
Hugh Everett III
Post No. 14,494
Date uploaded in London – –10 May 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
31-3-25 கல்கிஆன்லைன் இதழில் பிரசுரமாகியுள்ள கட்டுரை!
அறிவியல் அதிசயம்!
காலத்தை ஊடுருவி ஒரு பயணம் போகலாமா, சார்?!!
ச. நாகராஜன்

View of LHC Acclerator
சுவையாகவும் இருக்க வேண்டும், மர்மமாகவும் இருக்க வேண்டும், அறிவியல் சார்ந்ததாகவும் இருக்க வேண்டும், அப்படிப்பட்ட ஒரு விஷயத்தைச் சொல்ல முடியுமா என்றால் முடியும் என்றே பதில் சொல்லலாம்.
விஷயம் காலப் பயணம்!
இறந்த காலத்திற்குப் பயணம் செய்வது பற்றிய விஷயம் சுவையானது. ஏராளமான விஞ்ஞானிகளை இது ஈர்த்து தங்கள் காலம் முழுவதையும் இதை ஆராய வைத்துள்ளது. ஆனால் இதன் மர்மம் இன்றும் தொடர்கிறது.
டைம் மெஷின் ஒன்றை உருவாக்கி அதில் ஏறி இறந்த காலத்திற்குச் செல்ல முடியும் என்று சொல்லும் விஞ்ஞானிகளைப் பார்த்து விஞ்ஞானிகளில் இன்னொரு பிரிவினர், நகைத்து, இறந்த காலப் பயணம் என்பது நடக்கவே நடக்க முடியாத ஒன்று என்பதற்கான காரணத்தை முன் வைக்கின்றனர்.
இதற்கு க்ராண்ட் மதர் பாரடக்ஸ் என்று பெயர். பாட்டி முரண்பாடு என்று சொல்லப்படும் இது முன் வைக்கும் வாதம் என்ன?
ஒரு வேளை நீங்கள் இறந்த காலத்திற்குப் பயணத்தை மேற்கொண்டு அங்கு சென்று உங்கள் பாட்டியைப் பார்த்து அவர் இளமையாக இருக்கும் போது அவரை ஒரு துப்பாக்கியால் சுட்டு விட்டால் அவருக்கு வாரிசு உருவாவது எப்படி? நீங்கள் பிறப்பது தான் எப்படி என்பது அவர்கள் முன் வைக்கும் வாதம்.
இன்னொரு வாதம் இது: ஒருவன் காலத்தில் பின்னோக்கிப் பயணித்து தன் பெற்றோரை அவன் சுட்டு விட்டான் என்றால் அவன் பிறப்பது தான் எப்படி?
இதற்கு பதிலை தர்க்கரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் காலப் பயணம் சாத்தியம் தான் என்று கூறும் விஞ்ஞானிகள் தந்துள்ளனர்.
அதாவது நாம் இருக்கும் பிரபஞ்சம் என்பது ஒரே ஒரு பிரபஞ்சம் மட்டும் இல்லை; நாம் பல்வேறு பிரபஞ்சங்களில் வாழ்கிறோம் என்கின்றனர் அவர்கள்.
மல்டி யுனிவர்ஸ் என்று இதை ஆங்கிலத்தில் கூறுகிறோம்.
பாரலல் யுனிவர்ஸ் என்ற இணை உலகம் பற்றி, அமெரிக்க விஞ்ஞானியான ஹ்யூ எவரெட் (Hugh Everett III) தன் கருத்தைக் கூறினார். (பிறப்பு 11-11-1930 மரணம் 19-7-1982)
அதாவது நாம் அனைவரும் இறக்கவில்லை; இன்னொரு பிரபஞ்சத்திலும் வாழ்கிறோம் என்றார் அவர்.
அவரது இந்தக் கருத்தை அனைவரும் எள்ளி நகையாடி அவரை ஒதுக்கவே மனம் நொந்த அவர் நாஸாவில் டிசைன் பிரிவில் டிசைன் எஞ்சினியராகப் பணியாற்றத் தொடங்கினார். இறந்தும் விட்டார்.
ஆனால் பின்னால் வந்த விஞ்ஞானிகள் இதைப் பற்றி நன்கு ஆராயவே அதற்குள் இருக்கும் உண்மையைக் கண்டு அவரது வீட்டிற்கு வந்து அவரது மகனைச் சந்தித்தனர்.
எவரெட்டின் குறிப்புகள் இருந்த பழைய பெட்டியைத் திறந்து குறிப்புகளைப் படித்தனர்.
இது மிகப் பெரும் விஷயமாக ஆகி காலப் பயணம் செய்வது எப்படி, இன்னொரு இணை உலகம் எங்கே எப்படி இருக்கிறது என்பதைப் பற்றிய ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
ரொனால்ட் எல். மாலெட் என்ற விஞ்ஞானி காலப் பயணம் சாத்தியமே என்று அறுதியிட்டு உறுதி கூறுகிறார்.
யூரோபியன் ஆர்கனைசேஷன் ஃபார் ந்யூக்ளியர் ரிஸர்ச் என்ற நிறுவனத்தை சி இ ஆர் என் என அழைக்கின்றனர். ஸ்விட்சர்லாந்தில் ஜெனிவாவில் இந்த நிறுவனம் அமைக்கப்பட்டுள்ளது. பார்டிகிள் பிஸிக்ஸிற்கான உலகிலேயே பெரிய லாபரட்டரி – சோதனைச் சாலை இங்கு தான் உள்ளது.
இங்கு. காலப் பயணத்தை சாத்தியமாக்குவது குறித்த ஆராய்ச்சி நடைபெறு வருகிறது. இதற்காக ரகசிய டன்னல் அல்லது குகை ஒன்றை அமைத்துள்ளனர். 27 கிலோ மீட்டர் நீளமுள்ள இதன் பெயர் எல் ஹெச் சி டன்னல்! (L H C Tunnel)
இங்கு நடைபெறும் விசித்திர சோதனைகளில் ஒன்றில் ஒரு பார்ட்டிகிள் (அணுத்துகள்) ஒளியின் வேகத்தில் அனுப்பப்பட்டு வெற்றிகரமாகப் புறப்பட்ட இடத்திற்கு வந்து விட்டதாகச் சொல்லப்படுகிறது! அதாவது காலப்பயணம் என்ற பிரம்மாண்டமான முயற்சிக்கு ஆரம்ப சோதனை கடுகளவில் நடத்தப்பட்டு வெற்றி காணப்பட்டுள்ளது.
வார்ப் டிரைவ் உள்ளிட்ட பல உத்திகள் இப்போது ஆய்வில் வெற்றியின் ஆரம்பச் சுவடுகளைக் காண்பிக்கின்றன!
இனி வரும் அறிவியல் யுகத்தில் காலப் பயணம் மற்றும் இணை உலகம் பற்றிய கூடுதல் விவரங்களைப் பெற்று பிரமிக்கப் போகிறோம்/
எதிர் கால வாரிசுகளே, தயாராகுங்கள், , காலப் பயணத்திற்கு!
***