
Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 13 June 2019
British Summer Time uploaded in London – 18-01
Post No. 6543
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.co

லண்டனில் எழுத்தாளர் ஜெயமோகனின் ரசிகர்கள், வாசகர்கள் துவக்கிய ‘லண்டன் தமிழ் இலக்கியக் குழுமம் சார்பில், பல இளம் எழுத்தாளர்களின் கதைப் புத்தகங்களின் விமர்சனம் ஜூன் 1ம் தேதி நடந்தது. (இது பற்றி ஏற்கனவே 3 கட்டுரைகள் வெளியாகின; இது நாலாவது கட்டுரை) இலங்கையைச் சேர்ந்த அனோஜன் பாலகிருஷ்ணனின் கதைகளை குழுமம் சார்பில் தனராஜ் மணி விமர்சித்தார்.
அனோஜனின் இரண்டு கதைப் புத்தகக்ங்கள்; எழு வசந்தம், பச்சை நரம்பு
இதோ தனராஜ் மணி உரையின் சாராம்சம்:–

அனைவருக்கும் வணக்கம்.
இன்று நான் அறிமுகப்படுத்தப்போகும் அனோஜனின் பச்சை நரம்பு அவரின் இரண்டாவது சிறுகதை தொகுதி. பத்து கதைகள் கொண்ட இந்த தொகுப்பைகிழக்கு பதிப்பகம் பதிப்பித்திருக்கிறது.
இவ்வுரையில் இப்புத்தகத்தை பற்றிய என் வாசிப்பின் ரசனை சார்ந்த அவதானிப்புகளை முன் வைக்கப் போகிறேன். அது உங்களுக்கு இப்புத்தகத்தைவாசிக்கும் ஆர்வத்தை தூண்டினால் மகிழ்வேன். அப்படியில்லையெனில் என் உரையின் குறையே அன்றி புத்தகத்தின் குறையல்ல.
இத்தொகுதியின் முதல் கதையை வாசிக்கும் போது , எழுத்தாளர் ஜெயமோகனின் ரப்பர் நாவலை நான் முதன் முதலாய் வாசிக்கும் போது ஏற்பட்ட ஒருதுணுக்குறல், ஒரு ஆச்சரியம் இதிலும் இருந்தது. இரு கதைகளிலும் கதை மாந்தர் பேசும் மொழி தமிழ் தான் ஆனால் நான் அறிந்த, என் சூழலில் புழங்கும்தமிழ் அல்ல. தமிழர் வாழ்வை பேசும் கதைதான் ஆனால் நான் அது வரை அறிந்த தமிழர் வாழ்வல்ல.வாசிக்க தொடங்கும் போது போரும் அமைதியும்நாவலில் வரும் ரஷ்யாவின் கடும் பனி எவ்வளவு அன்னியமோ ரப்பர் நாவல் பேசும் ரப்பர் தோட்டங்களும் எனக்கு அவ்வளவு அன்னியமாகவே இருந்தது. ஆனால் வாசித்து முடிக்கும் போது டால்ஸ்டாயின் ப்யிரியை எவ்வளவு அணுக்கமாக உணர்ந்தேனோ அதை விட அணுக்கமாக ப்ரான்ஸிஸிடம் உணர்ந்தேன்.

ப்யரியின் உள்ளிருக்கும் ரஷ்யன் ஒரு சிறு அன்னிய உணர்வை இன்றும் தருகிறான் ஆனால் ரப்பரில் வரும் ப்ரான்ஸிஸ் நானே தான். அவனை என்னால்முழுவதுமாய் புரிந்து கொள்ள முடியும் .
அனோஜனின் கதைகள் இதே உணர்வை எனக்களித்தன. வாசிக்க ஆரம்பித்த போது சில ஈழ தமிழ் சொற்கள் எனக்கு புரியவில்லை, காலை சிற்றுண்டிக்குபன்னும் சம்பலும் சாப்பிடும் கலாச்சார அதிர்ச்சிகள் வேறு கதைகளில் நிரம்பி இருந்தது.
ஆனால் வாசித்து முடிக்கும் போது அனோஜனின் கதை நிகழும் களத்தையும் கதை மாந்தரையும் சேலத்தில் நான் வளர்ந்த சூழலுக்கு மிக அணுக்கமாகஉணர்ந்தேன்.
நம்மூர் திருமணங்களில் அடர்த்தியாக செம்பொடி அப்பி அடர் சிவப்பில் நின்று புன்னகைத்து கொண்டிருக்கும் தமிழ் மணப் பெண்களை பார்த்திருப்பீர்கள்.
அழகு கலை நிபுணர்கள் அவர்களுக்கு அழகென்று தோன்றிய ஒரு வடிவை அப்பெண்ணின் முகத்தில் வரைந்தெடுத்திருப்பார்கள்.
சிலருக்கு வியர்வையோடு அவ்வடிவும் வழிந்து ஊற்றிக்கொண்டிருக்கும், பீதியை வெளிகாட்டாமல் மையமாய் புன்னகைத்துவிட்டு மேடையில் இருந்துஇறங்குவதற்கு உங்களுக்கு பெரும் பயிற்சி வேண்டும்.
சில நாட்கள் கழித்து அதே பெண்ணை அவள் வீட்டில் மிகச் சாதாரணமான உடையில் புன்னகையன்றி வேறொரு ஒப்பனையும் இல்லாமல் பார்க்கும் போதுகண்டு கொள்வீர்கள் ,திருமண மேடையில் பேய் போல் தெரிந்தவள் ஓர் தமிழ் நிலத்து மாநிற பேரழகி என. அது போல, சில மொழி மற்றும் சூழல் மேற்பூச்சுகளை கடந்துவிட்டால், அனோஜனின் கதை உலகம் தமிழ் நாட்டை சேர்ந்தவர்களுக்கு மிக அணுக்கமான நாம் தொடர்புபடுத்திக்கொள்ள கூடிய கதைமாந்தரையும் கதை களத்தையும் கொண்டிருக்கிறது.
இந்த பத்து கதைகளில் பெரும்பான்மையான கதைகள் காமத்தை மையப்படுத்தி எழுதப் பட்டுள்ளது, குறிப்பாக உடலிலும் மனதிலும் முகிழ்க்க தொடங்கும்பதின்வயதின் காமம்.
காமம், காலம் காலமாக தமிழில் பேசப்பட்டு , பாடப்பட்டு வந்திருக்கிறது.
ஈராயிரம் வருடங்களுக்கு முன் மிளைப் பெருங்கந்தன் எனும் கவிஞன் காமத்தைப் பற்றி ஒரு பாடலை இயற்றியிருக்கிறார், அது
காமங் காம மென்ப காமம்
அணங்கும் பிணியு மன்றே நினைப்பின்
முதைச்சுவற் கலித்த முற்றா விளம்புல்
மூதா தைவந் தாங்கு
விருந்தே காமம் பெருந்தோ ளோயே.
அதன் அர்த்தம் காமம் என்பது பேயோ நோயோ இல்ல,
வயதான பசுமாடு பசும் புல்லை சாப்பிட முடியாமல் நாவால் நக்கிப் பார்த்து இன்புறுவது போன்றதுனு சொல்றாரு.
இதை அவர் இரு மொந்தை இன்கடுங்கள் அருந்திவிட்டு ஒரு பதின் வயது இளைஞனை பக்கத்தில் உட்கார வைத்து சொல்லி இருப்பாரென நான் நினைத்துக்கொள்கிறேன். அவ்வயதில் அவர்களால் முடிந்தது நினைத்துப் பார்ப்பதுதான். ஹார்மோன்கள் பொங்கி பிரவாகம் எடுக்கும் வயதில் அதற்கு வடிகால்அளிக்கும் கலாச்சார சூழல் நமக்கு கிடையாது. காமத்தை மனதில் மட்டும் நிகழ்த்தி கொள்வதே பெரும் பாலானாவருக்கு வாய்ப்பது.
அனோஜனின் கதைகளில் இருந்து ஈழத்திலும் பதின்வயதினருக்கு அதே சூழல்தான் என்பது தெரிகிறது.
என் மனதிற்கினிய கவிஞரான இசை பதின்வயது இளைஞனை தன் கவிதை ஒன்றில் விவரிக்கையில்
அக்காக்கள் குளிக்கையில் படலைப் பிரிப்பான்
என்று சொல்கிறார்.
இத்தொகுப்பின் தலைப்பு கதையான பச்சை நரம்பில் வரும் இளைஞன் செல்வமக்கா பரிமாறும் போது அவள் ஜாக்கெட் மறைக்காத பாகங்களில் கண்ணைஊன்றி வைத்திருக்கிறான்.
பிறழ்வான மீறல்கள் மூலமாகத்தான் தங்கள் பதின்வயது காமத்துக்கு வடிகால் தேட முடியும் என்ற நிலையில் இன்றும் தமிழ் கலாச்சாரம்இருக்கிறது.இத்தொகுப்பில் உள்ள பச்சை நரம்பு , இச்சை போன்ற கதைகள் அதை பதிவு செய்கிறது, இதில் ஆண் பெண் பேதமில்லை.
அனோஜன் மட்டுமல்ல தற்கால தமிழ்புனைவெழுத்தில் இது மீள மீளபேசப்படுகிறது.இலக்கியம் ஒரு சமூகத்தின்கண்ணாடி. தி.ஜா காலத்து கதைக்கரு இன்றும் எழுதபடுவது நம் சமூகம் இவ்விஷயத்தில் 19 நூற்றாண்டிலேயே தேங்கி நிற்பதை காட்டுகிறது.
இத்தொகுப்பில் உள்ள கதைகளில் என்னை மிகவும்கவர்ந்தவை இரு கதைகள். ஒன்று ஒரு தந்தையைபற்றியது, மற்றொன்று அன்னையை பற்றியது. இரண்டும் இரு வேறு உள நிலைகளை பேசுவது .
கிடாய் , காமத்தால் தன் வாழ் நாள் முழுக்க அலைகழிக்கப்படும் ஒரு தந்தையின் கதை. ராசையா ஒருவிவசாய கூலி, தன் மனைவியும், மகளும் வசிக்கும்குடிசைக்கு அருகிலேயே தான் வேலை பார்க்கும்இடத்தில் அறிமுகமான பெண்ணை குடியமர்த்திஅவளோடு காமம் கொண்டாடுகிறான். மனைவிதுக்கம் தாளாமல் தீக்குளித்து உயிரழக்கிறாள். தன்காமக்கிழத்தியை இப்பொழுது வீட்டிற்கே அழைத்துவந்து வைத்து கொள்கிறார் ராசையா. சிறு மகளும்அச்சிறு குடிசையை அவர்களோடு பகிர்ந்துகொள்கிறாள், அவருடைய களியாட்டங்களைமெளனமாக பார்த்தபடி. காலம் ஓடுகிறது, மகள்வளர்ந்து டீச்சர் ஆகிறாள், ராசையா மகள் தயவில்வாழ வேண்டிய சூழல். இப்பொழுது மகளின் முறை. அவர் கண்ணெதிரே அவளிடம் ட்யூஷன் படிக்க வரும்பதின்வயது இளைஞனுடன் காமத்தில் திளைக்கிறாள். அறை கதவை கூட பூட்டி கொள்வதில்லை, அவளுக்குஇவர் ஒரு பொருட்டே அல்ல. ஒரு நாள் அவர் மகள்அவளுடைய காமத்துணைவனுடன் கூடியிருக்கும்நேரத்தில் அறைக்குள் நுழைகிறார். அவ்விளைஞனைதாக்கிவிட்டு சொந்த மகளை வன்புணர்கிறார். அதன்பின் அவ்விளைஞனையும் தூக்கி தன்னோடு கட்டிக்கொண்டு கிணற்றில் குதித்து உயிர் இழக்கிறார்.
ஊரார் கிணற்றை இறைத்து உடலை மீட்கிறார்கள். கதையின் கடைசி வரியில், ஒரு உடல்தான்உள்ளிருந்தது என முடிக்கிறார் எழுத்தாளர. அந்த ஒருவரி பல வாசிப்பு சாத்தியங்களை வாசகன் முன் விரித்து வைக்கிறது.
அது வரை கதையில் நிகழ்ந்தவை எது உண்மையில்நிகழ்ந்தது எது அவர் மனப்பிறழ்வால் கற்பனைசெய்து கொண்டது என்பதை நம் ஊகத்திற்கு விட்டுவிட்டார். இந்த ஒரு கதை என் மனதில் பல கதைகளாகவிரிந்தது. எனக்கு அபாரமான வாசிப்பனுபவத்தைகொடுத்த கதை இது.
மற்றொரு கதை மனநிழல். ஒரு இளைஞனைமையப்படுத்திய கதைதான் எனினும் இதைஎழுத்தாளர் காட்டியிருக்கும் தாயின்சித்தரிப்புக்காகவே எனக்கு நிரம்ப பிடித்தது. சிங்களராணுவ வேட்டையாடலில் கதை நாயகனின்நெருங்கிய நண்பன் இறந்து போகிறான். ரகசியபோலிஸ் கண்காணிக்கும் என்பதற்காக அந்தநண்பனின் தாய் அவனை அவன் சாவிற்கு போகவேண்டாம் என அறிவுறுத்துகிறாள். கதை பின்நாயகனின் போவதா வேண்டாமா எனும் மனஊசலாட்டங்களுக்குள் செல்கிறது. எனக்கு இந்தகதையில் முக்கியமாக பட்டது கதையில்சித்தரிக்கப்பட்டுள்ள தாய், நானும் நீங்களும்நன்கறிந்த தாய், அவள் மகனை மிஞ்சிய எதுவும்அவளுக்கு உலகில் இல்லை, நாடு, போர், லட்சியங்கள்எதுவும் அவள் மகனின் வாழ்வை விட அவளுக்குபொருட்டல்ல.
இது யதார்த்தம். இந்த யதார்த்தம் தமிழ் நாட்டில்இருந்து எழுதுபவர்களுக்கு ஒரு பெரிய விஷயமல்ல. ஆனால் போரின் அத்தனை குரூரங்களுக்கு மத்தியில்வாழ்ந்தவர்களுக்கு இது அவ்வளவு சுலபம் அல்லஎனவே நான் நினைக்கிறேன். புனைவிலாவது ஒருலட்சிய தாயை காட்டி விடும் ஆவல்தான் மோலோங்கிநிற்கும்.
ஒரு சராசரி தமிழ் தாய் எப்படி நடந்து கொள்வாளோஅப்படித்தான் இவள் நடந்து கொள்கிறாள். இப்புத்தகம்முழுக்கவே நம்மால் இந்த சம நிலையை காணமுடிகிறது. சிங்களன் என்பதாலேயே ஒருகதாப்பாத்திரம் வில்லனாக்க படவில்லை. மனிதர்கள்அவரவர் குறை நிறைகளோடுசித்தரிக்கப்பட்டுள்ளனர். உண்மையின் ஒளியில்இருந்தே ஒரு நல்ல இலக்கியம் எழ முடியும், அவ்வொளியை இத்தொகுப்பு முழுதும் நீங்கள்காணலாம்.
இந்த தொகுப்பின் மிக முக்கியமானபங்களிப்பென்பது யுத்தம் தாண்டிய ஒரு சராசரி ஈழதமிழர் வாழ்வை இயல்பாக , உண்மையாக பதிவுசெய்திருப்பதுதான். நான் மூன்றாம் வகுப்பு படிக்கும்போது நான் படித்து கொண்டிருந்த பள்ளிஇலங்கையில் இருந்து வந்திருந்த அகதிகளைதற்காலிகமாக தங்க வைப்பதற்காக ஒரு மாதம்மூடப்பட்டது. ஈழம் என்ற சொல்லோடு முதல் அறிமுகம்எனக்கு அப்பொழுதுதான். அன்றிலிருந்து இன்றுவரை போரும், ஈழ தமிழரின் அவதியும், புலிகள் பற்றியசெய்திகளுமாகத்தான் எனக்கு ஈழம் பரிச்சயம். துண்டு துண்டாக , செய்தி பரிமாறும் ஊடகங்களின் , மனிதர்களின் விறுப்பு வெறுப்பு சார்ந்த ஒரு வண்ணம்பூசப்பட்ட சித்திரம்தான் என் மனதில் இருந்தது. இத்தொகுப்பு அதை மாற்றி உள்ளது. ஈழ வாழ்வின்ஒரு உண்மையான சித்திரத்தை இக்கதைகளைகொண்டு என்னால் உருவாக்கி கொள்ள முடிகிறது.
ஈழத்தின் கொடுங்கோடைகளை மட்டுமே கேட்டு , படித்து வந்திருக்கும் என்னை போன்றவர்களுக்கு ஈழத்தில் இன்று எழும் வசந்தத்தின் பதிவாகஇத்தொகுப்பை நான் பார்க்கிறேன்.
என் இனிய இளவல் அனோஜனுக்கு என் வாழ்த்துகள். பூக்கும் , தளிர்க்கும் பொங்கி பெருகும் ஈழ வாழ்வைஅவர் எழுத்தில் மீண்டும் மீண்டும் பதிவு செய்யவேண்டும் என விரும்புகிறேன்.
பச்சை நரம்பு இங்கு விற்பனைக்கு கிடைக்கும், வாங்கிவாசியுங்கள், வாசித்து விட்டு உங்கள் கருத்தைஅனோஜனிடம் பகிருங்கள்.
நன்றி. வணக்கம். “
–subahm–
