அதிசய புருஷர் திரு வெ.சந்தானம்! – 3 (Post No.14,846)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,846

Date uploaded in London – 9 August 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

புதிய தொடர்!

அதிசய புருஷர் திரு வெ.சந்தானம்! – 3

ச. நாகராஜன்

Madurai V.SantanamFreedom Fighter and News Editor Dinamani News paper, , passed away on the Independence Day  15-8-1998, after the Flag Hoisting ceremony opposite his house in Madurai. A series of articles will appear here in his memory.

4

யாருடனும் பகைமை பாராட்டாத பண்பாளர்

சந்தானம் அவர்கள் யாருடனும் பகைமை பாராட்டாத பண்பாளர். அவருக்கு எதிராக செயல்கள் செய்தவர்கள் பலர் உண்டு. என்றாலும் கூட அவர் யாருக்கும் ஒரு போதும் தீங்கு செய்ய மனதால் கூட நினைக்காதவர். பழிவாங்கும் மனப்பான்மை என்பது அறவே அவர் வாழ்வில் கிடையாது.

அவரை ‘அசைக்க முடியாது” என்று ஸ்வாமிஜி கிருஷ்ணா அவர்கள் கூறியது அப்படியே நடந்தது. இறுதி வரை “சந்தானத்தை யாராலும் அசைக்க முடியவில்லை!”

எல்லோருக்கும் உபகாரம் செய்து அவர்களை உயர்த்தி விடுவது சந்தானத்திற்கு பிறப்பிலிருந்தே வந்த பழக்கம்.

ஸ்வாமிஜியின் அனுக்ரஹத்திற்கு பலரையும் ஆளாக்கி அவர்களை மேம்பட வைத்தார் அவர். பல சம்பவங்கள் உள்ளன. எடுத்துக்காட்டிற்காக சிலவற்றைப் பார்ப்போம்.

இந்தியன் எக்பிரஸ் குழும ஜெனரல் மேனஜராகத் திகழ்ந்தவர் திரு டி.கே.தியாகராஜன். டி.கே.டி என்று அவரை அன்புடன் அனைவரும் அழைப்பார்கள். அவரது இல்லம் மதுரையில் திருநகரில் இருந்தது. அவரது இல்லத்தில் கணபதி ஹோமம் நடந்தது. அவரது மகள் மாதங்கியை இந்தியன் பேங்க் ஏஜண்டாக சிறப்புடன் இருந்த திரு சங்கர ஐயர் அவர்களின் மகனான திரு எம்.எஸ். வெங்கட் ராமனுக்கு மணமுடித்தனர்.. எம்.எஸ். வெங்கட்ராமன் ஸ்வாமிஜியின் அத்யந்த சீடராக ஆனார்.

அவருக்கு ஸ்வாமிஜியின் அனுக்ரஹம் பரிபூரணமாகக் கிடைத்தது. கணபதி ஹோம உபதேசமும் கிடைத்தது. தனது நீண்ட வாழ்நாள் முழுவதும் அவர் இந்த ஹோமத்தைச் செய்து வந்தார் – சாஸ்த்ரோக்தமாக.

Mr V Santanam and Mrs Rajalakshmi Santanam .

ஒரு நாள் சங்கர ஐயர் வீட்டில் கணபதி ஹோமம் கோலாகலமாக நடந்தது. எல்லோரும் வீற்றிருந்தோம். தீபாராதனை சமயம்.

திடீரென்று ஸ்வாமிஜி ஆகாயத்தைப் பார்த்தார். அனைவரையும் விழுந்து நமஸ்கரிக்கச் சொன்னார்.

உடனே அனைவரும் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து நமஸ்கரித்தோம். அங்கு ஹோமத்தைப் பார்க்க குழந்தையானந்த ஸ்வாமிகள் வந்திருந்தாராம்.

அவரை மேலே கண்ணுற்ற ஸ்வாமிஜி அனைவரையும் நமஸ்கரிக்க வைத்து குழந்தையானந்த ஸ்வாமிகளின் ஆசீர்வாதத்தையும் வாங்கித் தந்தார்.

குழந்தையானந்த ஸ்வாமிகளின் அணுக்க பக்தரான ஶ்ரீ ராமலிங்க ஐயர் அடிக்கடி சங்கர ஐயர் வீட்டிற்கு வருவது வழக்கம். யாரேனும் வேண்டிக் கொண்டால் ராமலிங்க ஐயர் கையில் அதற்கான பதில் எழுத்துப்பட தோன்றும். கலியுகத்தில் இந்த அதிசயத்தைப் பார்த்து வியந்தோர் ஏராளம்.

ஸ்வாமிஜி தினமணி பத்திரிகைக் குடும்பத்திற்கு நெருங்கியவராக ஆகி விட்டார்.

ஜே.எஸ். மணி என்பவர் மதுரைக்கு மேனேஜராக இருந்தார். நெடுநாளாக அவருக்குக் குழந்தை இல்லை. எனது தந்தையாரால் ஸ்வமிஜியின் அனுக்ரஹம் அவருக்குக் கிடைக்க, கணபதி ஹோமம் நடைபெற அவருக்குக் குழந்தைப் பேறு உண்டாயிற்று, நீண்டகாலமாக குழந்தைப் பேறுக்கு ஏங்கிய அவர் அடைந்த சந்தோஷத்திற்கு எல்லையே இல்லை.

கீர்த்திவாஸ் என்பவர் இந்தியன் எக்ஸ்பிரஸின் மதுரைப் பதிப்பு ஆசிரியர். அவருக்கு அவ்வளவாக ஸ்வாமிஜியின் மீதெல்லாம் பக்தி இல்லை. ஒரு சமயம் தந்தையார் அவரை ஆயக்குடிக்கு அழைத்துச் சென்றார்.

அங்கு ஹோமம் முடிந்தது. வரிசையாக தனிப்பட ஒவ்வொருவருக்கும் பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தார் ஸ்வாமிஜி.

கீர்த்திவாஸ் என்ன செய்யப்போகிறார் என்று பார்ப்பதில் எங்களுக்கு உற்சாகம் மிகுந்திருந்தது.

அவர் முறை வந்தது. உள்ளே போனார். சில நிமிடங்கள் கழித்து வந்த

அவர் திகைப்புடன் காணப்பட்டார்.

ஸ்வாமிஜி ஒரு போடு போட்டு விட்டார் என்று நாங்கள் பேசிக் கொண்டோம். உண்மைதான். யாருக்குமே தெரியாத அந்தரங்க விஷயங்களை ஸ்வாமிஜி பிட்டுப் பிட்டு வைத்ததோடு அவருக்கு அனுக்ரஹமும் செய்தார். பிறகென்ன, அவரும் ஒரு சிறந்த பக்தராக ஆனார்.

எம்.ஏ. கிருஷ்ணமூர்த்தி என்பவர் வக்கீல்புதுத் தெருவில் வாழ்ந்து வந்த ஒரு பணக்காரர். அவரது ‘சகவாச தோஷத்தை’ எல்லாம் ஒதுக்கி விட்டு தந்தையாரிடம் வந்தார். தான் மதுரை நகரசபை கவுன்ஸில் தேர்வுக்கு நிற்க ஆசைப்படுவதாகத் தெரிவித்தார்.

அனைவருக்கும் உதவி செய்யும் மனப்பான்மை கொண்ட தந்தையார் அவரை ஆய்க்குடிக்கு அழைத்துச் சென்றார் – ஸ்வாமிஜியின் ஆசீர்வாதம் வாங்க! ஜெயிக்க வேண்டுமல்லவா?

தந்தையார் அவரை அறிமுகப்படுத்தி வைக்க ஸ்வாமிஜி திரும்பிக் கொண்டார். மீண்டும் முயற்சி செய்தார் தந்தையார். மீண்டும் திரும்பல்.

கடைசியில் ஒருவாறாக ஆசீர்வாதத்தை தந்தையாரின் வலுக்கட்டாயத்தினால் அவர் பெற்றார்.

டஃப்  பைட் – மதுரையில். 47 ஓட்டுகளில் அவர் ஜெயித்தார்.

ஸ்வாமிகள் அவரை ஜெயிக்க வைத்தார் என்று பேசிக் கொண்டோம்.

இப்படி ஏராளமான சம்பவங்கள் நடைபெற்றதால் இதைப் பற்றிப் பேசுவதே எங்களுக்கெல்லாம் ஒரு “தொழிலாக” மாறியது!

அந்த நாட்கள் போல இனி ஒரு நாள் வருமா?

***

Tags-  V Santanam, News Editor, Freedom fighter, Part 3

Leave a comment

Leave a comment