யாரையும் வெறுக்காதே: குருபாததாசர் அறிவுரை -10 (Post No.14,540)

Written by London Swaminathan

Post No. 14,540

Date uploaded in London –  21 May 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

குமரேச சதகம் ஆராய்ச்சிக் கட்டுரை-10

பரமசிவன் கழுத்தில் பாம்பு உளது; அதற்கு யார் பகைவன்? விஷ்ணுவுக்கு வாகனமாக இருக்கும் கருடன் ; இருவரும் இறைவனிடத்தில் இருந்தாலும் பகைமை அகன்றதா?

இல்லை; ஏன்?

எல்லாம் இயற்கை விதிப்படி நடக்கிறது ; ஆகையால் யாரையும் வெறுக்காமல், வருவதை ஏற்றுக்கொள்ளுங்கள் என்று குமரேச சதகத்தில் குருபாத தாசர் நமக்கு அட்வைஸ் ADVICE தருகிறார்.

          20. விடாத குறை

தேசுபெறு மேருப்ர தட்சணஞ் செய்துமதி

     தேகவடு நீங்கவில்லை

திருமால் உறங்கிடும் சேடனுக்கு வணன்

     செறும்பகை ஒழிந்த தில்லை

ஈசன் கழுத்திலுறு பாம்பினுக்கி ரைவே

     றிலாமலே வாயுவாகும்

இனியகண் ஆகிவரு பரிதியா னவனுக்

     கிராகுவோ கனவிரோதி

ஆசிலாப் பெரியோ ரிடத்தினில் அடுக்கினும்

     அமைத்தபடி அன்றிவருமோ

அவரவர்கள னுபோகம் அனுபவித் திடல்வேண்டும்

     அல்லால் வெறுப்பதெவரை

வாசவனும் உம்பரனை வரும்விசய சயஎன்று

     வந்துதொழு தேத்துசரணா

மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு

     மலைமேவு குமரேசனே.

பொருள்

இந்திரனும் பிற வானவரும்  வந்து,

‘வெல்க! வெல்க’ என்று வணங்கித் துதிக்குந் திருவடிகளை உ டையவனே!மயிலேறி………குமரேசனே!

ஒளிவீசும் மேருமலையை வலமாக வந்தும் திங்களின் /சந்திரனின் களங்கம் ஒழியவில்லை; திருமால் துயிலப் படுக்கையாக இருக்கும் ஆதிசேடன் என்னும் பாம்புக்கும் தன் குலப் பகையான கருடனின் பகைமை நீங்கவில்லை;  சிவபிரான் கழுத்திலே இருக்கும் பாம்புக்குக் காற்றையன்றி வேறு உணவு இல்லை;

சிவபிரானுக்கு இனிய வலக்கண்ணாகிய கதிரவனுக்கு அற்பனான இராகுவே பெரும்  பகைவன்   (சூரிய கிரகணம் );  குற்றமற்ற பெரியோரைப் புகலாக அடைந்தாலும் ஊழாக

அமைத்தவாறே அன்றி வேறு வருமோ? அவரவருடைய

பயனை அவரவர்களே நுகர்தல்  வேண்டும் அல்லாமல் யாரையும் வெறுத்தல் கூடாது.

     (விளக்கவுரை) மேருமலையைக் கதிரவனுந் திங்களும் பிற கோள்களும் வலம்வருவதாகப் புராணங்கள் கூறும். ஆதிசேடன் என்னும் பாம்பு திருமாலுக்குத் துயிலும் அணையாக உள்ளது என்றும் புராணங்கள் கூறும்.

இராகு என்னும் பாம்பு கதிரவனைப் பகைத்த கதை:-

பாற்கடலிலிருந்து அமுதம் வந்தது. அதைக் கடைந்த அவுணரும்

அமரரும் பங்குபெற விரும்பிச் சூழ்ந்தனர். அவுணர்களுக்குக் கொடாமல்அமரருக்கு மட்டும் அமுதத்தை அளிக்கத் திருமால் விரும்பினார்; மனத்தை மயங்கி மோகிக்கச் செய்யும்

மோகினி வடிவம் எடுத்தார். அவுணர்கள் அமுதத்தை விட்டு அவளை விரும்பிச் சூழ்ந்தனர். மோகினியானவள் அமரருக்கு மட்டும் அமுதம் பங்கிட்டாள். மயங்கிய அவுணர் உணர்வின்றி நின்றுவிட்டனர். அவர்களில் ஒருவன் மட்டும் உணர்வு பெற்று அமரருடன் கலந்து அமுதம் பெற்றான். அவன் அவுணன் என இரவியும் திங்களும் மோகினியிடம் விளம்பினர். மோகினி அகப்பையாலே அந்த அவுணனைப் பிளந்தாள். அவன் இரு

கூறினான். எனினும் அமுதம் உண்டதனால் இறக்கவில்லை. இருகூறும்  இராகு கேது என்னும் பெயருடன் சூரியனையும் சந்திரனையும் ஆண்டுதோறும் விழுங்குவதென்று (கிரகணங்கள்)  தவத்தின்மூலம் வரம்பெற்ற பாம்பாகின. இவ்வாறு புராணம்

கூறும்.

     (கருத்து) அவரவர் வினைப்பயனை அவரவர்களே நுகர்ந்து கழித்தல் வேண்டும்.                                             ****

வால்மீகி ராமாயணத்திலும், சிலப்பதிகாரத்திலும், திருக்குறளிலும் விதி பற்றி கூறப்பட்டுள்ளது

வால்மீகி  (அயோத்யா காண்டம்) கூறுகிறார் :

ந அத்ர கஸ்சித் யதா பாவம் ப்ராணீ சமபிவர்ததே

தேன தஸ்மின் ந சாமர்த்யம் ப்ரேதஸ்ய அஸ்த்ய அனுசோசத:

न अत्र कश्चिद् यथा भावम् प्राणी समभिवर्तते |

तेन तस्मिन् न सामर्थ्यम् प्रेतस्य अस्त्य् अनुशोचतः || २-१०५-२८

ஒருவனுடைய தலைவிதியிலிருந்து எவரும் தப்பிக்க முடியாது. மற்றவர் இறக்கும்போது அழுவதால் ஒருவன் தனது மரணத்திலிருந்து தப்பிக்க முடியாது.

xxxxx

யதா ஹி சார்தம் கக்சந்தம் ப்ரூயாத் கஸ்சித் ப்தி ஸ்தித:

அஹம் அப்ய ஆகமிஷ்யாமி ப்ருஷ்டதோ பவதாம் இதி

ஏவம் பூர்வைர் கதோ மார்க: பித்ரு பைதாமஹோ த்ருவ:

தம் ஆபன்ன: கதம் சோசேத் யஸ்ய ந அஸ்தி வ்யதிக்ரம:

यथा हि सार्थम् गग्च्छन्तम् ब्रूयात् कश्चित् पथि स्थितः |

अहम् अप्य् आगमिष्यामि पृष्ठतो भवताम् इति || २-१०५-२९

एवम् पूर्वैर् गतो मार्गः पितृ पैतामहो ध्रुवः |

तम् आपन्नः कथम् शोचेद् यस्य न अस्ति व्यतिक्रमः || २-१०५-३०

வண்டியில் போகும் பயணிகளைப் பார்த்து நானும் பின்னால் வருகிறேன் என்று சொல்லுவதைப் போல நாமும் நமது முன்னோர் சென்ற வழியில் செல்கிறோம்; அது திரும்பிவராத  பயணம். அதில் சேர்ந்த பின்னர், புகார் செய்வதற்கு என்ன இருக்கிறது?

xxxx

வயஸ: பதமானஸ்ய ஸ்ரோதசோ வா அநிவர்தின:

ஆத்மா சுகே நியோக்தவ்ய: சுக பாஜ: ப்ரஜா: ஸ்ம்ருதா:

वयसः पतमानस्य स्रोतसो वा अनिवर्तिनः |

आत्मा सुखे नियोक्तव्यः सुख भाजः प्रजाः स्मृताः || २-१०५-३१

ஓடும் நதியின் நீர் திரும்பி வருவதில்லை; அதுபோலத்தான் நம் வாழ்நாளும். ஒவ்வொருவரும் அற வழியில் இன்பம் அடைய முயல வேண்டும்; எல்லோரும் விரும்புவது சந்தோஷத்தைத்தானே.

*****

விதியை வெல்ல முடியும்      

ஆயினும் கடுமையான , தீவிர பிரார்த்தனையால், பக்தியால் விதியை வெல்லலாம் . இதைத் திருமூலரும் அப்பரும், சமப்ந்தரும்  அருணகிரிநாதரும் சொல்கிறார்கள் .

கந்தர் அலங்காரம் பாடல் 38

நாளென் செயும்வினை தானென் செயுமெனை நாடிவந்த

கோளென் செயுங்கொடுங் கூற்றென் செயுங்கும ரேசரிரு

தாளுஞ் சிலம்புஞ் சதங்கையும் தண்டையுஞ் சண்முகமுந்

தோளுங் கடம்பு மெனக்குமுன் னேவந்து தோன்றிடினே.

பொருள்

நாட்கள் அடியேனை என்ன செய்யும்? வினைதான் என்ன செய்யும்?

அடியேனைத் தேடிவந்த கோள்/ கிரகம்  தான் என்ன செய்யும்? கொடிய இயமனால்தான் (எமன்) என்ன செய்யமுடியும்? குமரக்கடவுளின் இரண்டு திருவடிகளும் சிலம்புகளும் சதங்கையும், தண்டைகளும் ஆறு திருமுகங்களும் பன்னிருதோள்களும் கடப்ப மலர் மாலையும் அடியேனுக்கு முன்வந்து தோன்றிடுமே.

திருமூலர் சொல்கிறார்:

கடவுள் அருளால் முன்னை வினையின் முடிச்சை அவிழ்க்கலாம்-

தன்னை அறிந்திடும் தத்துவ ஞானிகள்

முன்னை வினையின் முடிச்சை அவிழ்ப்பர்கள்

பின்னை வினையைப் பிடித்துப் பிசைவர்கள்

சென்னியில் வைத்த சிவன் அருளாலன்றே

— திருமந்திரத்தில் திருமூலர் 

பொருள்:

தன்னை உணர்ந்து அறிந்தவர்கள் தத்துவ ஞானிகள். இந்த மெய்ஞானிகள், பூர்வ ஜன்ம தீவினைப் பயனை தவிர்ப்பர். இனி வரும் வினைகளையும் தகர்த்து விடுவர்; அதாவது வினைக்கான கர்மங்களைச் செய்ய மாட்டார்கள். இவை அனைத்தும் சிவன் அருளாலே கிட்டுவதாகும். அதாவது இறைவன் அருள் இருந்தால் விதியை வெல்லலாம்.

****

சம்பந்தரும் நவக்கிரகங்களும் ஒரு தீயதையும் செய்ய முடியாது என்று பாடுகிறார்

கோளறு திருப்பதிகம்

வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்   

  மிகநல்ல வீணை தடவி   

மாசறு திங்கள் கங்கை முடிமேலணிந்தென்   

  உளமே புகுந்த அதனால்   

ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழம் வெள்ளி   

  சனிபாம்பி ரண்டு முடனே   

ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல   

  அடியா ரவர்க்கு மிகவே. 

*****

அப்பரும் எமனும் ஒன்றும் செய்ய முடியாது என்கிறார் ;

நாமார்க்குங் குடியல்லோம் நமனை யஞ்சோம் 

நரகத்தி லிடர்ப்படோ ம் நடலை யில்லோம் 

ஏமாப்போம் பிணியறியோம் பணிவோ மல்லோம் 

இன்பமே எந்நாளுந் துன்ப மில்லை 

தாமார்க்குங் குடியல்லாத் தன்மை யான 

சங்கரனற் சங்கவெண் குழையோர் காதிற் 

கோமாற்கே நாமென்றும் மீளா ஆளாய்க் 

கொய்ம்மலர்ச்சே வடியிணையே குறுகி னோமே.    6.98.1  

****

ஆகவே குருபாதர் சொன்னது பாமர மக்களின் துயரம்; பின்னோர் சொன்னது, இறைவனை நம்புவோரின் அனுபவ முடிவு !

நம்பினார் கெடுவதில்லை. இது நான்கு மறை தீர்ப்பு

அம்பிகையைச் சரண் புகுந்தால் அதிக வரம் பெறலாம் (மகா கவி பாரதி)

—SUBHAM—

TAGS– நம்பினார் கெடுவதில்லை, நாமார்க்குங் குடியல்லோம், வேயுறு தோளிபங்கன்,முன்னை வினையின் முடிச்சை அவிழ்ப்பர்கள், யாரையும் வெறுக்காதே,  குருபாததாசர் அறிவுரை –10 ,குமரேச சதகம்,  ஆராய்ச்சிக் கட்டுரை-10, விதி

Leave a comment

Leave a comment