WRITTEN BY S NAGARAJAN
Post No. 14,529
Date uploaded in London – –19 May 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
3-5-25 மாலைமலைர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை!
இந்திய சுற்றுலாத் தலங்கள்
அஸ்ஸாமின் எழில்மிகு பாரம்பரிய இடங்கள்!
ச. நாகராஜன்
அழகிய அஸ்ஸாம் – இமயமலைக் காட்சிகள், பிரம்மபுத்திரா நதியோட்டம், தேசீயப் பூங்காக்கள், நீர்வீழ்ச்சி, பிரம்மாண்டமான ஆலயங்கள் …அப்பப்பா!
பிரபல ஆங்கில நாளிதழான நியூயார்க் டைம்ஸின் 2025ம் ஆண்டிற்கான சிறந்த சுற்றுலாத் தலங்களின் பட்டியலில் அஸ்ஸாம் மாநிலம் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது.
இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் உள்ள இந்த மாநிலம் இமயமலையின் தெற்குப் பகுதியில் உள்ளது. பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கும் இதையொட்டியே உள்ளது. ஈடு இணையற்ற இடம் என்ற சிறப்புப் பெயரை இது பெற்றுள்ளது.
இங்கு பார்க்க வேண்டிய இடங்கள் ஏராளம் உள்ளன. அவற்றில் முக்கியமான சிலவற்றை இங்கு பார்க்கலாம்.
காஸிரங்கா தேசிய பூங்கா
இது அஸ்ஸாமின் தலைநகரான கௌஹாதியிலிருந்து 105 மைல் தூரத்தில் உள்ளது.
காஸிரங்கா வனவிலங்கு சரணாலயத்தில் அபூர்வமான வன விலங்குகளையும் பறவைகளையும் கண்டு களிக்கலாம். இங்கு ஒற்றைக் கொம்பு காண்டாமிருகம், நீர்யானை, சிறுத்தை, சிங்கம், புலி என எல்லா மிருகங்களையும் காணலாம்.
வடதுருவத்தில் இருந்து வரும் அபூர்வமான பறவைகள் இங்கு வந்து மரக்கிளைகளில் அமர்ந்து ஓய்வெடுக்கின்றன. ஆண்டுக்கு இரு முறை பல்லாயிரம் கிலோமீட்டர் தாண்டி உலகெங்கிலுமிருந்து இந்தப் பறவைகள் வருவது குறிப்பிடத் தகுந்தது. யுனெஸ்கோ இதை பாரம்பரிய தளமாக அறிவித்திருக்கிறது.
ஜீப் சஃபாரி
பூங்காவைத் திட்டமிட்டபடி சுற்றிப் பார்க்க வசதியாக ஜீப்பில் செல்லும் ஜீப் சஃபாரி அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு கட்டணம் உண்டு. இரண்டு மணி நேரம் ஜீப்பில் சென்று இந்தப் பகுதியைக் கண்டு ரசிக்கலாம்.
யானை சஃபாரி
யானை மீதமர்ந்து காண்டாமிருகம் உள்ளிட்ட மிருகங்களைப் பார்ப்பது என்பது தனி ஒரு அனுபவம் தான். ஒரு மணி நேரம் நீடிக்கும் இந்த யானை மீதான சவாரிக்குக் கட்டணம் உண்டு.
ககோசாங் நீர்வீழ்ச்சி
காஸிரங்கா தேசிய பூங்காவிலிருந்து 47 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது அருமையான ககோசாங் நீர்வீழ்ச்சி. போககாட் என்ற நகரிலிருந்து இது 13 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. காஸிரங்கா தேசிய பூங்காவிற்குச் செல்வோர் இதையும் திட்டத்தில் சேர்த்து திட்டமிடலாம். தேவையான உணவுப் பொருள்களைத் தயார் செய்து எடுத்துச் செல்ல வேண்டும். ட்ரெக்கிங் உள்ளிட்ட மலைப் பிரதேசத்திற்கே உரித்தான பொழுதுபோக்கிற்கு உகந்த இடம் இது. தேயிலைத் தோட்டங்கள், காபி தோட்டங்கள், ரப்பர் காடுகள் உள்ளிட்டவற்றை இங்கு பார்த்து மகிழலாம். 116 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது இந்த நீர்வீழ்ச்சி. நீர்வீழ்ச்சியையொட்டி அமைந்துள்ள குளத்தில் குளிக்கலாம். ஏராளமான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இடம் இது.
அகர்டோலி மலைத்தொடர்
காஸிரங்கா தேசிய பூங்காவின் கிழக்கு வாயிலிலிருந்து அருகில் உள்ளது அகர்டோலி மலைத்தொடர். இங்கு ஒரு ஜீப்பில் ஏறி அமர்ந்து இரண்டு மணி நேரம் சுற்றிப் பார்க்கும்படியான திட்டங்கள் உள்ளன.
புத்தகங்களில் மட்டுமே படித்திருக்கும் வண்ண வண்ண அழகிய பறவைகளை இங்கு காணலாம். இங்கு செல்லவும் சுற்றிப் பார்க்கவும் விசேஷ அனுமதியை இங்குள்ள அலுவலகத்தில் பெற வேண்டும். கட்டணமும் உண்டு.
மஹாபைரவ ஆலயம்
காஸிரங்கா பூங்காவிலிருந்து 83 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது மஹாபைரவ் ஆலயம். பாணாசுரன் என்னும் அசுரன் சிவனுக்கு ஒரு கற்களால் ஆன கோவிலைக் கட்டினான். சிவராத்திரியன்று ஏராளமான பக்தர்கள் திரண்டு இங்கு வருவது வழக்கம்.
இந்தக் கோவிலில் ஒரு மாபெரும் அதிசயம் உண்டு. இங்குள்ள சிவலிங்கம் உயிருள்ள கல்லால் அமைக்கப்பட்ட ஒன்றாகும். அதாவது வருடங்கள் ஆக ஆக இந்த லிங்கம் வளர்ந்து கொண்டே இருக்கும். பாணாசுரனின் வலிமைக்கும் வளத்திற்கும் அவன் இந்த இடத்தில் சிவபிரானை வழிபட்டதே காரணம் என்பது ஐதீகம்.
இங்கு பிரசாதமாக தரப்படும் லட்டு ஒரு விசேஷமான தயாரிப்பாகும்.
பிஸ்வநாத் காட்
காஸிரங்கா தேசீயப் பூங்காவிலிருந்து 90 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது பிரசித்தி பெற்ற பிஸ்வநாத் காட். பிரம்மாண்டமாகப் பாய்ந்தோடும் பிரம்மபுத்திரா நதிக் கரையில் உள்ள பிஸ்வநாதர் ஆலயம் குப்த காசி என்று அழைக்கப்படுகிறது. அதாவது காசிக்கு நிகரான மகிமை பொருந்திய ஆலயம் இது என்பது பொருள். இயற்கைக் காட்சிகள் ஒரு பக்கம் பிரமிக்க வைக்க இங்கு ஆலயத்தில் உள்ள கட்டிட மற்றும் சித்திர வேலைப்பாடுகள் நம்மை இன்னும் அதிகம் பிரமிக்க வைக்கும்.
நகர்ப்புற வாழ்க்கையை ஒதுக்கி விட்டு அமைதியான இயற்கை சார்ந்த இடத்தில் ஓய்வெடுக்க விரும்புபவர்களுக்கான இடம் பிஸ்வநாத் கிராமமாகும். இது இந்தியாவின் மிகச் சிறந்த சுற்றுலா கிராமம் என்று தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.
மானஸ் தேசிய பூங்கா
இது கௌஹாதியிலிருந்து 137 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.\யுனெஸ்கோ இதை பாரம்பரிய தளமாக அறிவித்துள்ளது.
இதற்கும் காஸிரங்கா தேசிய பூங்காவிற்கும் இடையில் உள்ள தூரம் 274 கிலோமீட்டர். இதை அடைய புகைவண்டி வசதி உண்டு. காரிலும் செல்லலாம். இது புலிகளிள் மற்றும் யானைகளின் சரணாலயமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இமயமலை அடிவாரத்தையொட்டி பூடானின் எல்லையோரத்தில் அமைந்துள்ளது இது. பிரம்மபுத்திரா நதியின் கிளை நதியான மானஸ் நதி இந்தப் பூங்காவின் நடுவே பாய்ந்து செல்கிறது. அதையொட்டி இந்தப் பூங்கா மானஸ் தேசீய பூங்கா என்ற பெயரைப் பெறுகிறது.
அஸ்ஸாமில் உள்ள இதர சுற்றுலா இடங்கள்
தெற்கு இமயமலைப் பகுதியில் அமைந்துள்ள பிரம்மபுத்திரா மற்றும் பாரக் ஆகிய ஆறுகள் பாய்ந்தோடும் பள்ளத்தாக்கையும் அழகிய மலைத்தொடரையும் கொண்டுள்ள மாநிலம் அஸ்ஸாம். இதன் பரப்பளவு 78438 சதுர கிலோமீட்டரகள். தேயிலைக்குப் பெயர் பெற்ற மாநிலம் இது.
மஹாபாரதத்தில் ப்ரக்ஜ்யோதிஷா என்ற பெயரால் குறிப்பிடப்படும் இந்த மாநிலம் பழம்பெரும் வரலாற்றைக் கொண்டது. இங்குள்ள 33 மாவட்டங்களிலும் பார்ப்பதற்கு ஏராளமான இடங்கள் உள்ளன.
ஓவ்வொரு இடத்தையும் அது அமைந்திருக்கும் இடம், தூரம், சிறப்பு ஆகியவற்றை முன்னமேயே நன்கு தெரிந்து கொண்டு சுற்றுலாத் திட்டத்தை வடிவமைக்க வேண்டுவது அவசியம்.
அஸ்ஸாமில் நிச்சயம் பார்க்க வேண்டிய இன்னும் சில இடங்களை மட்டும் இங்கு பார்ப்போம்:
காமாக்யா ஆலயம்
சக்தி பீடங்களில் ஒன்று இது. நிலாச்சல் மலையில் அமைந்துள்ள இந்த துர்க்கையம்மன் ஆலயம் ஆயிரக்கணக்கான பக்தர்களை ஈர்க்கிறது.
மஜுலி தீவு
பிரம்மபுத்திரா ஆற்றில் அமைந்துள்ள அற்புதமான தீவு இது. இதன் பரப்பளவு சுமார் 880 சதுர கிலோமீட்டர். படகில் சென்று இங்குள்ள இயற்கைக் காட்சிகளையும் தாவர பறவை இனங்களையும் பார்ப்பது ஒரு அதிசயமான அனுபவமாகும்.
சிவசாகர்
அஸ்ஸாமின் வடகிழக்கு பகுதியில் உள்ள சிவசாகர் பாரம்பரியம் மற்றும் பண்பாட்டின் அடித்தள நகரமாகும். கௌஹாதியிலிருந்து இது சுமார் 360 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. இங்குள்ள சிவசாகர் நீர்த்தேக்கம், அஹம் அரசர்களின் கல்லறைகள் உள்ளிட்டவை பார்க்கத்தக்க இடங்களாகும்.
கௌஹாதி
வடகிழக்கின் நுழைவாயில் என்று அழைக்கப்படும் இந்த நகரம் அஸ்ஸாமின் தலை நகரமாகும். இங்குள்ள தேசியப் பூங்கா மிகவும் பிரபலமானது. 2405 மைல் நீளம் ஓடும் பிரம்மபுத்திரா நதிக் கரையோரம் அமைந்துள்ளது இது.
ஜோர்ஹாட்
கலையழகு பொருந்திய நகரம் ஜோர்ஹாட் அஸ்ஸாமின் வடகிழக்குப் பகுதியில் உள்ளது. இங்குள்ள ஏராளமான ஆலயங்களும் தேயிலைத் தோட்டங்களும் அனைவரையும் ஈர்க்கின்றன.
இன்னும் ஹாஃப்லாங் ஏரி, ஜம்பு மலை மற்றும் பல்வேறு அருங்காட்சியகங்கள் ஆகியவற்றையும் கொண்டுள்ள மாநிலம் அஸ்ஸாம்.
வடகிழக்குப் பகுதிக்கு வாருங்கள் என அழைக்கும் அஸ்ஸாமின் புகழுக்கு ஈடு இணையில்லை என்பதை அது நியூயார்க் டைம்ஸ் இதழில் நான்காவது இடத்தைப் பிடித்ததிலிருந்தே தெரிகிறல்லவா?
***