ராம ரத்தினத்தின் விலை என்ன ? (Post No.14,520)

Written by London Swaminathan

Post No. 14,520

Date uploaded in London –  16 May 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

சுவாமி ராம தீர்த்தர் ராம நாம மஹிமை பற்றி விளக்குவதற்காக சொன்ன கதை இது :

ராம் தீர்த்தர் வழக்கம் போல போதனை செய்து முடித்தவுடன் சீடர்களை நோக்கி ஏதேனும் சந்தகங்கள் இருந்தால் கேட்கலாம் என்றார்.  ஒரு சீடர் எழுந்து நின்று அவரை முறையாக  வணங்கி விட்டுக் கேட்டார்:

“சுவாமிகளே!  நீங்கள் அறுபது நாழிகைப்பொழுதும் ராம ராம என்று ஜபித்துக் கொண்டு இருக்கிறீர்களே. காலையிலும் மாலையிலும் மட்டும் ஜபித்தால் போதாதா? இந்த சந்தேகம் எனக்கு நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. இன்று பதில் செல்லுங்களேன்” என்று பணிவுடன் கேட்டார் . அந்த சீடனின் பெயர் சிதானந்தம் .

சுவாமிகளும் புன்னகையுடன் பதில் கொடுத்தார் ; “உங்களில் பலருக்கும் இப்படி சந்தேகம் இருக்கிறது என்றும் எனக்குத் தெரியும். இதோ என்னிடம் உள்ள பல கற்களில் ஒன்றை சிதானந்தத்திடம் கொடுக்கிறேன்” என்று சொல்லித் தந்தார் .

ஓ சிதானந்னதா!  இதை பத்துப் பேரிடம் காட்டி விலை மதிப்பினை  அறிந்து வா. ஆனால் ஒரு நிபந்தனை. கல்லை யாரிடமும் விற்றுவிடாதே; திருப்பிக் கொண்டு வா; பின்னர் உங்கள் சந்தேகத்தைத் தெளிவிக்கிறேன்” என்றார் .

சீடனும் அதை ஆவலுடன் பெற்றுக்கொண்டு நடந்தான். முதலில் அவன் போனது ஒரு சந்தை ; எங்கு பார்த்தாலும் கடைகள். ஒரே கூட்டம். யாரிடம் விலையைக் கேட்பது என்று எண்ணி திகைத்துக் கொண்டிருந்தபோது ஒரு மூலையில் ஒரு கிழவி காய்கறி விற்றுக்கொண்டிருந்தாள்; அவளிடம் போய், கூட்டம் இல்லாதபோது, ‘பாட்டி இந்தக் கல்லின் விலை என்ன இருக்கும்?’ என்று சொல்லி அவளிடம் கொடுத்தான். அவளும் அதை பார்த்துவிட்டு ‘ரோம்ப அழகாக இருக்கிறது மழ  மழ  என்று வழு வழுப்பாக இருக்கிறது ; இதை வீசைக் கல்லாகப் பயன்படுத்தலாம். என்னிடம் கொடு; ஒரு கிலோ கத்தரிக்காய் கொடுக்கிறேன்’ என்றாள் .அவனும் அவளுக்கு நன்றி சொல்லிவிட்டு பிறகு பார்க்கலாம் என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டான்.

ஒரு கிலோ கத்தரிக்காய் மதிப்புதானா! எதற்கும்  இதற்கு வேறு ஒருவரிடம் விலை  கேட்கலாம் என்று எண்ணிக்கொண்டே அடுத்த கடைத்தெரு வுக்குப் போகலாம் என்று கருதி, அங்கே இருந்த ஒரு கடைக்குப் போனான் அந்தக் கடைக்காரன் கல்லை வாங்கிப் பார்த்துவிட்டு , ‘அன்பரே இது சாதாரண கல் அல்ல ; என்னால் விலை மதிப்பிட முடியாது; என்னிடம் விற்றால் ஒரு பவுன் தங்கக் காசு கொடுக்கிறேன் என்றான். சீடன் சிதானதத்து க்கு ஒரே வியப்பு! அட ஒரு கிலோ கத்தரிக்காயிலிருந்து ஒரு பவுனுக்கு மதிப்பு உயர்ந்து விட்டதே என்று சொல்லிக் கொண்டே  நகைக்கடைத் தெருவுக்குப் போனான். ஒரு திண்ணையில் வேலை செய்து கொண்டிருந்த பொற்கொல்லனிடம் காட்டி இதன் மதிப்பினைச் சொல்ல முடியுமா? என்று வினவினான்.  அவனும் தன்னுடைய கருவிகளைக் கொண்டு பரிசோதித்துவிட்டு, ‘சுவாமி இது ரத்தினக் கல்; கட்டாயம் பத்து பவுனுக்கு மேல் விலை மதிப்பிடலாம்’ என்று சொன்னான் .

வியப்பு மேலிட்ட சீடன் சிதானந்தம், இரத்தின வியாபாரிகள் பேசிக்கொண்டிருந்த ஒரு கூட்டத்துக்குள் நுழைந்து, ஒருவரிடம் கொடுத்து, இதன் மதிப்பு என்ன இருக்கும்? என்றான். அவர் அதைப்பார்த்துவிட்டு இது நல்ல ரத்தினக் கல் ; நிச்சயமாக ஐநூறு பவுன் விலை கிடைக்கும் ஆனாலும் இதோ என் நண்பர்  ரத்தின வியாபாரி; அவரிடமே கேட்டு விடலாமே என்று இரத்தின வியாபாரியிடம் கல்லினைக் கொடுத்தான் . அவர் அதைப் பார்த்தவுடனேயே அடடா , இது அரியவகை ரத்தினைக் கல்; ஆனால் கச்சாச் சரக்கு;நன்றாக வெட்டி பட்டை தீட்டினால் ஆயிரம் பவுன் வரை கிடைக்கும் என்றார் ; அடுத்த வியாபாரி இடை மறித்து இல்லை இல்லை ; இதற்கு அதற்கு மேலும் மதிப்பு உண்டு நான் 5000 முதல் பத்தாயிரம் வரை மதிப்பு போடுவேன் ஆயினும் இந்த ஊரிலேயே பெரிய இரத்தின வியாபாரி தனபாலன்தான் அவர் கடைக்குப் போங்கள் என்று சொல்லி அனுப்பி வைத்தார்.

சீடர் சிதானந்தத்துக்குத் தலை சுற்றியது; ஒரு கிலோ கத்தரிக்காய் மதிப்பிலிருந்து பத்தாயிரம் பவுன் அளவுக்கு மதிப்பு உயர்ந்து விட்டதே!  நம் குருவிடம் இதே போல பல கற்கள் இருக்கின்றனவே; அவருக்கே மதிப்பு தெரியாதோ என்றெல்லாம் எண்ணிக் கொண்டே  ,

தைரியமாக தனபாலனின்   ரத்தினக் கடைக்குள் நுழைந்தான் . அவர் அதைப்  பார்த்த உடனேயே அரிய ரத்தினம் என்று சொல்லிக்கொண்டே அதைக் கருவிகளைக் கொண்டு அடித்தும் கீறியும் பலவித இரத்தின பரீட்சைகளைச் செய்தார்.

சுவாமி , உங்களைப் பார்த்தால் சந்நியாசி போல இருக்கிறது; இது போன்ற கற்கள் முனிவர்கள், அரசர்களிடம் மட்டுமே இருக்கும். என்னுடைய வாழ்நாளில் இப்படி ஒரு அபூர்வக் கல்லினைப் பார்த்ததே இல்லை; என்னுடைய சொத்து முழுவதையும் உங்களுக்குக்  கொடுத்தாலும் இந்தக் கல்லின் விலையைக் கொடுத்ததாக ஆகாது; இதன் மதிப்பு அதற்கும் மேலானது என்று சொல்லி கல்லினைத் திருப்பிக்கொடுத்தார். 

சீடன் சிதானந்தம் மறுநாள் சுவாமி ராமதீர்த்தரின் கூட்டத்துக்குச் சென்றான்; அவருடைய பாடத்தைக் கேட்க பெரிய சீடர்கள் கூட்டம் அங்கே இருந்தது அனைவரின் முன்னமும் சீடன்  சிதானந்தம் நட  ந்தது அனைத்தையும் சுவாமி ராமதீர்த்தரிடம் எடுத்துரைத்தான் .

அவரும் புன்னகை செய்துகொண்டே கல்லினை வாங்கிக்கொண்டு உபதேசத்தைத் தொடர்ந்தார்;

“கேட்டீர்களா, சீடர்களே முதலில் கல் என்று எண்ணிக்கொண்டுபோன பொருள்,  ஜாதி ரத்தினம் ஆனது; ரத்தினத்தை மதிப்பிட அது பற்றிய  நல்ல அறிவுவேண்டும். ரத்தினம் பற்றிய அறிவு இல்லாததால் கறிகாய்க்காரி  அதற்கு ஒரு கிலோ கத்தரிக்காய் மதிப்பு போட்டாள். மற்றவர்களுக்கு ரத்தினக் கற்கள் பற்றிய அறிவு இருந்ததால் ஒரு பவுனிலிருந்து பத்தாயிரம் வரை மதிப்பு போட்டார்கள் ரத்தினப் பரீட்சையில் தேர்ந்த ஞானமுள்ள தனபாலரோ இதற்கு விலையே சொல்ல முடியாது என்றார் . ராம நாமம் என்னும் ரத்தினத்தின் மதிப்பும் அப்படிப்பட்டதே  ரா மா என்பது இரண்டே எழுத்துக்கள்தான்; அதன் மதிப்பினை நான் உங்களுக்கு எப்படிச் சொல்வேன்? அதைத் தினசரி ஜபிப்பதின் மதிப்பினை உங்களுக்கு நான் எப்படிச் சொல்லமுடியும்?  ராமநாம மதிப்பினை அறிய, அதை உள்ளபடி ஜபித்து ஞானம் அடைய வேண்டும்; அது வந்துவிட்டால் இரத்தின வியாபாரி தனபாலன் சொன்னது போல ராமநாமத்தின் மதிப்பினை சொல்லவே முடியாது!  அரைகுறை அறிவு பெற்றவர்கள் அவரவர் அறிவுக்கு ஏற்ப மதிப்பிடுவார்கள்;  பரிபூரண ஞானம் எய்தியவர்களுக்கு ராம நாமம், விலை மதிக்க  முடியாத  ரத்தினம் என்பது தெரியும்.  ஆகவே நீங்களே முயன்று ராம நாமத்தின் மதிப்பினை அறிய வேண்டும் என்று நான் விரும்புகிறேன்; உங்கள் ஐயம் தீர்ந்து இருக்கும் என்று நம்புகிறேன் என்று சொல்லிவிட்டு சுவாமி ராம் தீர்த்தர் ராம ராம என்று சொல்லிக்கொண்டே ஜபத்தில் ஆழ்ந்து விட்டார்  .

–SUBHAM—

TAGS- ராம ரத்தினத்தின் விலை , ராம நாமம், மதிப்பு, சுவாமி ராம தீர்த்தர்,கதை

Leave a comment

Leave a comment