
Post No. 14,937
Date uploaded in London – —4 September 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
கல்கிஆன்லைன் இதழில் 31-5-25 இதழில் பிரசுரிக்கப்பட்ட கட்டுரை!
MOTIVATION
எதையும் சோம்பேறித்தனத்தால் ஒத்திப்போடுபவர்களுக்கு 1% விதி!
ச. நாகராஜன்

எதையும் ஒத்திப்போடுபவர்களின் பட்டியலை எடுத்தால் பயந்து போவோம்! ஏனெனில் ஏறத்தாழ அனைவருமே ஒத்திப்போடுபவர்கள் தான்!
இது ஏன் என்று விஞ்ஞானிகள் ஆராய்ந்ததில் இரண்டு காரணங்கள் தெரிய வருகின்றன. முதலாவது காரணம் : சரியான குறிக்கோள் இல்லாதது. இரண்டாவது காரணம்: ஒரு செயலுக்கான பாராட்டோ அல்லது பரிசோ எதுவானாலும் அது மிக மிக தாமதமாக வருவது.
ஆகவே தான் மோடிவேஷன் – ஊக்கமே – இல்லாமல், ‘இதை அப்புறம் செய்யலாம், இதை இப்போது செய்து என்ன கிடைக்கப் போகிறது’ என்ற எண்ணமும் தோல்வி அடைந்து விட்டால்?’ என்ற எதிர்மறை எண்ணமும் உருவாகிறது.
இந்தக் குறைகளைப் போக்க வருகிறது 1% ரூல்!
எந்த செயலையும் செய்ய ஒரு குறிக்கோள் வேண்டும். அனைத்தையும் முழுமையாக உடனேயே செய்து விடுவது என்பது முடியாது. இதை எப்படிச் செய்வது என்று மலைக்காமல் அந்தச் செயலில் ஒரு சிறு பகுதியை ஆரம்பித்து விட வேண்டும். அவ்வளவு தான் – இது தான் 1% விதி.
உதாரணமாக ஒரு கட்டுரையை எழுத வேண்டும் என்றால் அதற்கான ஆரம்பமாக கட்டுரை தலைப்பையும் எழுதியவரின் பெயரையும் டைப் அடித்து கணினியை மூடி விடலாம். பின்னர் சிறிது நேரம் கழித்தோ அல்லது மறுநாளோ யோசித்து வைத்திருக்கும் கருத்துக்களை சில வரிகளில் எழுதலாம். இப்படி கட்டுரையை முழுவதுமாக முடிக்கலாம்.
ஒவ்வொரு செயலுக்கும் மூளை ஒரு சிறிய பாராட்டை எதிர்பார்க்கிறது.
ஒரு செயலை ஆரம்பித்து விட்டால் அது முடிக்கப்படும் என்பதை மூளை நன்கு உணர்கிறது.
ஒரு குறிக்கோளும் இல்லாமல் எதையாவது செய்தால் பாராட்டு எங்கிருந்து வரும்? எதற்காக வரும்? எப்போது வரும்?
ஆகவே குறிக்கோளுடன் கூடிய செயலை ஆரம்பித்து படிப்படியாக முடித்தல் அவசியம். ‘
மூளையில் உள்ள டோபமைன் என்ற ஒரு ரசாயனம் மோடிவேஷனால் உற்பத்தி செய்யப்படும் ஒன்று. நவீன காலத்தில் இந்த டோபமைனைப் பெறுவதற்கான சுலபமான வழியாக அனைவரும் சோஷியல் மீடியாவிலும் கணினி விளையாட்டுகளிலும் இறங்கி விட்டார்கள்.
ஆனால் டோபமைன் மூளையில் எங்கு செல்கிறது என்பதும் ஒரு முக்கியமான விஷயம் என்பதை இந்த அன்பர்கள் மறந்து விட்டார்கள்.
அதிகமான டோபமைன் தவறான மூளைப் பகுதிக்குச் சென்றால் சோம்பேறித்தனம் தான் விளையும்.
வாண்டர்பில்ட் பல்கலைக் கழகத்தில் (VANDERBILT UIVERASITY) நடந்த ஒரு ஆய்வின் படி டோபமைன் மூளையில் உள்ள striatum and ventromedial prefrontal cortex (மூளையின் வரித்திரளி மற்றும் முன் நெற்றிப் பகுதி) பகுதிக்குச் சென்றால் அது ஒருவரை நன்கு ஊக்குவித்து இன்னும் கடுமையாக உழைக்கச் செய்து பாராட்டைப் பெற வைக்கிறது.
ஆனால் இதே டோபமைன் மூளையில் anterior insula பகுதிக்குச் சென்றால் ஒருவரை நல்ல சோம்பேறியாக ஆக்குகிறது!
ஆக ஒன் பெர்செண்ட் ரூல் படி சிறிய குறிக்கோள்களை முன் வைத்து அவற்றை முடித்தால் டோபமைனை மூளையின் நல்ல பகுதிக்கு அனுப்பி உற்சாகமும் உத்வேகமும் பெறலாம்.
பெரிய ஒரு வேலையை எடுத்துக் கொண்டு அதை முடிக்க முடியாமல் திணறுபவர்களே அதிகம். ஆகவே சிறிய சிறிய லட்சியங்களைக் கொண்டு அவற்றை முடித்து உற்சாகம் பெறுவது அவசியம்.
ஆனால் இதையே பலரும் வேறு விதமாகக் கடைப்பிடிக்கிறார்கள்.
அவர்கள் ஐந்து நிமிட விதி அல்லது பத்து நிமிட விதி என்பதைக் கடைப்பிடிக்கிறார்கள்.
அதாவது நிர்ணயித்த வேலையை சரியாக பத்து நிமிடம் செய்து பின்னர் அடுத்த வேலைக்கோ அல்லது ஓய்வெடுக்கவோ சென்று விடுவார்கள். பின்னர் இன்னொரு பத்து நிமிடம். இப்படியாக சோம்பேறித்தனத்தை வென்று உற்சாகத்துடன் குறிக்கோளை படிப்படியாக அடைந்து விடுகிறார்கள்.
முதலில் ஒரு பர்செண்ட் விதியில் ஆரம்பித்தால் அது 99 பர்செண்டை முடித்து விடும் என்பது 1% விதியின் அபூர்வமான செய்தியும் செயலுமாகும்!
**