பெண்களை இந்துக்கள் பூஜிப்பது ஏன்? அனந்தராம தீட்சிதர் விளக்கம் (Post.14,552)

Written by London Swaminathan

Post No. 14,552

Date uploaded in London –  25 May 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

ஸ்ரீ  அனந்தராம தீட்சிதரை அறியாத தமிழர் இருக்க முடியாது . காரணம்? சொற்பொழிவாற்றுவதில் அண்ணாதுரை , தி.மு.க கட்சிக்கு எப்படி ஒரு தனி பாணியை ஏற்படுத்தினாரோ அதுபோல உபன்யாச சக்கரவர்த்தியான சேங்காலிபுரம் ஸ்ரீ அனந்தராம தீட்சிதர் தனக்கு என ஒரு பாணியை ஏற்படுத்தினார் ; கணீரென்ற குரலில் தமிழ் சம்ஸ்க்ருத வசனங்களை சொல்லக்கூடிய ஒரே பெரியவர் என்ற பெயரை எடுத்தார். அவர் மூலம் ராமாயணம் பரவியது போல வேறு எவராலும் ராமாயணம் பரவவில்லை .

அவர் சுமார் அறுபது ஆண்டுகளுக்கு முன்னர் மதுரை மீனாட்சி அம்மன் கும்பாபிஷேக மலரில் எழுதிய கட்டுரையின் சுருக்கத்தைத் தருகிறேன் (அந்த மலரின் ஆசிரியர் குழுவில் எனது தந்தை தினமணி பொறுப்பாசிரியர்  வெ. சந்தானம் முக்கிய உறுப்பினர் ; ஆகையால் மலரை மிகவும் கவனமாக பாதுகாத்து வருகிறேன்)

இதோ தீட்சிதரின் சொற்கள் :

எங்கும் சக்தியே

தெய்வங்களே நமது குறைகளை நீக்கவேண்டும் .அப்படி நீக்குபவர் கள் தேவர்கள் எனப்படுவர். அத்  தேவர்களுக்கு ஏற்படும்குறைகளை நீக்கும் தெய்வம் ஸ்ரீ சக்தி எனப்படும். இந்த சக்தியுடன் சேர்ந்து இருப்பதே சிவபெருமானுக்கு பெருமை. சக்தியுடன் சேராமல் இருந்தால் சிவனும் வெறும் சிவன்தான் . ஆதலால்தான் உலக வழக்கிலும் வைஷ்ணவர் முதலிய யாராயிருந்தாலும்  எனக்கு எழுந்துவர சக்தி இல்லை என்று கூறுவார்களேயாகில் , அவர்களை சிவனே என்றிரு எனக்கூறுவது வழக்கம் . ஆதலால்தான் ஆதி சங்கரரும் பரமேஸ்வரனுக்கு காரியங்களை செய்வதற்குத் தகுதியை அளிக்கும் பராசக்தி இவளேதான் ; ஆகையால் பிரம்மா, விஷ்ணு முதலியோரும் வணங்கும் சக்தியை நமஸ்கரிக்கவோ துதிக்கவோ புண்யமில்லாதவருக்கு இயலாது . இச்சக்தியில்லையேல் அசைவதற்கும் இயலாது , என்று துதித்திருக்கிறார் . இப்படிப்பட்ட பராசக்திதான் ஸ்ரீ மீனாட்சி, அவளேதான் காமாட்சி, புவனேஸ்வரி என்ற பெயரால் விளங்குகிறாள் .

இவ் வுலகில் ஸ்த்ரீ ரூபமாக தெய்வத்தைக்கூறும் மதம் நம் இந்துமதம் ஒன்றுதான் . அதனாலேயே பெண்களுக்கு நம்மதத்தில் சிறந்த பெருமை கொடுக்கப்பட்டுள்ளது . அதுமட்டுமல்ல, தெய்வங்களாகக் கூட  பெண்களை பூஜித்து வருகிறோம். அம்மாதிரி பூஜித்து புடவை,  குங்குமம், மஞ்சள் , புஷ்பம், தாம்பூலம் இவற்றைக்கொடுத்து அலங்கரித்து , அன்னமிட்டு வணங்குவதை சுமங்கலிப் பிரார்த்தனை என்று சொல்கிறோம். இப்பூஜை யை விஷ்ணுமதத்தைச்  சேர்ந்தோரும் செய்துவருகிறார்கள். இந்த சுமங்கலிப்பூஜை யை ஏதோ ஒரு காரணத்தால் நடத்தாத குடும்பங்களில் தோன்றும் சந்ததியினருக்கு சந்திரன், சுக்கிர, ராகு முதலிய கிரஹங்கள் ஜாதகத்தில் தோஷமுள்ளவர்களாகின்றன. மனதும் சுவாச கோஷமும் பாதிக்கப்படுகின்றன. ஆதலாலேயே  லலிதா சஹஸ்ரநாமத்தில் ஓம் ஸுவாஸின்யை நமஹ ,  ஓம் ஸுவாஸின் யர்ச்சினப் ப்ரீதாயை நமஹ என்ற நாமங்களால் ஸ்ரீ சக்தியை ஸுவாஸினி ரூபிணியாகவும் , ஸுவாஸினிகளை அர்ச்சிப்பதால் சந்தோஷப்படுகிறவளாகவும் கூறப்பட்டுள்ளது இப்படிப் பெண்களைத் தெய்வமாகத் நினைத்துப் பூஜிப்பது நம் பெரியோர்களது சம்பிரதாயமாக இருந்து வந்திருக்கிறது . இவ்வுணர்ச்சி அவர்களுக்கு இருந்ததால்தான்  இந்நாளில் உள்ள , சாஸ்திரத்தை  உணராத சிலர் கூட , பெண்களிடத்தில் பொது ஸ்தலங்களில் மரியாதையும் கருணையும் காட்டுகின்றனர் .

தீட்சிதர் குறிப்பிட்ட செளந்தர்ய லஹரி ஸ்லோகம்

शिवः शक्त्यायुक्तो यदि भवति शक्तः प्रभवितुं

न् चेदेवं देवो न खलु कुशलः स्पन्दितुमपि ।

अतस्त्वामाराध्यां हरिहरविरिञ्चादिभिरपि

प्रणन्तुं स्तोतुं वा कथमकृतपुण्यः प्रभवति ॥१॥

சிவ:  சக்த்யா  யுக்த: யதி  பவதி  சக்த:  ப்ரபவிதும்

ந  சேதேவம்  தேவோ  ந  கலு  குசல:  ஸ்பந்திதுமபி ;

அதஸ்  த்வம்  ஆராத்யாம்  ஹரி-ஹர -விரிஞ்சாதிபிரபி 

ப்ரணந்தும்  ஸ்தோதும் வா  கதமக்ருத   -புண்ய:  ப்ரபவதி 

பொருள்

சகல உலகங்களையும் படைக்கும் ஈசன், சக்தியாகிய உன்னுடன் இணைந்தால்தான்  இந்த  உலகத்தை படைக்க முடியும்.சக்தி இல்லாமல் சிவனால் செயல்படமுடியாது .  மும்மூர்த்திகளான சிவன், விஷ்ணு,பிரம்மா ஆகியோர் ,துதிக்கின்ற உன்னை முன் ஜென்ம புண்ணியம்  இல்லாவிட்டால் துதிக்கவும், வணங்கவும்  முடியுமோ ?

பராசக்தியான  அம்பாளின் ஸ்வரூபம் எங்கும் வியாபித்துள்ளது . ஆதலால்தான் மது கைடபர்களை விஷ்ணு வதம் செய்தார் என சில புராணங்களும் ஸ்ரீ அம்பாளே வதைத்தாள் என சில புராணங்களும்  கூறுகின்றன. இதற்குக் காரணம் விஷ்ணு முதலிய யாவரும் பராசக்தியின் ஸ்வரூபமாக  இருப்பதேதான் . அதனால்தான் ஆதிசங்கரர் ஸ்ரீ சக்ரம் முதலிய யந்த்ரங்களையும், சக்தி ஸ்வ ரூபங்களான சாரதா, காமாட்சி முதலிய பிம்பங்களையும்  ஆங்காங்கு பிரதிஷ்டை செய்திருக்கிறார். அப்படிப்பட்ட ஸ்தலங்களில் சக்திக்கு முக்கியத்துவம் அளித்த க்ஷேத்ரம் மதுரையே ஆகும் . இங்கே விளங்கும் பராசக்தியான ஸ்ரீ மீனாட்சியும் ஸ்ரீ சுந்தரேஸ்வரரும்  பக்தர்களுக்கு கற்பக வ்ருக்ஷம் போன்றவர்கள். அவர்களின் அருளை பெற்றவர்களுக்கு சோகமே கிடையாது என்று  திருவிளையாடற் புராணம் கூறுகிறது.

–SUBHAM—

TAGS–செளந்தர்ய லஹரி ஸ்லோகம், பெண்கள்,  இந்துக்கள் பூஜிப்பது ஏன்?  அனந்தராம தீட்சிதர் , மதுரை ஸ்ரீ மீனாட்சி,ஸ்ரீ சுந்தரேஸ்வரர் , கோவில், கும்பாபிஷேகம்

Leave a comment

Leave a comment