உள்ளங்கை சொல்லும் உங்கள் வாழ்க்கைப் பயணம்! (Post.15,367)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,367

Date uploaded in London – 27 January 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

29-11-25 கல்கிஆன்லைன் இதழில் பிரசுரமான கட்டுரை! 

உள்ளங்கை சொல்லும் உங்கள் வாழ்க்கைப் பயணம்! 

ச. நாகராஜன்

பாரத சாஸ்திரங்களுள் மிக முக்கியமான ஒன்று சாரீரக சாஸ்திரம். 

அது என்ன சாரீரக சாஸ்திரம் என்று கேட்பவர்களுக்கு நமது புராணம் விடை கூறுகிறது.

ஒரு முறை மஹாவிஷ்ணு தனது யோக நித்திரையில் இருந்தார். அவரது தேவியான மஹாலக்ஷ்மியும் அருகில் இருந்தாள்.

அப்போது கடலுக்கு அரசனான சமுத்ரராஜன்  அவர்களிடம் இருந்த ரேகைகளைப் பார்த்து வியந்தான். மனித குலத்தின் நன்மைக்காக அதை அப்படியே மனிதர்களுக்குத் தந்தான். இதுவே சாரீரக சாஸ்திரம்!

இந்த விஞ்ஞானம் பின்னால் நாரதர், லக்ஷகர்,, வராஹர், மாண்டவ்யர், கார்த்திகேயன் உள்ளிட்டோரால் விவரிக்கப்பட்டது.

இதைப் படித்துப் புரிந்து கொள்வது என்பது எல்லோராலும் முடியவில்லை.

ஆகவே இதை போஜராஜன், சுமந்தர் ஆகியோர் எளிமைப் படுத்தித் தந்தனர்.

சமுத்ரா என்பவர் இதை இன்னும் சுருக்கித் தெளிவாகத் தந்தார்.

சாமுத்ரிக சாஸ்திரம் என்று கூறப்படும் இதை அறிந்த நிபுணர்களை மஹாராஜாக்கள் தங்கள் அரசவையில் முக்கியமான இடத்தைத் தந்து ஆதரித்தனர்.

ஒவ்வொருவரையும் பார்த்தவுடன் அவர் எப்படிப்பட்டவர் என்பதை அவரது சரீர அங்கங்களை வைத்துக் கூறுபவர்கள் இவர்கள்.

இந்தக் கலையில் கார்த்திகேயன் சித்தாந்தம் என்பது பிரபலமானது.

இதைக் கற்று நிபுணராகி மனிதர்களுக்குச் சொல்வது என்பது எல்லோராலும் முடியாது.

இதைக் கற்க வருபவர் யோக சாஸ்திரத்தில் நிபுணராக இருக்க வேண்டும்.

மூச்சுக் கலையை முதலில் அவர் அறிந்திருக்க வேண்டும். அவர் மனித அங்கங்களை நன்கு புரிந்து கொள்பவராகவும், சகுன சாஸ்திரத்தில் வல்லவராகவும், இதிஹாஸம், புராணம் ஆகியவற்றில் வல்லவராகவும் இருத்தல் வேண்டும்.

திருப்தியான மனம் கொண்டவராகவும், சிவபிரானை வழிபடுபவராகவும் நல்ல ஜோதிடக் கலை வல்லுநராகவும் இருத்தல் வேண்டும்.

குருவிடம் முறையாக இந்தக் கலையைக் கற்று அவரது ஆசிகளை நன்கு பெற்ற பின்னரே அனைவருக்கும் இதை எடுத்துச் சொல்ல வேண்டும்.

புழு பூச்சிகள், பூனை, நாய், கழுதை, நாத்திகன் ஆகியோரைப் பார்த்தல் அபசகுனம் என்று சொல்லப்பட்டது.

கேட்பவருக்கும் சொல்பவருக்கும் இடையே குறுக்கே யாராவது சென்றால் அதுவும் சரியானதில்லை என்று கூறப்பட்டது.

குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம், செல்வம் சேர்ப்பதற்காகப் புறப்பட இருக்கும் பயணங்கள் உள்ளிட்டவை பற்றி அந்தக் காலத்தில் இப்படிப்பட்ட நிபுணர்களைக் கலந்தாலோசிப்பது மக்களின் வழக்கமாக இருந்தது.

ஒரு விஷ்யத்தைப் பற்றிக் கேட்பவர் எப்போது வந்து கேட்கிறார், அவர் எந்த திசையைப் பார்த்து அமர்கிறார் என்பதெல்லாம் கூட முக்கியமானதாகும்.

நூற்றுக் கணக்கான குறிப்புகளைத் தரும் ரேகைகள் உள்ளங்கையில் உள்ளன. ஆயுள் ரேகை, இதய ரேகை உள்ளிட்ட பல ரேகைகளுடன் சந்திர மேடு, புத மேடு, சுக்கிர மேடு, சனி மேடு சூரிய மேடு உள்ளிட்ட உள்ளங்கை மேடுகளும் ஒருவரை அக்கு வேறு ஆணி வேறாக அலசிக் காட்டி விடும்.

எடுத்துக் காட்டிற்காக ஒரு சில ரேகைகளை இங்கு பார்ப்போம்;

ரோஹிணி ரேகை: உள்ளங்கை ஆரம்பத்தை முன் கை சந்திக்கும் இடம் சந்தி எனப்படும். இந்த சந்தியைச் சுற்றி இருப்பது மணிபந்த ரேகை ஆகும். இதிலிருந்து ஆரம்பித்து சுட்டுவிரல் வரை செல்லும் ரேகை ரோஹிணி ரேகை ஆகும். இது சிவப்பு வண்ணத்தில் ஜொலிக்கும். ஒரு வித தடங்கலுமில்லாமல் இந்த ரேகை இருப்பின் தீர்க்க ஆயுளைக் குறிக்கும்.

ரதிப்ரதா: சுண்டுவிரலுக்குக் கீழே செங்குத்தாக உள்ள ரேகை ரதிப்ரதா என அழைக்கப்படுகிறது. இரவும் பகலும் இது தங்கம் போல மின்னினால் அதைக் கொண்டிருக்கும் பெண் வாழ்நாள் முழுவதும் சந்தோஷமாக இருப்பாள். பெயரில் இருக்கும் ரதியைப் போல மணவாழ்க்கையில் எல்லையற்ற இன்பத்தை அனுபவிப்பாள்.

மஹாமதி: சுண்டுவிரலுக்கும் மோதிர விரலுக்கும் அடியில் இருக்கும் தெளிவான ரேகை மஹாமதி எனப்படும். இதைக் கொண்டிருக்கும் பெண்மணி கூரிய அறிவைக் கொண்டிருப்பாள்.

இப்படி ஏராளமான குறிப்புகளைத் தருவது சாரீரக சாஸ்திரம்.

சம்ஸ்கிருத மூலத்துடன் இது ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

உள்ளங்கை காட்டும் உலகத்தை அறிய விரும்புவோர் நாட வேண்டிய நூல் இதுவே

**

Leave a comment

Leave a comment