் கதையும் நல்ல உதாரணமாகும். கடுமையான தவம் இயற்றி இந்திரன் பதவியை பெற்றவன் நகுஷன் என்னும் மாமன்னன். இவனை சப்தரிஷிகளும் சுமந்து செல்லும் அளவுக்குப் பேறு பெற்றான். ஒரு முறை பல்லக்குச் சமச் சீராகச் செல்லாததற்குக் காரணம் என்ன என்று கோபத்துடன் கேட்டான். அகஸ்த்ய மஹரிஷி குள்ளமாக இருப்பதால் பல்லக்கு ஆட்டம் கண்டது என்பதை அறிந்தவுடன் அவரை காலால் ஒரு உதைவிட்டு “வேகம் வேகம்” (ஸர்ப்ப ஸர்ப்ப) என்றான். சம்ஸ்கிருதத்தில் ‘ஸர்ப்ப’ என்றால் வேகம் என்றும் பாம்பு என்றும் இரண்டு பொருள் உண்டு. உதைபட்ட அகஸ்தியர், அரசனை ஸர்ப்பமாகப் போகக் கடவாய் என்று சாபம் இட்டார். அவன் பல்லக்கில் இருந்து பூலோகத்தில் விழுந்தான்; பாம்பாகப் பிறந்தான். இறுதியில் மன்னிப்புக் கேட்டபோது யுதிஷ்டிரன் (தர்ம புத்ரர்) மூலம் சாப விமோசனம் கிடைக்கும் என்று சொல்லி கோபம் தணிந்தார். துறவிக்கு வேந்தனும் துரும்பு அல்லவா?

திருவள்ளுவரும் இந்தக் கதையை மனதில் வைத்து,

“ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்து

வேந்தனும் வேந்து கெடும்” (899)

என்பார். உயர்ந்த கொள்கை உடையோர் கோபம் அடைந்தால் பெரிய மன்னர்களும் அரச பதவியை இழப்பர் என்பது இதன் பொருள். வேனன் போன்ற கொடியோர் அழிந்ததை புராணத்தில் அறிகிறோம்.

பிராமணத் த்வேஷிகளான நந்த வம்ச அரசர்களை , பார்ப்பான் சாணக்கியன் வேருடன் அழித்ததையும் வரலாற்றில் படிக்கிறோம். அவர் சாலையில் நடக்கும் போது ஒரு புல் தடுக்கியது. அதைப் பார்த்து நந்த வம்ச அரசன் சிரித்தான். இதனால் கோபம் அடைந்த உலக மகா அறிவாளி , சாணக்கியன், அந்தப் புல்லை வேருடன் பிடுங்கினாராம். இது போல உன் வம்சத்தையும் வேரறுப்பேன் என்று சொல்லிவிட்டு,  மயில் வளர்க்கும் ஜாதியைச் சேர்ந்த சந்திர குப்தனைப் பயிற்றுவித்து மாபெரும் மகத சாம்ராஜ்யத்தை ஸ்தாபித்து அலெக்ஸாண்டர் படையையும் கூட மிரளவைத்தார்.

To be continued………………………………..

Leave a comment

Leave a comment