சர்ட்ஸீ: கடலிலிருந்து வெடித்த எரிமலையால் உண்டான தீவு! (Post.14,542)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,542

Date uploaded in London – –22 May 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

3-4-25 கல்கிஆன்லைன் இதழில் வெளியான கட்டுரை.

உலகின் அதிசய இடங்கள்! 

சர்ட்ஸீ: கடலிலிருந்து வெடித்த எரிமலையால் உண்டான தீவு! (Surtsey island) 

ச. நாகராஜன்       

ஆச்சரியகரமான ஒரு சம்பவம் அது. 

1963ம் வருடம் நவம்பர் மாதம் 14ம் தேதி.

ஐலிஃபெர் II (Islefur II) என்ற மீன் பிடிக்கும் படகு ஒன்று ஐஸ்லாந்தில் கெய்ர்பக்லாஸ்கருக்கு மேற்கே கடலில் மெதுவாகச் சென்று கொண்டிருந்தது. திடீரென்று படகின் மீது ஒரு பெரிய அலை வந்து மோதி படகை நிலைகுலைய வைத்தது. ஒரு வழியாக படகை அதிலிருந்து மீட்ட குழு திடீரென்று தென்மேற்கே ஒரு பெரும் புகை மண்டலத்தைக் கண்டு அதிர்ந்தது.

படகின் காப்டன் அங்கே ஒரு கப்பல் தீப்பிடித்து எரிகிறது என்று நினைத்தார். உடனே கடற்படைக்குத் தகவல் தெரிவித்து உதவிக்கு விரைந்து வருமாறு செய்தி அனுப்பினார்.

மீன்பிடி படகு அந்த புகை மண்டலத்தை நெருங்கியபோது தான் அதிர்ச்சியூட்டும் ஒரு தகவலை அவர்கள் அறிய நேர்ந்தது.

புகை மண்டலத்திற்கு காரணம் கப்பல் தீப்பிடித்து எரியவில்லை. கடலுக்கு அடியிலிருந்த எரிமலை ஒன்று வெடித்து அதனால் ஏற்பட்ட புகைமண்டலம் தான் அது என்பதை அவர்கள் உணர்ந்தனர்.

உடனே தப்பித்தோம் பிழைத்தோம் என்று படகைத் திருப்பி வேகமாகச் செலுத்தினர். கடற்படைக்கும் தகவல் அனுப்பினர்.

மூன்றே மூன்று மணி நேரத்திற்குள் 12000 அடி உயரத்திற்கு அந்தப் புகை வானளாவ எழுந்து சாம்பலைக் கக்கியது. கடலுக்கு 426 அடி கீழேயிருந்து ஒரு சதுர மைல் கடல் பரப்பிலிருந்து அந்த எரிமலை வெடித்திருக்கிறது.

கடலே அல்லோலகல்லோலப்பட்டது. அலைகள் சீறியெழ தொலைதூரத்தில் சென்று கொண்டிருந்த படகுகளில் இருந்தோர் எல்லாம்’ ஐயோ அப்பா’ என்று கூக்குரலிட்டு வேகமாக கரையை நோக்கிப் படகைச் செலுத்தினர்.

 சில சமயம் இப்படிப்பட்ட வெடிப்பு 50000 அடி உயரம் வரை புகையைக் கக்குமாம்!

 அங்கு சென்ற விஞ்ஞானிகள் தீவிர ஆராய்ச்சியைப் பாதுகாப்புடன் மேற்கொண்டனர்.

 என்ன ஆச்சரியம், கடலுக்குள்ளிருந்து ஒரு திவு வெளிப்பட்டிருந்தது. நான்கு வாரங்களில் எல்லா பத்திரிகையாளர்களும் அங்கு திரண்டனர்.

 ஐஸ்லாந்து அரசு இதை ஆராய ஒரு கமிட்டியை உடனடியாக நியமித்தது. இந்தப் புதிய தீவுக்கு சர்ட்ஸீ (Surtsey)  என்று பெயரைச் சூட்டினர்..

 1964 பிப்ரவரியில் இன்னொரு எரிமலையில் வெடிப்பு ஏற்பட்டு அது குழம்பைக் கக்கியது.

 நன்கு உருவாகி விட்டிருந்த சர்ட்ஸீ தீவு கடல் மட்டத்திற்கு 500 அடிக்கும் மேலே உருவாகி இருந்தது.

 கடலுக்கடியில் பத்தாயிரம் மைல் நீளம் நீண்டுள்ள மிட்-அட்லாண்டிக் மலைத்தொடரில் இப்படிப்பட்ட வெடிப்புகள் அவ்வப்பொழுது ஏற்படுவதுண்டு.

 இந்த சர்ட்ஸீ தீவு விஞ்ஞானிகளுக்கு ஒரு வரபிரசாதமாக அமைந்தது.

இங்கு அவர்கள் தங்களுடைய பெரிய லாபரட்டரியை அமைத்து கடல் வாழ் மிருகங்களைப் பற்றியும் கடல் தாவரங்களைப் பற்றியும் ஆராய ஆரம்பித்தனர்.

 விசேஷமான பாதுகாப்பு உடை அணிந்த விஞ்ஞானிகள் மட்டுமே இங்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

 ஃபல்மர் என்ற ஒரு புதுப் பறவை இங்கு வந்து குடி கொண்டது. மேவீட் என்ற ஒரு புதுவகைத் தாவரம் இங்கு வளர ஆரம்பித்தது. மெதுவாக கடல் வாழ் உயிரினங்கள் இங்கு வர ஆரம்பிக்க இந்த சர்ட்ஸீ தீவு உயிரினங்களைக் கொண்ட ஒரு தீவாக இப்போது மாறி விட்டது! 

ஆச்சரியமூட்டும் சர்ட்ஸீ தீவு படைப்பு விசித்திரங்களுள் ஒன்று!

***

Leave a comment

Leave a comment