ஆலயம் அறிவோம்: திரு நாகைக் காரோணம் (Post No.14,530)

WRITTEN BY Brhannayaki Sathyanarayanan 

Post No. 14, 530

Date uploaded in London –19 May 2025 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

18-5-2025 ஞானமயம் ஒளிபரப்பில் ஒளிபரப்பட்ட உரை 

ஆலயம் அறிவோம்

 வழங்குவது பிரஹண்நாயகி சத்யநாராயணன்

நிருத்தனை நிமலன் தன்னை நீள் நிலம் விண்ணின் மிக்க

விருத்தனை வேதவித்தை விளைபொருள் மூலம் ஆன

கருத்தனைக் கடல் சூழ் நாகைக்காரோணங் கோயில் கொண்ட

ஒருத்தனை உணர்தலால் நாம் உய்ந்தவா நெஞ்சினீரே

                 – திருநாவுக்கரசர் திருவடி போற்றி 

ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம்

பெறுவது தமிழ்நாட்டில் அமைந்துள்ள திருநாகைக்காரோணம்

திருத்தலமாகும். சோழநாட்டில் காவிரியின் தென்கரைத் தலங்களில் 82வது தலமாகும் இது. 

மூலவர் : காயாரோகணேஸ்வரர், ஆதிபுராணர்

இறைவி : நீலாயதாட்சி, கருந்தடங்கண்ணி

தல விருட்சம் : மாமரம்

தீர்த்தங்கள் : சர்வ தீர்த்தம், தேவ தீர்த்தம், புண்டரீக தீர்த்தம்

இத்தலத்தைப் பற்றிய ஏராளமான புராண வரலாறுகளும் மகான்கள் அற்புதங்கள் நிகழ்த்திய சம்பவங்களும் உண்டு.

 பல ஊழிக்காலங்களுக்கும் அப்பாற்பட்டவர் என்பதால் இறைவன் ஆதிபுராணர் என்றும், ஆதிசேஷனால் பூஜிக்கப்பட்டதால் நாகை என்றும், புண்டரீக முனிவர் இறைவனை தன் உடம்பில் ஆரோகணம் செய்து கொண்டதால் காயாரோகணம் என்றும் இறைவன் பெயர் பெற்றார். நாகப்பட்டிணம் என்று பேச்சு வழக்கில் இந்தத் தலம் இன்று அறியப்படுகிறது.

ஆதிபுராணம், சிவ ராஜதானி, பார்ப்பதீச்சரம், அரவநகரம் என்ற வேறு பெயர்களும் இத்தலத்திற்கு உண்டு.

இது சப்தவிடங்கத் தலங்களுள் ஒன்றாகும்.

அகஸ்திய முனிவருக்கு இறைவன் இந்தத் தலத்தில் தான் திருமண கோலத்தில் காட்சி அளித்தார்.

சப்த ரிஷிகளுக்கும் இறைவன் மூல லிங்கத்திலிருந்து சோமாஸ்கந்தராய் காட்சி அளித்த தலமும் இதுவே தான்.

 சாலிசுக மன்னனுக்குத் திருமணக் கோலம் காட்டும் பஞ்சகுரோச யாத்திரையாகிய சப்தஸ்தான விழா நடைபெறும் தலமாகவும் இது அமைகிறது.

 சுந்தரர் பற்றிய இந்தத் தலத்துடன் தொடர்பு கொண்ட வரலாறு ஒன்று உண்டு.

திருவாரூரிலிருந்து திருநாகைக்காரோணம் அடைந்த சுந்தரர் சுவாமி தரிசனம் செய்து பதிகங்களைப் பாட இறைவன் அவருக்கு குதிரை, உடைவாள், முத்துமாலை, நவமணிகள், பட்டு, சாந்தம், சுரிகை முதலானவற்றை வழங்கி அருளினார். ஆகவே அன்று முதல் இந்தக் கோவிலில் குதிரை வாகனவிழா சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கே நடைபெறுவதாகப் புராணம் கூறுகிறது.

 நகரின் மத்தியில் 180 மீட்டர் நீளமும் 75 மீட்டர் அகலமும் கொண்டு இரு பிரகாரங்களுடன் கம்பீரமாக இந்தக் கோவில் காட்சி தருகிறது.

 கிழக்கு நோக்கி அமைந்துள்ள இந்த சிவாலயத்தில் கோபுரத்தைக் கடந்து உள்ளே சென்றால் நாகாபரண விநாயகர், சுதையால் ஆன நந்தி, முக்தி மண்டபம் ஆகியவற்றைக் காணலாம். இங்கு கயிலை மற்றும் காசியில் உள்ளது போல முக்தி மண்டபம் அமைந்துள்ளது குறிப்பிடத்தகுந்தது.

 ஐந்து நிலை கொண்டது கோபுரம். உள்ளே தெற்கு நோக்கி அம்பாள் சந்நிதி அமைந்துள்ளது. அருகே கொடிமரம் உள்ளது. சுவாமி சந்நிதியில், பிரகாரத்தில் தியாகராஜ ஸ்வாமி சந்நிதியும் எதிரில் சுந்தரரும் இருப்பதைப் பார்க்கலாம். தியாகராஜர் சந்நிதியில் சுந்தரவிடங்கரையும் தரிசிக்கலாம்.. இதே பிரகாரத்தில் அறுபத்து மூவர், புண்டரீக முனிவர், சாலீசுக மன்னன், முருகன், கஜலக்ஷ்மி, தசரதன் ஸ்தாபித்த சனீஸ்வரர், நடராஜர், பிக்ஷாடனர், அதிபத்தர் ஆகியோரையும் தரிசிக்கலாம்.

தல விருட்சமான மாமரத்தின் அடியில் மாவடிப் பிள்ளையார் வீற்றிருந்து அருள் பாலிக்கிறார்.

 சர்வ தீர்த்தம் என்னும் புண்டரீக தீர்த்தம் கோவிலின் மேற்கிலும் சிவகங்கை என்னும் தேவதீர்த்தம் முக்தி மண்டபத்தில் அருகிலும் தேவநதியாகிய உப்பாறு ஊருக்கு மேற்கிலும் உள்ளன.

கடலும் சிறந்த தீர்த்தமாக அமைவதால் விசேஷ நாட்களில் பக்தர்கள் இதில் நீராடி வருகின்றனர்.

இந்தத் தலத்தில் தான் அதிபத்த நாயனார் அவதரித்து வழிபட்டு முக்தி அடைந்தார். இவரது திருவுருவச் சிலை கோவிலில் உள்ளது.

 ஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவராலும் தேவாரப் பதிகங்கள் அருளப்பட்ட தலம் இது.

அருணகிரிநாதர் “நாலு திக்கும் வெற்றி கொண்ட சூர பத்மனைக் களைந்த நாகபட்டினத்தமர்ந்த பெருமாளே” என்று இந்தத் தலத்தில் திருப்புகழ் பாடலைப் பாடி அருளியுள்ளார்.

 நாகைக்காரோணப் புராணம் என்ற நூலை மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள் இயற்றி 1860ம் ஆண்டில் அரங்கேற்றினார். இது 61 படலங்களையும் 2506 பாடல்களையும் கொண்டது. இப்புராணத்தின் அருமை பெருமைகளை மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களின் மாணாக்கரான டாக்டர் உ.வே.சுவாமிநாத ஐயர் விரிவாக விளக்கியுள்ளார்.

காலம் காலமாக லட்சக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் காயாரோகணேஸ்வரரும் அன்னை நீலாயதாட்சியும் அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம். 

**

Leave a comment

Leave a comment