அப்பா போல பிள்ளை! காளிதாசன், வள்ளுவன் உவமைகள்! (Post No.3415)

Written by London swaminathan

 

Date: 4 December 2016

 

Time uploaded in London: 7-07 am

 

Post No.3415

 

Pictures are taken from various sources; thanks. They are representational.

 

contact; swami_48@yahoo.com

 

 

ஒரு மகன், அவனது தந்தையின் நல்ல குணங்களை பின்பற்றவேண்டும். மகன் என்பவன், தந்தையின் மறு அச்சு என்று சம்ஸ்கிருத  நூல்கள், கூறுகின்றன. பிரம்மாவுக்கு எப்படி அத்ரி மகரிஷி நல்ல புத்திரனாக இருந்தாரோ, சந்திரன் எப்படி அத்ரிக்கு நல்ல புத்திரனாக இருந்தாரோ , புதன் எப்படி சந்திரனுக்கு நல்ல புத்திரனாக இருந்தாரோ, புரூருவசு மன்னன் எப்படி புதனுக்கு நல்ல புத்திரனாக இருந்தாரோ அப்படி ஆயுஸ் என்ற புதல்வன் அவன் தந்தைக்கேற்ற மகனாகப் பிறந்தான்.

பிரம்மா, அத்ரி, சந்திரன், புதன், புரூருவஸ் – என்று அழகாக ஐந்து தலைமுறைகளை அடுக்குகிறான் காளிதாசன்.

அமர முனி: இவ அத்ரி:ப்ரம்மண: அத்ரே: இவ இந்து:புத: இவ சசினாம்சோ: போதனஸ்ய ஏவ தேவ: பவ : பிது:அனுஸ்த்ரூப: த்வம்

குணை: லோக காந்தை: அதிசயினி சமாப்தா வம்சஏவாசிஷஸ்தே

–விக்ரமோர்வசீயம் 5-21

ரகுவம்சம்

 

ரகு வம்சத்திலும் மகன்கள் பற்றிய அழகிய பாடல்கள் வருகின்றன:-

அத நயன சமுத்தம் ஜ்யோத்ரத்ரேரிவ த்யௌ:

சுரசரிதிவ தேஜோ வன்னிநிஷ்டயூதமைசம்

நரபதி குல மூர்த்யை கர்பமாதத்த ராக்ஞோ

குருபிரபிநிவிஷ்டம் லோகபாலானுபாவ:

–ரகுவம்சம் 2-75

 

பொருள்:

பிறகு ஆகாசம், அத்ரி மகரிஷியின் கண்களிலிருந்து எழுந்த ஒளியாகிய சந்திரனை தரித்தது போலும், கங்கா நதி அக்னி தேவனால் கொடுக்கப்பட்ட பரமசிவனுடைய தேஜசாகிய சுப்ரமண்யனை (தரித்தது) போலும், அரசியான சுதக்ஷிணை ராஜகுலத் தின் க்ஷேமத்தின் பொருட்டு அதிகமான லோகபாலகர்ளின் அம்சங்களினால் பிரவேசிக்கப்பட்ட கர்ப்பத்தைத் தரித்தாள்.

 

லோகபாலகர்களின் அம்சம்: இந்திரன், அக்னி, யமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன் என எண்மர். இவர்களுடைய சக்தி அரசனிடம் பிரவேசிப்பதாக மனு கூறுகிறார். தமிழ் இலக்கியமும் மன்னர்களை இந்திரன் என்றும், அக்கினி என்றும், வாயு என்றும், எதிரிகளுக்கு எமன் என்றும் புகழ்கின்றன.

 

அத்ரியின் கண்களிலிருந்து விழுந்த நீர்த்துளிகளை திக் தேவதைகள் தாங்கவே அது சந்திரனாக மாஇறியது.

 

பரமசிவனுடைய கண்களிலிருந்து விழுந்த ஆறு தீபொறிகளை கங்கை தாங்கவே அது சுப்பிரமணியனாக உருவாகியது என்பது புராணச் செய்திகள்.

தமிழ்ப் புலவர் திருவள்ளுவரும் மகன் தந்தைக்குள்ள உறவைப் பற்றி பேசுகிறார்:

 

மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை

என்னோற்றான் கொல் எனுஞ் சொல் (குறள் 70)

 

அதாவது ஒரு மகன் அவனுடைய தந்தைக்கு எப்படி நன்றி செலுத்துவது? இப்படிப்பட்ட ஒரு நல்ல பிள்ளையைப் பெற இவன் தந்தை என்ன தவம் செய்தானோ? என்னென்ன நோன்புகளைக் கடைப்பிடித்தானோ?

 

ஒரு இந்துவானவன் நல்ல பிள்ளை கிடைக்க கடவுளை வேண்டுவான். மகன், வாழ்நாள் முடியும்வரை தந்தைக்கு சாப்பாடு போட வேண்டும், கை கால் பிடித்துவிட வேண்டும் என்றெல்லாம் வள்ளூவன் சொல்லவில்லை. அவன் தந்தையை விட அறிவாளியாகவும், தந்தையைப் போல குணவானாகவும் இருப்பதே பெரிய கைம்மாறு! இதனால்தான் காளிதாசனும் பிரம்மா முதல் ஐந்து தலைமுறைகளைப் புகழ்ந்து அப்படிக் குணவானாக இருந்தான் அந்தப் பிள்ளை என்கிறான்.

 

ஏனைய இடங்களில் வள்ளுவன் கூறும் கருத்துகளும் சிறப்புடைத்து. பெற்றபோது இருந்த இன்பத்தைவிட, ‘உன் மகன் அறிஞன்’ என்று சொல்லும்போது தாயார் கூடுதலாக மகிழ்வாளாம் (குறள் 69). ஒரு தந்தையினுடைய கடமை, பிள்ளையை நல்ல பள்ளியில் சேர்த்து அவனை வகுப்பில் முதல் மாணவனாகக் கொண்டுவரவேண்டும் என்றும் வள்ளுவன் வலியுறுத்துவான்.

 

தந்தை மகற்கு ஆற்றும் நன்றி அவையத்து

முந்தியிருப்பச் செயல் (குறள் 67)

ஒரு மகனுக்கு தந்தை செய்யக்கூடிய நன்மை யாதெனில் கற்றோர் உள்ள சபையில் தன் மகன் அறிவாளி என்று புகழப்படும் அளவுக்குக் கல்வியை அளிப்பதாகும்.

 

இதே கருத்தை பெரியாழ்வார் திவ்வியப்பிரபந்தத்திலும், திருத்தக்க தேவர் சீவக சிந்தாமணியிலும், கம்பன், ராமாயணத்திலும் கூறுவது ஒப்பிட்டுப் பார்த்து ரசிக்க வேண்டிய பகுதிகளாம்:-

 

என்ன நோன்பு நோற்றாள் கொலோ

இவனைப் பெற்ற வயிறுடையாள்

என்னும் வார்த்தை எய்துவித்த இருடீகேசா

–பெரியாழ்வார் 2.2-6

 

எத்துணைத் தவம் செய்தான் கொல்

என்று எழுந்துலகம் ஏத்த — சீவக.2567

 

வல்லை மைந்தவம் மன்னையும் என்னையும்

எல்லையில் புகழ் எய்துவித்தாய் என்றான்

–கம்ப, சடாயுகாண் படலம் 41

 

–சுபம்–

 

கண்ணாடி புராணம்! ‘அடுத்தது காட்டும் பளிங்கு போல’ (Post No.3412)

Research Article Written by London swaminathan

 

Date: 3 December 2016

 

Time uploaded in London: 8-25 am

 

Post No.3412

 

Pictures are taken from various sources; thanks. They are representational.

 

contact; swami_48@yahoo.com

 

English version of this article is also posted.

கண்ணாடி என்பது நம் நாட்டிலும் உலகில் ஏனைய பழைய நாகரீகங்களிலும் நீண்ட நெடுங்காலமாக புழக்கத்தில் உள்ளது.  இது இந்தியாவில்தான் தோன்றியிருக்க வேண்டும். ஏனெனில் மஹாபாரதத்திலுள்ள பகவத் கீதை முதல் ஆண்டாள் பாடிய திருப்பாவை வரை (தட்டொளி) கண்ணாடியைக் காண்கிறோம். தமிழில் மிகப் பழைய நூல் என்று கருதப்படும் தொல்காப்பியம் முதல் கேரளத்தில் பெருந்தலைவர் நாராயண குரு கண்ணாடிக் கோவில் வைத்தது வரை இது நமது வாழ்வில் இரண்டறக் கலந்திருப்பதையும் காணலாம்.

திருவிழாக் காலங்களில் கன்யாப் பெண்களை வீட்டுக்கு அழைத்து கண்ணாடி, குங்குமச் சிமிழ், சீப்பு கொடுக்கும் வழக்கமும் உளது. தீபாவளி, விஷுக் கனி காணுதலின் போது கண்ணாடியில் முகம் பார்க்கும்/ விழிக்கும் வழக்கமும் உளது.

 

கண்ணாடி உடைவது அபசகுனம் முதலிய பல சகுன சாத்திர தகவலும் உள.

 

மெக்சிகோவில் அஸ்டெக் நாகரீகத்தில் ஒருவர் பெயர் ‘புகைக் கண்ணாடி’. ஜப்பானில் ஆட்சியாளர் மாறும்போது கண்ணடி கொடுப்பர். கண்ணாடி தேவதை அமர்தரேசுவும் இருக்கிறது. எட்ருஸ்கன் நாகரீகக் கண்ணடிகளின் பின்னால் அற்புதமான வரைபடங்கள் உள்ளன.

 

முதலில் வான்புகழ் வள்ளுவன் தேனினும் இனிய தமிழில் செப்பியதைக் காண்போம்

 

 

அடுத்தது காட்டும் பளிங்கு போல் நெஞ்சம்

கடுத்தது காட்டும் முகம் (குறள் 706)

 

பொருள்:-

தன்னை அடுத்த பொருளைக் கண்ணாடி காட்டும்; அதுபோல ஒருவனுடைய உள்ளத்தில் எழும் உணர்வுகளை அவன் முகமே காட்டிவிடும்.

 

 

திருவள்ளுவமாலையில்

 

தினையளவு போதாச் சிறுபுன்னீர் நீண்ட

பனயளவு காட்டும்படித்தால் – மனையளகு

வள்ளைக் குறங்கும் வளநாட வள்ளுவனார்

வெள்ளைக் குறட்பா விரி

-திருவள்ளுவ மாலை, கபிலர்

பொருள்:-

மனையில் வளர்க்கப்படுகின்ற பறவைக் குஞ்சுகள், உலக்கைப் பாட்டால் கண் உறங்குகின்ற வளம் பொருந்திய நாட்டை உடைய மன்னவனே! திரு வள்ளுவனின் குறட்பா அளவில் சிறிது; ஆனால் அது காட்டும் பொருள் மிகப்பெரிது. எப்படியென்றால், புல் நுனியில் படிந்துள்ள பனித்துளி, ஒரு தினையரிசிக்கும் சிறியது; ஆயினும் பக்கத்திலுள்ள பனைமரத்தை அதன் உள்ளே (கண்ணாடி போல) பார்க்கலாம் அல்லவா? -திருவள்ளுவ மாலை, கபிலர்

 

xxx

ஒல்காப் புகழ் தொல்காப்பியன் பகர்வதையும் பார்ப்போம்

 

சூத்திரம்தானே ஆடி நிழலின் அறியத் தோன்றி

நாடுதல் இன்றி பொருள் நனி விளங்க

யாப்பினுள் தோன்ற யாத்து அமைப்பதுவே

தொல்காப்பியம், பொருளதிகாரம் (1425)

 

பொருள்:-

சூத்திரம் என்பது, கண்ணாடிக்குள்  அதன் பிரதிபலிப்பில் ஒரு பெரிய மலையே தோன்றுவது போல, ஆராய்தல் இல்லாமலேயே, கூறப்பெற்றுள்ள பொருள் தெளிவாக விளங்குமாறு அமையும்.  யாப்பினுள் ஏதாவது ஒன்று வடிவமைத்து அமைப்பதாகும்.

 

xxx

 

5000 ஆண்டுப் பழமையான பகவத் கீதை கூறுவதைக் கேளுங்கள்

பகவத் கீதையில் (3-38)

தூமேனாவ்ரியதே வஹ்னிர் யதா தர்சோ மலேன ச

யதோல்பேனாவ்ருதோ கர்ப்பஸ் ததா தேனேதமாவ்ருதம்

 

பொருள்:–

எப்படித் தீயானது புகையால் மறைக்கப்படுகிறதோ, கண்ணாடி அழுக்கால் மறைக்கப்படுகிறதோ, எப்படி கருவானது கருப்பையால் மறைக்கப்படுகிறதோ, அப்படியே காமத்தால், இந்த ஞானம் மறைக்கப்படுகிறது. (3-38)

 

விவேக சூடாமணியில்

ஆதிசங்கரர் தனது விவேக சூடாமணியில் கூறுகிறார்:

யத்ரைச ஜகதா பாஸோ தர்ப்பணாந்தபுரம் யதா

தத் ப்ரஹ்ம்மமிதி ஞாத்வா க்ருத க்ருத்யோபவிஷ்யசி

பொருள்:-

ஒரு கண்ணாடியில் ஒரு நகரத்தின் பிரதிபலிப்பைக் காண்பது போல நீயே பிரம்மம்; இதை உணர்ந்துவிட்டால் பூரணத்துவம் பெறுவாய். பிரபஞ்சமே உன்னிடத்தில் பிரதிபலிக்கிறது.(ஆதி சங்கரர்)

 

 

Etruscan Mirror

காளிதாசனில்

 

ராஜரிஷி வம்சஸ்ய ரவி ப்ரசூதேருபஸ்தித: பஸ்யத கீத்ருசோயம்

மத்த சதாசார சுசே: கலங்க: பயோதவாதாத் இவ தர்பணஸ்ய

 

பொருள்:-

மக்களின் ஆர்வங்களையும் உணர்ச்சியையும் மன்னன் பிரதிபலிக்கிறான். ஆதலின் அரசன் அழுக்கற்ற கண்ணாடியாகத் திகழ வேண்டும் (ரகுவம்சம் 14-37

 

ரவிப்ரஸூதே= சூர்யனிடமிருந்து உண்டானதும்

சதாசார சுசே:= நன்னடத்தையால பரிசுத்தமாக இருப்பதுமான

ராஹர்ஷிவம்சஸ்ய= ராஜ ரிஷியான இக்ஷ்வாகுவின் வம்சத்திற்கு

மத்த:= என்னிடமிருந்து

தர்பணஸ்ய = கண்ணாடிக்கு

பயோதவாதாத் இவ = மேகத்திலிருந்து வந்த காற்றினாலே (மாசு ஏற்படுவது) போல

கீத்ருச: = எப்படிப்பட்ட

அயம் கலங்க: = இம் மாசு

உபஸ்தித: = ஏற்பட்டது

பஸ்யத= பாருங்கள்

 

எப்போதும் தூயதாய் விளங்கும் என் குலத்துக்கு என்னால் அவப்பெயர் வந்துவிட்டதே (மேகம், காற்றினால் வரும் அசுத்தம் எப்படி எளிதில் கண்ணாடியிலிருந்து நீங்குமோ அது போல இதுவும் எளிதில் போய்விடும் என்பது உட்பொருள்; அதாவது நிரந்தர களங்கம் இல்லை)

Greek Mirror

காளிதாசன் சாகுந்தலம் நாடகத்திலும் ரகு வம்சத்தில் பிற இடங்களிலும் கண்ணாடி உவமையைக் கூறுவதால் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் வீடு தோறும் கண்ணாடி இருந்ததும், அதில் நம் குலப் பெண்கள் முகம் பார்த்து அலங்கரித்ததும் நம் மனக் கண் முன் வரும்.

இது போன்ற கண்ணாடி உவமைகள் பிற்கால இலக்கியங்களிலும் இருக்கின்றன. அவைகளைப் பின்னர் காண்போம்.

Mirror Temples! Hindu Wonders!! (Posted on 3 October 2013)

 

 

-Subham-

 

 

 

பார்ப்பானுக்கு அழகு எது? (Post No.3398)

Written by S NAGARAJAN

 

Date: 29 November 2016

 

Time uploaded in London: 5-45 AM

 

Post No.3398

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

சங்க இலக்கிய ஆய்வு – கட்டுரை எண் 14

 

இந்தக் கட்டூரையில் அகநானூற்றில்ல் வரும் 24 ஆம் பாடலில் ஒரு அந்தணன் செய்ய வேண்டியது யாகமே என்று குறிப்பிடப்படும் செய்தி இடம் பெற்றுள்ளது.

 

 

 பார்ப்பானுக்கு அழகு எது? அகநானூறு தரும் பதில்!

 

                       ச.நாகராஜன்

 

அகநானூறு

அந்தணருக்குத் தொழில் எது என அகநானூறில் ஒரு புலவர் தரும் விளக்கம் 24ஆம் பாடலில் வருகிறது.

பாடலைப் பாடியவர் ஆவூர் மூலங்கிழார்.

இவர் வேளாள குலத்தைச் சேர்ந்த பெரும் புலவர். இவரது மகன் தான் பெரும் புகழ் வாய்ந்த சீத்தலைச் சாத்தனார்.

யாகம் பண்ணிய கௌணியன் விண்ணந்தாயனைப் புகழ்ந்து இவர் பாடிய பாடலை புறநானூறு (166ஆம் பாடல்) கட்டுரையில் (கட்டுரை எண் 5) பார்த்தோம்.

கீழே உள்ள பாடலில் புலவர் பிரான், யாகம் பண்ணாத பார்ப்பானுக்கு சங்கறுக்கையே தொழிலாகும் என்று இழித்துக் கூறுகிறார்.

வேளாண்  மரபினரான இவர் அந்தணர் மீதும் வேதம் வகுக்கும் யாகங்களின் மீதும் எவ்வளவு மதிப்பும் மரியாதையும் கொண்டவர் என்பதை இந்தப் பாடல் மூலம் அறிய  முடிகிறது. தலைவன் சொன்னதாகவோ அல்லது படைக்களத்தில் பாசறையில் தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னதாகவோ இந்தப் பாடல் அமைகிறது.

பாடல் இதோ:

வேளாப் பார்ப்பான் வாள் அரம் துமித்த                            

வளை களைந்து ஒழிந்த கொழுத்தின் அன்ன                 

தலை பிணி அவிழா கரி முகப் பகன்றை                      

சிதரல் அம் துவலை தூவலின்  மலரும்                     

தைஇ நின்ற தண் பெயல் கடை நாள்                    

வயங்கு கதிர் கரந்த வாடை வைகறை                   

விசும்பு உரிவது போல வியல் இடத்து ஒழுகி                      

மங்குல் மா மழை தன் புலம் படரும்                            

பனி இருங்கங்குலும் தமியன் நீந்தி                                  

தம் ஊரோளே நன்னுதல் யாமே                               

கடி மதில் கதவம் பாய்தலின் தொடி பிளந்து                           

  நுதி முகம் மழுகிய மண்ணை வெண் கோட்டுச்                            

சிறு கண் யானை நெடு நா ஒண் மணி                             

கழிப் பிணிக் கறைத் தோல் பொழி கணை உதைப்பு

தழங்கு குரல்  முரசமொடு முழங்கும் யாமத்து

கழித்து உறை செறியா வாளுடை எறுழத் தோள்                    

இரவு துயில் மடிந்த தானை                                          

உரவுச் சின வேந்தன் பாசறையேமே

 

வேளாப் பார்ப்பான் என்றால் தனக்கு விதிக்கப்பட்ட நியமங்களைச் சரிவரச் செய்யாத அந்தணன் என்று பொருள் வளை அரம் துமித்த என்றால் நன்கு  கூர்மையாக்கப்பட்ட அரம் என்று பொருள் வளை களைந்து என்றால் அந்த அரத்தினால் வளைகளைக் களைந்து சங்கை அறுத்தல் என்று பொருள்.

         “இது தை மாதத்தின் கடை நாள் அன்று குளிர்ந்த மழைத் துளிகள் விழும் போது துளிர்க்கும் பகன்றை அரு,ம்புகளானவை, யாகம் செய்யாத பார்ப்பான் சங்கு அறுத்து அதில் மிகுதியாக இருக்கும் சங்கின் மேல் பகுதிகளைப் போல  (ஒழிந்த கொழுந்தின் அன்ன தலை) இருக்கிறது” என்கிறார் புலவர்.

வேளாப் பார்ப்பான் எனப்படும் யாகம் செய்யாத அந்தணன் சங்கை அறுக்கும் தொழிலைச் செய்வது இங்கு இழுக்காகக் குறிப்பிடப்படுகிறது.

பெரிய கருத்த  மழை மேகங்கள் வானமே உதிர்ந்தாற் போல மழை பெய்விக்க தெற்கே பனி இருளில் நன்னுதல் கொண்ட  அவள் மட்டும் நகரில் தனியே இருப்பாளே நான் இங்கு போர்க்களத்திலுள்ளேன். சினம் கொண்ட  மன்னன் உறையிலிருந்து எடுத்த வாள் உள்ளே போடப்படாமல் உள்ளது என்று அடுத்துக் கூறும் கவிஞர்  பாடலில் போர் நடைபெறும் களத்தின் கடுமையை விரிவாக விளக்குகிறார்.

இந்தப் பாடலைப் பாடியவர் வேதம் ஓதுதலும் அது வகுத்த விதிமுறைப்படி யாகம் செய்தலுமே அந்தணரின் கடமை என்பதைத் தெளிவாக்குகிறார்!

அகநானூறு பாடல்களை இயற்றியுள்ள புலவர்கள் பல்வேறு ஜாதிகளைச் சேர்ந்தவர்கள். இவர்களுள் ஏற்றத் தாழ்வு இல்லை. தமிழால் இணைந்த ஓர் குல மக்கள் இவர்கள்.

அந்தணர், அரசர், எயினர், இடையர்,கூத்தர், தட்டார்,வணிகர், வேளாளர் ஆகியோர் தமிழின் மீதுள்ள காதலால் பல பொருள் பற்றிச் சிறக்கப் பாடியுள்ளனர். ஒரே சமுதாயமாக தமிழ்ச் சமுதாயம் இலங்கி இருந்தமையை இது காட்டுகிறது.

 

சங்க காலத்தில் அந்தணர்கள் மதிப்புடனும் மரியாதையுடனும் வாழ்ந்ததும், வாழ்த்தப்பட்டதும் தெரிய வருகிறது.

அந்தணர்கள் என்று எடுத்துக் கொண்டால்,

ஆமூர்க் கௌதமன் சாதேவனார்,

கடியலூர் உருத்திரங்கண்ணனார்,

கபிலர்,

கோடிமங்கலம் வாதுளிநற் சேந்தனார்,

செல்லூர்க் கோசிகன் கண்ணனார்,

நக்கீரனார்,

மதுரை ஆசிரியர் நல்லந்துவனார்,

மதுரை இளங்கௌசிகனார்,

மதுரைக் கணக்காயனார்,

மதுரைக் கௌணியன் தத்தனார்,

மாமூலனார் ஆகிய புலவர்களை அகநானூற்றுப் புலவர்களாகக் குறிப்பிடலாம். இவர்களின் பாடல்கள் அகநானூறில் இடம் பெற்றுள்ளன. படித்து மகிழலாம்.

இவர்கள் ஒவ்வொருவரின் சிறப்பைப் பற்றியும் தனியே தான் எழுத வேண்டும்!

******

 

 

பறையருக்கும் இங்கு தீயர் புலையருக்கும் விடுதலை! (Post No.3396)

Written by London swaminathan

 

Date: 28 November 2016

 

Time uploaded in London: 8-16 AM

 

Post No.3396

 

Pictures are taken by Mr Prabhakar Kaza and Mr Aditya Kaza; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

I have already posted it in English

 

 

பிரிட்டிஷ் நாடாளுமன்றக் கட்டிடத்திற்குள் நடைபெற்ற ஜாதிகள் பற்றிய கூட்டத்தில் நான் பேசிய உரையின் இரண்டாம் பகுதி; நேற்று முதல் பகுதி “பிரிட்டிஷ் பார்லிமெண்டில் 2 குட்டிக் கதைகள்” என்ற தலைப்பில் வெளியாகியது. அதைப் படித்துவிட்டு இதைப் படிப்பது நலம் பயக்கும்; பொருள் விளங்கும்.

 

ஆக்ஸ்போர்ட் ஆங்கில அகராதியில் உள்ள “புகழ்பெற்ற” தமிழ்சொல் பறையன். இதை நாள் தோறும் ஆங்கிலேயர்களும் ஆங்கிலப் பத்திரிக்கைகளும் பயன்படுத்துகின்றன. இரண்டு வாரங்களுக்கு முன் நமது வெளியுறவு அமைச்சர் BORRIS JOHNSON சிரியா- இன்டெர்நேஷனல் பறையா—Syria- International Pariah என்று பேசியது பத்திரிக்கைகளில் வெளியானது. நியூயார்க் டைம்ஸ், இன்டெர்நேஷனல் ஹெரால்ட்றிப்யூன், லண்டம் டைம்ஸ்– எந்தப் பத்த்ரிக்கையைத் திறந்தாலும் இந்த தமிழ் சொல்லைப் பார்க்கலாம். இது அறியாமையின் பொருட்டு வந்தது. நான் இந்தச் சொல்லை ஆங்கில அகராதியில் இருந்து நீக்குக என்று பேஸ்புக்கில் FACEBOOK  ஒரு இயக்கமே நடத்தினேன். இதை அகற்ற வேண்டும். நான் தமிழ் நாட்டில் இந்தச் சொல்லை தவறான பொருளில் பயன்படுத்தினால் என்னைக் கைது செய்வர்; சிறைத் தண்டனையும் கிடைக்கலாம்.

 

ஆனால் நீங்கள் இங்கு இன்னும் பயன்படுத்துகிறீர்கள். ஆகையால்தான் நான் சொன்னேன்– ஜாதிப்பிரச்சினையைப் போக சட்டம் தேவை இல்லை. அறிவூட்டுதல் அவசியம் என்று. நாங்கள் எல்லாம் கைவிட்ட சொல்லை ஆங்கிலம் அறிந்தவர்கள்தான் இன்னும் பயன்படுத்தி வருகின்றனர்.

அது சரி: இங்கு சிலர் கூறியது போல ஜாதி வேற்றுமை பிரிட்டனில் இருப்பதாக வைத்துக்கொண்டாலும் சட்டத்தினால் என்ன சாதித்தோம்?

பயங்கர வாத எதிர்ப்புச்சட்டம் இருக்கிறது. ஆனால் CHIEF OF METROPOLITAN POLICE மெட்றோபாலிடன் போலீஸ் தலைவரே அறிக்கை வெளியிட்டுள்ளார். ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் உங்கள் உயிருக்கு நாங்கள் உத்தரவாதம் அல்ல. முடிந்த மட்டும் ஓடுங்கள். அருகில் நின்று ஏதும் அசட்டுத்தனம் செய்யாதீர்கள் (படம் எடுப்பது; செல்பி எடுப்பது); ஓடமுடியாவிட்டால் ஒளிந்து கொள்ளுங்கள் – என்று.

 

போதை மருந்து எதிர்ப்புச் சட்டம் இருக்கிறது; சிறைச்சாலைக்குள்ளும் போதை மருந்து வருகிறது; எங்களால் தடுக்க இயலவில்லை என்று அதிகாரிகள் அறிக்கை வெளியிடுவதை தினமும் நாம் பத்திரிக்கைகளில் படிக்கிறோம். பல போதை மருந்துகளை சட்டபூர்வமாக்குகிறோம்- ஆகையால்தான் சொல்கிறேன்- சட்டங்கள் பயன் தராது- மன மாற்றம் அவசியம்- அறிவூட்டுதல் (Educating) அவசியம் என்று.

சரி! இவ்வளவையும் புறக்கணித்து நீங்கள் ஜாதி என்ற சொல்லை சமத்துவ சட்டத்தில் சேர்த்தால் என்ன நிகழப்போகிறது?

தலித்துகளை கிறிஸ்தவர்களாக மதம் மாற்றுவது அதிகரிக்கும்

விரேந்திர சர்மா போன்றவர் தொகுதியில் அவருக்கு தலித்

வோட்டுகள் அதிகம் கிடைக்கும்.

வீட்டு வேலைக்காரிகளாக வந்த பலர் நஷ்ட ஈடு வழக்குப் போட்டு மில்லியன் கணக்கில் பணம் பறிப்பர்.

வக்கீல்களுக்கு நல்ல காசு கிடைக்கும். பலரையும் தூண்டிவிட்டு வழக்குப் போடச் செய்வர்.

 

இந்த நாட்டுக்கு வந்த எல்லோரும் இதைச் சாக்கு காட்டி பிரிட்டிஷ் குடியுரிமை பெற்று இங்கேயே தங்கிவிடுவர்.

பிரிட்டன் மீது ஒரு நிரந்தரக் கறுப்புப் புள்ளி விழும்.

இந்த சட்டம் நிறைவேற்றப்படும் நாள் பிரிட்டிஷ சட்ட வரலாற்றில் கறுப்பு தினமாக என் போன்றோரால் கருதப்படும்

ஏனெனில் நண்பர்களே!

எங்கள் தமிழ் மக்கள் பத்து லட்சம் பேர் பாரீஸில் வசிக்கின்றனர். அவர்கள் எல்லோரும் இரட்டைக் குடியுரிமை பெற்று பிரான்ஸ் சென்றவர்கள். அவர்கள் யாரும் ஜாதிகள் பற்றிச் சட்டம் இயற்றவில்லை. உலகில் இந்தியாவைத் தவிர இந்த தலித் பிரச்சனை இல்லை. ஆக பிரிட்டன் மட்டும் “எங்கப்பன் குதிருக்குள் இல்லை” என்ற பழமொழி போல உலகில் எங்கள் நாட்டில் ஜாதிப் பிரச்சினை உள்ளது என்று உலகிற்குப் பறை அறிவித்த கதை ஆகிவிடும்.

 

நண்பர்களே!

என் சிற்றுரையை முடிப்பதற்கு முன் உங்கள் எல்லோருக்கும் ஒரு சவால் விடுகிறேன். இந்த அறையை விட்டு வெளியே சென்று ஏதாவது  நூறு இந்து இளஞர்களிடம் ஒரு சர்வே நடத்துங்கள். ஜாதி பற்றித் தெரியும் ஆனால் ஜாதி வேற்றுமை இல்லை என்றே சொல்லுவர். இதை நான் உறுதியாகச் சொல்ல முடியும்.

 

ஆகவே பிரிட்டனில் சட்டத்தில் வேற்றுமை பாராட்டும் விஷயங்களில் ஜாதி என்று சேர்ப்பது சரியல்ல. சட்டம் வேண்டாம் — மக்களின் மன மாற் றமே தேவை — அன்பு, சமத்துவம் என்ற இரண்டையும்  பரப்புவோம்.

நன்றி, வணக்கம்.

-சுபம்-

 

 

அகநானூறு கூறும் பார்ப்பானின் கதை ! (Post No.3395)

Written by S Nagarajan

 

Date: 28 November 2016

 

Time uploaded in London: -5-25 AM

 

Post No.3395

 

Pictures are taken from various sources; they are representational only; thanks.

 

 

 

 

contact; swami_48@yahoo.com

 

 

 

சங்க இலக்கிய ஆய்வு – கட்டுரை எண் 13

இந்தக் கட்டூரையில் அகநானூற்றில் வரும் 337 ஆம் பாடலில் ஒரு அந்தணன் பற்றி வரும் செய்தி இடம் பெற்றுள்ளது.

 

அகநானூறு கூறும் பரிதாபத்திற்குரிய பார்ப்பானின் கதை !

 

                        ச.நாகராஜன்

 

அகநானூறு

 

எட்டுத்தொகை நூல்களில் உள்ள அகநானூறில் வரும் 181ஆம் பாடலில் சிவனையும் நான்மறையையும்  பற்றிய குறிப்பைப் பற்றி சங்க இலக்கிய ஆய்வு – கட்டுரை எண் 3இல் கண்டோம்.

அதே அகநானூறு நல்ல காரியம் செய்ய விழைந்த ஒரு பார்ப்பானின் பரிதாபத்திற்குரிய கதையை பாடல் எண் 337இல் விவரிக்கிறது.

 

பாடலைப் பாடியவர் பாலை பாடிய பெருங்கடுங்கோ. இவர் பாலை பற்றிப் பாடுதலில் சிறந்த கவிஞர்.

அந்தக் காலத்தில் அந்தணர்கள் வேதம் ஓதுவது, யாகம் முதலியன இயற்றுவது தவிர போரை நிறுத்துவது, நல்ல காரியம் நடப்பதற்காக தூது செல்வது போன்ற நற்பணிகளிலும் ஈடுபட்டிருந்தனர்.

 

அப்படி தூது செல்லும் நற்பணியில் ஈடுபட்ட பரிதாப்பத்திற்குரிய ஒரு பார்ப்பான் மிகுந்த ஏழை. அவன் வற்றிய உடலைப் பார்த்தாலே அது தெரியும். அவன் கையிலே வெள்ளோலை என்பப்படும் தூதுச் செய்தி அடங்கிய ஓலையைக் கொண்டு செல்கின்றான்.

 

 

அதைப் பார்த்த  மழவர்கள் அவன் ஏதோ ப்ரிசுப் பண்ம் தான் கொண்டு வருகிறான் என்று அவனை இடைமறித்துக் கொல்கின்றனர். ஒரே குத்து. குடல் வெளியே வருகிறது. ஆனால் எதிர்பார்த்தபடி அவனிடம் பணம் இல்லை. ஓலை தான் இருக்கிறது. கையைச் சொடுக்கி தம்மை நொந்து கொண்டு  மழவர் செல்ல, உருவிக்  குடல் சரியச் செத்துக் கிடக்கும் பார்ப்பனனை ஆண் நரி ஒன்று அணுகுகிறது. அது அந்தக் குடலைத் தின்ற படியே க்ள்ளி மரத்தின் நிழலில் ஓலமிட்டுக் கூக்குரலிடுகிறது.

 

இந்த கடுமையான் காட்டு வழி நிகழ்வின் வர்ணனையை பாலை பாடிய பெருங்கடுங்கோ அழகுற மொழிகிறார்.

இந்தச் சம்பவம் பாடலில் ஏன் வருகிறது?

 

தலைவன் ஒருவன் தலைவியைப் பிரிந்து  முன்னொரு  காலத்தில் ஊரை விட்டுச் சென்று பொருள் ச்மபாதித்து வருகிறான். இப்போதும் அது போலச் செல்ல எண்ணும் போது தன் நெஞ்சைப் பார்த்துச் சொல்லும் பாடலாக இது அமைகிறது.

வெம்மை மிகுந்த காட்டு வழியில் பார்ப்பானுக்கு நேர்ந்த கதியை அவன் நினைவில் கொண்டு வருகிறான். காதலி படவிருக்கும் துயரை எண்ணுகிறான். தான் செல்லும் எண்ணத்தை கை விடுகிறான்.

 

பாடலை முழுதுமாகப் படித்து கருத்தை அறிந்து இன்புறலாம்.

பார்ப்பனர்கள் வெள்ளோலை ஏந்தி அஞ்சாது காட்டு வழியே தூது செல்வதையும் இடை வ்ழியில் ஏற்படும் ஆபத்தில் தன் இன்னுயிரை விடுவதையும் படிக்கும் போது நெஞ்சம் உருகுகிறது.

 

பாடல் இதோ:

 

சாரல் யாஅத்து உயர் சினை குழைத்த

மாரி ஈர்ந் தளிர் அன்ன  மேனிப்

பேர் அமர் மழைக் கண் புலம்பு கொண்டு ஒழிய               

ஈங்குப் பிரிந்து உறைதல் இனிதன்று ஆகலின்

அவணதாகப் பொருள் என்று உமணர்

கண நிரை அன்ன பல் கால் குறும்பொறைத்                       

தூது ஓய் பார்ப்பான் மடி வெள் ஓலைப்                            

படையுடைக் கையர் வருந்திறம் நோக்கி

‘உண்ணா மருங்குல் இன்னோன் கையது                         

பொன் ஆகுதலும் உண்டு’ எனக் கொன்னே                       

தடிந்து உடன் வீழ்த்த கடுங்கண் மழவர்                          

திறன் இல் சிதாஅர் வறுமை நோக்கிச்                       

செங்கோல் அம்பினர் கைந்நொடியாப் பெயரக்                          

கொடிவிடு குருதித் தூங்குகுடர் கறீஇ                         

வரிமால் இயவின் ஒரு நரி ஏற்றை                                

வெண்பரல் இமைக்கும் கண்பறிக் கவலைக்                                

கள்ளி நீழற் கதறுபு வதிய                                     

மழைகண் மாறிய வெங்காட்டு ஆர் இடை                         

எமியம் கழி தந்தோயே – பனி இருள்                 

பெருங்கலி வானம் தலை இய                                  

இருங்குளிர் வாடையொடு வருந்துவள் எனவே

 

 

பொருள்

மலைச்சாரலிடத்தே ஆச்சா மரத்தின் உச்சிக் கிளைகளில் மழை காலத்தில் துளிர்த்த தண்மையான தளிரை ஒத்த மேனி உடையவள் தலைவி. அவளுடைய பெரிய குளிர்ந்த கண்கள் வருந்தி தன் அழகு கெடுமாறு இந்த இடத்திலேயே நம்மைப் பிரிந்து அவள் தனித்து இருக்கும்படி நாம் செல்லுதல் இனிதல்ல. ஆதலால் நெஞ்சே! நீ க்ருதும் பொருளான அதனை அடைதலை நாம் விரும்போம்.(சாரல் யாஅத்து உயர் சினை குழைத்த

மாரி ஈர்ந் தளிர் அன்ன  மேனிப்

பேர் அமர் மழைக் கண் புலம்பு கொண்டு ஒழிய               

ஈங்குப் பிரிந்து உறைதல் இனிதன்று ஆகலின்

அவணதாகப் பொருள் என்று)

 

 

   உப்பு வாணிகரின் பொதிகளைச் சுமந்து செல்லும் கழுதைகளைப் போல குறும்பாறைகள் வரிசையாக அமைந்திருக்கும் இடத்தினூடே , வழக்கமாகத் தூது செல்லும் பார்ப்பான் தன் மடியிலே வெள்ளிய ஓலைச் சுருளுடன் வருகிறான். அவன் வருவதை மழவர்கள் நோக்குவர். ‘உண்ணாமல் இருப்பதினால் வாடிய விலா எலும்பு தெரிய இருக்கின்ற இவன் கையில் இருப்பது பொன்னாக இருக்கும் போலும்’ என்று அவர்கள் கருதுவர். உடனே அவனை வீணாகக் கொன்று வீழ்த்துவர்.கையில் சிவப்புத் தடிகளையும் அம்புகளையும்  உடைய அவர்கள் அந்தப் பார்ப்பானுடைய வறுமையை நோக்கித் தன் கைகளை நொடித்துக் கொண்டு அங்கிருந்து செல்வர்.

 

 

(உமணர்

கண நிரை அன்ன பல் கால் குறும்பொறைத்                      

தூது ஓய் பார்ப்பான் மடி வெள் ஓலைப்                           

படையுடைக் கையர் வருந்திறம் நோக்கி

‘உண்ணா மருங்குல் இன்னோன் கையது                         

பொன் ஆகுதலும் உண்டு’ எனக் கொன்னே                       

தடிந்து உடன் வீழ்த்த கடுங்கண் மழவர்                         

 திறன் இல் சிதாஅர் வறுமை நோக்கிச்                       

செங்கோல் அம்பினர் கைந்நொடியாப் பெயரக்)

 

 

நீள  ஒழுகுகின்ற இரத்தத்துடன் சரிந்து கிடக்கும் அப்பார்ப்பானின் குடலை வரிகளை கொண்ட் வெண்மையான கண்ணைப் பறிக்கும் கூழாங்கற்கள் மின்னும் வழியினூடே ஆண் நரி ஒன்றுக் கடித்துத் தின்றபடியே கள்ளி மரத்தின் நிழலின் கீழ் கூக்குரலிட்டுத் தங்கி இருக்கும்

 

மழையே இல்லாமல் வெம்மை மிகுந்திருக்கும் அந்தக் காட்டு வழியில் முன்பொரு காலத்தில் நடுங்க வைக்கும் இராப் பொழுதில் ஆரவர்ரம் கொண்ட மேகத் திரள் திரண்டு மழை பொழிய, குளிரோடு கூடிய வாடையும் வீச அப்போது நம் தலைவி நம்மை நினைத்து வருந்துவாளே! ஆகவே நீ செல்ல வேண்டாம்!

 

 

(கொடிவிடு குருதித் தூங்குகுடர் கறீஇ                         

வரிமால் இயவின் ஒரு நரி ஏற்றை                               

வெண்பரல் இமைக்கும் கண்பறிக் கவலைக்                                

கள்ளி நீழற் கதறுபு வதிய                                     

மழைகண் மாறிய வெங்காட்டு ஆர் இடை                         

எமியம் கழி தந்தோயே – பனி இருள்                 

பெருங்கலி வானம் தலை இய                                  

இருங்குளிர் வாடையொடு வருந்துவள் எனவே)

 

பொருள் ஈட்ட விழையும் ஒரு தலைவனை காட்டு வழியும் அங்கு அந்தணன் ஒருவனுக்கு நேர்ந்த கதியும் கலங்க வைக்கிறது. அவன் அந்த வழியே முன்பொரு முறை சென்றவன் தான். என்றாலும் கடும் வழியை எண்ணியும் பிரிவை எண்ணியும் அவன் தான் செல்லுகின்ற எண்ணத்தை விடுகிறான்.

நமக்குக் கிடைப்பது, அஞ்சாது காட்டு வழியே சென்று தூதுப்பணி ஆற்ற விழைந்த அந்தணனின் சோகமான முடிவும் தலைவன் தலைவி காதலும் தான்!

 

இன்னும் ஒரு அகநானூறு பாடல் தரும் செய்தியை அடுத்துப் பார்ப்போம்!

********

பிரிட்டிஷ் பார்லிமெண்டில் 2 குட்டிக் கதைகள்! (Post No.3393)

Written by London swaminathan

 

Date: 27 November 2016

 

Time uploaded in London: 7-00 AM

 

Post No.3393

 

Pictures are taken by Mr Prabhakar Kaza and Mr Aditya Kaza; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

I have already posted it in English

 

பிரிட்டிஷ் பார்லிமெண்ட் கட்டிடத்திற்குள் கமிட்டீ ரூம் எண்.12-ல் புதன் கிழமை 23-11-2016 அன்று இந்தியன் போரம் ஆன் பிரிட்டிஷ் மீடியா (INDIAN FORUM ON BRITISH MEDIA) என்ற அமைப்பின் கீழ் ஒரு கூட்டம் நடந்தது. சுமார் 100 பேர் வந்திருந்தனர்.

 

எதற்காக இந்தக் கூட்டம்?

பிரிட்டிஷ் சமத்துவ சட்டத்தில் (Equality Act 2010) வேற்றுமை ஏற்படுத்தக் கூடிய அம்சங்களில் “ஜாதி” (CASTE) என்ற சொல்லையும் சேர்க்க வேண்டும் என்று சொல்லி கிறிஸ்தவ மற்றும் தலித் அமைப்புகள் குரல் கொடுத்து வருகின்றன. நான் சேர்க்கக்கூடாது என்ற தரப்பில் பேசினேன். அப்போது இரண்டு கதைகள் சொன்னேன். பிரிட்டிஷ் எம்.பி. பாப் பிளாக்மேன் முதலானோர் நான் சொன்ன 2 குட்டிக் கதைகளையும் ரசித்துக் கேட்டனர்.

 

நண்பர்களே,

ஜாதி பற்றி நமது பிள்ளைகளுக்குத் தெரியும். ஆனால் ஜாதியின் பேரில் வேற்றுமை காட்டுவது பற்றி அவர்கள் ஏதுமறியார். தூய பால் குடித்துக் கொண்டிருக்கும் நமது பிள்ளைகளின் பாலில் ஜாதி வேற்றுமை என்ற விஷத்தைக் கலந்து விடாதீர்கள். இந்தக் கூட்டத்துக்கு வருவதற்கு முன் நான் ஒரு குட்டி சர்வே (Mini Survey)  நடத்தினேன். லண்டனிலுள்ள எல்லா இளைஞர்களும் ஜாதி வேற்றுமை இந்த நாட்டில் இல்லை என்று சொன்னார்கள். ஒரு வேளை லண்டனுக்கு வெளியே அப்படி ஒரு பிரச்சனை சிறிய அளவில் இருந்தாலும் அதைத் தீர்க்க பல வழிகள் உள்ளன. ஒன்றும் அறியா த நமது அப்பாவி இளைஞர்கள் ஜாதி வேற்றுமையை அறியார். வருங்கால சந்ததியில் இந்தப் பிரச்சினை இந்த நாட்டில் இருக்காது.

 

செருப்பு கண்டுபிடித்த கதை!

உங்களில் பெரும்பாலோருக்கு இக்கதை தெரியுமாதலால் விரிவாகச் சொல்ல மாட்டேன். மிகச் சுருக்கமாக சொல்கிறேன்:-

ஒரு ஊரில் ஒரு அரசன் இருந்தான்.

அவன் மகனின் காலில் முள் குத்தி ரத்தம் குபுகுபு என்று வந்தது.

எல்லா மருத்துவர்களும் வந்து அவனைக் குணப்படுத்தினர்.

ராஜாவுக்கு அப்படியும் கவலை விடவில்லை.

தண்டோரா போட்டான்:

நாட்டு மக்களே! இதனால் சகலமானவர்களுக்கும் நமது மாட்சிமை தாங்கிய மன்னர் அறிவிப்பது யாதெனில்,

இனி, மன்னன் மகன் காலில் முள் தைக்காமல் இருக்க யோசனை சொல்லுவோருக்கு 1000 பொற்காசுகள் அளித்து மன்னன் கவுரவிப்பார்.

 

ஒரு அறிஞர் சொன்னார்:

மன்னர், மன்னவா!

நாடு முழுவதும் கம்பளம் விரித்து காலில் முள் தைக்காமல் செய்வோம்.

மற்றொரு அறிஞர் சொன்னார்:

ராஜாதி ராஜனே!

நாட்டு மக்களுக்கு உத்தரவிடுங்கள்; முள் செடிகள் அனைத்தையும் அகற்றி விடுவார்கள்.

புத்திசாலி மந்திரி எழுந்து சொன்னார்:

மன்னா, இது எல்லாவற்றையும் செய்தால் நமது கஜானா காலியாகிவிடும். எல்லோரும் காலணி (செருப்பு) அணியலாம்.

 

காலணியா? அப்படியானல் என்ன?

 

உடனே அமைச்சர் பெருமான் தான் கண்டுபிடித்த தோல் செருப்பைக் காட்டினார். அன்று முதல் உலக மக்கள் செருப்பு அணியக் கற்றுக்கொண்டார்கள்!

பெரிய பிரச்சனைக்கு சின்ன தீர்வு!

நண்பர்களே!

நம் எல்லோருக்கும் கடவுள் பிரச்சினைகளைக் கொடுத்திருக்கிறான். ஆனால் அதற்கான தீர்வையும் கொடுத்து இருக்கிறான். அதைக் கண்டுபிடித்து எளிய வழியில் தீர்க்கலாம். ஜாதி என்ற சொல்லை சேர்த்து அது பற்றி அறியாத இளம் உள்ளங்களை மாசு படுத்தாமல் அறிவு ஒளி, விழிப்புணர்ச்சியைப் பரப்பி இப்பிரச்சினையை இல்லாமல் செய்வதே புத்திசாலித்தனம் . நாம் எல்லோரும் காலணி போன்ற அறிவு அணியை அணிந்தால் எளிய வழியில் பிரச்சினை தீரும்.

 

எனக்கு முன் பேசிய தலித் ஆதரவாளர்கள் ஏதோ பெரியபிரச்சினை இருப்பதாக அனல் கக்க பேசினார்கள். இதை ஆங்கிலத்தில் பூதத்தை உருவாக்கி சண்டை போடுவது Creating a phantom and fighting with it என்று சொல்லுவர். ஏன் இல்லாத பிரச்சினைகளை விசிறிவிட்டுப் பெரிதாக்கப் பார்க்கிறீர்கள்?

 

கிருஷ்ணனை மிரட்டிய பேய்க் கதை

இதோ இந்த பேய்க்கதையைக் கேளுங்கள். மிகச் சுருக்கமாகச் சொல்லுவேன்:

 

பஞ்ச பாண்டவர்கள் காட்டில் வசித்தனர். அவர்களது கூடாரத்தைக் காவல் காக்கும் பொறுப்பு கிருஷ்ணனுக்கும் சாத்யகிக்கும் வந்தது. இந்துக்கள் இரவு நேரத்தை 4 ஜாமங்களாகப் பிரித்து வைத்துள்ளனர். சாத்யகி சொன்னான்:

கிருஷ்ணா! முதல் ஜாமம் நான் காவல் காப்பேன், இரண்டாம் ஜாமமும் நா லாம் ஜாமமும் உன்னுடைய முறை.

 

கண்ணனும் சரியென்று தலை அசைத்தான்.

 

முதல் ஜாமம்; கூடாரத்துக்கு வெளியே சாத்யகி நின்றான். மரத்திலிருந்து ஒரு பேய் (பிரம்ம ராக்ஷசன்) குதித்தான். கடுகு அளவுதான். ஆனால் சத்தமோ இடி முழக்கம் சாத்யகியைக் கேலி செய்து சண்டைக்குச் சீண்டினான்; சாத்யகி அவனைக் காலால் நசுக்க முயன்றபோது அது கால் பந்து (Foot Ball) அளவுக்கு பெருகியது. சாத்யகி ஒரு உதை விட்டவுடன் அது பெரிய பூசனிக்காய் (Pumpkin) அளவுக்கு உருவெடுத்தது . அதை ஓங்கி அடித்தவுடன் அது சாத்யகியையும் விடப் பெரிதாகி ஒரே அடியில் சாத்யகியை விழுத்தாட்டியது. சாத்யகி மயக்கம் அடைந்தவுடன், பேய் மரத்துக்கு மேல் ஏறிவிட்டது.

 

முதல் ஜாமம் முடிந்தவுடன் தப்பித்தோம், பிழைத்தோம் என்று சாத்யகி ஓடிப்போய்,

கிருஷ்ணா! உன் முறை; வெளியே போய்க் காவலுக்கு நில் என்றான்.

 

கிருஷ்ணன் வெளியே நின்றான். பிரம்ம ராக்ஷஸ் பேய் மரத்திலிருந்து குதித்தது; கடுகளவே இருந்த அந்த உருவம் கன்னா பின்னா என்று சத்தம் போட்டுக் கிருஷ்ணனைச் சண்டைக்கு அழைத்தது. கிருஷ்ணன அதைப் பார்த்து

அட; ஆணழகா!  உன்னைப் போல அழகான ஒரு உருவத்தை நான் கண்டதேயில்லை; பக்கத்தில் வா என்று அழைத்து தட்டிக் கொடுத்தான். அது கூனிக் குறுகி சிறியதானது. அதைத் தட்டிக் கொடுத்துப் பாராரட்டப் பாராட்ட, அது மிகமிகச் சிறியதாகி மறைந்தே போனது.

மூன்றாம் ஜாமம்; சாத்யகி வந்தான்; பழைய கதைதான்— அடி, குத்து மயக்கம்.

நாலாம் ஜாமம் கண்ணன் வந்தான்; பழைய கதைதான்; பாராட்டு சீராட்டு; பேயின் மறைவு.

 

காலையில் கிருஷ்ணனுன் சாத்யகியும் சந்தித்தனர்.

சாத்யகி: கண்ணா, நேற்று இரவு எப்படி இருந்தது?

கண்ணன்: சுகம் சுகமே. அருமையாகக் கழித்தேன்.

 

(எல்லாம் அறிந்த கண்ண பரமாத்வுக்கு தெரியாதது என்ன?)

 

சாத்யகி வெட்கப்பட்டுக் கொண்டே தனக்கு ஏற்பட்ட அவமானம் அடி, குத்து, உதை, மயக்கம் எல்லாவற்றையும் சொல்லி,

உன்னை அந்தப் பேய் ஒன்றுமே செய்யவில்லையா? என்று கேட்டான்.

எல்லாம் அறிந்த கண்ணன் புனன்னகைத்துச் சொன்னான்:

அப்பனே, சாத்யகி! பிரச்சினை ஒன்று வந்தால் அதை எதிர்த்தால் அது பெரிதாகும்; அதை எதிர்க்காமல் தட்டிக் கொடுத்தால் பிரச்சினை மறைந்துவிடும். உனக்கு விழுந்த அடி,  குத்து, உதை எல்லாவற்றையும் நான் அறிவேன் என்று சொல்லி சிரித்தான்.

 

நண்பர்களே!

 

நாம் இந்த ஜாதிப் பிரச்சினையை சாத்யகி போலப் பெரிதாக்க வேண்டுமா? கண்ணன் போல சிறிதாக்கி மறையச் செய்ய வேண்டுமா? தயவு செய்து சிந்தியுங்கள்.

மக்களுக்கு அறிவுபுகட்டி விழிப்புணர்ச்சி ஏற்படுத்துவதே சாலச் சிறந்தது.

ஆக்ஸ்போர்ட் ஆங்கில அகராதியில் (OXFORD ENGLISH DICTIONARY) பறையன் PARIAH என்ற தமிழ் சொல் இருக்கிறது அதை அகற்ற நான் போராடியதைச் சொல்கிறேன். கேளுங்கள்……………..

 

தொடரும்………………………..

 

ஆண்களுக்கு உயிர் ‘வேலை’, பெண்களுக்கு உயிர் ‘கணவன்’:தமிழர் கொள்கை (Post No.3391)

Written  by London Swaminathan

 

Date: 26 November 2016

 

Time uploaded in London:19-11

 

Post No.3391

 

Pictures are taken from various sources; they are representational only; thanks.

 

 

 

 

contact; swami_48@yahoo.com

 

 

வினையே ஆடவர்க்கு உயிரே!

 

நாலு ஆண்டுகளுக்கு (மார்ச் 31, 2012) முன் புறநானூற்றில் பகவத் கீதை-பகுதி-2 ல் குறுந்தொகைப் (135) பாடலைக் குறிப்பிட்டிருந்தேன். இப்பொழுது விரிவாகக் காண்போம்

 

ஆண்களுக்கு வேலைதான் முக்கியம் (உயிர் போல)

பெண்களுக்கு கணவந்தான் முக்கியம் (உயிர் போல)

 

யார் இதைச் சொன்னது பாலை பாடிய பெருங்கடுங்ன்கோ; இதோ முழுப்பாடல்.

 

வினையே ஆடவர்க்கு உயிரே வாணுதல்

மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிர் என

நமக்கு உரைத்தோரும் தாமே,

அழா அல் தோழி! அழுஙுவர் செலவே

குறுந்தொகை 135

 

பாலை பாடிய பெருங் கடுங்கோ (குறு.135) கூறுகிறார்: தொழில் தான் ஆண் மக்களுக்கு உயிர். இல்லத்தில் வாழும் பெண்களுக்கு கணவனே உயிர்.
இதை நமக்குச் சொன்னவரும் உன் கணவன்தான்.  ஆகையால் அழாதே! கணவர், உன்னை விட்டுப் பிரிந்து செல்ல மாட்டார் (என்று தோழி கூறினாள்).

 

இதில் உள்ள தொழிலே ஆடவர்க்குயிர் என்ற கருத்து 5000 ஆண்டுகளுக்கு முன்னால் கண்ணபிரான் பகவத் கீதையில் சொன்ன கருத்தாகும்

கீதையில் கண்ணன் கூறுகிறான் (3-5, 3-8):

எவனும் ஒரு வினாடி கூட கருமம் செய்யாமல் இருக்க முடியாது. நீ விதிக்கப்பட்ட கடமையைச் செய். கருமம் செய்யாமையினும் கருமம் செய்தல் சிறந்தது அன்றோ.

ந ஹி கச்சித் க்ஷணமபி ஜாது திஷ்டத்ய கர்மக்ருத் (பகவத் கீதை 3-5)

ஜாது- ஒருபோதும்

க்ஷணம் அபி -ஒரு வினாடி கூட

கச்சித் – எவனும்

அகர்மக்ருத்- வேலை செய்யாமல்

ந ஹி திஷ்டதி – நிற்பது இல்லை.

 

நியதம் குரு கர்ம த்வம் கர்ம ஜ்யாயோ ஹ்யகர்மண:

சரீர யாத்ராபி ச தே ந ப்ரசித்யேதகர்மண: (3-8)

 

நீ உனக்கு விதிக்கப்பட்ட பணியைச் செய்; ஒன்றுமே செய்யாமல் இருப்பதைவிட ஒரு பணியைச் செய்வது சிறந்ததன்றோ! ஒருவன் ஒன்றுமே செய்யாமல் இருந்தால் உடலைப் பராமரிப்பதும்கூட முடியாது.

 

கருமம் செய்வதற்கே உனக்கு அதிகாரம். அதன் பற்றில் அல்ல(2-47)

கர்மண்யேவ அதிகாரஸ்தே மா பலேஷு கதாசன (2-47)

கருமமே கண்ணாயினார்

 

பணியைச் செய்வது உன் கடமை; அதன் பலனை எதிர்பார்த்துச் செய்யாதே

வள்ளுவனும் இக்கருத்தை வலியுறுத்துவான்:-

 

இன்பம் விழையான் வினை விழைவான் தன் கேளிர்

துன்பம் துடைத்தூன்றும் தூண் (குறள் 615)

 

தனக்கு என்று ஒரு இன்பத்தையும் விரும்பாமல், மேற்கொண்ட செயலை முடிப்பவன், சுற்றத்தாரைத் தாங்கும் தூண் போன்றவன் ஆவான். அவன் சுற்றத்தாரின் துன்பத்தைத் தீர்ப்பான்.

 

இந்தக் குறளை குமர குருபரர் எழுதிய பாடலுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம். நீதி நெறி விளக்கத்தில் 53ஆவது பாடலாக இது மலர்கிறது.

மெய் வருத்தம் பாரார், பசி நோக்கார் கண் துஞ்சார்,
எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார் – செவ்வி
அருமையும் பாரார், அவமதிப்பும் கொள்ளார்
கருமமே கண்ணாயினார்

 

இதன் பொருள்: ஒரு காரியத்தைச் செய்ய வேண்டுமென்று முனைப்புடன் இறங்கியவர்கள் தனது உடலில் உண்டாகும் நோவைப் பொருட்படுத்தமாட்டார் பசியைப் பார்க்க மாட்டார், தூங்க மாட்டார், யார் தீங்கு செய்தாலும் அதைப் பொருட்படுத்த மாட்டார்,காலத்தின் அருமையைப் பற்றியும் கவலைப்படமாட்டார். அடுத்தவர் கூறும் அவமதிப்பான சொற்களைக் கேட்கமாட்டார் தங்கள் காரியத்திலேயே கண்ணாயிருந்து அதில் வெற்றி பெறுவதிலேயே கவனமாக இருப்பார்.

 
–Subham–

பாரத தேசத்தின் மஹிமை! (Post No.3389)

 

GREATNESS OF INDIA,THAT IS BHARAT

Written by S NAGARAJAN

 

Date: 26 November 2016

 

Time uploaded in London: 5-36 AM

 

Post No.3389

 

Pictures are taken from various sources; they are representational only; thanks.

 

 

 

 

contact; swami_48@yahoo.com

 

 

பாரில் உள்ள தேசங்களில் எங்கள் தேசம் உயர் தேசம்.

 

பாரத தேசத்தின் மஹிமை!

 

ச.நாகராஜன்

 

 

மனிதப் பிறவி என்பது மிகவும் அரிதாகக் கிடைக்கும் ஒன்று என்பது நமது அற நூல்களின் முடிபு. அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது என்றார் ஔவையாரும்,

அப்படிப்பட்ட மனிதப் பிறவியும் பாரத தேசத்தில் கிடைப்பது அரிதிலும் அரிது.

 

 

இதை பாகவதம் நன்கு விளக்குகிறது.

பாகவதத்தின் ஐந்தாம் ஸ்கந்தத்தில் 17ஆம் அத்தியாயத்தில் கீழ்க்கண்டபடி பாரத தேசத்தின் தனித்தன்மை கூறப்படுகிறது:

 

“இந்த ஜம்புத்வீபத்திலும் பாரத வர்ஷமே கர்ம கக்ஷேத்ரமாம்!”

 

கர்ம பூமியாகிய பாரத தேசத்தின் பெருமையை ஐந்தாம் ஸ்கந்தம் இருபதாவது அத்தியாயம் நன்கு விளக்குகிறது.

 

 

அதில் சில பகுதிகள்:

 

“கல்ப காலம் முடியும் வரையும் சுகங்களை அனுபவித்து மீளவும் பிறக்கும் படியான சுவர்க்க லோகத்தைக் காட்டிலும் அல்பமான ஆயுளை உடைய மானிடர் வசிக்கும்படியான பாரத பூமியில் பிறப்பது மேலானது.

 

“பாரத வர்ஷத்தில் பிற்ந்த மனிதர்கள் நிலையற்றதான மனித சரீரத்தினால் செய்யும் செயல்களைப் பகவானிடத்தில் அர்ப்பணம் செய்து மனச்சிறப்புடன் அவ்னை உபாசித்து ஜன்ம ஜரா  மரணம் முதலிய பயங்களின்றி விஷ்ணுவின் ஸ்தானமாகிய வைகுண்ட லோகத்தை அடைகின்றனர்.

 

“ப்ரம்ம லோகத்தில் அந்த பகவானுடைய கதைகளாகிற அம்ருத நதிகள் கிடைக்காது.

அந்த நதிகளைப் பணியும் தன்மை உடையவரும் சாதுக்களின் லட்சணம் அமைந்தவ்ருமாகிய பாகவதர்கள் கிடைக்க மாட்டார்கள்.

 

“நாம் குறைவறச் செய்த யாகம் ப்ரவசனம் முதலிய புண்ய கர்மம் சுவர்க்க சுகத்தைக் கொடுத்து மிகுந்திருக்குமானால்  அந்தப் புண்ய கர்மத்தினால் நமக்குப் பாரத தேசத்தில் பகவானை நினைக்கும்படியான மனித ஜன்மம் உண்டாகுமாக. பகவான் அந்நினைவுடன் தன்னைப் பணிகின்றவர்களுக்கு மோக்ஷ சுகத்தைக் கொடுக்கிறான் அல்லவா!”

 

 

முழுப் பகுதியையும் பாகவதத்தில் படித்து நாம் பாரத தேசத்தில் பிறந்ததை எண்ணி மகிழலாம்.

 

உரிய கர்மங்களைச் செய்து உய்யலாம்!

 

ஆங்கிலத்தில் படிக்க விரும்புபவர்களுக்குச் சில பகுதிகள் ஆங்கிலத்தில் கீழே தரப்படுகின்றன:

 

 

“Preferable to attainment of Swarga, the abode of those who live for a whole Kalpa, and from where return to birth (Samsara) is inevitable, is birth in land of Bharata with the shortest span of  life; for here the thoughtful can in a moment get rid of his Karma and permanently attain the feet of Sri Hari.

 

“Jivas, who having been born in this land of Bharata, do not endeavour  to attain Moksha (liberation), get caught (in the meshes of Samsara), again and again, like birds of a forest.

 

 

“ O, blessed are the sons of the land of Bharata, for Sri Hari, the one perfect Lord of all, delightfully accepts all their offerings, when they offer them to gods, invoking them with mantras under different names.

 

“ Therefore, the gods also desire to be born on the sacred land of Bharata in order to store up great, inexhaustible merit.

 

“He who having been born in the land of Bharata sets his face against righteous duties is like unto him who abandons the cistern of nectar and gives preference to a pot of poison.

 

“He who neglects the worship of Vasudeva and takes to wicked actions is like unto him who necglects the Kamadhenu (the cow of plenty) and thirsts after the  milk of Aka plant.

 

“ In this manner the celestials praise the land of Bharata. Those who having been born here, get addicted only to worldly objects, are certainly deluded by Sri Hari’s Maya.”

 

(Srimad Bhagavata V 20)

மேலே சில பகுதிகளே தரப்பட்டுள்ளன.முழு அத்தியாயத்தையும் படிக்கும் ஆர்வத்தை இந்தப் பகுதிகள் ஊட்டும் என்பதில் ஐயமில்லை!

**********

கண்ணே! கண்மணியே! காளிதாசன் உவமைகள் (Post No.3388)

Written  by London Swaminathan

 

Date: 25 November 2016

 

Time uploaded in London:18-59

 

Post No.3388

 

Pictures are taken from various sources; they are representational only; thanks.

 

 

 

 

contact; swami_48@yahoo.com

 

 

 

 

எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் என்பதிலிருந்தும், குழந்தைகள்ளைக் “கண்ணே! கண்மணியே!” என்று கொஞ்சுவதிலிருந்தும் கண்ணின் முக்கியத்துவத்தைத் த்மிழர்கள் நன்கு அறிவர். வள்ளுவன் என்ன சலைளைத்தவனா?

 

கல்லாதவர் அனைவரும் குருடர்களுக்குச் சமம் என்று சொல்லிக் கல்வி அறிவைக் கண்ணுக்கு நிகராக்கினார்:

கண்ணுடையவர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு

புண்ணுடையர் கல்லாதவர் (குறள் 393)

 

திருக்குறளிலும் சங்க இலக்கியத்திலும் ஏராளமான இடங்களில் கண் என்ற சொல் கையாளப்பட்டாலும் பெரும்பாலும் பெண்களின் கண், பார்வை என்று காமப் பகுதிப் பாடல்களில் போய்விடுகின்றன.

 

காளிதாசனின் சில அருமையான கண் உவமைகளைப் பார்ப்போம்:-

 

சிவனை நோக்கி பார்வதி கடுமையான தவம் நோற்கிறாள். அதை குமார சம்பவத்தில் வருணிக்கும் காளிதாசன் சொல்கிறான்:-

 

சிலாசயாம் தாமநிகேத வாசினீம்நிரந்தராசு அந்தரவாத வ்ருஷ்டிசு

வ்யலோகயன் உன்மிஷிதை: தடின்மை: மஹாதப: சாக்ஷ்ய இவ ஸ்திதா: க்ஷபா: (5-25)

 

இரவும் பகலும் பாராது பாறை மீது நின்று, பார்வதி தவம் செய்கிறாள்; அப்பொழுது மின்னல் ‘பளிச் பளிச்’ என்று அடிக்கிறது. அது பார்வதியின் தவத்தைப் பார்க்க விண்ணுலகமே கண் திறந்து பார்ப்பது போல இருந்ததாம். இயற்கையில் நடக்கும் மின்னல் வெட்டை காளிதாசன் அழகாகப் பயன்படுத்தும் போது அவள் இரவு பகல் பாராது, இடி மின்னல் பாராது கடும் தவம் இயற்றிய காட்சி நம் கண்ணுக்கு முன்னே வந்துவிடுகிறது!

 

 

இன்னொரு இடத்தில் இரவு நேரத்தில் இதழ் மூடிய தாமரையைநிலவின் கண் என்றும் அவை இரவு நேரத்தை முத்தமிடுகின்றன என்றும் வருணிக்கிறான். இரவு என்னும் காதலியை நிலவு என்னும் காதலன் முத்தமிடுகிறான் என்று சொல்லுவதோடு மேலும் சில காட்சிகளையும் புகுத்துகிறான். நிலவின் கிரணங்கள் இருளில் ஊடுருவிப் பாய்ந்தது, பெண்ணின் தலை முடியைக் கோதி விடுவது போலும் அங்கே இருந்த இதழ் மூடிய தாமரை, இக்காட்சியைக் கண்டு ரசிக்கும் கண் என்றும் சொல்லுவான்.

அங்குலீபி: இவ கேச சஞ்சயம்சன்னிக்ருஹ்ய திமிரம் மரீசிபி:

குட்டமலீக்ருத சரோஜ லோசனம் சும்பதி இவ ரஜனிமுகம் சசி (8-63)

 

உன்னைப் பார்த்து, நதிக் காதலி கண் அடிப்பாள்!

 

மேக தூதத்திலும் பல இடங்களில் கண் உவமை வருகிறது.

 

கம்பீராயா: பயசி சரித சேதசீவ ப்ரசன்னே

சாயாத்யாமபி ப்ரக்ருதி சுபகோ லப்ய்ஸ்யதே தே ப்ரவேசம்

தஸ்மதஸ்யா குமுத விசதான்யர்ஹசி த்வம் ந திர்யதி

மோகிகர்தும் சடுல சபரோ (40)

மேகமே! நீ செல்லும் வழியில் கம்பீரா என்ற நதி வரும். அவள் உன் காதலி. அவளிடம் ஜம்பத்தைக் காட்டாதே. அவள் காதலை பகிரங்கமாக புலப்படுத்த மாட்டாள். ஆனால் அதில் துள்ளி ஓடும் சபரம் என்ற வெள்ளி நிற மீன்கள்தான் அவளுடைய கண்கள். அவற்றின் மூலம் உன்னைப் பார்ப்பாள்; அவள் மிகவும் தெளிவான நதி. ஆகையால் நீ விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் உன் நிழல் அந்த நதியில் விழும். அத்ன் மூலம் நீ அவள் மனதை ஊடுருவிச் செல்லலாம். வாய்ப்பை நழுவ விடாதே (மேகதூதம் 40)

பட்டினப்பாலை, மதுரைக் காஞ்சியில் அந்தணரும் வேதமும் ! (Post No.3374)

Written by S Nagarajan

 

Date: 21 November 2016

 

Time uploaded in London:5-36 am

 

Post No.3374

 

Pictures are taken from various sources; they are representational only; thanks.

 

 

 

contact; swami_48@yahoo.com

 

 

சங்க இலக்கிய ஆய்வு – கட்டுரை எண் 10

இந்தக் கட்டூரையில் பத்துப்பாட்டில் உள்ள பட்டினப்பாலை, மதுரைக் காஞ்சி  ஆகிய நூல்களில் வேதம், அந்தணர் பற்றி வரும் சிறப்பான செய்திகள் இடம் பெற்றுள்ளன

 

  பட்டினப்பாலை, மதுரைக் காஞ்சியில் அந்தணரும் வேதமும் !

 

                      ச.நாகராஜன்

 

பட்டினப்பாலை

பத்துப்பாட்டில் உள்ள பட்டினப்பாலையைப் பாடியவர் கடியலூர் உருத்திரங்கண்ணனார். பாட்டுடைத் தலைவன் பெரும் புகழ் பெற்ற கரிகால் சோழன். திருமாவளவன் என்ற இயற்பெயரைக் கொண்டவன். இதில் உள்ள அடிகள் 301.

பூம்புகாரின் பெருஞ்சிறப்பு அழகுற பட்டினப்பாலையில் விளக்கப்படுகிறது.

அங்குள்ள உழவர் பெருமக்கள் அந்தணர் பெருமையைப் பரப்புகின்றனர். இதை விளக்கமுற நூலில் காணலாம்.

 

நான்மறையோர் புகழ் பரப்பியும் (வரி 202)

 

சங்க காலத்திலேயே நான்கு மறைகளான ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்கள் புகழ் பெற்று விளங்கியமையும், அதை ஓதும் அந்தணர்கள் அனைவரிடமும் நன் மதிப்புப் பெற்றவர்கள் என்றும் இதனால் நன்கு தெரிய வருகிறது.

 

மதுரைக் காஞ்சி

பத்துப்பாட்டில் உள்ள மதுரைக் காஞ்சி இருக்கின்ற பாடல்களிலெல்லாம் மிகப் பெரியது. 783 அடிகளைக் கொண்டது. இதைப் பாடியவர் மாங்குடி மருதனார். பாட்டுடைத் தலைவன் தலையாலங்கானத்துச் செரு வென்ற நெடுஞ்செழியன்.

இளைஞன் தானே என்று அவனைத் தலையாலங்கானத்தில் தாக்க வந்தனர் பகைவர்கள். அவர்களை ஒடுக்கித் தன் ஆற்றலைக் காட்டினான் அவன்.

அவனை வியந்து பாடினார் புலவர்.

மதுரையின் சிறப்பைத் தேர்ந்த தமிழ்ச் சொற்களால் கவினுறு கவிதை வடிவில் படிக்க வேண்டுமெனில் அதற்கென இருக்கும் அழகிய நூல் மதுரைக் காஞ்சியே. சங்க கால் மதுரையை அப்படியே படம் பிடித்துக் காட்டுகிறார் மாங்குடி மருதனார். இப்புலவரின் சிறப்பு சொல்லி  மாளாது.

மதுரையில் அந்தணர் பள்ளியை விவரிக்கிறார் புலவர் இப்படி :

 

சிறந்த வேதம் விளங்கப் பாடி

விழுச்சீர் எய்திய ஒழுக்கமொடு புணர்ந்து

நிலம் அமர் வையத்து ஒருதாம் ஆகி

உயர்நிலை உலகம் இவண்நின்று எய்தும்

அறநெறி பிறழா அன்புடை நெஞ்சின்

பெரியோர் மேஎய் இனிதின் உறையும்

குன்று குயின்றன்ன  அந்தணர் பள்ளியும்                               (வரிகள் 468 முதல் 474 முடிய)

குன்றையே குடைந்து செய்தது போல விளங்குகிறது அந்தணர் பள்ளி. (குன்று குயின்றன்ன அந்தணர் பள்ளி).

அவர்கள் சிறந்த வேதத்தைப் பொருள் விளங்க ஓதுகின்றனர். (சிறந்த வேதம் விளங்கப் பாடி)

அவர்கள்  மிகச் சிறந்த ஒழுக்கத்துடன் வாழ்கின்றனர். (விழுச்சீர் எய்திய ஒழுக்கமொடு புணர்ந்து)

வெவ்வேறு வகையான நிலங்களை உடைய உலகில் அவர்கள் ஒப்பற்றவராக வாழ்கின்றனர் இருந்த இடமான இங்கிருந்தே உயர் நிலை உலகத்தை எய்துபவர்கள் அவர்கள். (நிலம் அமர் வையத்து ஒருதாம் ஆகி, உயர்நிலை உலகம் இவண்நின்று எய்தும்)

 

இந்தப் பகுதியை விளக்க வந்த நச்சினார்க்கினியர், அவர்கள் இங்கேயே பிரம்மமாக விளங்குகின்றனர் என்று விளக்குகிறார்.

அவர்கள் அறநெறி வழுவாதவர்கள். அன்புடைய நெஞ்சத்தவர் (அறநெறி பிறழா அன்புடை நெஞ்சின்)

அவர்கள் உயர்ந்த உள்ளம் கொண்டவர்கள். எப்பொழுதும் இனிதாக வாழ்கின்றனர் (பெரியோர் மேஎய் இனிதின் உறையும்)

இப்படி அந்தணரின் சிறப்பும் வேதத்தின் சிறப்பும் மாங்குடி மருதனாரால் நன்கு விளக்கப்படுகிறது.

 

இனி மதுரையில் காலைப் பொழுது எப்படி மலர்கிறது என்பதைப் பார்ப்போம். இனிய காலைப் பொழுதை அவர் வர்ணிக்கிறார் இப்படி:

 

போது பிணி விட்ட கமழ் நறும் பொய்கைத்

தாது உண் தும்பி போது முரன்றாங்கு

ஓதல் அந்தணர் வேதம் பாடி (வரிகள்  654 முதல் 656 முடிய)

பொய்கைகளில் போதுக்கள் நல்ல வாசனையோடு மலர்வதால் தேனை உண்ண வரும் வண்டுகள் அங்கு வந்து ரீங்கர்ரம் செய்கின்றன. (போது பிணி விட்ட கமழ் நறும் பொய்கைத்

தாது உண் தும்பி போது முரன்றாங்கு)

அப்போது அந்த புலர்காலைப் பொழுதில் அந்தணர்கள் வேதம் பாடுகின்றனர்.( ஓதல் அந்தணர் வேதம் பாடி)

 

வேத கீதத்துடன் தினமும் மதுரையின் காலைப் பொழுது மலர்கிறது!

மதுரைக் காஞ்சியில் தொல் முது கடவுள் என்று சிவபிரான குறிப்பிடப்படுகிறார். (வ்ரி 41) அந்த சிவபிரானின் வழியில் வ்ந்த சான்றோன் நெடுஞ்செழியன் என்று புலவர் பிரான் அவனை அடையாளம் காட்டுகிறார்.

அத்துடன் பரந்த பாரத தேசம் ஒன்றே என்பதை விளக்கும் விதமாக

தென் குமரி வட பெருங்கல்

குணகுட க்டலா எல்லை

என்று தேசத்தின் பூகோளப் பரப்பு சுட்டிக் காட்டப் படுகிறது. தெற்கே குமரி (தென் குமரி) வடக்கே பெரிய இமயமலை ( வட பெருங்கல்) கிழக்கிலும்  மேற்கிலும் கடல் இவற்றை எல்லையாகக் கொண்ட நாடு( குண குட க்டலா எல்லை)

 

சிவனே தெய்வம். இமயம் முதல் குமரி வரை ஒரே நாடு. ஒரே பண்பாடு. இப்படி சொல்ப்வர் பாண்டியனின் புகழ் பாடும் சங்க காலப் பெரும் புலவர்!

ஆக இமயம் தோன்றிய நாளிலிருந்து வேதமும் அந்தணரும் புகழ் பெற்று இருந்தமை தெரிய வருகிறது.

வாழ்க வேதம்! வாழ்க அந்தணர்! வாழிய பாரத மணித் திருநாடு!

*************

 

.