பாரதி 97!- PART 1 (post No.5406)

WRITTEN BY S NAGARAJAN

Date: 9 SEPTEMBER 2018

 

Time uploaded in London – 6-23 AM (British Summer Time)

 

Post No. 5406

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

 

 

மஹாகவிக்கு அஞ்சலி

பாரதி 97!- PART 1

 

ச.நாகராஜன்

 

மஹாகவி பாரதி அமராரான நாள் செப்டம்பர் 11. 1921 ஆம் ஆண்டு அவர் மறைந்தார். 97 ஆண்டுகள் உருண்டோடி விட்டன.அவரது சிறப்பியல்புகள் எத்தனையோ. அவற்றில் 97ஐ இங்கு காண்போம். அவருக்கு நமது சிரம் தாழ்ந்த அஞ்சலியைச் செலுத்துவோம். தேச பக்தியிலும் தெய்வ பக்தியிலும் சிறந்துயர்வோம்.

 

 

  1. சிறந்த சம்ஸ்கிருத விற்பன்னர்

1898 ஜூன் மாதம். பாரதியார் காசிக்குப் பயணமானார். அங்கே ஹிந்து கலாசாலையில் சேர்ந்தார். ஸம்ஸ்கிருதத்தில் நல்ல புலமையைப் பெற்றார்.அத்துடன்  ஹிந்தி பாஷையிலும் தேர்ந்தார்.

  1. பல்மொழி அறிந்தவர்

பாரதியார் இயல்பாகவே பல மொழிகளை அறிந்து கொண்டவர். தமிழ், ஆங்கிலம், சம்ஸ்கிருதம், ஹிந்தி ஆகிய மொழிகளில் தேர்ச்சி பெற்றவர்.புதுவை வாழ்க்கையில் பிரெஞ்சு மொழியையும் வங்காள மொழியையும் அறிந்து கொண்டார். சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைப்போம் என்பதால் அவர் தெலுங்கு மொழியும் அறிந்தவரே. யாம் அறிந்த மொழிகளிலே’ என்ற அவரது பாடல் குறிப்பின் மூலமாக அவரது பன்மொழி அறிவைத் தெரிந்து கொள்ளலாம்.

 

  1. பள்ளி ஆசிரியர்

1903ஆம் ஆண்டு பாரதியார் ஆசிரியத் தொழிலை மேற்கொண்டார்.மதுரை சேதுபதி உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராக மூன்று மாதம் பணி புரிந்தார்.

  1. சிறந்த பத்திரிகாசிரியர்

இந்தியா உள்ளிட்ட பல இதழ்களின் ஆசிரியராகத் திகழ்ந்ததோடு தேசபக்தி உணர்வூட்டும் பல கட்டுரைகளை வெளியிட்டு வந்தார்.

  1. சிறந்த பதிப்பாளர்

பல நூல்களை வெளியிட்டவர். மிகத் தரமான முறையில் குறைந்த விலையில் தன் கவிதை நூல்களை வெளியிட வேண்டும் என்ற ஆர்வம் அவருக்குண்டு.

  1. கார்ட்டூனை அறிமுகப்படுத்தியவர்

இந்தியா இதழில் கார்ட்டுனை அறிமுகப்படுத்தி சிறந்த கருத்துக்களை சித்திரம் மூலம் வெளிப்படுத்தியவர்

7.சிறந்த கவிஞர்

பல நூறு பாடல்களை இயற்றியவர். இந்தப் பாடல்கள் சாகா வரம் பெற்றவை.

 

  1. சிறந்த கணவர்

தன் மனைவி செல்லம்மாவை உயிரினும் மேலாக நேசித்தார். சம உரிமை தந்து கை கோர்த்து தெரு வீதியில் அந்தக் காலத்திலும் சென்று புதுமை படைத்தார்.

  1. சிறந்த தகப்பன்

தன் குழந்தைகளை உயிரினும் மேலாக நேசித்தார். அவர்களுக்கு அன்பைக் குழைத்து அறிவைத் தந்தார். அவரைப் பற்றி அவரது குடும்பத்தினர் எழுதிய நூல்களில் அவரது அன்பைக் காட்டும் பல சம்பவங்கள் எடுத்துக் கூறப்பட்டுள்ளன.

  1. சிறந்த கதாசிரியர்

ஞான ரதம் உள்ளிட்ட ஏராளமான படைப்புகள் அவர் சிறந்த கதாசிரியர் என்பதை உணர்த்தும்.

  1. சிறந்த நகைச்சுவை எழுத்தாளர்.

மகாகவியின் எழுத்துக்களில் ஆங்காங்கே நகைச்சுவை கொப்பளிக்கும்.சின்னச் சங்கரன் கதை நல்ல நகைச்சுவை கதையாக மிளிர்ந்தது.

  1. சிறந்த புதுக் கவிதை இயற்றிய புதுமையாளர்

வசன கவிதைகள் பலவற்றை இயற்றிய புதுமையாளர். காட்சி, புகழ் உள்ளிட்டவை இவரது வசன கவிதை  படைப்புகளை இனம் காட்டுபவையாகும்.

13.சிறந்த சொற்பொழிவாளர்

ஏராளமான மேடைகளில் அனல் பறக்கும் தேசிய உணர்வூட்டும் சொற்பொழிவுகளை ஆற்றியவர். ஆன்மீகச் சொற்பொழிவுகளையும் ஆற்றியவர்;

  1. சிறந்த மேலை இலக்கிய விற்பன்னர்.

ஷெல்லியின் பாடல்களில் தோய்ந்தவர். ஷெல்லி தாசன் எனப் புனைப்பெயரையே கொண்டார்.ஆங்கிலக் கவிஞன் பைரன், வால்ட் விட்மன் உள்ளிட்ட ஏராளமானோரின் கவிதைகளைப் படித்து உணர்ந்து அனுபவித்தவர்.

 

  1. மஹாத்மாவை இனம் கண்டவர்

மஹாத்மா காந்தி பஞ்சகத்தை இயற்றி இந்த வையத்து நாட்டிலெல்லாம் தாழ்வுற்று வறுமைமிஞ்சி விடுதலை தவறிக்கெட்டு பாழ்பட்டு நின்ற பாரத தேசம் தன்னை வாழ்விக்க வந்த மஹாத்மா என்று போற்றினார். மஹாத்மாவை சென்னையில் சந்தித்து அவரது தலைமைக்கும் இயக்கத்திற்கும் ஆசி கூறினார்.

  1. திலகரைப் போற்றியவர்

திலகரிம் பக்தியும் ஈடுபாடும் கொண்டவர். வாழ்க திலகன் நாமம் பால கங்காதர திலகர் ஆகிய பாடல்களைப் பாடி அவரைப் போற்றியவர்.

  1. தேசபக்தர்களைப் போற்றியவர்

தாதாபாய் நௌரோஜி, லாலா லஜ்பத்ராய் உள்ளிட்ட பெரும் தலைவர்களைப் போற்றியவர்.

18.வ.உ.சிக்கு நெருக்கமானவர்

‘வ.உ.சி.க்கு வாழ்த்து’ பாடியவர். அவருடன் நெருங்கிப் பழகியவர்.

 

19.நிவேதிதாவைக் குருவாகக் கொண்டவர்

விவேகானந்தரின் சிஷ்யையான நிவேதிதா தேவியை 1906ஆம் ஆண்டு நடந்த கல்கத்தா காங்கிரஸில் கலந்து கொண்டு திரும்பும் போது சந்தித்து உபதேசம் பெற்றவர். நிவேதிதா தேவி துதி இயற்றிப் போற்றியவர். தனது இரு நூல்களை அவருக்கு சமர்ப்பணம் செய்தவர்.

  1. அரவிந்தருடன் நெருங்கிப் பழகியவர்

அரவிந்தரின் நட்பு புதுவையில் ஏற்பட்டது. அவருடன் அடிக்கடி அளவளாவி பல கருத்துக்களையும் பரிமாறிக் கொண்டவர். வேதத்தை அரவிந்தரிடம் கற்றார். அரவிந்தரும் பாரதியாரும் பரஸ்பரம் கொண்டிருந்த அன்பும் மதிப்பும் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதவை.

  1. தமிழ் மொழியின் சிறப்பை உணர்த்தியவர்

யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவதெங்கும் காணோம் என்று பாடியவர். சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செய்ய வேண்டும் என அறிவுரை பகன்றவர். தமிழைப் புதிய சிகரத்தில் ஏற்றியவர்.

22.சிறந்த இசை விற்பன்னர்

பல பாடல்களை – கிருதிகளை – தாளம், ராகத்தோடு இயற்றியவர். அவற்றை பலருக்கும் சொல்லித் தந்தவர். தமிழில் உள்ள இசைப் பாடல்களையும் கச்சேரிகளில் பாடுதல் வேண்டும் என முதன்முதலில் முழக்கம் இட்டவர்.

  1. சிறந்த பாடகர்

கணீரென்ற குரலில் தனது பாடல்களை ஆவேசத்தோடு அவர் பாடியதை ஆயிரக்கணக்கான மக்கள் கேட்டு மெய் சிலிர்ப்பது வழக்கம்.

  1. தேவார திவ்ய பிரபந்த விற்பன்னர்

தேவாரத்திலும் திவ்ய பிரபந்தத்திலும் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர். அவற்றை அடியொற்றிய பாடல்களையும் இயற்றியவர்.

  1. சங்க இலக்கிய விற்பன்னர்

சங்க இலக்கியங்களைக் கற்றவர். இளங்கோ மீது ஈடுபாடு கொண்டவர். திருக்குறளைப் போற்றியவர்.

 

  1. கம்பனில் ஈடுபாடு கொண்டவர்

எல்லையற்ற தன்மையைக் கொண்டவர் என கம்பனைப் போற்றியவர்.கம்பன் பிறந்த தமிழ்நாடு என கம்பனையும் தமிழ் நாட்டையும் உச்சியில் ஏற்றிப் பாராட்டியவர்

  1. வேதம் புகழ்ந்தவர்

வேதம் உடையது இந்நாடு என வேதத்தைப் பெருமையாகப் பறை சாற்றிய ‘வேத அறிஞர்’ பாரதியார்.  ஏராளமான வேதக் கருத்துக்களை தன் கவிதைகளிலும்,கட்டுரைகளிலும் எடுத்துக் காட்டியவர். அரவிந்தருடன் வேத ஆராய்ச்சியில் ஈடுபட்டவர்.

27.ரஷிய புரட்சியை வரவேற்றவர்.

ஜார் மன்னன் வீழ, ஆஹா என்று எழுந்தது பார் யுகப்புரட்சி என ரஷிய புரட்சியை அழியாத கவிதை மூலம் பாராட்டியவர்.

இமயமலை வீழ்ந்தது போல் வீழ்ந்து விட்டான் ஜாரரசன் என்று பாடினார்.

28.பெல்ஜியம் நாட்டிற்கு வாழ்த்து பாடியவர்

முதல் உலக மகா யுத்தத்தில் ஜெர்மனி பெல்ஜியத்தின் மீது படையெடுத்து அங்கிருந்த சுதந்திர அரசை வீழ்த்தியபோது திறத்தினால் எளியை ஆகிச் செய்கையால் உயர்ந்து நின்றதாக பெல்ஜியத்தைப் பாராட்டினார். துயருண்டோ துணிவுள்ளோர்க்கே என்று தன் கவிதையை முடித்தார்.

29.பிஜித் தீவிலே ஹிந்து ஸ்திரீகள் படும் பாட்டைக் கண்டு வருந்தியவர்

கரும்புத் தோட்டத்திலே ஹிந்து மாதர் படும் துன்பம் தீர ஒரு மருந்திலையோ என வேதனைப் பட்டார். எங்கு ஹிந்துக்கள் துன்பப்பட்டாலும் தனது வேதனைக் குரலை வெளியிட்டார்.

 

Hindu temple in Fiji

  1. உலக நிகழ்ச்சிகளை உன்னிப்பாகக் கவனித்தவர்

தனது பத்திரிகை வாயிலாக அறத்தினால் நிமிர்ந்து நிற்கும் அரசுகளுக்கு ஆதரவு தந்தார். புரட்சியை வரவேற்றார். மறத்தினால் ஆளும் ஆட்சிகளை – பிரிட்டிஷ் ஆட்சி உட்பட அனைத்தையும் கண்டித்தார்.

  1. தீர்க்கதரிசி

ஆடுவோமே, பள்ளுப்பாடுவோமே, ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று என்று தீர்க்கதரிசன வாக்குக் கூறியவர்.

  1. வெள்ளையரை விரட்ட குரல் கொடுத்தவர்

வெள்ளைப் பரங்கியைத் துரை என்ற காலமும் போச்சே என்று வெள்ளையரை இகழ்ந்து சுதந்திரத்திற்காக வெகு ஜன எழுச்சியைத் தன் பாட்டாலும் செயலாலும் சொற்பொழிவாலும் ஏற்படுத்தியவர். பாரத தேசம் பெற்ற சிறந்த தவப்புதல்வர்.

அடுத்த இரு கட்டுரைகளுடன் இந்தத் தொடர் முடியும்.

 

குறிப்பு: மேலே கண்ட சிறப்புக்களை விளக்கும் விதத்தில் ஏராளமான பாடல்களையும் கட்டுரைகளையும் பாரதியார் படைத்துள்ளார்.பல அரிய சம்பவங்கள் அவர் வாழ்க்கையில் நிகழ்ந்துள்ளன.

‘பாரதி கண்ட சித்தர்கள்’– பாரதியார் நூல்கள் – 56 (Post No.5345)

WRITTEN BY S NAGARAJAN

Date: 21 August 2018

 

Time uploaded in London – 4-56 AM (British Summer Time)

 

Post No. 5345

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

பாரதி இயல்

 

மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 56

சி.எஸ்.முருகேசனின் ‘பாரதி கண்ட சித்தர்கள்

 

ச.நாகராஜன்

 

புதுச்சேரி வாழ் பாரதி அன்பர் சி.எஸ். முருகேசன் எழுதியுள்ளபாரதி கண்ட சித்தர்கள் மகாகவி தன் வாழ்வில் கண்ட சித்தர்களை அறிமுகம் செய்யும் அழகிய நூல்.

190 பக்கங்கள் கொண்ட இந்த நூலின் முதல் பதிப்பு 2002ஆம் ஆண்டில் குறிஞ்சி, சென்னை-49இன் வெளியீடாக வந்துள்ளது.

     பாரதி சித்தர், ஸ்ரீ குரு சித்தானந்த சுவாமிகள், கோவிந்த ஞானி, யாழ்ப்பாணத்துச் சாமியார் ஸ்ரீ கதிர்வேலு சுவாமிகள்,குள்ளச்சாமி சித்தர், கடற்கரையாண்டி, மௌனச் சாமியார், மிளகாய்ப் பழச் சாமியார், மகான் அரவிந்தர், ஸ்ரீ அன்னை ஆகிய பத்து அத்தியாயங்களை இந்த நூல் கொண்டுள்ளது.

புதுச்சேரியில் பல இடங்களுக்கும் சென்று பலரையும் சந்தித்து பாரதி கண்ட சித்தர்களின் சுவை மிகு வரலாற்றை ஆசிரியர் நூலில் நயம்படத்தொகுத்துத் தருகிறார்.

பாரதியை, தேசியக் கவிஞன் பாரதியாக, கதாசிரியன் பாரதியாக, கட்டுரையாளன் பாரதியாக, அரசியல்வாதி பாரதியாக, ஆன்மீகவாதி பாரதியாக, சீர்திருத்த செம்மல் பாரதியாக,பெண் விடுதலை கோரும் புரட்சியாளராக, பத்திரிகையாளராகப் பல பேர் கண்டாலும் சித்தன் பாரதியாக காணவில்லை என்னும் குறையை இந்த நூல் போக்குகிறது.

‘எனக்கு முன்னே சித்தர் பலர் இருந்தாரப்பா,

யானும் வந்தேன் ஒரு சித்தன் இந்த நாட்டிலே’                  என்ற வரிகள் மூலம் தன்னை சித்தனாக அறிவித்துக் கொள்ளும் பாரதியார் பல சித்தர்களைக் கண்டு பல சுவையான அனுபவங்களையும் உபதேசங்களையும் பெற்றுள்ளார்.

பாரதியாரின் ஆத்ம பலத்தை விளக்கும் வகையில் அவர் வாழ்வில் நடந்த சுவையான மூன்று சம்பவங்களை விவரமாக நூலாசிரியர் முதல் அத்தியாயத்தில் தருகிறார்.

அதில் ஒரு பகுதி:

“விடிந்தால் பொங்கல் பண்டிகை. பாரதியின் கையிலோ பைசா கூட இல்லை. பண்டிகை நாளும் அதுவுமாக வீடு துடைத்துக்  கொண்டிருந்தது. பாரதியின் மனைவியான செல்லம்மாளுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை.

 

கவிதைகளில் மூழ்கியிருந்த பாரதியாரிடம் தெரிவித்ததற்கு ‘எல்லாம் பராசக்தி பார்த்துக்குவாள்’ என்று சொல்லிவிட்டார்.

என்ன செய்வது. விதிப்படி ஆகட்டும் என்று அந்த அம்மாளும் சோர்வாக உட்கார்ந்து விட்டாள்.

அன்று மாலை புதுச்சேரி பிரபல ஜவுளிக் கடையின் முதலாளியான முதலியார் அனுப்பி வைத்ததாக பாரதியாருக்கு வேஷ்டி, துண்டு, குழந்தைகளுக்கான பாவாடை, சட்டை, அவர் மனைவிக்கான புடவை முதலியவற்றை ஒருவன் கொண்டு வந்து கொடுத்தான்,

இத்தனைக்கும் அந்த முதலியார் அவருக்குச் சாதாரண அறிமுகந்தான். நான் இப்படியொன்றும் கேட்கவில்லையேப்பா? என்று பாரதி சொல்லிப் பார்த்தார். ‘இது மாதிரி பெரியவங்களுக்கு எங்கள் முதலாளி அனுப்பி வைக்கிறது வழக்கமுங்க’ என்று சொல்லிக் கொண்டே போய் விட்டான்.

மற்றொரு கடைக்காரன் (கடற்கரை சிநேகம்) வெற்றிலை, பாக்கு, பழங்கள், இனிப்பு யாவும் கொண்டு வந்து கொடுத்து விட்டுப் போனான்.

இவைகளைப் பார்த்து வீட்டிலுள்ளோர் அதிசயப்பட்டுக் கொண்டு இருந்தனர். பாரதியாருக்கு வேறொரு கவலை வந்து விட்டது. பண்டிகை முடிந்ததும் பால் பொங்கிற்றா? என்று கேட்டு வருபவர்களை எப்படி வெறுங்கையுடன் அனுப்புவது? யோசனையில் அவர் உழன்று கொண்டிருந்தார்.

 

அன்றிரவு ஊரே உறங்கிக் கொண்டிருந்த வேளையில் பாரதியார்  உறக்கமில்லாமல் தவித்தார். நடுநிசி. யாரோ கதவைத் தட்டினார்கள். பாரதியார் தான் சென்று கதவைத் திறந்தார். அவருக்கு அறிமுகமில்லாத ஒருவர் நின்று கொண்டிருந்தார்.

“இப்பொழுது தான் சொப்பனத்தில் பராசக்தி வந்து, என் கையிலிருக்கும் சில்லறையை உங்களிடம் கொடுத்து வரச் சொன்னாள்’ என்று சொல்லி ஐந்நூறு ரூபாய் சில்லறைப் பொட்டணத்தைப் பாரதியாரின் பாதங்களில் வைத்து நமஸ்கரித்தெழுந்தார்.

இதைக் கண்டு பாரதியாருக்குப் புல்லரித்துப் போயிற்று. அந்த ஆளைப் பற்றி விசாரித்ததற்கு ஏதோ முத்தியால் பேட்டை நெசவாளி என்று சொல்லிக் கொண்டு போய் விட்டார்.

அதன் பிறகு பாரதியார் தூக்கம் கலைந்து விளக்கைப் பெரிதாக்கி வைத்துக் கொண்டு பராசக்தி மேல் பாட்டு எழுத உட்கார்ந்து விட்டார். மறு நாள் பொங்கல் பண்டிகை அவர் வீட்டில் மகிழ்ச்சியாகக் கொண்டாடப்பட்டது.’ (இந்த சம்பவத்தை திரு சம்பந்தம் எழுதிய ‘புதுவையில் பாரதி’ – பக்கம் 181-182 இலிருந்து எடுத்துத் தருகிறார் நூலாசிரியர்)

இதே போல சித்தபிரமை பிடித்த புதுச்சேரி தமிழ் வித்வான் பங்காரு பத்தரின் மகனைச் சரியாக்கிய சம்பவமும் நூலில் விவரமாகத் தரப்பட்டுள்ளது.

ஸ்ரீ குரு சித்தானந்த சுவாமிகள் வரலாறு பலரும் அறியாத ஒன்று. இவரைப் பற்றி பாரதியார் விளக்கமாக எழுதியுள்ளார். ஆனால் அவரது வாழ்க்கை வரலாறைச் சுருக்கமாக நூலாசிரியர் பல சம்பவங்களுடன் விவரிக்கிறார்.

1837ஆம் ஆண்டு மே மாதம் 27ஆம் தேதி வெள்ளிக்கிழமை சுவாமிகள் ஜீவ சமாதி எய்தினார்.

இன்றும் அவரது குருபூசை ஆண்டு தோறும் வைகாசி மாதம் 15ஆம் தேதி அவரது சமாதியில்- சித்தர் கோவிலில் – நடை பெறுகிறது.

கோவிந்த ஞானி என்ற அத்தியாயம் பாரதியார் பாடிய

‘வன்மை திகழ் கோவிந்த ஞானி – பார்மேல்

யாங்கற்ற கல்வியெலாம் பலிக்கச் செய்தான்’ என்ற வரிகளில் உள்ள கோவிந்த சித்தரைப் பற்றி விளக்குகிறது.

ஒருநாள் கருவடிக்குப்பத்தில் தனிமையில் பாரதியார் தனது தந்தையைப் பற்றிச் சிந்தனை செய்து கொண்டிருந்த போது அங்கு வந்த கோவிந்தஞானி சித்தர் அங்கிருந்த குளத்து நீரில் அவரது தந்தையாரின் திருமுகத்தைக் காண்பித்தார். பின்னர் அவரது தாயாரின் வடிவத்தையும் பாரதியார் கண்டார்.

இதை அவர், “முனி ஒருநாள் இறந்த எந்தை தன்னுருவங் காட்டினான், பின்னே யென்னைத் தரணிமிசைப் பெற்றவளின் வடிவமுற்றான்” என்ற வரிகளால் குறிப்பிடுகிறார்.

 

யாழ்ப்பாணத்துச் சாமியார் ஸ்ரீ கதிர்வேலு சுவாமிகளைப் பற்றி நான்காம் அத்தியாயம் விவரிக்கிறது.

மாங்கொட்டைச் சாமி எனப்படும் குள்ளச்சாமி சித்தரின் தொடர்பு பாரதியாருக்கு அவர் புதுச்சேரியில் தங்கியிருந்த இறுதி நாட்களில் கிடைத்தது. ஸ்ரீ அரவிந்தரின் சீடர்கள் புதுச்சேரியில் அவருடன் கடற்கரையில் கூடியிருந்த ஒரு சமயத்தில் குள்ளச்சாமி பைத்தியத்துடன் உங்கள் நண்பர் பாரதியார் சுற்றிக் கொண்டிருக்கிறார் என்று ஒரு சீடர் கூறிய போது அரவிந்தர், அவரை சாதாரண மானுடராக எண்ணாதீர்கள், அவர் ஒரு மகான் என்று கூறினார்.

அந்த சித்தர் பாரதியாருக்கு செய்த உபதேசம் பற்றிய சம்பவத்தை குள்ளச்சாமி சித்தர் என்ற அத்தியாயம் தருகிறது.

இன்னும் மௌனச் சாமியார் பற்றியும் பெண் சாமியாரான மிளகாய்ப் பழச் சாமியாரைப் பற்றியும் நூலில் காண்கிறோம்.

மகான் அரவிந்தர் மற்றும் ஸ்ரீ அன்னை ஆகிய அத்தியாயங்களில் சுவை மிகு தகவல்களைப் பெறுகிறோம்.

பாரதியாரின் கவிதா ஆவேசத்திற்கு ஸ்ரீ அரவிந்தரின் நட்பும் ஒரு முக்கிய காரணம். ரிக் வேத சூக்தங்களில் சுமார் இருநூறுக்கும் மேற்பட்டவற்றை அவரிடமிருந்து பாரதியார் கற்றார். பாரதியாரிடமிருந்து அரவிந்தர் தமிழ் மொழியைக் கற்றார்.

இப்படி பல தகவல்களை நூல் முழுவதும் காண முடிகிறது.

பாரதியாரைச் சித்தர் என்ற நோக்கில் பார்க்கும் இந்த நூல் பாரதி இயலில் ஒரு முக்கிய நூல். ஆய்வு செய்து இதை எழுதியுள்ள நூலாசிரியர் பாராட்டுக்குரியவர்.

பாரதி அன்பர்கள் இதைத் தங்கள் பாரதி இயல் நூலகத்தில் சேர்த்துக் கொள்ளலாம்.

***

நாலு குணங்கள் பற்றி வள்ளுவனும் வால்மீகியும் (Post No.5287)

Written by London swaminathan

Date: 4 August 2018

 

Time uploaded in London – 7-31 am  (British Summer Time)

 

Post No. 5287

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

நான்கு குணங்கள் அவசியம் என்று வள்ளுவனும் வால்மீகியும் வலியுறுத்துகின்றனர்.

 

ஸிம்ஹிகை என்னும் கடல் அரக்கியை ஹனுமார் கொன்றவுடன் ஆகாசத்திலுள்ள பூதங்கள் சொன்னார்கள்: உம்மால் பெரும் பூதம் கொல்லப்பட்டது. நீர் எண்ணிய எண்ணியாங்கு எய்துவீர். மேலும்,

 

யஸ்யத் வேதானி சத்வாரி வானரேந்த்ர யதா தவ

த்ருதிர் த்ருஷ்டி மதிர் தாக்ஷ்யம் ஸ்வகர்மஸு ந  ஸீததி

 

சுந்தர காண்டம் 1-216

 

பொருள்

“வானரேந்திரனே!

தைரியம் (உறுதி),

தீர்க ஆலோசனை (கண்ணோட்டம்) , புத்தி,

வலிமை

என்ற இந்த நான்கும் உமக்கு எப்படியோ அப்படி எவனுக்குண்டோ அவன் தனது கார்யங்களில் இடையூறுகளே இராது”

 

இதே கருத்தை வள்ளுவன் இரண்டு இடங்களில் சொல்வான்

 

அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்

எஞ்சாமை வேந்தர்க் கியல்பு – குறள் 382

 

பொருள்

அஞ்சாமை,

ஈகை,

அறிவு,

ஊக்கம்-

இந்த நான்கு பண்பு நலன்களும் இருப்பதே தலைவனுக்கு (அரசனுக்கு) சிறப்பு

 

இதையே இன்னும் ஒருமுறை எதிர்மறையில் கூறி வலியுறுத்துகிறார்:–

அஞ்சும் அறியான் அமைவிலன் ஈகலான்

தஞ்சம் எளியன் பகைக்கு–குறள் 863

 

 

பொருள்

எதற்கும் அஞ்சுபவனாய் ,

எதனையும் தெரிந்து கொள்ளும் ஆற்றல் அற்றவனாய் ,

பிறரோடு அனுசரித்து வாழும் குணமில்லாதவனாய்,

உலோபக் குணமும்

உடையவனாக  ஒருவன் இருந்து விட்டால் அவன் பகைவர்க்கெல்லாம்  மிக எளியவன் ஆவான்

 

 

ஈகை,(லோபத்துக்கு எதிர்ப்பதம்) ஒன்று மட்டும்தான் வால்மீகிக்கும் வள்ளுவனுக்கும் வேறுபாடு ;மற்ற குணங்கள் அப்படியே இருக்கின்றன!

சான்றோர்  சிந்தனை ஒன்றே!

 

xxx

 

Picture of Tiruvalluvar  from old Tamil Book

தூது பற்றியும் இரண்டு பாடல்கள் உள்ளன

பூதாஸ்சார்த்தா விபத்யந்தே தேஸகால விரோதிதாஹா

விக்லபம் தூதமாஸாத்ய தமஹ ஸூர்யோதயே யதா

-ஸுந்தர காண்டம்

காரியங்கள் முடியக்கூடியனவாக  இருந்த போதிலும் ஸ்திரபுத்தியில்லாத தூதனை அடைந்து தேச காலங்களுக்கு மாறுபட்டு, ஸூர்யோத கால இருள் போல அழிந்து விடுகின்றன.

 

அதாவது நிலையான புத்தியில்லாத தூதனால் செயல்கள் கெட்டுவிடும்.

 

அர்த்தானர்த்தாந்தரே புத்திர்நிஸ்சிதாபி ந சோபதே

தாதயந்தி ஹி கார்யாணி தூதாஹா பண்டிதமனினஹ

 

இது செய்யக்கூடியது, செய்யத் தகதது என்பது நன்றாய் முடிவு செய்தபோதிலும், காரியங்கள் கெட்டுப்போகின்றன.ஏனென்றால் எல்லாம் தெரிந்தவன் என்று எண்ணாத்தால் தூதர்கள் காரியங்களைக் கெடுத்து விடுகிறார்கள்.

 

 

தூது என்னும் அதிகாரத்தில் வள்ளுவனும்,

 

கடனறிந்து காலம் கருதி இடனறிந்து

எண்ணி உரைப்பான் தலை -குறள் 687

 

தூய்மை துணைமை துணிவுடைமை இம்மூன்றின்

வாய்மை வழியுரைப்பான் பண்பு- குறள் 688

 

 

பொருள்:

தான் ஆற்ற வேண்டிய செயலை உணர்ந்து, ஏற்ற காலத்தையும் நினைத்து, தக்க இடத்தையும் தேர்ந்து, தான் சொல்ல நினைத்தவற்றை எல்லாம் தக்கவாறு எண்ணித் தெளிவுபட உரைப்பவனே சிறந்த தூதன் ஆவான்.

 

மனம், மொழி, மெய் தூய்மை, சுற்றத்தால் அமைந்த துணை, துணிவு ஆகிய மூன்றிலும் உறுதியாக இருப்பவனே சி றந்த தூதன்.

 

இந்த இரண்டிலும் ஸ்திரமான புத்தி வந்துவிடுகிறது. மனம் மொழி மெய் தூய்மையில் அஹங்காரமின்மை வந்து விடுகிறது.

 

  • xxxx SUBHAM xxxx

ஜெயகாந்தனின் ‘பாரதி பாடம்’ (Post No.5276)

Written by S Nagarajan

Date: 1 August 2018

 

Time uploaded in London – 6-10 am    (British Summer Time)

 

Post No. 5276

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

பாரதி இயல்

 

மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 55

ஜெயகாந்தனின் ‘பாரதி பாடம்

 

ச.நாகராஜன்

 

அறிமுகம் தேவையில்லாத எழுத்தாளர் ஜெயகாந்தன். பாரதி பக்தர். அவர் குழந்தைகளுக்காக பாரதி வழியில் பாடம் நடத்த வேண்டும் என்று மிகவும் ஆசைப்பட்டார். தற்காலத்தில் நடைமுறையில் உள்ள கல்வி முறை நமக்கொரு சாபக்கேடு ஆகும் என்பது அவர் கருத்து.

வானொலி நிலையம் முன் வர, 13 வாரங்கள் வானொலி மூலமாக அவர் இந்தப் புதிய பாரதி பாடத்தை வழங்கினார்.

இதை 1974ஆம் ஆண்டு குழந்தைகள் தினத்தன்று கலைஞன் பதிப்பகம் (தி.நகர், சென்னை – 17) முதல் பதிப்பாக வெளியிட்டது.100 பக்கங்கள் கொண்ட இந்தப் புத்தகத்தில் 13 அத்தியாயங்கள் உள்ளன.

அவை : விளையாட்டு, பறவைகள், நாய், பாட்டமுதம், தெய்வம், ஜாதியும் சமூகமும், வருணமும் தர்மமும், குடும்பம், ஆணும் பெண்ணும், நமது சமயம், நமது பண்பாடு, சமதர்மம், கல்வி.

இணைப்பாக பாப்பாப் பாட்டு மற்றும் முரசு உள்ளது.

ஒவ்வொரு அத்தியாயத்தின் இறுதியிலும் வினாக்களும், பயிற்சியும் உள்ளது.

 

குழந்தைகளுக்காக பாரதியை அவர் அறிமுகப்படுத்தி அவர்  எடுத்துரைக்க்கும் கருத்துக்களில் சில :

பாட்டமுதம் என்ற அத்தியாயம்:

மகாகவி பாரதியாருக்குப் பாடல்களின் மீதும் செவியுணர்வின் மீதும் வியப்புக் கலந்த பிரீதி உண்டு.

கானப்பறவை கலகலெனும் ஓசை, காற்று மரங்களின் இடையே காட்டுகின்ற இசைகள், ஆற்று நீர் ஓசை, அருவி ஒலி, பெருங்கடலின் நிற்காத பேரோசை, மானுடப் பெண்கள் ஊனுருகப் பாடுவது, ஏற்றமிறைப்பவர்களின் இசை, நெல் குத்தும் பெண்களின்குக்கூவெனக் கொஞ்சும் ஒலி, சுண்ணாம்பு இடிப்பவர்களின் சுவைமிகுந்த பண்கள், பண்ணைகளில் வேலை செய்யும் பெண்களிடம் பழகும் பல பாடல்கள், வட்டமிட்டுப் பெண்கள் கும்மியடிக்கிறபொழுது ஏற்படும் வளைக்கரங்களின் ஒலி, வேயின் குழல், வீணை போன்ற மனிதர்களால் வாசிக்கப்படும் பல கருவிகள் முதலியவற்றிலிருந்து எழுகின்ற வாழ்க்கைப் பாட்டும், இயற்கை இசையும் நாட்டில் மட்டுமல்லாமல் காட்டிலும் ஒலிக்கும் என்னும் பாரதியாரின் வரிகளிலிருந்தே அவரது இசைக்காதலை அறிய முடிகிறது.

 

தெய்வம் என்ற அத்தியாயம்

வேதம் என்பது பாரதத்தின் பொதுச் சொத்து. வீரம் என்பது வேதத்தைச் சார்ந்தெழுந்த நல்லுணர்வு. இவை எல்லாவற்றையும் தன்னகத்தே கொண்டு உலக மாந்தரோடு இணைந்து ஒற்றுமை காண்பதும் உயர்வு அடைவதும் நமது பாரதத்தின் வழியாகும்.

 

ஜாதியும் சமூகமும் என்ற அத்தியாயம்.

குழந்தைகளாகிய உமக்கு ஜாதிகள் இல்லை. நீங்கள் அனைவருமே மேலோர்.

ஒரு மரம் எவ்வளவு காலம் வாழ்கிறதோ அதைப் பொறுத்துத் தான் வைரத்தன்மை பெறுகிறது. வைரம் பாய்ந்த மரத்தை எரிப்பது கூடச் சிரமம். அவை பூமியில் புதைந்து பல காலம் பூமியினுள் வாழ்ந்ததால் கரியாக மாறி அவற்றுள் வைரம் கனன்று விடுகிறது. அது போலவே நமது இந்திய வாழ்க்கைமுறை உலகின் மிகப் பழைய விருட்சமாகும். போர்களாலும் அந்நியக் கொடுங்கோலர்களாலும் மனிதச் சிறுமைகளினாலும் நமது நாகரிக விருட்சம் பல சமயங்களில் புதையுண்டு போயிருப்பதாகத் தோன்றலாம்; ஆனால் அது உண்மை அன்று. நாமே அதனுள் கனியும் வைரங்கள்.

 

என்று பிறந்தது என்று எவரும் அறியாத நம் வேதம் இன்றும் வாழ்கிறது என்று இசை பாடலாம்.

 

ஆணும் பெண்ணும் என்ற அத்தியாயம்

மனித உயிர்களுக்குப் பொதுவாகிய ஞானம் பெண் மக்களுக்குச் சிறப்பாக அமைந்துள்ளது என்பது பாரதி வாக்கு.

பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான்புவி

   பேணி வளர்த்திடும் ஈசன்

மண்ணுக்குள்ளே சில மூடர்நல்ல

    மாதர் அறிவைக் கெடுத்தார்

என்று நமது குரு கடந்த காலத்தில் வாழ்ந்த கருத்துக் குருடர்களின் காது செவிடுபட முரசுப் பாட்டில் முழங்குகிறார்.

 

நமது சமயம் என்ற அத்தியாயம்

பாரதத்தில் பிறந்த எவருமே வேறு மதத்தைத் தழுவாதிருக்கும் பட்சத்தில் ஹிந்துக்களே ஆவர். வடிவங்களையும் வணங்கலாம்; வடிவம் இல்லாமலும் ஆராதிக்கலாம்; இயற்கைக் காட்சியையும் வணங்கலாம். ஏன், ஓர் எறும்பையும் வணங்கலாம் என்பது ஹிந்து தர்மம். இதில் சிறப்பாக அந்தணர் தீயை வணங்குவர். ஞாயிறு வணக்கம் முதில் ஒரு மிருகத்தைத் தொழுவது வரை ஹிந்து மதம் அனுமதிக்கிறது.

 

சமதர்மம் என்ற அத்தியாயம்

நம் குரு பாரதி வாழ்ந்த காலத்தில் உலக அரங்கில் சமத்துவம், சகோதரத்துவம், சமாதானம் என்ற சொற்றொடர்களைப் பல அறிஞர்கள் பிரகடனம் செய்து கொண்டிருந்தனர். இந்த மேலோரின் குரல்களை பாரதி தமது மொழியில் மேலும் சிறப்பாக எதிரொலி செய்து ஏற்றமும் தந்தார்.

 

கல்வி என்ற அத்தியாயம்

நமது எதிர்கால வாழ்க்கைக்கு ஏற்ற தேசியக் கல்விக்கு அவர் வித்திட்டிருக்கிறார். தேசியக் கல்வி குறித்து பாரதி கூறுவனவற்றைக் கேட்போம்.

தேச பாஷையே பிரதானம் என்பது தேசியக் கல்வியின் ஆதாரக் கொள்கை. இதை மறந்து விடக் கூடாது. தமிழ் நாட்டிலே தமிழ் சிறந்திடுகபாரத தேசம் முழுவதிலும் சம்ஸ்கிருதம் வாழ்கநம் பாரத தேசத்தின் ஐக்கியத்தைப் பரிபூரணமாகச் செய்யுமாறு நாடு முழுவதிலும் சம்ஸ்கிருதப் பயிற்சி மென்மேலும் ஓங்குக! தமிழ் நாட்டில் தமிழ் மொழி தலைமையேற்றுத் தழைத்திடுக!

இரண்டாவதாக ஆரம்ப பூகோளம்

மூன்றாவதாக சமயக் கல்வி

நான்காவதாக ராஜ்ய சாஸ்திரம்

ஐந்தாவது பொருள் நூல்

ஆறாவதாக ஸயன்ஸ்

ஏழாவதாகக் கைத்தொழில்

எட்டாவதாக சரீரப் பயிற்சி

ஒன்பது யாத்திரைகளின் மூலம் கல்வி

 

ஒன்பது பகுதிகள் கொண்ட பாரதியின் கல்வித் திட்டத்தை ஜெயகாந்தன் பாரதியின் சொற்களில் முழுமையாகத் தருகிறார்.

 

நூலின் இறுதிப் பாரா இது:-

பாரதி கல்வி தழைப்பதாக! பாரதம் பாரதரால்  சிறந்து நிலைப்பதாக!

குரு வாழ்க! குருவே துணை!!

  நூலின் இந்த இறுதி வார்த்தைகளை நாமும் சேர்ந்து எதிரொலிக்க ஆசைப்படுகிறோம்.

குழந்தைகளுக்காக பாரதியை அறிமுகப்படுத்த ஜெயகாந்தன் எடுத்த வானொலி உரை என்னும் நல்ல முயற்சி இந்த நூலாக மலர்ந்துள்ளது.

பாரதி அன்பர்கள் படித்து பாரதி இயலில் சேர்க்க வேண்டிய நூல் இது!

***

 

அரக்கர் தர்ப்பணம்; கம்பன் அதிசய தகவல்! (Post No.5247)

Written by London swaminathan

Date: 22 JULY 2018

 

Time uploaded in London – 16-27  (British Summer Time)

 

Post No. 5247

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

அரக்கர்கள் பற்றி கம்பன் பல அதிசய தகவல்களை அள்ளித் தெளிக்கிறான். ராமனின் மண்டை ஓட்டில் தர்ப்பணம் செய்ய ஒரு பெண்மணிக்கு ஆசையாம்!!

 

  1. அரக்கர்கள் தவம் செய்து கடவுள்களிடம் வரம் பெற்றனர்.
  2. அவர்கள் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்தனர்.

 

இது மார்கஸீய, திராவிட வாதங்களுக்கு வேட்டு வைக்கும் தகவல்கள். இதைக் கம்பன் ஏராளமான பாடல்களில் கோடிட்டுக் காட்டுகிறான்.

 

 

ராமனின் மண்டை ஓடு தேவை!

 

கர தூஷணர்களை ராமன் வதம் செய்தது ராமாயணத்தின் ஆரம்ப கட்டத்திலேயே வந்து விடுகிறது.

 

அவனது மகன் மனைவி பற்றிய தகவல்களை கம்பன் யுத்த காண்டத்தில் உரைக்கிறான். ராவணன் அனுப்பிய நான்கு கமாண்டர்களையும் (படைத் தளபதிகளையும்) ராம லக்ஷ்மணர்கள் தீர்த்துக் கட்டி விடுகின்றனர். எஞ்சிய சில தலைவர்களில்

ஒருவன் கரனின் மகன். அவன் ராவணனிடம் வந்து, என்ன ஐய? என்னை மறந்து விட்டீர்கள்? என் தந்தையைக் கொன்ற இராமனைக் கொன்று பழி தீர்க்கக் காத்து இருக்கிறேன். அது மட்டுமல்ல. ராமனின் கபாலத்தில் கரனுக்குத்  தர்ப்பணம் செய்ய என் அம்மா ஏங்கிக் கொண்டு இருக்கிறாள். அந்தப் பொன்னாளுக்கு காத்து இருக்கிறேன்.

 

ராவணனும் ‘போய் வா, மகனே! போய் வா’ என் று அனுப்புகிறான். முடிவு தெரிந்த விஷயம்தான். தர்ம வீரர்களின் வில்லாற்றல் முன்பு, சில்லறைகள் நிற்க முடியுமா?

இதோ கம்பன் பாடல்:

கரனின் மகன் மகரக் கண்ணன் செப்பியது:-

அருந்துயர்க் கடலுள் ஆழும் அம்மனை அழுத கண்ணள்

பெருந்திருக் கழித்தல் ஆற்றாள் கணவனைக் கொன்று பேர்ந்தோன்

கருந்தலைக் கலத்தின் அல்லால் கடனது கழியேன் என்றாள்

பருந்தினுக்கு இனிய வேலாய் இன்  அருள் பணித்தி என்றான்

 

-யுத்த காண்டம், மகரக் கண்ணன் வதைப் படலம்

 

பொருள்

என் அன்னை அழுத கண்ணோடு துன்பக் கடலில் உழல்கிறாள்; அவளுடைய கணவனைக் கொன்றவன் (ராமன்)  தலையில் அல்லாமல் வேறு எதிலும் இறந்தவனுக்குச் செய்ய வேண்டிய நீர்க்  கடன்களைச் செய்து முடிக்க மாட்டேன் என்றாள். அதனால் இதுவரை தாலியைக் கூட கழற்றவில்லை. பருந்துகளுக்கு பிண உணவினைக் கொடுத்து மகிழ்விக்கும் ராவணா! இனிய போருக்குச் செல்ல எனக்கு இப்போதே ஆணை இடு.’

 

கும்பகர்ணனின் தர்ப்பண ஆசை!

 

கும்ப கர்ணனும் விபீஷணனும் சந்த்தித்த போது, ‘அண்ணா, நீயும் ராமன் தரப்புக்கு கட்சி மாறி விடு; அது தர்மக் கட்சி; கட்டாயம் வெல்லும் கட்சி’- என்கிறான்.

அதற்கு கும்பகர்ணன் தந்த மறு மொழியில்,

‘தர்மக் கட்சி; தாமரை போல மலரும் கட்சி; வெல்லும் கட்சி என்பதெலாம் உண்மைதான்; ஸத்யமே வெல்லும். ஆனால் உப்பிட்டவரை உள்ளளவும் நினை என்ற தர்மத்தை நீ மறந்தாயோ?  ராவணன் கட்சி தோற்கப் போவதும் உண்மையே; அந்தக் கட்சி படு தோல்வி அடைந்து ராவணன் மட்டும் தனித்து இருப்பதை காண என்னால் முடியாது; அதற்கு முன்னர் நான் யமலோகத்துக்குச் செல்ல ஆசை; எல்லாவற்றுக்கும் மேலாக நாங்கள் எல்லோரும் செத்தால் எங்களுக்குத் தர்ப்பணம் செய்ய, நீர்க்கடன் ஒருவன் வேண்டுமே! ஆகையால் நீ வெற்றி பெறும் ராமர் கட்சியிலேயே இருப்பா யாக! என்கிறான்.

 

இதோ அந்தப் பாடல்:

 

 

ஐய நீ அயோத்தி வேந்தற்கு அடைக்கலம் ஆகி ஆங்கே

உய்கிலை என்னின் மற்று இவ்  அரக்கராய் உள்ளோம் எல்லாம்

 

எய்கணை மாரியாலே இறந்து பாழ்படுவேம் பட்டால்

 

கையினால் எள் நீர் நல்கிக் கழிப்பாரைக் காட்டாய்

 

பொருள்:

 

இராமன் செலுத்தும் அம்பு மழையில் அரக்கர் அனைவரும் அழிவர். அவ்வாறு அழிந்து விட்டால் அயோத்தி வேந்தனிடம் அடைக்கலம் அடைந்த நீ இல்லாவிட்டால் எள்ளுடன் கூடிய நீரைக் கொடுத்து தர்ப்பணம் செய்ய யார் உளர்? இருந்தால் அவரைக் காட்டுவாய்- என்கிறான் கும்பகணன்.

 

ஆக இரண்டு பாடல்களும் தரும் செய்தி யாது?

மார்கஸீயங்களும் திராவிடங்களும், ராவணன் ஒரு பெண்பித்தன்; மாற்றான் மனைவி மீது ஆசை கொள்பவன் என்பதால் கட்டாயம் திராவிடனே என்று சொல்வதெல்லாம் தவறு; அவனும் தர்ப்பணம் வேதம், வேள்வியில் நம்பிக்கை உடையவனே; அரக்கர்களின் தபோ பலமே அவர்களுக்கு அரிய பெரிய ஆற்றலை நல்கியது என்பது தெளிவாகிறது.

 

இது மட்டுமல்ல; இந்திர ஜித், ராவணனிடம் சொல்கிறான்:- ‘’அப்பா என்னிடமும் பிரம்மாஸ்திரம் உள்ளது; லக்ஷ்மணனிடமும் உள்ளது ஆகையால் நான் விட்டால் அவனும் விட்டு வானத்தில் மோதிச் சிதறி விடும்; ஆகையால் நான் போய் குகையில் மாபெரும் யாகம் செய்து அவனைத் தோற்கடிக்க வழி செய்கிறேன் என்கிறான். அந்த யாக விஷயத்தைப் பின்னர் காண்போம்.

 

-சுபம்–

பாரதியார் பற்றிய நூல்கள் – 54 (Post No.5245)

 

Written by S NAGARAJAN

 

Date: 22 JULY 2018

 

Time uploaded in London –   9-36  AM (British Summer Time)

 

Post No. 5245

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

பாரதி இயல்

 

மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 54

ப.ஜீவானந்தம் அவர்களின் ‘பாரதி வழி

 

ச.நாகராஜன்

 

நாடறிந்த தோழர் நல்லவர்.ஜீவானந்தம் பாரதியில் தோய்ந்தவர். பாரதியைப் பரப்பியவர். அவரது உரை மற்றும் கட்டுரைகளை பாரதி வழி என்ற நூலாக நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடட், சென்னை – 98 வெளியிட்டுள்ளது. நான்கு கட்டுரைகள் கொண்ட இந்த நூலின் பக்கங்கள் 128. முதல் பதிப்பு 1964 ஜனவரியில் வெளியானது. ஆறாம் பதிப்பு 1993 மே மாதம் வெளியானது.

1947 அக்டோபர் மாதம் எட்டயபுரத்தில் பாரதி மணிமண்டபத் திறப்பு விழாவன்று ஜனசக்தி பிரசுராலயம் வெளியிட்ட பாரதி வழி நூலின் முதல் கட்டுரையாக அமைகிறது.தேசிய இயக்கத்தின் சகல அம்சங்களையும் அறிந்தவர்களே பாரதியைப் பற்றி முற்றிலுமாக அறிய முடியும் என்று கூறுகின்ற ஜீவா பாரதியை அறிய வைக்க அனைத்து அம்சங்களையும் இந்தக் கட்டுரையில் அழகுற எடுத்துக் காட்டுகிறார்பாரதியின் பாடல் வரிகளுடன்.

பாரதியின் பாடல்களை நாட்டுடமையாக்க வேண்டியதன் அவசியத்தையும் இதில் அவர் வலியுறுத்துகிறார். இப்படிப்பட்ட பலரது வலுவான வேண்டுகோள்களால் தான் பாரதியின் பாடல்கள் நாட்டுடமையாக்கப்பட்டது என்பதை இங்கு குறிப்பிடுவது அவசியம்.

1955ஆம் ஆண்டில் காரைக்குடி கம்பன் விழாவில் கம்பனும் பாரதியும் என்ற தலைப்பில் ஜீவா ஆற்றிய உரை அடுத்த கட்டுரையாக மலர்கிறது.

கம்பனின் பெருமைகளை பாரதியார் சுட்டிக் காட்டிய விதத்தையும் அதில் பொதிந்துள்ள ஆழ்ந்த அர்த்தத்தையும் அழகுற விளக்கும் ஜீவா ஏராளமான மேற்கோள்களை கம்பனின் பாடல்களிலிருந்தும் பாரதியின் பாடல்களிலிருந்தும் தருகிறார்.

கம்பன் என்றொரு மானுடன் வாழ்ந்ததும் என்று பாரதி கம்பனை மானுடனாகச் சித்தரிப்பது ஏன் என்பதை விளக்கும் ஜீவா சுக்ரீவன் ,வேறுள குழுவை எல்லாம் மானுடம் வென்றதம்மா என்று பரவசப்பட்டுக் கூறியதை எடுத்துக் காட்டுகிறார்.

இராமனின் மாண்பையும் புகழையும் ஜீவா விளக்குவது நம்மை பரவசத்திற்குள்ளாக்கும்.

அவரது சொற்கள் இதோ:

இத்தகைய இராவணனைஇன்று போய் நாளை வா என்று சொல்கிறான் மகா மானுடனாகிய இராமன்.

ஹிட்லர் ஆயுதங்களிழந்து தனியாக வந்து, அகப்பட்டுக் கொண்டான் என்று வைத்துக் கொள்வோம். அவனைப் பார்த்து, “ஹிட்லர் ஐயா, இன்று போய் நாளை வாருங்கள் என்று சொல்வார்களா; அப்படிச் சொன்னால் அதைக் கேட்டுச் சிரிக்க மாட்டார்களா? ஹிட்லர் அப்படி முற்ற முற்ற வலுக்குன்றி நின்றால், அப்பொழுதே, அங்கேயே அவனை எமலோகம் அனுப்பிவிட்டுத் தானே மறு காரியம் பார்ப்பார்கள்? அதைத் தானே மிகச் சிறந்த போர்த்தந்திரம் என்று கூறுவார்கள்?

கம்பன் காவியத்தில் இராமன் யாராலும் வெல்ல முடியாத வரம் பெற்றஇராவணேஸ்வரனை மறத்தின் மகா மேருவைஇன்று போய் நாளை வா என்கிறானே, இத்தகைய பேராண்மைப் பாத்திரத்தை எந்தக் காவியத்திலேனும் சரித்திரத்திலேனும் பிரத்தியட்ச வாழ்விலேனும் உலகில் எங்கேனும், என்றேனும் கண்டதுண்டோ?

கம்பன் என்றொரு மானுடன் என்று பாரதி கூறியது எத்துணை மெய்!கம்பன்ஒரு மானுடன்அவன்காவியம்மானிட மகா காவியம். ஐயமில்லை.

ஜீவாவின் வலுவான வார்த்தைகளுக்கு அப்பீல் உண்டா என்ன?

 

அடுத்து 1958ஆம் ஆண்டில் பாரதி தினத்தை யொட்டிஜனசக்தியில் ஜீவா எழுதிய ஏழு கட்டுரைகள் இடம் பெற்றுள்ளது.

பாரதியின் தத்துவ ஞானம் என்ற தலைப்பைக் கொண்ட இந்தக் கட்டுரைத் தொகுதியில் ஜீவா பாரதியின் பன்முகப் பரிமாணங்களைச் சுட்டிக் காட்டுகிறார். ஒரு பொருள் பற்றிப் பல்வேறு இடங்களில் அவன் கூறிய கருத்துக்களை ஜீவா தொகுத்துத் தருவது மிக அழகு.

இறுதிக் கட்டுரையாக அமைவது – ‘பாஞ்சாலி சபதம் புதுமை நயங்கள்’.

இதில், “எளிய பதங்கள், எளிய நடை,எளிதில் அறிந்து கொள்ளக் கூடிய சந்தம், பொது ஜனங்கள் விரும்பும் மெட்டு இவற்றை உடைய காவியம் ஒன்றைத் தருவோன் நமது தாய்மொழிக்குப் புத்துயர் தருவோனாகிறான் என்று பாஞ்சாலி சபதத்தின் முன்னுரையில் பாரதி குறிப்பிடுவதைச் சுட்டிக் காட்டி, ஜீவா அப்படி ஒரு காவியத்தை புதுமை நயங்களுடன் பாரதியார் தருவதை அருமையான உதாரணங்களுடன் தருகிறார்.

மொத்தத்தில் பாரதி வழிபாரதி விருந்து.

பாரதி அன்பர்கள் விரும்பிச் சுவைக்கும் நல்ல புத்தகமாக இது மலர்கிறது!

***

 

‘வாழிய வேதம் நான்கும்’- கம்பன் பாடல் நயம் (Post No.5206)

Written by London swaminathan

 

Date: 11 JULY 2018

 

Time uploaded in London – 7-34 am  (British Summer Time)

 

Post No. 5206

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

கம்ப ராமாயணத்தை இரண்டாவது முறை படித்து வருகிறேன். முதல் முறை படித்து முடித்தது 2004 ஆம் ஆண்டில்! இப்பொழுது ஞாயிறு தோறும் லண்டன் அன்பர்களுடன் மீண்டும் ஸ்கைப் SKYPE CLASS வகுப்பில் படிப்பதால் தொட்டனைத்தூறும் மணற்கேணி போல புதிய சிந்தனை எழுகிறது.

 

ஒரே பாடலில் கம்பன் பல விஷயங்களைச் சொல்கிறான்:

 

வாழிய வேதம்!

வாழிய மநு ஸ்ம்ருதி!

வாழிய பிராஹ்மணர்!

 

அவன் சொல்ல வந்தது இருட்டிப் போச்சு; அதாவது இருள் சூழ்ந்து விட்டது; அதாவது இரவு வந்து விட்டது. அதைச் சொல்லும் போது தனது அரிய பெரிய கருத்துக்களை மல்லிகைப் பூப்போல தெளித்து மணம் பரப்புகிறான்

 

பிராஹ்மணர்களை  — Sorry, Sorry ஸாரி, ஸாரி– அந்தக் கால ‘புலன் அழுக்கற்ற அந்தணாளன் கபிலன்’ போன்ற—‘ஒல்காப் புகழ் தொல்காப்பியன்’ த்ருண தூமாக்னி– போன்ற பிராஹ்மணர்களை- பூலோக தேவர்கள் — பூ சுரர் என்று அழைப்பர். அதைக் கம்பன் இந்தப் பாடலில் ‘தெய்வ வேதியர்’ என்று போற்றுகிறான்.

முதலில் பாடலைப் பாருங்கள்

 

வாழிய வேதம் நான்கும் மனுமுறை வந்த நூலும்

வேள்வியும் மெய்யும் தெய்வ வேதியர் விழைவும் அஃதே

ஆழி அம் கமலக் கையான் ஆகிய பரமன் என்னா

ஏழையர் உள்ளம் என்ன இருண்டன திசைகள் எல்லாம்

–யுத்த காண்டம், நாகபாசப் படலம், கம்ப  ராமாயணம்

 

பொருள்

“என்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் நான்கு வேதங்கள், மனு தர்ம சாத்திரம் முதலிய அறநூல்கள், யாகங்கள், சத்தியம், தெய்வத் தன்மை பெற்ற அந்தணர்கள் அடைய விரும்பும்பேறு அனைத்தும் சக்கரம் ஏந்திய செந்தாமரை போன்ற கைகளை உடைய அந்தத் திருமாலின் உருவமே என்று உணராத மூடர்களின் மனத்தைப் போலத் திசைகள் யாவும் இருண்டு விட்டன.”

 

மாலையில் சூரியன் மறைந்தது; இரவு வந்து விட்டது- இதுதான் அவன் சொல்ல வந்த விஷயம்; அந்த இருள் எப்படி இருந்தது என்றால் நாஸ்தீக மூடர்களின் மனதைப் போல இருண்டு இருந்ததாம்!

 

நாஸ்தீக மூடர்களுக்கு என்ன புரியாது, என்ன தெரியாது?

 

நாலு வேதம்= மநு ஸ்ம்ருதி= சத்தியம்= யாகம்= தெய்வீக பிராமணனர்களின் நோக்கம்= திருமால் —-

என்பதை அறியாதவன் மூடன்; முட்டாள்.

ஆக இரவு வந்து விட்டது என்று வெறுமனே விளம்பாமல் தனது நம்பிக்கை முழுவதையும், உண்மை முழுவதையும் கொட்டித் தீர்த்துவிட்டான் கம்பன்.

 

சுருக்கமாகச் சொன்னல் கடவுள்தான் வேதம், அறநூல்கள், அதைப் போற்றும் உண்மைப் பிராஹ்மணர்.

 

என்றும் வாழும் வேதம் என்பதில் இன்னொரு தாத்பர்யமும் உண்டு! வேத மந்திரமோ ஸம்ஸ்க்ருதமோ என்றும் அழியாது; இதற்கு என்ன சான்று?

 

ஸம்ஸ்க்ருதம் கலக்காமல் ஐந்து நிமிஷம் கூட ஒருவரும் தமிழ் பேச இயலாது. ஒருவேளை ஆங்கிலச் சொற்களைப் போட்டு நிரப்பினால் அதுவும் ஸம்ஸ்க்ருதமே! ஏனெனில் ஆங்கில-ஸம்ஸ்க்ருதத் தொடர்பு உலகமே ஏற்றுக் கொண்ட உண்மை!

 

கம்பன் வாழ்க; தமிழ் வாழ்க; வேதம் வாழ்க!

 

–சுபம்–

புதுமைப்புலவன் பாரதி’ -பாரதியார் நூல்கள் – 53 (Post No.5205)

Written by S NAGARAJAN

 

Date: 11 JULY 2018

 

Time uploaded in London –   6-37 AM (British Summer Time)

 

Post No. 5205

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

பாரதி இயல்

 

மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 53

சுகி சுப்பிரமணியன் அவர்களின் ‘புதுமைப்புலவன் பாரதி

 

ச.நாகராஜன்

 

தமிழ் இலக்கிய உலகம் அறிந்த நூலாசிரியர் டி.என்.சுகி சுப்பிரமணியன் அவர்கள். பாரதியைப் போற்றி இவர் எழுதிய அழகிய விமர்சன நூல் புதுமைப்புலவன் பாரதி. கலைமகள் காரியாலயம் இதை வெளியிட்டதிலிருந்தே நூலின் அருமை பற்றி அறியலாம். முதற் பதிப்பு 1965ஆம் ஆண்டு மார்ச் மாதம் வெளியிடப்பட்டுள்ளது.  107 பக்கங்களைக் கொண்ட இந்த நூலில் 12 அத்தியாயங்கள் உள்ளன.

பாரதியார், பாரதியின் லட்சியங்கள், தமிழ் மொழிக் கவிதை, பெண்மை அல்லது சக்தி, பக்தன் பாரதி, கதையாசிரியன் பாரதி, இசையாசிரியன் பாரதி, நாடகாசிரியன் பாரதி, வசனவளம், பாரதி பாராட்டுகிறார், பாரதியைப் பாராட்டுகிறார்கள், தமிழால் பாரதியும் தமிழுக்குப் பாரதியும் என்ற இந்த அத்தியாயத் தலைப்புகளைப் பார்த்தாலேயே நூல் எத்தகைய கருத்து வீச்சைக் கொண்டிருக்கிறது என்பது விளங்கும்.

அத்துடன் நூலின் குறிப்பிடத்தகுந்த இன்னொரு அம்சம் அத்தியாயங்களில் உள்ள துணைத் தலைப்புகள். மிகத் தெளிவாக சொல்ல வரும் விஷயத்தை அழகுறச் சுருங்கச் சொல்லி விளங்க வைக்கின்றன இந்தத் தலைப்புகள்சூத்திர பாணியில்! ஓவியன் பாரதி, வைணிகன் பாரதி, கடவுளிடம் பெண்மை, மானுடத்தின் பெண்மை, கவிஞன் கடமை, பக்தியில் பாரதி வழி போன்றவை சில தலைப்புகள்!!

நூலின் முதல் அத்தியாயமே பாரதியின் பெருமையை அழகுறச் சித்தரிக்கிறது இப்படி:

மக்கள் சேவை என்றால் என்ன? அறிவை, ஆனந்தத் தேனில் குழைத்துத் தர வேண்டும்; சுருங்கச் சொல்லி விளங்க வைக்க வேண்டும்; கேட்பவருக்கு மட்டுமன்றி வருநாளில் கேட்கப் பிரியங்கொள்பவருக்கும் சேமநிதி யாக்கித் தரவேண்டும்.அறிவை ஆனந்ததேனில்  குழைத்துத் தருவது போல், அறியாமையைப் பொசுக்கிக் காற்றிலே கண்ணுக்குத் தெரியாமல் ஊத வேண்டும்; வீரமுள்ள நினைவுகளிலே மனம் கொடி சுற்றிப் படர வேண்டும் ……. அறிவுக்கு ஒளியும் உடலுக்கு உறுதியும் செவிக்கு இன்பமும் தருவதில் முன் நின்ற சேவகன் பாரதி. தனக்குப் பின்னால் பக்தகோடிகளான  பாராட்டுக்கள் தருவார் இல்லாத போதும் தமிழ்ச் சேவை, தேச சேவையெனும் நந்தாவிளக்கை ஏந்திச் செல்லும் மனத்துணிவும் நெஞ்சுறுதியும் உள்ள பெருமை பாரதியைச் சாரும்.

பாரதியின் இலட்சியங்கள் என்ற அத்தியாயத்தில் பாரதியார் ஆரிய ஸம்பத்து என்பதை விளக்கிய பாராவை மேற்கொள் காட்டி, மூவகைச் செல்வமான அறிவு, ஒழுக்கம், பொருள் யாவும் முப்பது கோடி மக்களின் முழுமைக்கும் பொதுமை என்றார் பாரதி என்பதை அழகுற இந்த நூலாசிரியர் விளக்குகிறார்.

தமிழ் மொழிக் கவிதை என்ற அத்தியாயத்தில், “ கம்பன், வில்லிப்புத்தூரார், இளங்கோ போன்ற கவிஞர்களுக்கு அப்பால், பாரதியிடம் தான் தமிழின் பெருமை, தமிழின் இனிமை யாவும் வந்து குதிபோட்டுக் கைகட்டி நிற்கின்றன என்பதை சான்றுகளுடன் நிறுவுகிறார் சுகி.

பெண்மை அல்லது சக்தி என்ற அத்தியாயத்தில் சிவன் சக்தியை தன் உடம்பில் கோத்ததையும், அயன் வாணிதனை தன் நாவில் அமர்த்தியதையும், திருவை மார்பில் மாதவன் ஏந்தியதையும் அழகுற பாரதி சொல்வதை எடுத்துக் காட்டி இவை உருவகங்கள் என்றும் அவர்கள் நினைவு தவிர வேறு நினைவு இல்லாதவர்கள் என்றும் பாரதி சுட்டிக் காட்டுவது விளக்கப்படுகிறது.

கதையாசிரியன் பாரதி என்ற அத்தியாயத்தில் குயில் பாட்டை ஆய்வு செய்யும் சுகி, மூன்று காரணங்களை கதைப் பொருளாக முன் வைக்கிறார். முதல் காரணம் : அன்றில் சிறுபறவை ஆண் பிரிய வாழாது என்ற தத்துவத்தை நிலைநிறுத்துவதும், பெண்மையின் பெருமையைச் சொல்வதும் குயில் பாட்டின் நோக்கம். அடுத்து இரண்டாவது காரணம் நாயகி பாவமாகக் கொண்டு குரங்கு போன்ற மனநிலையும் மாடு போன்ற பெரும் போக்கும் அழியும் என்பதும் உடலை நம்பி ஆனந்தப் படுவதை விட, நித்தியமான ஆண்டவனைப் பாடலாம் என்பது குயிற்பாட்டின் மற்றொரு தத்துவம். மூன்றாவது காரணம் : பாலப் பருவம், காளைப் பருவம், மனிதப் பருவம் இவற்றைக் கடப்பவர்களே ஆண்டவனை அடைய இயலும் என்பதை நாம் ஊகிப்பது மூன்றாவது காரணம்.

 

பாரதியாரின் வசனங்களையும் கதைகளையும் நூல் நன்கு ஆய்வு செய்கிறது.

“பாரதியாரின் பாவினங்கள் வடிவ அமைப்பிப்போல் பொருள் அமைப்பிலும் புதுமையானவை. தமிழ் மக்கள் அனைவரும் பாட வேண்டும் என்பது அவரது பாட்டுத் திறன். தமிழ் என்பது புலமைக்காக இருப்பதன்று. பொதுமைக்காக இருப்பதாகும் என்பது அவரது சித்தாந்தம்.” என்று இசையாசிரியன் பாரதி என்ற அத்தியாயத்தில் சுகி சுட்டிக் காட்டுகிறார்.

சீன யுத்தத்தில் (1962இல்) பாரதியாரின் பாடல்கள் உத்வேகம் ஊட்டியதைச் சுட்டிக் காட்டி, பாரதியாரின் பாடல்கள் துப்பாகியை விட வலுவுள்ளவை; பீரங்கியைப் போல பலம் தருபவை என்று நம்மை பெருமிதம் கொள்ள வைக்கிறார் இந்த நூலாசிரியர்.

பாரதி பாராட்டியவர்களின் பட்டியலும், பாரதியைப் பாராட்டியவர்கள் சிலரின் கவிதைகளும் இரு அத்தியாயங்களில் இடம் பெறுகின்றன.

முடிவாக பாரதியைப் பற்றி சுகி ரத்தினச் சுருக்கமாக நூலின் இறுதியில் கூறுவது சுவை தரும் ஒன்றாகும் :-

அவன் தொட்டதெல்லாம் இன்பம்; தொட்டதெல்லாம் தொன்மை பட நிற்கும். தொட்டவை துலங்கும். மனித ஜாதி மீது குன்றாத அபிமான உள்ள வள்ளல்! உலகம் காக்க வந்த உத்தமன். கம்பனுக்குப் பின் தோன்றிய கவின் நிலா!

இத் தெய்வமாக்கவிஞனை வாயுற வாழ்த்துவோம்; அவனையும் அவன் கவிதையையும் நாம் மனதில் இறுத்தி வந்தனை கூறுவோம்.

அழகான நூல்; சுகமான விமர்சனம். பாரதி அன்பர்கள் நூலைப் படித்து, பலருக்கும் இக் கருத்துக்களைச் சொல்லலாம்.

***

 

‘பாட்டும் சபதமும்’- பாரதியார் பற்றிய நூல்கள் – 52 (Post No.5170)

Written by S NAGARAJAN

 

Date: 2 JULY 2018

 

Time uploaded in London –   6-24 AM (British Summer Time)

 

Post No. 5170

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

 

பாரதி இயல்

 

மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 52

மது.ச.விமலானந்தம் அவர்களின் ‘பாட்டும் சபதமும்

 

ச.நாகராஜன்

 

பாரதி ஆர்வலர் மது.ச.விமலானந்தம் அவர்களின் பாரதி சபதம் நூலைப் பற்றி சென்ற கட்டுரையில் பார்த்தோம். அந்த நூலுக்கு முன்னால் பாட்டும் சபதமும் நூல் வெளியிடப்பட்டது. அவர் குயில் பாட்டை ஆய்வு செய்து எழுதிய நூல் இது. முதற் பதிப்பு 1962ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தஞ்சவூர் பைந்தமிழ்ப் பண்ணை வெளியீடாக வெளி வந்தது. 72 பக்கங்கள் கொண்ட ஆய்வு நூல் இது.

மகாகவி பாரதியார் தாம் சொந்தமாகவே –  புதுவதாகவே படைத்தும் உள்ளார்; இருந்த ஒன்றைச் சிறந்த ஒன்றாகச் சமைத்தும் இருக்கிறார். முன்னதற்குச் சான்றாக அமைவது குயில் பாட்டு: பின்னதற்குச் சான்றாக விளங்குவது பாஞ்சாலி சபதம் என்று கூறும் நூலாசிரியர், குயில் பாட்டை,

பாரதியின் குயில் பாட்டு கதையின் புதையல்,கற்பனை ஊற்று; காதற் சுவையின் கருவூலம், கவிதைக் களஞ்சியம்; வேதாந்தத்தின் வித்து; வித்தகர் தம் சொத்து.பாரதி பாடிய கதை தழுவிய பாட்டுகதைப் பாட்டு இஃதொன்றே எனலாம்.பாரதியார் தேசீயம், தோத்திரம், வேதாந்தம், காப்பியம், சிறுகதை,கட்டுரை போன்றன பல இயற்றியிருப்பினும், இஃதொன்றே பாரதியின் புதுவது புனைந்த புதுமைப் படைப்பாகும் என்று புகழ்கிறார்.

கற்பனையே யானாலும் வேதாந்தமாக விரித்துப் பொருளுரைக்க யாதானும் சற்றே இடமிருந்தாற் கூறீரோஎன்று பாரதியார் புதிராக ஒரு கேள்வியைப் போட்டாலும் போட்டார் அதைப் பற்றிய ஏராளமான விளக்கங்கள் இன்று வரை தோன்றிக் கொண்டே இருக்கின்றன.

மது .விமலானந்தம் தனது ஆய்வின் படி பல்வேறு விதமாகப் பொருளுரைக்கிறார்.

அவற்றில் சில பகுதிகள் இதோ:

குயிலியைப் பசுவாகவும், சேர இளவரசனைப் பதியாகவும் கொண்டு, மாடன் நெட்டைக் குரங்கன் இருவரையும் எண்ணி நிற்பது பாசவுணர்ச்சியாகவும்; அது போன்றே இப்பிறப்பில்  குயிலைப் பசுவாகவும் (ஆன்மாவாகவும்) பாரதியைப் பதியாகவும்,குரங்குமாடு இரண்டையும் நாடுவதைப் பாசமாகவும் கொண்டால்; பசுவாகிய ஆன்மா,பதியாகிய இறைவனை அடைய விரும்புங்காலை, உலகப் பற்றும் பந்தமுமாகிய பாசம் தடைப்படுத்துகின்றது என்ற வேதாந்தக் கருத்து நன்கு விளங்கும்

உலகம் பொய்; வாழ்வு நிலையற்றது, பார்ப்பன அனைத்தும் பொய்;பரம்பொருளே மெய், உலகம்  ஒரு கனவுக் காட்சி, கனவு முடிந்த பின் கனவுப் பொருள் உண்மையல்ல என்றுணர்வது போன்றே, வாழ்வு முடிந்த பின் உலகப் பொருள் எல்லாம் உலையும் தன்மையன என்கிறது அத்வைதம்இதனைத் தான் பாரதி குயில் பாட்டின் இறுதியில் வைத்து உலகியல் உறுதியாக உணர்த்தியுள்ளாரோ என்று தோன்றுகிறது.

சமூகத்தில் உள்ள குற்றங் குறைகளை மக்கள் இனம் கொண்டே எடுத்தோதி நிறை செய்யும் சமூகச் சிறுகாப்பியமாகவும் இக்குயில் பாட்டினைக் கொள்வர்.

 

அடுத்து அழகு தமிழ்க்குயில் பாட்டின் அருமை பெருமைகளை வகை வகையாகப் பிரித்து விளக்குகிறார் இந்த நூலாசிரியர்.

வர்ணனை, கற்பனை,காதல், இயற்கை போன்ற பல தலைப்புகளில் குயில்பாட்டின் சிறப்புகள் விளக்கப்படுகின்றன.

   கானக்குயிலும் கவிக்குயிலும் என்ற தலைப்பில் மேலை நாட்டுக் கவிஞர்கள் Cuckoo, Skylark, Nightingale போன்ற பறவைகளைப் பாடியதை விரிவாக விளக்கும் நூலாசிரியர் அக்கவிஞர்கள், அவர்கள் பாடிய கவிதைகள் ஆகியவற்றின் பட்டியலையும் தருகிறார்.

வோர்ட்ஸ்வொர்த், ஷெல்லி, கீட்ஸ், மில்டன், எஸ்.டி.கூல்ட் ரிஜ், ஜில் வின்செண்ட், ட் ரம்மண்ட், ஜான் கெபிள், க்ராஷா, ஜான் லோகன்,லாம்ப்ஸன், ராபர்ட் ப்ரிட்ஜஸ்,லேடி வின்சில்சீ ஆகியோரின் படைப்புகளைப் பார்க்கிறோம்; பாரதியின் சிறப்புகளையும் பார்க்கிறோம்.

காதல் காதல் காதல்;

காதல் போயிற் காதல் போயிற்

சாதல் சாதல் சாதல்

என்ற பாரதியின் வரிகளில் அவர் கூறுவது என்ன?

“காதலை உயரியதாகவும், தெய்வ நிலையதாகவும், அதனையே வாழ்வின் ஒளி நெறியாகவும் கருதுபவர் கவி பாரதி; இதனை, “காதல் புரிவீர் செகத்தீரே!, காதலித்துக் கூடிக் களியுடனே வாழாமோ,காதலிருவர் கைப்பிடித்தே.., “காதலினால் மானுடர்க்குக் கலவியுண்டாம், கலவியிலே மானுடர்க்குக் கவலை தீரும்; காதலினால் மானுடர்க்குக் கவிதையுண்டாம், ‘பாட்டினிலே நான் பாட வேண்டி, “ என்று இப்படி பாரதியின் சொற்றொடர்களைத் தொகுத்துக் காட்டி,  வரிசையாக இன்னும் பல மேற்கோள்களைத் தரும் நூலாசிரியர்,

“அத்தகு காதலை நாடுகிறது குயில்.அக்காதல் இன்றேல் முடிவு சாதலே என்கின்றது குயில் என்கிறார்.

பாரதியில் தோய்ந்து, அவரது குயில் பாட்டில் மூழ்கி அதைத் திறம்பட ஆய்வு செய்யும் சிறு நூலாக அமைகிறது இந்த நூல்.

குயில் பாட்டில் மகாகவி விடுத்திருக்கும் புதிரை அவிழ்க்கும் முயற்சியில் இந்த நூல் ஈடுபட்டுப் பல கருத்துக்களை நம் முன் வைக்கிறது.

குயில் பாட்டையும் படித்து, இந்த ஆய்வு நூலையும் படித்தால் நமக்கு அரிய பல கருத்துக்கள் தோன்றும்.

நூலாசிரியர் பாராட்டுக்குரியவர். பாரதியில் தோய்ந்திருக்கும் அன்பர்களுக்கு இந்த நூல் இனிக்கும்.

***

 

 

பாரதியார் பற்றிய நூல்கள் – 51 (Post No.5130)

Written by S NAGARAJAN

 

Date: 20 JUNE 2018

 

Time uploaded in London –  7-31 am  (British Summer Time)

 

Post No. 5130

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

பாரதி இயல்

 

மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 51

மது.ச.விமலானந்தம் அவர்களின் ‘பாரதி சபதம்

 

ச.நாகராஜன்

 

1

பாரதி ஆர்வலர் மது.ச.விமலானந்தம் அவர்கள் தஞ்சாவூரில் சரபோசி மன்னர் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராகப் பணியாற்றியவர். அவர் பாஞ்சாலி சபதத்தை ஆய்வு செய்து எழுதிய நூல் இது. முதற் பதிப்பு 1963ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தஞ்சவூர் பைந்தமிழ்ப் பண்ணை வெளியீடாக வெளி வந்தது. 122 பக்கங்கள் கொண்ட இந்த நூலை காரைக்குடி வி.ஆர்.எம் செட்டியார்,அவ்வை டி.கே.சண்முகம், பாரதியாரின் பேத்தி திருமதி விஜய பாரதி, தமிழ்ப் பேராசிரியர் புலவர் வி..அரங்கசாமி ஆகியோர் பாராட்டியுள்ளனர்.

 

“In his interesting criticism amounting to research, there is a vivid clarity of presentation, emphasizing the acme of central dramatic situations, the glory of the characterization, and the changing medium of expression.”என்று

நூலாசிரியரை வி.ஆர்.எம் செட்டியார் புகழ்ந்துரைக்கிறார்.

தேசியத் திருக்காப்பியம் என்றும், எக்காலத்திற்கும் ஏற்றதற்காலத் தன்மை வாய்ந்தது என்றும், ‘பாஞ்சாலி சபதம் என்பது பாரதியின் சபதமே என்றும் ஆசிரியர் மெய்ம்மறந்து பாராட்டும் பண்பு சுவைக்கத் தகக்து என்று அவ்வை டி.கே.சண்முகம் பாராட்டுகிறார்.

 

திருமதி விஜயபாரதி ஆசிரியரைப் பாராட்டுவதுடன் அவர் பாஞ்சாலியின் சபதம் பாரதியின் சபதமே என்று கூறுவதை ஏற்றுக் கொள்ள இயலாது என்பதையும் நாசுக்காகத் தெரிவிக்கிறார்.

 

 ஆக, பலரது பாராட்டையும் பெற்ற இந்த நூல் தகுதியுடைய ஆராய்ச்சி நூலாக மிளிர்கிறது.

 

 

2

நூலாசிரியர் வியாச பாரதத்தையும் வில்லி பாரதத்தையும் நன்கு ஆய்ந்து படித்தவர். பாஞ்சாலி சபதத்தைக் கரைத்துக் குடித்தவர்.

 

வியாச பாரதத்தில் உள்ள குறைகளாக ஐந்து குறைகளை அவர் சுட்டிக் காட்டுகிறார்.

 

1)வஞ்சனையே உருவான சகுனி துரியோதனனுக்கு பாண்டவர் குறித்து பொறாமை கொள்ளலாகாது என்று கூறுகிறான். வஞ்சக சகுனி இப்படி உரைப்பானா?

 

2)திருதராஷ்டிரன் சூதாட்ட சமயத்தில் திரௌபதியை பணையமாக வைக்கப்பட்ட போது வென்றாகி விட்டதா என்று பலமுறை கேட்டதாக வியாசர் கதையை அமைத்திருக்கிறார்.சூதாட வேண்டாம் என்று துரியோதனனுக்கு நல்லறிவு சொன்ன முதியவரா இப்படிக் கேட்டிருப்பார்?

 

3) தர்மன், ‘திரௌபதி மாதவிடாயாய் இருப்பதால் அவள் ஒற்றாடை அணிந்து வரட்டும்; அதைப் பார்த்து அவையோர் துரியோதனனைத் தூற்றட்டும் என்று ஒருவன் மூலம் சொல்லி அனுப்புவதாக வியாசர் கூறுகிறார். எந்த கணவனாவது இப்படிச் சொல்லி அனுப்புவானா?

 

4) தேர்ப்பாகன் – ஒரு ஏவலன் – திரௌபதியைச் சென்று அழைக்கிறான். இது நடக்கக் கூடிய ஒன்றா?

 

5) தேர்ப்பாகனான பிரதிகாமியையும் துச்சாதனனையும் நோக்கி, ‘பாண்டவர்களைக் கண்டு பயப்படுகிறீர்களா, பயப்பட வேண்டாம், அவர்கள் யாது செய்வர்? என்கிறான் துரியோதனன்.இது துரியனின் ஆற்றலுக்கு இழுக்கு சேர்வதாக அல்லவா அமைகிறது.

ஆக இந்த ஐந்து குறைகளையும் வியாசர் குறைகளாகக் காண்கிறார் நூலாசிரியர்.

வில்லிப்புத்தூராரின் நான்கு குறைகளையும் சுட்டிக் காட்டுகிறார் நூலாசிரியர்.

 

 

3

“அடுத்து பாரதி சபதம் – பாஞ்சாலி சபதம் என்ற அத்தியாயத்தில் தமிழ்த் திறத்தால் நாட்டுப் பற்றை ஊட்டியவர், கண்ணன் புகழ் பாடியவர், பெண்ணின் பெருமையைப் பேசியவர் பாரதியார்.

இந்த மூன்றையும் தனித்தனியே பாடிப் போந்த பாரதிக்கு மூன்றையும் இணைத்துப் பாடும் வாய்ப்பு பாரதக் கதை மூலம் கிடைத்தது.

 

“பாஞ்சாலி சபதம் பாரதி சபதமே என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு: தருமன், பாஞ்சாலியைப் பணையப் பொருளாக வைத்துச் சூதாடிய கொடுமையைப் பொறுக்காது பொங்கி எழுந்தான் வீமன். அங்கே பாரத அன்னையை மனதில் எண்ணிய பாரதியின் வெகுளி தலை காட்டுதல் காணலாம்.

 

   இரு பகடை என்றாய் – ஐயகோ!

       இவர்க் கடிமை யென்றாய்!

   இது பொறுப்ப தில்லை – தம்பி!

       எரி தழல் கொண்டு வா

   கதிரை வைத் திழந்தான் – அண்ணன்

       கையை எரித்திடுவோம்

 

என்பதில் பொருளும் சொல்லும் பழையதாகலாம். ஆனால் பொருளோடு பொருந்திய தொனியும், சொல்லோடு அமைந்த துடிப்பும் அங்கே சீற்றமுற்றுச் சாற்றியது வீமன் அல்லன், வரகவியே என விளங்கும்.

 

“பாரதிக்குக் கண்ணனும் பெண்மையும் இரு கண்கள்; வலக்கண் ஆற்றல் நிலையது – அது தான் ஞாயிறு – வெம்மையது. அதுவே கண்ணன். இடக்கண் அமைதி நிலையது – அது தான் திங்கள் – தண்மையது – அதுவே பெண்.

இரண்டும் வேண்டும். ஆற்றலும் வேண்டும்; அமைதியும் வேண்டும். இதனைத் தான் ‘பாஞ்சாலி சபத வாயிலாக பாரதி உணர்த்துகின்றார்.

 

இப்படி பல விதமாக பாஞ்சாலி சபதத்தை ஆய்வுக் கண்ணுடன் அலசி தன் கருத்துக்களைத் தருகிறார் விமலானந்தம்.

 

4

இப்படி நூலை நுணுகி ஆராய்ந்து பல்வேறு மேற்கோள்களைச் சுட்டிக் காட்டி பாரத அன்னையை மனதில் வைத்து எழுதப்பட்ட  பாஞ்சாலி சபதம் உண்மையில் பாரதியின் சபதமே என்று நிறுவுகிறார் நூலாசிரியர்.

மறுக்க முடியாது.

 

“பாஞ்சாலி சபதம் தரும் இன்பம் இணையற்றது; துயர நிகழ்ச்சி தான்; துயரவுணர்வு தான்; ஆயினும் அந்நிகழ்ச்சியை அனுபவிப்பதால் வரும் இலக்கிய இன்பத்திற்கோ ஈடில்லை

‘பாஞ்சாலி சபதத்தைப் படித்தேன். தேனுண்டேன். தேனுண்ணும் வண்டாகவே நின்றிருக்கலாம். தேனுண்ட மயக்கில் தேனிலேயே வீழ்ந்து விட்டேன். ஆனாலும் திளைத்தேன். அந்தக் கிறுக்கில் தோன்றிய உளறு மொழிகளைத் தான் உங்கள் முன் கொட்டினேன். என்கிறார் மது.ச.விமலானந்தம்.

கிறுக்கு மொழிகளாக இருப்பினும் தேன் மொழிகளாகவே அமைகிறது.

 

பாரதியின் பாஞ்சாலி சபதத்தை பாரதத்துடன் இணைத்துக் காணும் ஆய்வு நூல் இது.

பாரதி அன்பர்கள் விரும்பி ஏற்கும் நூலாகவும் இது அமைகிறது.

 

படியுங்கள்; பாஞ்சாலி சபதத்தை ரசியுங்கள்.

***