

Post No. 14,907
Date uploaded in London – —27 August 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non-commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
24-8-25 அன்று லண்டனிலிருந்து ஒளிபரப்பான ஞானமயம் நிகழ்ச்சியில் ஒளிபரப்பான உரை.
போகர்!
அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே, , திரு கல்யாண்ஜி அவர்களே, திரு லண்டன் சுவாமிநாதன் அவர்களே வணக்கம். நமஸ்காரம்.
இன்று நாம் பதினெண் சித்தர்கள் வரிசையில் அகத்தியருக்கு அடுத்தாற் போலச் சொல்லப்படும் போகர் பற்றிச் சிறிது பார்ப்போம்.
பொதுவாக சித்தர்கள் யார் என்ற கேள்விக்குப் பதிலாக சித்திகளை அடைந்தவர்கள் சித்தர்கள் என்று சுருக்கமாகச் சொல்லலாம். இவர்கள் பல கலைகளில் சித்தி பெற்றவ்ர்கள். மருத்துவம், யோகா, ஜோதிடம், மந்திரம், யந்திரம், இரஸவாதம் போன்றவற்றில் தேர்ந்தவர்கள்.
இவர்களின் எண்ணிக்கை யாராலும் சொல்ல முடியாத அளவு பெரியதாகும்.
என்றாலும் கூட நாம் நவ சித்தர்கள் என்றும் பதினெண் சித்தர்கள் என்றும் அரிய பல சித்திகளைச் செய்து மனித குலத்திற்கு வழிகாட்டியவர்களைச் சிறப்பித்துக் கூறுகிறோம்.
ஆதி நாதர்
அனாதி நாதர்
கடேந்திர நாதர்
சகோத நாதர்
சத்ய நாதர்
கோரக்க நாதர்
மச்சேந்திர நாதர்
மதங்க நாதர்
வெகுதி நாதர்
ஆகியோர் நவ நாத சித்தர்கள் ஆவர்.

பதினெண் சித்தர்கள் என்ற வரிசையில்
அகத்தியர், போகர், திருமூலர், வான்மீகர், தன்வந்திரி, இடைக்காடர், கமல முனி, கருவூரார், கொங்கணர், கோரக்கர், குதம்பைச் சித்தர், மச்சமுனி, பாம்பாட்டிச் சித்தர், பதஞ்சலி, ராமதேவர், சட்டைமுனி, சிவவாக்கியர், சுந்தரர் ஆகியோர் கூறப்படுகின்றனர்.
இவர்களில் போகர் பல ஆயிரம் வருடங்களுக்கு முன் தோன்றியவர் ஆவார்.
இவர் பழனி மலையில் பிறந்தார் என்றும் அங்கேயே பல காலம் வசித்தார் என்பதையும் அங்கேயே சமாதி எய்தினார் என்றும் நமது வரலாறு கூறுகிறது.
அதிசயம் அநேகமுற்ற பழனி மலை என்று அருணகிரிநாதர் பழனி மலையின் அதிசயங்களை வியந்து போற்றுகிறார்.
அந்த அதிசயப் பழனி மலையில் இவர் வாழ்ந்தார் என்பதை கொங்கு மண்டல சதகம் தனது 36ம் பாடலில் கூறுகிறது.
யோக வயித்தியஞ் சொல்ரச வாத மெலாக் கலையுந்
தேக நிலைபெறுங் காயகற் பங்களெண் சித்தியுஞ்சொல்
போக ருடன்புலிப் பாணி முதலிய புண்ணியரெலா
மாக முறவமர் வைகா நகர்கொங்கு மண்டலமே
இதன் பொருள் :- யோகம் வைத்தியம், ரசவாதம், நீண்ட ஆயுளைப் பெற வைக்கும் காயகல்பம், அட்டமாசித்தி ஆகியவற்றைக் கூறிய போகநாதர், புலிப்பாணி ஆகிய புண்ணியர்கள் வசித்துள்ள வைகாவூர் (பழனி) கொங்கு மண்டலத்தில் உள்ளதே.
பழனி கொங்கு மண்டலத்தில் உள்ள சிறந்த ஊர்.

இங்கு திருமாளிகைத் தேவர், கருவூர்ச் சித்தர், புலிப்பாணி போன்ற
புண்ணியர்களை மாணாக்கர்களாகக் கொண்ட பெரும் சித்தர் போகர்.
திருமாளிகைத் தேவர் சரிதத்தால் சைவ சமயப் பற்றுள்ளவராகவும் கருவூர்த் தேவரை நோக்கும் போது வாமாசாரமுடையவராகவும் இவர் கருதப்படுகிறார்.
தஞ்சாவூர் பிரஹதீஸ்வரர் கோவில் (பெரிய கோயில்) அட்டபந்தன காலத்தில் இவர் அங்கு எழுந்தருளியிருந்தார். இதை
கொங்கு மண்டல சதகம் 34ஆம் பாடல் கூறுகிறது.
புலிப்பாணி பல திரட்டில் கீழ்க்கண்ட பாடல் வருகிறது:
தானான சிவகிரியிற் தண்டாயுதபாணி தாதாவைப் பூசித்தோர்பிரமனிந்திரன்
தேனான போகருட னிவர்கள்மூவர் தெளிவாக முன்யுகத்தில் மூவரப்பா
கோனான கலியுக யிருநூற்றைந்தில் கொற்றவனே புலிப்பாணி பூசித்தேன்பார்
மானான அட்டசித்தி கோடாசத்தி மைந்தனே சித்தரிட நடனந்தானே.
ஆக பிரமன், இந்திரன், போகர் ஆகிய மூவர் தண்டாயுதபாணியைப் பழ மலையில் தவமியற்றி பூஜித்தவர்கள் என்பது தெளிவாகிறது.
இவர் பல அரிய செயல்களைச் செய்து உலகை பிரமிக்க வைத்தார். அவற்றில் அனைவரும் போற்றி வியப்பது இவர் நவபாஷாணங்களைக் கட்டி அதனால் முருகனுக்கு ஒரு சிலை அமைத்தார் என்பதையே!

கௌரி பாஷாணம், கந்தக பாஷாணம், சீலைப் பாஷாணம், வீர பாஷாணம், கச்சால பாஷாணம், வெள்ளைப் பாஷாணம், தொட்டிப் பாஷாணம், சூதப் பாஷாணம், சங்குப் பாஷாணம் ஆகிய ஒன்பது பாஷாணங்களைச் சுத்திகரித்து இவர் முருகன் விக்ரஹத்தை வடிவமைத்திருக்கிறார்.
இந்த விக்ரஹத்திலிருந்து வெளிப்படும் நுட்பமான கதிர் வீச்சுக்கள் விக்ரஹத்தைப் பார்த்த மாத்திரத்திலேயே நலத்தை விளைவிக்கும்.
இதே மாதிரியான நவபாஷாண மூர்த்தியை வடிவமைத்து திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரரை இவர் உருவாக்கினார் என்றும் கூறப்படுகிறது.
இவர் காலாங்கி நாதர் என்ற சித்தரைத் தன் குருவாக வரித்தார். அவரிடமிருந்து பல சித்திகளைப் பெற்றார். காயகல்பம் செய்து தன் உடம்பை அழியாத உடலாகச் செய்தார்.
தான் அறிந்த ரகசியங்களை மனித சமுதாயம் மேம்பட வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் அவற்றை நூல்களாகப் படைத்தார்.
ஏராளமான அந்த நூல்களில் இன்று நம்மிடம் 64 நூல்கள் உள்ளன. அதில் 23 நூல்கள் அச்சிடப்பட்டுள்ளன. அவற்றில் மட்டும் சுமார் 11000 பாடல்கள் உள்ளன.

போகர் 12000, சப்த காண்டம் – 7000, போகர் நிகண்டு – 1700,
போகர் வைத்தியம் – 1000, போகர் சரக்கு வைப்பு- 800, போகர் ஜெனன சாகரம் – 550, போகர் கற்பம் -360, போகர் உபதேசம் – 150, போகர் இரண விகடம் -100, போகர் ஞான சாராம்சம் – 100, போகர் கற்பசூத்திரம் – 54, போகர் வைத்திய சூத்திரம் – 77, போகர் மூப்பு சூத்திரம் – 51, போகர் ஞான சூத்திரம் -37, போகர் அட்டாங்க யோகம் – 24, போகர் பூஜாவிதி -20, வாண சாஸ்திரம் உள்ளிட்ட நூல்களில் ஏராளமான ரகசியங்கள் பொதிந்துள்ளன.
இவற்றை சித்த நூல்களில் தேர்ந்தவர்களே படித்து அர்த்தம் காண முடியும். ரகசிய சங்கேத வார்த்தைகளால் சொல்லப்படும் கருத்துக்கள் ஏராளமாக உள்ளன. எடுத்துக்காட்டாக ‘இரு குரங்கின் கை’ என்று சொல்லப்படும் போது அதன் உண்மையான அர்த்தம் முசுமுசுக்கை என்ற தாவரம் என்று அறியப்பட வேண்டும்.
இறந்தவர்களைப் பிழைக்க வைக்கும் சஞ்சீவனி மந்திரம், என்றும் உயிரோடு வாழவைக்கும் காயகல்பம் ஆகியவற்றோடு எந்தப் பொருளையும் தங்கமாக மாற்றும் ரஸவாத வித்தையும் போகர் அறிந்தவர்.
பொதிகைமலைச் சாரலில் இவர் நீண்டகாலம் தவம் புரிந்தவர். தஞ்சையில் பிரகதீஸ்வரர் ஆலய லிங்க பிரதிஷ்டையில் இவர் முக்கிய பங்கு ஆற்றியவர்.
இப்படி ஏராளமான வரலாறுகள் இவரைப் பற்றிக் கூறப்படுகின்றன.
சீனாவுக்கும் போகருக்கும் உள்ள தொடர்பு மிகச் சிறப்பாகப் பேசப்படுகிறது. போயாங் வேய் என்ற பெயரில் இவர் சீனாவில் இருந்திருக்கிறார். பல நூல்களைச் சீன மொழியிலும் எழுதி இருக்கிறார். இவர் கிழக்கு ஹான் ஆட்சிக் காலத்தில் அதாவது கி.மு. 167ம் ஆண்டு வாக்கில் வாழ்ந்ததாக சீனக் குறிப்புகள் கூறுகின்றன. சீனாவில் இவர் ஏராளமான அற்புதங்களை நிகழ்த்தினார் என்பதை சீன நூல்கள் குறிப்பிடுகின்றன.
திருச்சி மாவட்டத்தில் முள்ளிப்பாடி கிராமத்தில் திரு ஈங்கோய்மலை அடிவாரத்தில் போகருக்கு ஒரு தனிக் கோவில் உள்ளது. இங்கு அவர் நவபாஷாண முருகன் சிலையைச் செய்து அதை நன்கு சோதித்த பின்னரே பழநிக்குச் சென்று அதை பிரதிஷ்டை செய்தார் என்று மக்கள் நம்புகின்றனர்.
பழநியில் வாழ்ந்த போகர் அங்கேயே சமாதி அடைந்தார். அவரது சமாதி பழநி ஆண்டவர் கோவிலின் உட்பிரகாரத்தின் தென்மேற்கு மூலையில் உள்ளது.
பழனி ஆண்டவர் சந்நிதி முன்பு போகர் ஒடுக்க மடம் என்றும் மலையடிவாரத்தில் புலிப்பாணி மடம் என்றும் இருக்கின்றன.
போகர் பூஜை செய்து வந்த புவனேஸ்வரி அம்மனின் விக்ரஹமும் பழநியாண்டவர் சந்நிதியில் இன்றும் உள்ளது. புவனேஸ்வரி அம்மன் சந்நிதிக்கும் போகரின் சமாதிக்கு ஒரு சுரங்கப் பாதை உண்டு என்பதும் தெரிய வருகிறது.
போகர் பற்றிய பல வரலாற்றுச் செய்திகளை சதுரகிரி தல புராணத்தில் காணலாம்.
என்றும் வாழ்கின்ற சித்தர்களைப் போற்றி வணங்குவதுடன் அவர்கள் கூறி இருக்கும் இரகசியங்களைத் தக்கோர் வாயிலாக அறிந்தால் நம் வாழ்வு நலம் பெறும் என்பது திண்ணம்.
அனைத்து சித்தர்களையும் வணங்குவோம் நலமுற வாழ்வோம் என்று கூறி விடை பெறுகிறேன்.
நன்றி வணக்கம்.
**












_Gwalior%20Fort_MP_2021_12_15_144319.jpeg)

.jpg)
.jpg)
