பாரதி போற்றி ஆயிரம் – 28 (Post No.4625)

Date: 17 JANUARY 2018

Time uploaded in London- 6-17 am

Compiled  by S NAGARAJAN

Post No. 4625

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

  பாடல்கள் 160 முதல் 164

கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்

தொகுப்பு : ச.நாகராஜன்

கண்ணதாசன் பாடல்கள்

 பாரதியைக் கண்டேன்

வானவெளி வீதியிலே

     பாரதியைக் கண்டேன்

வைத்தவிழி வாங்காமல்

     வார்த்தபடி நின்றேன்

மோனவெளி வீதியிலே

     மூச்சடங்கி நின்றான்,

மூன்றுதமிழ் ஆய்ந்தகவி!

     முன்நடந்து சென்றேன்

கூனலிளம் வெண்ணிலவின்

     குளிர்முகத்து நடுவே

குத்துகிற மீசையையும்

     கூர்விழியும் கண்டேன்,

தேனமுதப் பாவலனின்

     சிந்தையிடை ஏதோ

தீராத துன்பநிலை

     சிந்துவதைக் கண்டேன்

(வேறு)

நான்:-

ஏடா பாரதி! என்னடா சுகமா?

    என்ன சிந்தனை? எதிலே நாட்டம்?

பாரதி:-

வாடா தம்பி! வாழ்க நீ பாண்டியா!

   வாட்ட முகத்தின் நாட்டம் கேட்டியோ?

பாடா இயற்கை பாடுதல் கேட்டுப்

   பாடிப் பாடிநான் படைத்தவை பற்பல!

வாடா மலர்களை வழங்கினேன்; எனினும்

   வாடி வாடிநான் மறைந்ததை அறிவாய்!

இன்று மண்டபம் எழிலுறக் கட்டுவர்

   இருபதாயிரம் பேர்கள் திரட்டுவர்

கொன்று போட்டுஎன் பிணத்தினி லேறுவர்

   கொட்டு முரசெனப் பாடல்கள் பாடுவர்

அன்று சோற்றுக் காதார வானவர்

    ஆரு மில்லை! அடாஇவர் உன்னையும்

தின்று தீர்த்தபின், தேமது ரத்தமிழ்

    செய்த வன்எனத் திருவிழாக் கூட்டுவார்!

இந்த மூடரின் ஏற்ற முரைத்தயான்

    ஏர்பி டித்தொரு நிலத்தை உழுதனோ?

மந்த புத்தியில் மன்னவர் நந்தமிழ்

    மாந்தர்! தம்பி! நீ இவர்களை நம்பியே

சொந்த வாழ்வினைத் துறந்தொரு காரியம்

    துளியும் செய்ய வேண்டுவ தில்லைகாண்!

எந்த நாளிலும் தமிழன் என்பவன்

    இளித்த வாயனாய் இருப்பதே புண்ணியம்!

              (நீண்ட கவிதை தொடரும்)

கவிஞர் கண்ணதாசன்: கவியரசு கண்ணதாசன் 5000க்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களையும், 5000க்கும் மேற்பட்ட இதர பாடல்களையும் புனைந்தவர். தமிழ்நாட்டில் சிறுகூடல்பட்டியில் பிறந்தார். தோற்றம்: 24-6-1927 மறைவு: 17-10-1981. இதழ் ஆசிரியர். பல காவியங்களைப் புனைந்தவர். நாவல் ஆசிரியர். பல சிறந்த நூல்களை எழுதியவர். பல விருதுகளை வென்றவர்.சிறந்த பேச்சாளர்.

குறிப்பு : இந்தப் பகுதிக்கு பாரதி பற்றி எழுதப்பட்ட பாடல்களை ஸ்கேன் செய்தோ, போட்டோ எடுத்தோ அனுப்பி உதவலாம். கவிஞரின் பெயர், அவரைப் பற்றிய 50 வார்த்தைகளுக்கு மிகாமல் உள்ள குறிப்பு, பாடல் வெளியிடப்பட்ட இதழ் அல்லது நூல் பற்றிய குறிப்பு ஆகியவற்றையும் அனுப்ப வேண்டுகிறோம். 

***

பாரதி போற்றி ஆயிரம் – 27 (Post No.4621)

Date: 16 JANUARY 2018

Time uploaded in London- 5-45 am

Compiled  by S NAGARAJAN

Post No. 4621

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

  பாடல்கள் 157 முதல் 159

கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்

தொகுப்பு : ச.நாகராஜன்

பாரதிதாசன் பாடல்கள்

 சமத்துவ உள்ளம்

யானும் கோசும் பேசியிருந்தோம்

என்றார் பாரதியார் என்னிடத்தில்

வெளியிற் சென்று வீடு வந்தவர்

மேலுடை கழற்றவும் இல்லை, மேலும்

ஐயர் கண்களில் அழகு குறைந்ததால்

அங்கு நடந்ததைக் கேட்டேன் ஐயரை,

எல்லாரும் சமமா இல்லையா என்றார்

என்ன நடந்த தென்றேன். ஐயர்

ஒன்றுமில்லை உட்கார் என்றார்

உட்கார்ந்திட்டோம் ஐயரும் நானும்

யானும் கோசும் பேசியிருக்கையில்

எவனோ கோசின் காலில் விழுந்தான்,

“நீரும் இவ்விதம் ஊரார் வணங்கச்

சீரும் சிறப்பும் தேடலாமே

என்று சொன்னார் கோசு என்னிடத்தில்

மரியாதை எனல் உண்டு

பெரியார் சிறியார் இல்லை என்றாரே!

***

குறிப்பு : இங்கு கவிஞர் பாரதிதாசன் கோசு என்று குறிப்பிடுவது அரவிந்த கோஷ் என்ற பெயருடைய மஹரிஷி அரவிந்தரை!

கவிஞரைப் பற்றிய குறிப்பு ஏற்கனவே வெளியாகியுள்ளது.

குறிப்பு : இந்தப் பகுதிக்கு பாரதி பற்றி எழுதப்பட்ட பாடல்களை ஸ்கேன் செய்தோ, போட்டோ எடுத்தோ அனுப்பி உதவலாம். கவிஞரின் பெயர், அவரைப் பற்றிய 50 வார்த்தைகளுக்கு மிகாமல் உள்ள குறிப்பு, பாடல் வெளியிடப்பட்ட இதழ் அல்லது நூல் பற்றிய குறிப்பு ஆகியவற்றையும் அனுப்ப வேண்டுகிறோம். 

***

பாரதி போற்றி ஆயிரம் – 26

Date: 15 JANUARY 2018

Time uploaded in London- 6-23 am

Compiled  by S NAGARAJAN

Post No. 4617

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

பாரதி போற்றி ஆயிரம் – 26

  பாடல்கள் 153 முதல் 156

கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்

தொகுப்பு : ச.நாகராஜன்

பாரதிதாசன் பாடல்கள்

பாரதியார் முன் இரு பிரசங்கங்கள்

சமரச சன்மார்க்கக் கட்டிடத்தில்

தகு திரு வி கலியாணசுந்தரர் தாம்,

அமைவுடைய இளங்கோவின் கவி நயத்தி

அமுதம் போல் எடுத்துரைத்தார் பிரசங்கத்தில்!

தமை மீறிப் பொங்கி யெழும் சந்தோசத்தால்

தட தட எனக் கரகோசம் செய்தார் ஐயர்!

நமது தமிழ் இனிமைதனைக் கண்டு கொள்க

நானிலமே என்றன தல்விழியும் மார்பும்!

அடுத்தபடி வேறொருவர் பிரசங்கித்தார்

அவர் கோணிக் குரங்கு போல் ஆடி ஆடி

எடுத்தெடுத்துப் பாடினார் தாயுமானார்

எழிற்பாட்டை அழுகுரலில்! அவர் சனத்தைப்

படுத்தாத பாடில்லை! கோபத்தாலே

பாரதியார் “யாரடா இவன் என்றார், நான்

தடுத்து விட்டேன் எழுந்திரு என்றார் ததாஸ்து சொன்னேன்

சபைத் தலைவர், பிரசங்கி சபையில் மீந்தார்!

பாரதியாரும் நாடகமும்

நற்சரிதை நற்கவிதை நல்நடிப்பு

நாடகத்தில் பாரதியார், அமைக்க எண்ணி

முற்காலம் காளிதாசன் புகன்ற

“சாகுந்தலம் நடத்த முடிவு செய்தார்

உற்ற நண்பர் சீனிவா சாச்சாரிக்குச்

சகுந்தலையின் வேடந்தான் உரியதென்றார்

பற்றறு விசுவா மித்திரர் வா வே சுக்காம்

பகரறிய துஷ்யந்தன் நான் தான் என்றார்

தொண்டு செயப் பல நண்பர் காத்திருந்தோம்

துடை நடுங்கும் தமிழ்நாடு, தேச பக்தர்

அண்டுமந்தக் காரியத்தில் அண்டவில்லை

அருங்கவியின் நாடகத்தை இழந்தார் மக்கள்

வண்டி வண்டியாய்க் குப்பை கூளமெல்லாம்

வாரிப் போய் பாரதியார் போட்டிருப்பார்

கொண்டு வந்து சேர்த்திருப்பார் நாடகத்தில்

குளிர் நிலவை; ஒளி நிலவை; அற்புதத்தை!

கவிஞரைப் பற்றிய குறிப்பு ஏற்கனவே வெளியாகியுள்ளது.

குறிப்பு : இந்தப் பகுதிக்கு பாரதி பற்றி எழுதப்பட்ட பாடல்களை ஸ்கேன் செய்தோ, போட்டோ எடுத்தோ அனுப்பி உதவலாம். கவிஞரின் பெயர், அவரைப் பற்றிய 50 வார்த்தைகளுக்கு மிகாமல் உள்ள குறிப்பு, பாடல் வெளியிடப்பட்ட இதழ் அல்லது நூல் பற்றிய குறிப்பு ஆகியவற்றையும் அனுப்ப வேண்டுகிறோம். 

***

‘பாரதியார் – வரலாறும் கவிதையும்’ -பாரதி நூல்கள் – Part 46 (Post 4604)

((எச்சரிக்கை: உங்கள் குலம் வாழ வேண்டுமானால்தமிழ் வாழ வேண்டுமானால்இந்து மதம் வாழ வேண்டுமானால்எனது பிளாக் (blog)கில் உள்ள கட்டுரைகளப் பகிர்வோர்ப் எழுதியவர் பெயரையும் பிளாக்கின் பெயரையும் நீக்காமல் வெளியிடுக. அல்லது சொல்ல நாக் கூசுகிறது…………………………. கடவுளே! என் நாவினால் ……………… சாபம் இட வேண்டாம்நீயே கவனித்துக்கொள்!))

Date: 11 JANUARY 2018

Time uploaded in London- 6-32 am

Written  by S NAGARAJAN

Post No. 4604

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

பாரதி இயல்

மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 46

ப.மீ.சுந்தரம் எழுதியுள்ள ‘பாரதியார் – வரலாறும் கவிதையும்

ச.நாகராஜன்

1

1952ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 14ஆம் நாள் சிகந்திராபாத்தில் தென்னிந்திய கழகத்தின் சார்பில் பாரதித் திருவிழா, முதல் மந்திரியின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. அவ்விழாவில் உஸ்மானியா சர்வகலாசாலையின் தமிழ்த்துறை தலைவராகப் பணியாற்றிய பேராசிரியர் .மீ.சுந்தரம் கலந்து கொண்டார்.

அவரைச் சந்தித்த பல பாரதி அன்பர்கள் அவரிடம் பாரதியின் பாடல்களைப் பற்றிய ஆய்வு நூல் ஒன்றை எழுதுமாறு வேண்டினர். அதன் விளைவாக எழுந்தது இந்த நூல். முதற்பதிப்பு 1954ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. 133 பக்கங்கள் கொண்ட இந்த நூலில் பாரதியாரின் வரலாறு சுருக்கமாகச் சொல்லப்படுகிறது.

அவரது கவிதைகள் பற்றிய ஆய்வு திறம்படச்  செய்யப்பட்டுள்ளது.

நூலின் சில பகுதிகளைப் பார்த்தால் அதன் சிறப்பு விளங்கும்.

சில நல்ல பகுதிகளை இங்கு காணலாம்.

2

பாரதியார் நிவேதிதா தேவியைச் சந்தித்த சம்பவத்தை நூலாசிரியர் தருவதில் ஒரு பகுதி:-

1906ஆம் ஆண்டில் காசிமாநகரில் நடந்த அகில இந்திய காங்கிரஸ் சபைக்குச் சென்றிருந்த பாரதியார் புத்துணர்ச்சி பெற்று மீண்டார் என்றே கூறல் வேண்டும்….

கூட்டங் கலைந்து திரும்புங்கால் கல்கத்தாவிற்குச் சென்று அம்மாநகரின் காட்சிகளைக் கண்ட பாரதியார் டம்டம் என்ற ஊரில் வசித்து வந்த ஸ்ரீமத் விவேகானந்தரின் சிஷ்யையான ஸ்ரீமதி நிவேதா தேவியைக் காணச் சென்றார்தன் மனைவியை வெளியூர்களுக்கு அழைத்து வராத குற்றத்திற்குத் தன் குலவொழுக்கமே காரணம் எனக் கூற, ஸ்ரீமதி நிவேதா தேவி கோபங் கொண்டு பெண்மை பெருமையுடையதென்றும், பெண்களே நாட்டிற்கும் சமூகத்திற்கும் மணி விளக்காகத் திகழக் கூடியவர்களென்றும், பரஞான முத்தி இயல்புகளுக்கும் அப்பெண்களே துணையாவார்கள் என்றும் சொல்லி நிகழ்த்திய சொற்பொழிவானது பாரதியார் உள்ளத்தில் பசுமரத்தாணி போல் பதிந்தது.

3

பாரதியார் முத்தையா பாகவதர் சந்தித்த ஒரு அரிய சம்பவத்தைப் பற்றி நூலாசிரியர் விளக்குவது:

ஓர் தினம் காயக சிகாமணி முத்தையா பாகவதர் ஸ்ரீ ராம நவமியின் காரணமாக அரி கதை செய்தார். அன்னார் கதையைத் தமிழகத்திலே அனுபவியாதவர் இல்லை என்றே சொல்லலாம். கதை முடிந்த பிறகு பாரதியாரும் அவரைச் சந்தித்துப் பேசினார். தான் பாடியஜெயபேரிகை கொட்டடா! கொட்டடா! என்ற பாடலைத் தான் பாகவதரிடம் பாடிக் காட்டினாராம். முத்தையா பாகவதர் பாரதியாரின் அருமை பெருமைகளை அறிந்தவராதலின் அப்பாடலை நன்கு சுவைத்ததோடு பாரதியாரையும் பலபடப் புகழ்ந்தார். செத்தாரைப் போல திரிகின்ற ஜீவன் முக்தர் நிலை, உலக மக்களில் பலருக்குத் தெரியாதாகையால் பாரதியாரைப் பைத்தியக்காரன் என்று நினைத்து அங்கு வந்தவர்கள் யாவரும் அன்றைய தினம் பாரதியார் யார் என்பதை உணர்ந்து வெட்கித்தனர்.

4

பாரதியாரின் கவிதா நயத்தை நூலாசிரியர் பல்வேறு தலைப்புகளில் ஆராய்ந்து விளக்குகிறார்.

பாரதியார் கடவுட் பண்பு, பாரதியார் பெண்மை, பாரதியார் தேசீயம், பாரதியார் உயிர்நேயம், பாரதியார் பெரியார் வழிபாடு, பாரதியார் நூன்மரபு, பாரதியார் பிரபந்தங்கள், பாரதியார் வாழ்த்தும் சீட்டும், பாரதியார் கவிதாசக்தி உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் பாரதியாரின் கவிதை அருமையை நூலாசிரியர் சிறப்பாக விளக்குகிறார்.

நூலாசிரியரின் திறனாய்வு தரும் முடிவுகள் இவை:-

  • நன்னூலாசிரியர் “பல்வகைத் தாதுவின் என்பதற்கிணங்க, பாரதியாரின் பல பாடல்கள் யாப்பிலக்கண முறைக்குள் அடக்க முடியாத நிலையிலிருப்பினும் அறவே தள்ளுமாறு இல்லை. புறனடைச் சூத்திரத்தில் உதவியால் அவைகளைக் கொள்ளுதலே மேன்மையுடத்து. கால தேச மாறுதல்களால் இலக்கண அமைப்புகள் மாறுதலடைதலே மொழி முன்னேற்றத்திற்கும் செய்யுளிலக்கிய முன்னேற்றத்திற்கும் துணை புரியுமாறு காண்க.
  • இரண்டாவதாக, பாரதியார் பாடல்களில் முதன்மையாகக் காணப்பெறும் அழகுசுருங்கச் சொல்லல் விளங்க வைத்தல் என்பது.
  • மூன்றாவதாக, பாடல்களைப் படிக்கின்ற காலத்துப் படிப்போர் உள்ளக் கிளர்ச்சியுடனும், முகமலர்ச்சியுடனும் தோன்றுவரல்லாது கூம்பும் தன்மை பெறுமாறில்லை.
  • நான்காவதாக, பாரதியார் செய்யுள் நடை தனித்தன்மை வாய்ந்தது.
  • ஐந்தாவதாக கம்பன் கூறியஅவ்வியத் துறைகள் தாங்கி என்பதைப் பார்க்குமிடத்து, பாரதியார் பாடல்களாகியதிருத்தசாங்கம், ‘விநாயகர் நான்மணி மாலை, ‘திருப்பள்ளியெழுச்சி, ‘பெண்கள் விடுதலைக் கும்மி, ‘நவராத்திரிப் பாட்டு முதலானவைகளில் பாக்களும், பாவினங்களும் நன்கு கையாளப்பட்டுள்ளன.
  • ஆறாவதாக, “ஐந்திணை நெறியளாவி என்று கூறுமிடத்து திணையை ஒழுக்கமாக கொள்ளின், அகப்பொருளும் ஒழுக்கத்திற்கே திணை பொருந்துவதன்னியில் புறவொழுக்கங்களுக்கும் பொருந்துவதாகும். .. பாரதியார் பாடல்களை அகவொழுக்கம் ஐந்திற்கும், புறவொழுக்கம் ஐந்திற்கும் நல்ல முறையில் அமைத்துக் கொள்ளலாம்.
  • ஏழாவதாக, “செவியுறத் தெளிந்து என்னுமிடத்து தெளிவே பாரதியின் பாடல்களில் தெளிந்து நிற்பது என்பதாம்.
  • எட்டாவதாக, எடுத்துச் சொல்லப்படுவதுதண்ணென்றொழுக்கம் தழுவி என்பது. தண்ணிய ஒழுக்கமும், செப்பமாகச் செல்லும் நடையொழுக்கமும், மரபு ஒழுக்கமும், சொல்லொழுக்கமும், கருத்தொழுக்கமும் மூதுரைகளை எடுத்தாளும் எளிய ஒழுக்கமும், உணர்வும் போற்றத் தக்கன.
  • ஒன்பதாவதாகக் கூறப்படுவதுசான்றோர் கவி கிடந்தவாறு கிடத்தல்: என்பதினால் பாரதியாரின் கவிதைகள் கிடந்த முறையிலேயே உள்ளன.

5

பாரதியாரின் கவிதா சக்தியைப் பற்றி நூலின் இறுதியில் ப.மீ.சுந்தரம் விளக்கும் பான்மை அற்புதமாக அமைந்துள்ளது.

நூலின் கடைசி இரு பாராக்களில் பாரதியாரின் கவிதா சக்தியை அவர் இப்படிக் கூறுகிறார்:-

வரகவி பாரதியாரின் கவிதாசக்தியைத் தொகுத்துக் கூற வேண்டுமாயின் பின்வருமாறு கூறலாம்: ‘ஆன்ம இயல்புகள், என்பதைப் ‘பாரத சமுதாயம், ‘சுதந்திரப் பெருமை, ‘தாயின் மணிக்கொடி பாரீர் என்ற பாடல்களிலும், எழுவகைத் தாதுக்களால் “உயிர்க்குடல் போல் என்பதைப் பாடல்கள் எல்லாவற்றிலும், “ஆன்ற பொருள் தந்து என்பதை வேதாந்தப் பாடல்களிலும், “புலத்திற்றாகி என்பதைப் ‘பாஞ்சாலி சபதத்திலும், “துறைகள் தாங்கி என்பதைக் ‘கண்ணன், ‘கண்ணம்மா, பாடல்களிலும், “தெளிந்த என்பதைச் சிறப்பாகப் ‘பாரதி – அறுபத்தாறு, ‘தமிழ் மொழி, ‘பாரத நாடு என்ற பாடல்களிலும், “ஒழுக்கம் என்பதைப் ‘பரசிவ வெள்ளம் என்ற பாடலிலும் காணப்பெருவது தமிழ் அன்னையின் தவப் புதல்வனாம் பாரதநாட்டுக் கவிஞன் பாரதியாரின் கவிதாசக்தியைத் தெற்றென விளக்குமன்றோ!

ஆகவே, நம் பாரதியார், உயரிய ஒழுக்கத்தினாலும், அரிய சேவையினாலும், ஆன்ம ஜெயத்தினாலும், தவமிக்கத் தண்ணளியினாலும், கவிதைப் பெருக்கின் கண்ணியத்தினாலும், இறவாப் புகழ் பெற்றதுமன்றி, இந்திய நாட்டுக் கவிஞர்கள் கொலுவீற்றிருக்கும் மணிமண்டபத்தில் தானும் வீற்றிருந்து நம்மனோர்க்கு இனிய காட்சியளிக்கும் பெற்றியைப் பெற்றார் என்று கூறுவதே இந்நூலின் முடிவுரையாகும்.

அருமையான இந்த நூலை பாரதி அன்பர்கள் படித்து இன்புற வேண்டும்; பாரதியாரின் கவிதா சக்தியை அறிந்து கொள்ள இந்த நூல் உற்ற துணை!

***

பாரதி போற்றி ஆயிரம் – 25 (Post No.4600)

Date: 10 JANUARY 2018

Time uploaded in London- 6-34 am

Compiled  by S NAGARAJAN

Post No. 4600

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

பாரதி போற்றி ஆயிரம் – 25

  பாடல்கள் 147 முதல் 152

கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்

தொகுப்பு : ச.நாகராஜன்

பாரதிதாசன் பாடல்கள்

பாரதியார் பட்டினி உபதேசம்

கேளென்று சொன்னாலும் கேளாத நெஞ்சத்தை

வாளொன்று கொண்டு வருத்தாமல் நீ தம்பி

தந்திரத்தாலே சரிப்படுத்தலாம் கண்டாய்!

வந்த வறுமையிலே செம்மை வரச் செயலாம்.

அந்த விவரம் அறைகின்றேன் நீ கேட்பாய்

முந்தா நாள்நீ உண்ட மொச்சை விதைக் குழம்பு

நேற்றுப் புசிப்பதற்கு நெஞ்சு கசந்திருக்கும்

மாற்றிப் புசிக்க வழிதேடித் தானிருப்பாய்

இன்று முருங்கைக்காய் இட்டுப் பருப்பிட்டு

நன்று குழம்பிட்டு நாலு பிடி சோறுண்டால்

நாளைக்கு கத்தரிக்காய், நாளன்று பீர்க்கங்காய்

வேளைக்கு மாங்காய், விடிந்தால் புடலங்காய்

நித்தம் விதவிதமாக நீ உண்பாய்; ஆனாலும்

அத்தனையும் தெவிட்டும்; ஆசைவிடும் மேற்கொண்டே

அண்டை அயலகத்தில் ஆமைவடை மோர்க்குழம்பு

கண்டால் அதுபோற் கறியுண்ண ஆசைவரும்

ஆமைவடை மோர்க்குழம்புக்கு அப்பாலோ நாகரிகச்

சீமை அவரைக்காய் சேமியாப் பாயாசம்

வீட்டில் பதார்த்த விழா நடத்த ஆசையுண்டு

மூட்டைப் பணம் வேணும் முள்ளங்கிப் பத்தையைப் போல்

இட்டகூழ் இன்றைக்கு நன்றா யிராவிட்டால்

பட்டினியாய்ப் போட்டு விடு; நாளைக்குப் பார்ப்பாய் நீ

இட்டதொரு கூழில் இனிமை கிளம்புவதை,

பட்டினியால் இலாபம் பல.

அலங்காரக்குறும்பு

ஊராரே கேளுங்கள் இந்த ஒரு சேதி

பாரதியார் என் மகனைப் பார்த்துப் பரிகசித்தார்

ஏன் பாரதியாரே, என் மகன் உம் காரியத்தில்

தான் வந்து வீணில் தலையிட்டுக் கொண்டதுண்டா?

இல்லையென்று சொல்கின்றீர் அவ்வாறிருக்கையிலே

தொல்லை தரும் வார்த்தை என் மாமனைச் சொன்னதேன்?

ஏழ்மைக் கிழத்தன்மை நோய்கள் இவற்றையெல்லாம்

ஆழக் குழித்தோண்டி அப்படியே புதைத்துத்

தேசத்தை மேல் நிலையிற் சேர்ப்பதெனும் உங்கள்

ஆசையோ பேராசை! அப்படித்தான் ஆகட்டும்

அச்செயலை நான் ஒன்றும் ஆட்சேபம் பண்ணவில்லை?

கச்சை கட்டி ஆடுங்கள்! கை தட்டிக் கூவுங்கள்!

எங்கள் செயலுண்டு யாமுண்டு, மற்ற விதம்

உங்களிடம் யாரையா ஓடிவந்தார்? சொல்லும்!

‘இளம் பையன் வீதியிலே சொன்னான் எனில், நீர்

முதுமையில்  மணி முதுமையில் மணி என்றே

எதிர் வந்து சொன்னீரே! எல்லாரும் கேட்டுக்

குலுங்க நகைத்தாரே ஐயா குறும்பில்

அலங்காரம் சேர்த்தீரோ அங்கு?

குறிப்பு : பையனின் தந்தை, பாரதியாரிடம் பேசியதாகக் கூறியது கற்பனை.

கவிஞரைப் பற்றிய குறிப்பு ஏற்கனவே வெளியாகியுள்ளது.

குறிப்பு : இந்தப் பகுதிக்கு பாரதி பற்றி எழுதப்பட்ட பாடல்களை ஸ்கேன் செய்தோ, போட்டோ எடுத்தோ அனுப்பி உதவலாம். கவிஞரின் பெயர், அவரைப் பற்றிய 50 வார்த்தைகளுக்கு மிகாமல் உள்ள குறிப்பு, பாடல் வெளியிடப்பட்ட இதழ் அல்லது நூல் பற்றிய குறிப்பு ஆகியவற்றையும் அனுப்ப வேண்டுகிறோம். 

***

பாரதி போற்றி ஆயிரம் – 24 (Post No.4596)

Date: 9 JANUARY 2018

Time uploaded in London- 6-39 am

Written  by S NAGARAJAN

Post No. 4596

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

பாரதி போற்றி ஆயிரம் – 24

  பாடல்கள் 142 முதல் 146

கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்

தொகுப்பு : ச.நாகராஜன்

பாரதிதாசன் பாடல்கள்

 பாரதியார் நாமம் வாழ்க (தொடர்ச்சி)

நிதி பெருக்கும் மனிதர்களும், நெடுந்தேச

    பக்தர்களும், தலைவர் தாமும்

கதி பெருக்க ஏடெழுதும் ஆசிரியர்

    என்பவரும் கவிதை யென்றால்

மிதி என்பார்! தமிழ்க் கவியைப் புதுவகையில்

    மேலெழுப்பிக் கவிகள் நம்மைத்

துதி புரியும் வகை தந்த சுப்ரமணிய

    பாரதியார் நாமம் வாழ்க!

பேசுகின்ற தமிழினிலே சுவைக் கவிதை

    தரவறியாப் பெரியோ ரெல்லாம்

பேசுகின்ற தமிழினிலே தமிழரெல்லாம்

    வேண்டுவன பெறுதல் கண்டும்

ஏசிநின்றார், அவர் நாணத் தமிழ்க் கவிதை

    உலகினிலே எசமான் ஆன

தூசகன்ற தமிழ்ப்புலவர் சுப்ரமணிய

    பாரதியார் நாமம் வாழ்க!

அயர்லாந்தில் வெர்ஹேரன் எனுங் கவிஞன்

    ஐரிஷ் மொழி வளரச் செய்தான்!

அயர்லாந்தில் அதன் பிறகே உணர்வுபெற

    லாயிற்றென்றறிஞர் சொல்வார்!

பெயர்பெற்ற கவிதைகளின் சுடர்க் கவிஞர் சுப்ரமணிய

     பாரதியார் நாமம் வாழ்க!

எல்லையற்ற ஆதரவும் பொருள்வலியும்

     இசைந்திருந்த ஷேக்ஸ்பியரும்,

சொல்லும் விக்டர் யூகோவும், டால்ஸ்டாயும்

     நவீ ந்திரனும் சொந்த நாட்டில்

நல்லசெயல் செய்தார்கள்! நடைப் பிணங்கள்

     மத்தியிலே வறுமை என்னும்

தொல்லையிலும் தொண்டு செய்த சுப்ரமணிய

     பாரதியார் நாமம் வாழ்க!

வாழ்க எழிற் பாரதியார் திருநாமம்

     வையமிசை எந்த நாளும்

வாழ்க தமிழ்! தமிழ்க் கவிதை!

     தமிழ் நாட்டார் மகாவீ ரராக எங்கும்

வாழ்க அவர் வகுத்த நெறி வருங் கவிதா

     மண்டலமும் கவிஞர் தாமும்!

வாழ்க நனி சமத்துவ நல் லிதயமதி வாய்ந்த

     புகழ் நிலவு நன்றே.

                               (முற்றும்)

கவிஞரைப் பற்றிய குறிப்பு ஏற்கனவே வெளியாகியுள்ளது.

குறிப்பு : இந்தப் பகுதிக்கு பாரதி பற்றி எழுதப்பட்ட பாடல்களை ஸ்கேன் செய்தோ, போட்டோ எடுத்தோ அனுப்பி உதவலாம். கவிஞரின் பெயர், அவரைப் பற்றிய 50 வார்த்தைகளுக்கு மிகாமல் உள்ள குறிப்பு, பாடல் வெளியிடப்பட்ட இதழ் அல்லது நூல் பற்றிய குறிப்பு ஆகியவற்றையும் அனுப்ப வேண்டுகிறோம். 

***

பாரதியார் நாமம் வாழ்க: பாரதிதாசன் (Post No.4586)

Date: 6 JANUARY 2018

Time uploaded in London- 6-13 am

Compiled by S NAGARAJAN

Post No. 4586

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

பாரதி போற்றி ஆயிரம் – 23

  பாடல்கள் 137 முதல் 141

கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்

தொகுப்பு : ச.நாகராஜன்

பாரதிதாசன் பாடல்கள்

 பாரதியார் நாமம் வாழ்க

வாளேந்து மன்னர்களும் மானியங்கொள்

    புலவர்களும் மகிழ்வாய் அந்நாள்

தாளேந்திக்கா த்த நறுந் தமிழ் மொழியைத்

    தாய்மொழியை உயிரை இந்த

நாள் ஏந்திக் காக்குநர் யார்? நண்ணுநர் யார்?

    என அயலார் நகைக்கும் போதில்

தோளேந்திக் காத்த எழிற் சுப்ரமணிய

    பாரதியார் நாமம் வாழ்க!

கிளைத்தமரம் இருந்தும் வெயிற் கீழிருந்து வாடுநர்

      போல் நல்லின்பத்தை

விளைத்திடு தீந் தமிழிருந்தும் வேறு மொழியே

      வேண்டி வேண்டி நாளும்

களைத்தவர்க்கும் கல்லாத தமிழர்க்கும்

      கனிந்தபடி தோலுரித்துச்

சுளைத் தமிழ்பாற் கவியளித்த சுப்ரமணிய

      பாரதியார் நாமம் வாழ்க!

தமிழ்க் கவியில், உரைநடையில், தனிப்புதுமை

      சுவையூட்டம் தந்து சந்த,

அமைப்பினிலே ஆவேசம், இயற்கையெழில்,

     நற்காதல் ஆழம் காட்டித்

தமைத்தாமே மதியாத தமிழர்க்குத்

     தமிழறிவில் தறுக் குண்டாக்கிச்

சுமப்பரிய புகழ் சுமந்த சுப்ரமணிய

     பாரதியார் நாமம் வாழ்க!

மக்களுயர் வாழ்க்கையிலே மாதர்க்கு

     விடுதலையை மறுத்திருக்கும்

துக்கநிலை தனையகற்றித் தூயநிலை உண்டாக்கிப்

     பெண்மை தன்னில்

தக்கதொரு தாய்த்தன்மை, சமத்துவ நிலை காட்டி

     உயிர் தளிர்க்கும் காதல்

துய்க்கும் விதம் எழுத்தளித்த சுப்ரமணிய

     பாரதியார் நாமம் வாழ்க!

பழங்கவிகள் படிப்பதற்கோ பழம்படிப்பும்

     பெரியாரின் துணையும் வேண்டும்

விழுங்குணவை விழுங்குதற்கும் தமிழர்க்கே

     உறக்கமில்லை கட்டாயத்தால்

வழங்குதற்கோ ஆட்சியில்லை; தெளிதமிழிற்

     சுவைக் கவியால் மனத்தை அள்ளித்

தொழும்பகற்றும் வகைதந்த சுப்ரமணிய

     பாரதியார் நாமம் வாழ்க!

                                                (கவிதை தொடரும்)

கவிஞரைப் பற்றிய குறிப்பு ஏற்கனவே வெளியாகியுள்ளது.

குறிப்பு : இந்தப் பகுதிக்கு பாரதி பற்றி எழுதப்பட்ட பாடல்களை ஸ்கேன் செய்தோ, போட்டோ எடுத்தோ அனுப்பி உதவலாம். கவிஞரின் பெயர், அவரைப் பற்றிய 50 வார்த்தைகளுக்கு மிகாமல் உள்ள குறிப்பு, பாடல் வெளியிடப்பட்ட இதழ் அல்லது நூல் பற்றிய குறிப்பு ஆகியவற்றையும் அனுப்ப வேண்டுகிறோம். 

*****

பாரதி போற்றி ஆயிரம் – 22 (Post 4570)

Date: 1 JANUARY 2018

Time uploaded in London-5-58 am

Compiled by S NAGARAJAN

Post No. 4570

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

பாரதி போற்றி ஆயிரம் – 22

  பாடல்கள் 135 முதல் 136

கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்

தொகுப்பு : ச.நாகராஜன்

பாரதிதாசன் பாடல்கள்

 நாடக விமர்சனம்

ஒரு நாள் பாரதியார் நண்ப ரோடும்

   உட்கார்ந்து நாடகம் பார்த்திருந்தார், அங்கே

ஒரு மன்னன் விஷ மருந்தி மயக்கத்தாலே

    உயிர் வாதை அடைகின்ற சமயம், அன்னோன்

இருந்த இடந் தனிலிருந்தே எழுந்து லாவி

    “என்றனுக்கோ ஒரு வித மயக்கந் தானே

வருகுதையோ எனும் பாட்டைப் பாடலானான்?

    வாய் பதைத்துப் பாரதியார் கூறுகின்றார்,

மயக்கம் வந்தால் படுத்துக் கொள்ளுவது தானே

    வசங் கெட்ட மனிதனுக்குப் பாட்டா என்றார்

தயங்கிப் பின் சிரித்தார்கள் இருந்தோ ரெல்லாம்

    சரி தானே பாரதியார் சொன்ன வார்த்தை?

மயக்கம் வரும் மதுவருந்தி நடிக்க வந்தான்,

    மயக்க விஷம் உண்டது போல் நடிப்புக் காட்டும்

முயற்சியிலும் ஈடுபட்டான், தூங்கிவிட்டால்

    முடிவும் நன்றாயிருந்திருக்கும் சிரமும் போம்!

கவிஞரைப் பற்றிய குறிப்பு ஏற்கனவே வெளியாகியுள்ளது.

குறிப்பு : இந்தப் பகுதிக்கு பாரதி பற்றி எழுதப்பட்ட பாடல்களை ஸ்கேன் செய்தோ, போட்டோ எடுத்தோ அனுப்பி உதவலாம். கவிஞரின் பெயர், அவரைப் பற்றிய 50 வார்த்தைகளுக்கு மிகாமல் உள்ள குறிப்பு, பாடல் வெளியிடப்பட்ட இதழ் அல்லது நூல் பற்றிய குறிப்பு ஆகியவற்றையும் அனுப்ப வேண்டுகிறோம். 

*****

பாரதி போற்றி ஆயிரம் – 21(POST NO.4566)

Date: 31  DECEMBER 2017

Time uploaded in London-6-25 am

Compiled by S NAGARAJAN

Post No. 4566

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

பாரதி போற்றி ஆயிரம் – 21

  பாடல்கள் 132 முதல் 134

கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்

தொகுப்பு : ச.நாகராஜன்

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அவர்களின் பாடல்கள்

பாடல்கள் 132,133

பாரதி ஜயந்தி மலர்

ஆரியத்தில் செந்தமிழில் ஆங்கி லத்தில்

              அரியபல நூல்கள் ஆய்ந்து கற்ற

பேரறிஞர் எழுதுமெழுத் தோவி யங்கள்

       பெற்றபெரும் செல்வமெனப் பேணுமிந்தப்

           பாரதி ஜயந்தி மலரின் வாசம்

              பாரெங்கும் பரவிநிதம் பரிம ளிக்கச்

சீருயரும் காளிகட்டப் பதியில் வாழும்

              தேவிபரா சத்திபதம் சேவிப் போமே

(கல்கத்தா பாரதி தமிழ்ச் சங்கம் 1949)

பாடல் 134

பாரதி மண்டபம்

இராகம் – வஸந்தா        தாளம் – ஆதி

பல்லவி

மண்டபம் வாழ்கவே! – பாரதி

               மண்டபம் வாழ்கவே!           (மண்டபம்)

அநுபல்லவி

             தண்டமிழ் போல அவன்

                 தந்த கவிகள் போல

             எண்டிசையும் போற்றும்

                 இமைய மலையே போல    (மண்டபம்)

சரணம்

             பாரத சக்தி வளர் – பீடமாய்

                 பைந்தமிழ்க் காலயமாய்

             வீரசுதந்தி ரத்தின்

                 வெற்றி நிலைக் களமாய்

             சூரிய சந்திரர் இந்தத்

                 தொல்லுல குள்ளளவும்      (மண்டபம்)

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை: கவிஞரைப் பற்றிய குறிப்பு ஏற்கனவே வெளியாகியுள்ளது.

குறிப்பு : இந்தப் பகுதிக்கு பாரதி பற்றி எழுதப்பட்ட பாடல்களை ஸ்கேன் செய்தோ, போட்டோ எடுத்தோ அனுப்பி உதவலாம். கவிஞரின் பெயர், அவரைப் பற்றிய 50 வார்த்தைகளுக்கு மிகாமல் உள்ள குறிப்பு, பாடல் வெளியிடப்பட்ட இதழ் அல்லது நூல் பற்றிய குறிப்பு ஆகியவற்றையும் அனுப்ப வேண்டுகிறோம்.

****

பாரதி போற்றி ஆயிரம் – 20 (Post No.4562)

Date: 30  DECEMBER 2017

Time uploaded in London- 5-11 am

Compiled by S NAGARAJAN

Post No. 4562

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

பாரதி போற்றி ஆயிரம் – 20

  பாடல்கள் 126 முதல் 131

கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்

தொகுப்பு : ச.நாகராஜன்

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அவர்களின் பாடல்கள்

பாரதி மண்டபம்

தேவருமே இங்குவந்து செந்தமிழைக் கற்றினிய        பாவலராய் வாழமனம் பற்றுவரே – பூவுலகில்

வானுயரும் பாரதியார் மண்டபத்தை எட்டப்பன்

மாநகரில் கண்டு மகிழ்ந்து

வேறு

பாரதத்தாய் செய்தவப் பயனாய் வந்த

   பாவலன் சுப்பிரமணிய பாரதிக்குச்

சீருயரும் எட்டய புரத்திற் கண்ட

   திருக்கயிலை யனையமணி மண்டபத்தைப்

பேருவகை தருசர்வ ஜித்தில் கன்னி

   பிறந்தஇரு பானேழில் திறந்து வைத்தான்,

தாரணியில் வங்கவள நாட்டை யாளும்

   சக்ரவர்த்தி ராஜகோ பால மாலே

இலங்கைப் பாரதி சங்கம்

சீரியநல் லறப்பணிகள் பலவும் செய்து

    செந்தமிழை வளம்பெருகத் தினமும் பேணி

வீரசுதந் திரங்காத்துக் காந்தி யண்ணல்

   விதித்திடும்மெய் யன்புநெறி கடைப்பிடித்து,

தாரணியில் புகழோங்கும் தில்லைக் கூத்தன்

    தண்ணருளால் அழகியதென் இலங்கைத் தீவில்

பாரதியின் பெயர் போற்றும் இளைஞர் சங்கம்

    பல்லாண்டு பல்லாண்டு வாழ்க மாதோ! 

பாரதி தமிழ்ச் சங்க மலர்

அப்பாலுக் கப்பால்நின் றாளும் பெருமாளே

ஒப்பாரு மில்லா ஒருவனே – இப்பாரில்

பொங்கு புகழ் பாரதிபேர் போற்றும் இனியதமிழ்ச்

சங்கமலர் வாழவரம் தா

வங்க மகளின் திருமுகமாய்

   வாய்த்த காளி கட்டத்தில்

பொங்கு புகழ்சேர் பாரதிபேர்

   போற்றி வளரும் தமிழ்ச்சங்கம்

தங்கும் அன்பால் தந்தமலர்

   தரணிமீது வாடாமல்

எங்கும் அறிவின் மணம்வீ சி

   இனிது வாழ்க வாழ்கவே  

சீருயர் காளிகட்டத் திருநகரில் வளரும்

பாரதி தமிழ்ச்சங்கப் பைங்கொடி பூத்தமலர்

சூரிய சந்திரர்கள் தோன்றிடு காலமெலா

வாரிது சூழுலகில் வாழ்கவே