ஆலயம் அறிவோம்! திருப்புல்லாணி திருத்தலம் (Post No.15,145)

திருப்புல்லாணி  ஆலயம் 

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,145

Date uploaded in London – –  3 November 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

லண்டனிலிருந்து ஒளிபரப்பாகும் ஞானமயம் நிகழ்ச்சியில் 2-11-25 அன்று ஒளிபரப்பான உரை!

ஆலயம் அறிவோம்!

வழங்குவது சந்தானம் நாகராஜன்.

ஞானமயம் நேயர்கள் அனைவருக்கும் நமஸ்காரம். வணக்கம்.

ஞானமயம் நிகழ்ச்சியைச் சிறப்புற அமைத்து நடத்தி வரும் திரு கல்யாண்ஜி அவர்களுக்கும் லண்டன் திரு சுவாமிநாதன அவர்களுக்கும் இதில் சிறப்புரை ஆற்றும் பெருமக்களுக்கும் எனது நமஸ்காரம். வணக்கம்.

எள்கி நெஞ்சே! நினைந்து இங்கிருந்தென்?  தொழுதும் எழு

வள்ளல் மாயன் மணிவண்ணன் எம்மான் மருவும் இடம்

கள் அவியும் மலர்க் காவியும் தூ மடல் கைதையும்

புள்ளும் அள்ளற் பழனங்களும் சூழ்ந்த புல்லாணியே

                                                                                      – திருமங்கையாழ்வார் திருவடி போற்றி

ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம்

பெறுவது 108 வைணவ திவ்ய க்ஷேத்திரங்களுள் ஒன்றான திருப்புல்லாணி திருத்தலமாகும்.

இத்தலம் தமிழ்நாட்டில் இராமநாதபுரத்திற்கு தெற்கே கீழக்கரை செல்லும் பாதையில் எட்டு மைல் தொலைவில் உள்ளது.

மூலவர்: ஶ்ரீ ஆதி ஜகந்நாதன் (கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம்)

தாயார்: கல்யாணவல்லி, பத்மாஸனி

உற்சவர் : கல்யாண ஜெகந்நாதன்

தீர்த்தம்: ஹேம தீர்த்தம், சக்கர தீர்த்தம், ஹம்ஸ தீர்த்தம், வருண தீர்த்தம், தர்ம தீர்த்தம், ஆதி ஸேது, ராம தீர்த்தம் உள்ளிட்ட பத்து தீர்த்தங்கள் இங்கு உள்ளன.

ஸ்தல விருட்சம் : அரசமரம். இதன் நிழலில் நாகபிரதிஷ்டை செய்வோருக்கு மக்கட்பேறு உண்டாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

விமானம் : கல்யாண விமானம் (இங்கு உள்ள விமானங்கள் மொத்தம் ஏழு)

இத்தலத்தைப் பற்றிய புராண வரலாறுகளும் சரித்திர வரலாறுகளும் பல உண்டு.

வியாஸ பகவான் அருளிய ஆக்கினேய புராணத்தில் இந்த தலத்தின் வரலாற்றை அவர் விவரிக்கிறார்.

இராமபிரானின் தந்தை தசரதனால பூஜிக்கப்பட்ட தலம் இது.

சீதையைக் கவர்ந்து சென்ற இராவணனைக் கொல்லும் பொருட்டு இராமபிரான் சேதுக்கரையை அடைந்து கடலைக் கடக்க உபாயம் சொல்லுமாறு கடல் அரசனான வருண பகவானைப் பிரார்த்திக்கிறார்.

இப்படி பிரார்த்தனையை ஏழு நாட்கள் தர்ப்பைப் புல்லான நாணலில் இருந்து இராமர் செய்த தலம் இது. ஆகவே இது தர்ப்பசயனம் என்று சம்ஸ்கிருதத்திலும் புல்லணை என்று தமிழிலும் அழைக்கப்படலாயிற்று. இராமர் தர்ப்பசயன ராமர் எனப் பெயர் பெற்றார்.

இராமரே இத்தலத்துப் பெருமாளை பூஜித்ததால் இங்கு பெருமாள் பெரிய பெருமாள் என்று அழைக்கப்படுகிறார்.

இங்கு ஆதி ஜெகநாதாரை பூஜித்து அவரால் கொடுக்கப்பட்ட வில்லைப் பெற்று இராவணனை ராமர் வதம் செய்தார்.

பூரி க்ஷேத்திரத்தில் அரூபியாகத் திகழும் பெருமாள் இங்கு சங்கு சக்கரங்களுடன் நான்கு கரங்களுடன் காட்சி அளிக்கிறார்.

இன்னொரு வரலாறும் உண்டு.

புல்லவர், கண்ணுவர், காலவர் ஆகிய மூன்று மஹரிஷிகள் இந்த பூமியில் தவமியற்றினர். அவர்களுக்காக பகவான் வைகுண்டத்திலிருந்து இங்கு வந்து அஸ்வத்தமாக அதாவது அரசமரமாக அவதரித்தார். இந்த அரசமரத்தையே பக்தர்கள் அஸ்வந்த நாராயணன் என்று தியானித்தனர்.

வடமொழியில் புல்லாரண்யம் என்று அழைக்கப்படுகிறது இத்தலம். இச்சொல்லுக்கு மலர்கள் மலர்ந்த காடு என்றும் முனிவர்கள் தவம் செய்த காடு என்றும் இரு பொருள் உண்டு.

இராமன் இலங்கையிலிருந்து திரும்பி வரும் போது இங்கு வந்து பக்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க பட்டாபிஷேகம் செய்து கொண்டதால் அவருக்கு பட்டாபிராமன் என்ற திருப்பெயர் ஏற்பட்டது.

இங்கு ஆஞ்சனேயர் தென் திசை நோக்கிக் கூப்பிய கரங்களுடன் இராம தியானத்தில் ஆழ்ந்துள்ள காட்சி குறிப்பிடத்தகுந்த ஒன்று.

இத்தலத்தில் திருமங்கை ஆழ்வார் இருபத்தோரு பாசுரங்கள் பாடி மங்களாசாஸனம் செய்திருக்கிறார்.

திருஞானசம்பந்தர் “அணையில் சூழ்கடல் அன்றடைத்து வழி செய்தவன்” என்று திருப்புல்லாணி பற்றி குறிப்பிடுகிறார்.

திருநாவுக்கரசர், “கடலிடை மலைகள் தம்மால் அடைந்த மால்களும் முற்றி: என்று திருப்புல்லாணித் தலத்தைச் சிறப்பிக்கிறார்.

இத்தலத்தைப் பற்றிய பல விவரங்களை புல்லை அந்தாதி, திருப்புல்லாணி மாலை, தெய்வச்சிலையான் ஸ்துதி, வாசனமாலை, புல்லாணிப் பெருமாள் நலுங்கு உள்ளிட்ட பல நூல்கள் விளக்குகின்றன.


திருப்புல்லாணி, பாண்டிய நாட்டில் கீழ்ச்செம்பி நாடு என வழங்கப்படும் பகுதியைச் சேர்ந்ததாகக் கல்வெட்டுக்களில் குறிப்பிடப்படுகிறது.

இராமநாதபுரம் சேதுபதி சமஸ்தானத்தின் சேதுபதிகள் இத்தலத்திற்கு பல்வேறு தொண்டுகளை ஆற்றினர்; ஆற்றி வருகின்றனர்.

கி.பி.1646 முதல் கி.பி.1676 வரை போகலூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட திருமலை ரெகுநாத சேதுபதி, திருப்புல்லாணி கோயிலில் காங்கேயம் மண்டபம், நுழைவுவாயில் கோபுரம், கண்ணாடி மண்டபம், தாயார் சந்நிதி, பெருமாள் சந்நிதி, ஆண்டாள் சந்நிதி, திருச்சுற்று மதில்கள், இராஜகோபுரம், சக்கரத்தீர்த்தம், மடைப்பள்ளி ஆகிய கட்டுமானங்களைச் செய்தார் என துளசிங்கமாலை என்ற நூல் கூறுகிறது.

திருப்புல்லாணி தரிசனத்தைச் செய்தவர்கள் இங்கிருந்து நான்கு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஆதி சேது என்று அழைக்கப்படும் சேது தரிசனத்தையும் உடனே மேற்கொள்வது வழக்கம். 

ரத்னாகரம் எனப்படும் சேதுவைக் கண்ணால் பார்ப்பவர்க்கு பாவங்கள் இல்லை என்று இராமரே தெரிவித்துள்ளார்.

“திரு அணை காண அருவினை இல்லை” என்பது வழக்கு மொழியாகும்.

காலம் காலமாக ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் ஶ்ரீ ஆதி ஜகந்நாதரும் கல்யாணவல்லியும் அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம். 

**

Leave a comment

Leave a comment