Don’t Reblog it for a week. Pictures are copyrighted by someone else. Don’t use them. When you use the matter, you must not remove the author’s name and blog name.
WRIITEN BY S.NAGARAJAN
Date : 10 September 2015
Post No. 2143
Time uploaded in London: – 8-03 am
செப்டம்பர் 11 பாரதியார் நினைவு தினம். பாரதியார் கவசம் அணிய உகந்த நாள். தினமும் பாரதியைப் படிப்போம். அந்த வழி நடப்போம்!
ச.நாகராஜன்
கவசம் ஒன்று வேண்டும்!
சார், கந்த ஷஷ்டி கவசம் கேள்விப் பட்டிருக்கிறேன். சிவ கவசம் கேள்விப் பட்டிருக்கிறேன். மஹாபாரதத்தில் வரும் இந்திர கவசம் கூடக் கேள்விப் பட்டிருக்கிறேன். அது என்ன பாரதியார் கவசம்?பாரதியார் ஒரு கவசமும் பாடியதில்லையே!
தலைப்பைப் பார்த்து இப்படிக் கேட்பது நியாயம் தான்!
பாதுகாப்பைத் தருவது கவசம். விஷக் கிருமிகளிடமிருந்து பாதுகாக்க ஒரு க்ரீம், நீரின் தீய தன்மையைப் போக்க ஒரு ஃபில்டர் என இப்படி ஆரம்பித்தால் நம் வாழ்க்கையில் நோய் நொடி அண்டாமல் இருக்க எத்தனை பாதுகாப்பு மருந்துகள், சாதனங்களை உபயோகிக்கிறோம். பிறப்பிலிருந்து இறப்பது வரை….. எண்ணி மாளா.
ஆனால் இன்றைய சமுதாயத்தில் உளவியல் ரீதியாகவும் தீய சக்திகளின் மூளைச் சலவையிலிருந்தும் நம்மைக் காப்பாற்றிக் கொள்ள ஏதாவது கவசம் இருக்கிறதா? சரியான நோக்குடன் வீறு நடை போட்டு நம்மையும் தேசத்தையும் முன்னேற்ற வழி உண்டா?
மனம் போன படி எழுதும் பத்திரிகைகள் ஒன்று மற்றொன்றைப் பழிக்கும்.
டிவி நிகழ்ச்சிகளோ பார்க்கக் கூடாதவற்றை பார்க்கக் கூடாத வயதில் பார்க்க வைக்கும்.
பாடம் சொல்லிக் கொடுக்க வைக்கும் வாத்தியார்களை நியமிக்கும் பல்கலைக்கழகமே படு ஊழலின் பட்டறையாக இருப்பதைப் பார்த்து அதிர்கிறோம்.
போலீஸ் லஞ்சம், அரசு நிர்வாக லஞ்சம், போக்கு வரத்தில் லஞ்சம், நீதித்துறையில் லஞ்சம் என்று எந்தத் துறையில் உள்ளே புகுந்தாலும் கவசமில்லா சாமான்யனை ஏகப்பட்ட வியாதிகள் பீடிக்கிறது.
இதைப் போக்க ஏதாவது நவீன கவசம் இருக்கிறதா! இருக்கிறது.
பாரதியார் கவசம்
அது தான் பாரதியார் கவசம். அவர் கவசம் ஒன்றையும் தனியாகப் பாடவில்லை. அவரது பாடல்களே கவசம்!
நம்மை இன்று இருக்கும் தீய சக்திகளிடமிருந்து காக்கும் ஒரே அருமருந்து பாரதியார் பாடல்கள் தாம்!
எந்தத் துறையில் என்ன கேள்விகள் வேண்டுமானாலும் கேளுங்கள். பாரதியார் படைப்புகளில் சரியான பதில் இருக்கும்.
இதை சைவர்கள் அஞ்செழுத்தை ஓதுவது போல, வைணவர்கள் எட்டெழுத்தை ஓதுவது போல பாரதீயர்கள் தினமும் ஓதி வந்தால் பாடி வந்தால், படிப்பதை நடப்பில் கடைப்பிடித்தால் அப்படிப்பட்டவர்களுக்கு எந்த வித தீய சக்தியும் ஒன்றும் செய்ய முடியாது.
ஆத்திசூடியிலிருந்து ஆரம்பிக்கலாம். ஔவையாரின் ஆத்திசூடி இல்லை. புதிய ஆத்திசூடியிலிருந்து!
அச்சம் தவிர்; ஆண்மைந் தவறேல்; குன்றென நிமிர்ந்து நில்; தோல்வியிற் கலங்கேல்; தவத்தினை நிதம் புரி பணத்தினைப் பெருக்கு; பாட்டினில் அன்பு செய்!
ஜாதிகள் இல்லையடி பாப்பா, குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்.
ஒன்று பட்டால் உண்டு வாழ்வே நம்மில் ஒற்றுமை நீங்கிடில் அனைவர்க்கும் தாழ்வே நன்றிது தேர்ந்திட வேண்டும் இந்த ஞானம் வந்தால் பின் நமக்கெது வேண்டும்?
எல்லாரும் ஓர் நிறை எல்லாரும் ஓர்விலை எல்லாரும் இந்நாட்டு மன்னர்
(சமுதாயத்தில் வாழும் வழியைக் கவசம் தருகிறதா?)
பக்தி பண்ணி பிழைக்கச் சொன்னான் பலனை எண்ணாமல் உழைக்கச் சொன்னான் – (கீதை இரு வரிகளில் கற்று விட்டோமா?)
அம்பிகையைச் சரண் புகுந்தால் அதிக வரம் பெறலாம்!
சக்தி அருளால் உலகில் ஏறு – ஒரு
சங்கடம் வந்தால் இரண்டு கூறு
சக்திதனையே சரணம் கொள்ளு – என்றும்
சாவினுக்கோர் அச்சமில்லை தள்ளு
ஜயமுண்டு பயமில்லை மனமே…. பயனுண்டு பக்தியினாலே
ஜாதி மதங்களைப் பாரோம் உயர் ஜன்மம் இத்தேசத்தில் எய்தினராயின் வேதியராயினும் ஒன்றே அன்றி வேறு குலத்தினராயினும் ஒன்றே வந்தே மாதரம் என்போம் எங்கள் மாநிலத் தாயை வணங்குதும் என்போம்
தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்
பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியிற் பெயர்த்தல் வேண்டும்
காதலொருவனைக் கைப்பிடித்தே யவன் காரியம் யாவிலும் கைகொடுத்து மாதர் அறங்கள் பழமையைக் காட்டிலும் மாட்சி பெறச் செய்து வாழ்வமடி. (புதுமைப் பெண்ணிவள் பேச்சுகள் கேட்டீரோ?!)
காவித் துணி வேண்டா கற்றைச் சடை வேண்டா பாவித்தல் போதும் பரமநிலை எய்துதற்கே!
வையகம் காப்பவரேனும் சிறு வாழைப்பழக் கடை வைப்பவரேனும் பொய்யகலத் தொழில் செய்வோர் பூமியில் எங்கணும் மேலோர்!
பாதகம் செய்பவரைக் கண்டால் பயம் கொள்ளலாகாது!
பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சே!
செய்தலுன் கடனே – அறம் செய்தலுன் கடனே அதில் எய்துறும் விளைவினில் எண்ணம் வைக்காதே – (கீதையின் சுருக்கம் கற்று விட்டோமா?)
கவலைப் படுதலே கரு நரகம்மா!
உள்ளத்தில் உண்மை ஒளி யுண்டாயின் வாக்கினிலே ஒளியுண்டாகும்!
மொய்க்கும் கவலைப் பகை போக்கி, முன்னோன் அருளைத் துணையாகி
எய்க்கும் நெஞ்சை வலியுறுத்தி உடம்பை இரும்புக் கிணையாக்கி
பொய்க்கும் கலியை நான் கொன்று பூலோகத்தார் கண்முன்னே
மெய்க்கும் கிருத யுகத்தினையே கொணர்வேன் தெய்வ விதி இஃதே
ஏராளமான பாரதியாரின் முத்திரை வரிகளில் சிலவற்றை மேலே பார்த்தோம்!
பாரத நாட்டின் முன்னேற்றம், தமிழ் மொழியின் முன்னேற்றம், லஞ்ச லாவண்யம் ஒழிய வழி, ஹிந்து-முஸ்லீம்-கிறிஸ்தவ ஒற்றுமை, பெண் முன்னேற்றம்,விஞ்ஞான முன்னேற்றம், பழைய அறங்களின் ஏற்றம் – எந்த விஷயமென்றாலும் அதற்கு தெளிவான வரையறுப்பும் வழிகாட்டுதலும் பாரதியார் கவசத்தில் உண்டு.
எத்தனை எத்தனை பாடல்கள்; அத்தனை பிரச்சினைகளுக்கும் அதில் வழி காட்டுதல் உண்டு!
பாரதியார் நினைவு நாளில் நித்தமும் பாரதிப் பாடல்களைப் பாட உறுதி பூண்டு பாரதியார் கவசம் அணிவோம்; பாரையே சுவர்க்கமாக்குவோம்.
^^^^^^^^


You must be logged in to post a comment.