WRITTEN BY S NAGARAJAN
Post No. 14,502
Date uploaded in London – –12 May 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
11-5-2025 அன்று ஞானமயம் நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்பட்ட உரை. இங்கு இரு பகுதிகளாகத் தரப்படுகிறது.
கச்சியப்ப சிவாசாரிய சுவாமிகள்! – 1
ச. நாகராஜன்
அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே, திரு கல்யாண்ஜி அவர்களே, திரு லண்டன் சுவாமிநாதன் அவர்களே வணக்கம். நமஸ்காரம்.
கல்வியிற் சிறந்து விளங்கிய காஞ்சிபுரத்திலே ஆதிசைவர் குலத்திலே காளத்தியப்ப சிவாசாரியார் என்பவர் வாழ்ந்து வந்தார். அவர் குமரகோட்டத்து அர்ச்சகர்களுள் ஒருவர்.
அவருக்கு நெடுங்காலம் மகப்பேறு இல்லை. ஆகவே கந்தனை வேண்ட கந்தன் அருள் புரிந்தார்.
கற்பிற்சிறந்த அவர் மனைவி ஒரு புத்திரனைப் பெற்றார். அவருக்கு கச்சியப்பர் என்ற பெயர் சூட்டப்பட்டது.
இளமையிலிருந்தே சம்ஸ்கிருதம், தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் அவர் வல்லவராகத் திகழ்ந்தார்.
புராண இதிஹாஸங்களை நன்கு கற்றதோடு தேவார திருவாசகம் ஆகியவற்றையும் கற்றுத் தேர்ந்தார்.
அவரும் தந்தை வழியில் குமரகோட்டத்தில் அர்ச்சகராக ஆனார்.
தினமும் கந்தனை வழிபட்டு வந்தார்.
ஒரு நாள் அவரது கனவிலே சுப்ரமணியர் தோன்றி, “ அன்பனே! நீ ஸ்கந்த புராணத்தில் ஆறு சங்கிதைகளில் சங்கர சங்கிதையில் முதல் காண்டமாகிய சிவரகசிய கண்டத்தில் உள்ள நமது சரித்திரத்தைக் கந்த புராணம் என்ற பெயரில் தமிழில் பாடுவாயாக” என்று கூறி அருளினார்.
அத்தோடு முதல் அடியாக “திகடச்சக்கர செம்முகமைந்துளான்” என்பதையும் தானே எடுத்துக் கொடுத்து அருளினார்.
விழித்து எழுந்த கச்சியப்பர் தான் கண்ட கனவை எண்ணி மெய் சிலிர்த்தார்.
தினமும் சுப்ரமண்ய பூஜையை முடித்தபின் கந்தபுராணத்தைத் தமிழில் பாட ஆரம்பித்தார்.
திகடச் சக்கரச் செம்முகம் ஐந்துளான்
சகட சக்கரத் தாமரை நாயகன்
அகடசக்கர விண்மணி யாவுறை
விகட சக்கரன் மெய்ப்பதம் போற்றுவாம்
என்று ஆரம்பித்த அவர் ஒவ்வொரு நாளும் நூறு செய்யுள்களை இயற்றினார்.
பின்னர் ஒவ்வொருநாளும் அவை எழுதப்பட்ட ஏட்டையும், எழுத்தாணியையும் இராத்திரி காலபூஜை முடிந்தபின் முருகனது பாதத்தில் வைத்துவிட்டு கதவை மூடி விட்டுத் தன் இல்லம் செல்ல ஆரம்பித்தார்.
மறு நாள் ஆலயத்திற்கு வந்து தாம் எழுதிய ஏட்டை எடுத்துப் பார்க்கும்போது, அதில் சில இடங்களில் திருத்தம் இருக்கும். முருகப் பிரானே அந்தத் திருத்தங்களைச் செய்திருப்பதால் ஆனந்த பரவசம் அடைந்து நூல் முழுவதையும் முடித்தார் கச்சியப்பர்.
மொத்தம் 135 படலங்களில் 10346 பாடல்கள் இயற்றப்பட்டன.
picture of S Nagarajan
சாலிவாகன சகாப்தம் எழுநூறு பிறந்தவுடன் தான் எழுதிய நூலைக் கற்றவர்கள் மத்தியில் அரங்கேற்ற எண்ணினார் அவர்.
அரங்கேற்றத்திற்கான ஒரு நல்ல நாள் நிச்சயிக்கப்பட்டது.
அன்று ராஜாக்களும், பிரபுக்களும், பெரியோர்களும், புலவர்களும், முருக பக்தர்களும் திரளாக மண்டபத்தில் கூடினர்.
கச்சியப்பர் குமரகோட்டப் பெருமானை தொழுது பூஜித்து கந்தபுராணத் திருமுறையை முருகன் அடியில் சமர்ப்பித்துப் பின்னர் அரங்கேற்றத்திற்குத் தயாரானார்.
முதல் பாடல் ஆரம்பமாயிற்று,
திகட சக்கர செம்முக மைந்துளான்
என்ற முருகப் பெருமான் எடுத்துத் தந்த முதல் அடியைக் கூறிய கச்சியப்பர், திகழ் தசக்கரச் செம்முகம் ஐந்து உளான் என்று பிரித்து,
பத்துத் திருக்கைகளும் செவ்விய ஐந்து முகங்களும் என்று பொருள் விளக்கம் தந்தார்.
உடனே அங்கிருந்த புலவர்களில் ஒருவர் எழுந்தார்.
“ஸ்வாமி! திகழ் தசம் – திகடசம் என்று சேர்வதற்கு – புணர்தல் விதி தொல்காப்பியத்தில் இல்லையே! இதை எங்ஙனம் ஏற்பது? என்று ஒரு கேள்விக் கணையை விடுத்தார்.
திடுக்கிட்டுப் போன கச்சியப்பர், “இந்த முதல் அடி நான் புனையவில்லையெ! முருகப் பெருமான் அல்லவோ அருளியது” என்று பதில் கூறினார்.
“ஆஹா! அது ரகசியமான உண்மையாகவே இருக்கட்டும். என்றாலும் அதை நாங்கள் எப்படி ஏற்க முடியும்? முருகப் பெருமானே எங்களிடமும் வந்து உரைக்கட்டும்” என்றார் ஆக்ஷேபணை செய்த புலவர்.
“ஒன்று முருகப்பிரான் தானே வந்து எங்களிடமும் உரைக்கட்டும்; அல்லது ஏதேனும் உள்ள ஒரு இலக்கண நூலிலிருந்து இதற்கு ஆதாரத்தைக் காட்டுங்கள்; இந்த இரண்டில் ஒன்று நடந்தாலன்றி அரங்கேற்றம் செய்ய சம்மதியோம்” என்றார் புலவர்.
“இவ்விரண்டில் ஒன்றை நாளை செய்வோம்” என்று கூறிய கச்சியப்பர் சபையைக் கலைத்தார்.
அன்று இரவு வருத்தத்துடன் அவர் உறங்குகையில் முருகன் அவரது கனவிலே தோன்றி, “கவலைப்பட வேண்டாம். நாளை சோழதேசத்துப் புலவன் ஒருவன் சபைக்கு வருவான். அவன் வீர சோழியம் என்ற இலக்கண நூலிலிருந்து இதற்கான புணர்தல் விதியை எடுத்துரைப்பான்” என்று கூறி அருளினார்.
மறுநாள் சபை கூடியது.
“ஆதாரம் எங்கே?” என்றார் முதல் நாள் ஆக்ஷேபணையைத் தெரிவித்த புலவர்.
அப்போது அங்கு வந்திருந்த புலவர் ஒருவர், “இதோ ஆதாரம் இருக்கிறது என் கையில். இது வீரசோழியம் என்ற இலக்கண நூல் இதில் சந்திப் படலத்தில் பதினெட்டாம் செய்யுளைப் பாருங்கள். அதில் திகடச்சக்கரம் என்னும் புணர்ச்சிக்கு விதி உள்ளது” என்றார்.
அனைவரும் ஆச்சரியத்துடன் அந்த நூலை வாங்கிப் பார்க்க அதில் தெளிவாக புணர்ச்சிக்கான விதி இருந்தது.
ஒவ்வொருவராக அதை வாங்கிப் படித்துப் பார்த்து மகிழ்ச்சி அடைந்து அதை கச்சியப்பர் கையில் கொடுத்தனர்.
அப்போது அந்தப் நூலைத் தந்த புலவர்,”என்ன? ஆக்ஷேபம் ஒழிந்ததா? ஐயம் தீர்ந்ததா? என்று கூறியவாறே அங்கிருந்து மறைந்தார்.
அனைவரும் பிரமித்தனர்.
வந்தது முருகப்பிரானே என்பதை அனைவரும் உணர்ந்து மெய் சிலிர்த்தனர்.
அனைவரும் கச்சியப்பரின் பாதங்களில் விழுந்து பணிந்தனர்.
பிறகு அரங்கேற்றம் தடையின்றி முடிந்தது.
காஞ்சிபுரத்தில் இருபத்துநான்கு கோட்டத்தில் இருந்த வேளாளப் பிரபுக்கள் கந்தபுராணத்தை கேட்கலாயினர்.
கச்சியப்பர் கந்த புராணத்தை ஆறு காண்டங்களாக அமைத்துள்ளார்.
புராணம் முற்றுப் பெற்றபின் அனைவரும் கச்சியப்பரை கந்தபுராணத்துடன் ஒரு சிவிகையில் அமரச் செய்து ஊர்வலமாகச் சென்றனர். குமரகோட்டச் சந்நிதியில் முருகப்பிரான் திருமுன்னே கந்தபுராணத்தை வைத்து வணங்கினர்.
சொற்சுவையும் பொருள்சுவையும் அமையப் பெற்ற கந்தபுராணம் எல்லையற்ற பெருமையைக் கொண்டது; மகிமையை உடையது.
இதில் உள்ள பாடல்களை தினமும் ஓதும் கந்தபுராண பாராயணம் தொன்று தொட்டு முருக பக்தர்களால் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெறலாயிற்று.
மனித வாழ்க்கையில் உள்ள ஒவ்வொரு பிரச்சினைக்கும் தீர்வாக இதில் உள்ள குறிப்பிட்ட பாடல்களை ஓதிப் பயனடைய ஆரம்பித்தனர் பக்தர்கள்.
to be continued…………..
**