
Post No. 8673
Date uploaded in London – – –13 SEPTEMBER 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
திருநெல்வேலியிலிருந்து வெளியாகும் ஆரோக்கிய மாத் இதழ் ஹெல்த்கேர், ஆகஸ்2 2020 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை!
அற்புத சிகிச்சை முறை அகு பிரஷர்! – 2
ச.நாகராஜன்

உடலில் உள்ள பிரதான 12 சக்திப் பாதைகள்!
உடலில் பிரதானமாக 12 மெரிடியன் (Meridian) அல்லது சக்திப்பாதைகள் அல்லது சக்தி நாளங்கள் உள்ளன. இந்த 12 சக்தி நாளங்களில் ஆறு கையிலும் ஆறு காலிலும் உள்ளன. ஒவ்வொரு பாதையும் ஒவ்வொரு முக்கிய அங்கத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
கை மெரிடியன்கள்
- பெருங்குடல் (Large intestine)
- சிறுகுடல் (Small Intestine)
- இதயம் (Heart)
- இதய வெளியுறை அல்லது பெரிகார்டியம் (Pericardium)
- உடலின் உள்வெப்பத்தைச் சீராக வைக்க உதவும் அடிவயிற்றுக் குழி இது Triple Warmer என அழைக்கப்படுகிறது
- நுரையீரல்
கால் மெரிடியன்கள்
- பித்தப் பை (Gall Bladde)r
- சிறுநீர்ப் பை (Urinary Bladder)
- சிறுநீரகம் (Kidney)
- கல்லீரல் (Liver)
- வயிறு அல்லது இரைப்பை (Stomach)
- மண்ணீரல் மற்றும் கணையம் (Spleen and Pancreas)
இது தவிர யிங் மற்றும் யான் ஆற்றலைக் கொண்டுள்ள இன்னும் இரு மெரிடியன்களும் உள்ளன.
ஒவ்வொரு மெரிடியனிலும் அழுத்தப் புள்ளிகள் உள்ளன.
சிறுநீரகம், ‘சீ’ ஆற்றலின் சேமிப்பகமாகத் திகழ்கிறது. செக்ஸ் ஆற்றல், சிறுநீர் அமைப்பு மற்றும் மூளையுடன் இணைக்கப்பட்டுள்ள எலும்புகள் ஆகியவற்றைச் சிறுநீரகமே கண்காணிக்கிறது என்பதால் வலுவான ஒரு சிறு நீரக அமைப்பு நல்ல உடல் நலத்தை உறுதிப்படுத்துகிறது.
இந்த மெரிடியனில் மட்டும் 27 புள்ளிகள் உள்ளன.
இப்படிப்பட்ட புள்ளிகளை முதலில் வல்லார் வாய் கேட்டு அதை எப்படிப் பயன்படுத்துவது என்பதையும் அறிந்தால் இல்லத்திலிருந்தே அந்தந்த இடத்தில் புள்ளிகளை அழுத்தி நல்ல ஆற்றலைப் பெறலாம்; வியாதி இருப்பின் குணப்படுத்திக் கொள்ளலாம்.
எங்கே அழுத்துவது, எவ்வளவு நேரம் அழுத்துவது, எந்த அளவு அழுத்தத்தைக் கொடுப்பது, எவ்வளவு முறைகள் கொடுப்பது என்பதெல்லாம் முக்கியமான விஷயங்கள் என்பதால் இதை முதலில் நன்கு அறிந்து கொள்ள வேண்டும்.
இதைப் பற்றியெல்லாம் கவலையே படாமல் ஒரு அகுபிரஷ்ர் வல்லுநர் கையில் நம்மை ஒப்படைத்து விட்டால் அவர் எல்லாம் பார்த்துக் கொள்வார்!
ஏனெனில் அந்த வல்லுநர் இதற்கான கருவிகளைத் தன் கைவசம் வைத்திருப்பார். தன் அனுபவத்தால் நோயுற்றவரை ஒரு சில நிமிடங்களிலேயே நன்கு கவனித்து என்ன செய்ய வேண்டும் என்பதைத் தீர்மானித்து விடுவார்.
ஜிம்மி, மாஜிக் மாசேஜர், ஃபுட் ரோலர், பிரமிட் பிளேட், ட்விஸ்டர், ஸ்பைன் ரோலர் உள்ளிட்ட கருவிகள் அப்படிப்பட்ட சிகிச்சை நிபுணரிடம் தயாராக இருக்கும்.
ஒரு வல்லுநரிடம் வியாதியின் தீவிரத் தன்மை, நோயுற்றவரின் வயது உள்ளிட்டவற்றைப் பொறுத்து 10 முதல் 15 முறை இந்த சிகிச்சையை அவர் அறிவுரைப்படி மேற்கொள்ள வேண்டி வரும்!
அகுபிரஷர் முதலில் உடலுக்கு ஓய்வை அளிக்கிறது. தசைகள் ஓய்வு நிலை அடைந்தவுடன் ஒரு நிம்மதி கிடைக்கும். முக்கியமான பிரதான புள்ளிகள் அழுத்தப்படும் போது உடலில் இயற்கையாக அமைந்துள்ள வலி நீக்கிகள் (Pain killers) செயல்பட ஆரம்பிக்கும்.
அகுபிரஷர் சிகிச்சையின் போது உணவுத் திட்டத்தை சீராக இருக்கும்படி பார்த்துக் கொள்ளவேண்டும். எந்த சிகிச்சை முறையாக இருந்தாலும் உணவும் உணவுத் திட்டமும் சீராக இருப்பின் சிகிச்சைக்கே போக வேண்டிய அவசியம் இருக்காது என்பது ஒரு அடிப்படை உண்மையாகும்!
ஆஸ்த்மா, மன அழுத்தம், மனச்சோர்வு, முழங்கால் வலி, தலைவலி, உடல் வலி, இருமல், ஜலதோஷம், மலச் சிக்கல், நீரிழிவு உள்ளிட்ட பல வியாதிகளையும் அகுபிரஷர் சிகிச்சை முறை மூலமாக எளிதாகக் குணப்படுத்தலாம்.
உடலில் உள்ள அங்கங்களில் பெரும்பாலானவற்றின் Reflex Points எனப்படும் மறிவினைப் புள்ளிகள் உள்ளங்கால்களுடனும் உள்ளங்கைகளுடனும் இணைக்கப்பட்டுள்ளன.
எந்தெந்த அங்கங்கள் உள்ளங்கால்கள்ம் உள்ளங்கைகளில் எந்த இடத்தில் இணைக்கப்பட்டிருக்கிறது என்பதைப் பொதுவாகக் கூற முடியும். (இணைத்துள்ள படத்தில் காணலாம்) இருப்பினும் ஒவ்வொருவரின் உடல்வாகும் அமைப்பும் (ஒருவர் ஒல்லி, இன்னொருவர் பருமன்) வெவ்வேறாக இருக்கும் என்பதால் நல்ல வல்லுநரைக் கலந்தாலோசித்து இந்தப் புள்ளிகளில் அழுத்தம் கொடுத்துப் பலனைக் காண முடியும்.
எடுத்துக்காட்டாக விரல்கள் தலையையும், மூளைப் பகுதியையும் இணைப்பதைக் காணலாம்.
இப்படி ஒவ்வொரு அங்கமும் எப்படி இணைக்கப்பட்டிருக்கிறது என்பதை அறிந்து அதைப் பயன்படுத்திப் பலனைக் காண்பதே அகு பிரஷர் சிகிச்சை முறையாகும்.

ஒரே வரியில் சுருக்கமாகச் சொல்லப் போனால் உடலின் மர்மங்களைப் புரிந்து கொண்டு, உடலுக்கு வரும் எந்த வியாதியையும் உடல் தானாகவே குணப்படுத்திக் கொள்ளும் என்ற இரகசியத்தையும் புரிந்து கொண்டு சிகிச்சைப் படுத்திக் கொள்ளும் ஒரு நல்ல முறையே அகுபிரஷர் முறையாகும்.
ஏராளமான இணையதளங்களில் இது பற்றிய விவரங்களை அறிய முடியும். யூ டியூபிலும் பல காணொளிக் காட்சிகள் அழுத்தப் புள்ளிகளைப் பற்றி விளக்குகின்றன. என்றாலும் கூட இவை விவரங்களை அறிந்து கொள்வதற்கு மட்டுமே பயன்படுத்திக் கொண்டு, செயல்முறைக்கு இந்த அகுபிரஷர் சிகிச்சையில் நிபுணரான ஒருவரை நாம் அணுக வேண்டும். அதுவே உடனடிப் பயன்பெறுவதற்கான நல்ல வழி!
வாழ்க்கையை அர்த்தமுடன் ‘அழுத்தம் கொடுத்து’ வாழ்க வளமுடன்!
*** அகுபிரஷர் தொடர் நிறைவுறுகிறது.
tags- அகு பிரஷர்! – 2