பாரதி போற்றிய ஐயர்!

Dr_U_V_Swaminatha_Iyer_stamp

உ.வே.சா. தபால்தலை

Post No: 1651;  Dated: 14 February 2015

by S Nagarajan

மகாமகோபாத்தியாய உ.வே.சாமிநாத ஐயர் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு அவரை வணங்கிப் போற்றி இக்கட்டுரை வெளியிடப்படுகிறது.

 

உ.வே.சாமிநாத ஐயர் : தோற்றம் 19-2-1855 மறைவு: 28-4-1942

 

பொதியமலை பிறந்த மொழி வாழ்வறியும் காலமெலாம் நீ வாழ்வாய்!

 

எழுதியவர் ச.நாகராஜன்

மகாகவி போற்றிய ஐயர் அவர்கள்!

கவிஞர்களுக்குப் பல சிறப்புக் குணங்கள் உண்டு. இவை அனைத்தையும் கொண்டவர் மகாகவி பாரதியார்.

 

கவிஞன் காலத்தின் கண்ணாடி. கவிஞன் ஒரு தீர்க்கதரிசி. இந்த இரண்டு குணங்களையும் அவரது மகாமகோபாத்தியாயர் என்ற கவிதையில் காண்கிறோம்.

தமிழுக்கென தன்னை அர்ப்பணித்துக் கொண்டு வாழ்ந்த மேதையான உ.வே.சாமிநாதையரைப் பாராட்டி பிரஸிடென்ஸி காலேஜில் ஒரு விழா   நடந்தது. அதில் கலந்து கொண்டு மகாகவி அவரை வாழ்த்தி ஒரு பாடல் பாடினார். இறவா வரம் படைத்த பாடல் அது. காலத்தின் கண்ணாடியாகத் திகழ்ந்த பாரதி தமிழ் மேதையின் அன்றைய நிலைமையை அப்படியே வடித்து விட்டார்


who-are-these-people

உ.வே.சாமிநாத  ஐயரின்  அபூர்வ புகைப்படம்.

இதிலுள்ள தமிழழறிஞர்கள்  யாரென்று தெரியவில்லை.

இந்தியன்     எக்ஸ்பிரஸ்  டீ.ஏ. சீனிவாசன் கொடுத்த படம்

.

“நிதியறியோம், இவ்வுலகத்தொரு கோடி         இன்பவகை நித்தம் துய்க்கும்                                   கதியறியோம் என்று மனம் வருந்தற்க              குடந்தை நகர்க் கலைஞர் கோவே!”

என்ற இந்த வரிகளால் தமிழுக்கெனத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர் நிதியின்றி வாடினார்; உலகத்தில் உள்ள கோடி வகை இன்பங்களையும் அனுபவிக்கவில்லை என்பதை படம் பிடித்துக் காட்டி விட்டார்.


உ வெ ச

அதே சமயம் அவர் ஒரு தீர்க்கதரிசி என்பதால், “

“பொதியமலைப் பிறந்த மொழி வாழ்வறியும்  காலமெலாம் புலவோர் வாயிற்                                 துதியறிவாய் அவர் நெஞ்சின் வாழ்த்தறிவாய்      இறப்பின்றித் துலங்குவாயே”

என்று தீர்க்கதரிசன வாக்கால் தமிழ் உள்ளளவும் அவர் தமிழை உண்மையாக நேசித்துப் போற்றும் நல்லோரால் நினைக்கப்படுவார் என்று கூறி அவரை வாழ்த்துகிறார்.

மகாகவியே பிறிதோரிடத்தில் கூறியபடி,”பார்ப்பனக்குலம் கெட்டழிவெய்திய பாழடைந்த கலியுகமாதலால்” சாமிநாத ‘ஐயர்’ என்ற மேதைக்கு அவர் வாழ்ந்த காலத்திலும் உரிய மரியாதை இல்லை; மறைந்த பிறகும் மரியாதை இல்லை என்பதை உளம் சோர, வருத்தத்துடன் பதிவு செய்யவேண்டியதாயிருக்கிறது.

 

அவர் வாழ்ந்த வீடு இடிக்கப்பட்டதை தினமணி நாளிதழ் 2014, டிசம்பர் 14ஆம் தேதி பதிவு செய்கிறது.

உ.வே சா வீடு படம்

தமிழை அரசியலாக்கி அதன் பெயரைச் சொல்லி தன் நலத்தையும் தன் வாரிசுகள் நலத்தையும் பேணுவோர் இருக்கும் இன்றைய தமிழகத்தில் இதைத் தவிர வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது தான்.

ஆங்கில அரசும் பாண்டியர் அரசும்

மகாகவி தன் கவிதையில் ஆங்கில அரசையும் முன்னமிருந்த பாண்டியர் தம் அரசையும் ஒப்பிடுகிறான். மனதால் ஆங்கில அரசை முழுவதும் வெறுத்தாலும அப்படிப்பட அரசே உ.வே.சாமிநாதையரைப் பாராட்டுவதை உள்ளக் களிப்புடன் ஏற்றுக் கொண்ட மகாகவி, முன்னம் இருந்த பாண்டியர் அரசு இருந்தால் இவரை உச்சி மேல் வைத்து எப்படியெல்லாம் கொண்டாடி இருப்பார்கள் என்று மனதால் எண்ணிக் களிக்கிறான்.

“அன்னியர்கள் தமிழ்ச்செல்வி யறியாதார்    இன்றெம்மை ஆள்வோ ரேனும்

பன்னிய சீர் மகாமகோ பாத்தியாயப்      பதவி பரிவுடன் ஈந்து

பொன்னிலவு குடந்தை நகர்ச் சாமிதா      தன்றனக்குப் புகழ் செய்வாரேல்,

முன்னிவனப் பாண்டியர் நாள் இருந்திருப்பின்  இவன் பெருமை மொழியலாமோ?”

என்ற மகாகவியின் பாடல் எவ்வளவு பொருள் பொதிந்ததாக ஆகிறது, இன்று!

uvesa_table1_320x115

பிரான்ஸ் நாட்டவரின் வருத்தம்

 

ஐயர் அவர்கள் எழுதிய ‘நினைவு  மஞ்சரி’யின் முதல் பாகத்தில் முதல் கட்டுரையாக ‘கடல் கடந்து வந்த தமிழ்’ என்ற கட்டுரை இடம் பெறுகிறது. அதில் பிரெஞ்சு அறிஞரான ஜூலியன் வின்ஸோன் என்பவர் தனது தமிழ் சுவடி ஆராய்ச்சி குறித்து எவ்வளவு அக்கறை காட்டினார் என்பதை ஐயர் அவர்கள் விளக்குகிறார். ஜூலியன் விண்ன்ஸோனின் மாணாக்கரான பொண்டெனூ என்பவர் புதுச்சேரிக்கு வந்திருந்தார். அவர் அங்கிருந்து ஐயர் அவர்களைப் பார்க்க அவர் வீட்டிற்கு வந்தார். அப்போது அவர் வந்த போது தான் இருந்த நிலையை ஐயர் அவர்கள் இப்படிக் குறிப்பிடுகிறார்:-
“நான் என் வீட்டின் மேலே ஒரு கொட்டகையை அமைத்துக்கொண்டு அங்கே என் ஆராய்ச்சிகளை நடத்திவந்தேன். பொண்டெனூ வந்தபோது என் மேல் வெயில் அடித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தார்; அவர் மேலும் அடித்தது. அவர், “இந்தமாதிரி இடத்தில் இருக்கிறீர்களே! வேறு நல்ல இடத்தில் இருந்து வேலை செய்யக் கூடாதா?” என்று கேட்டார். நான், “என்னுடைய நிலைக்கு இதுதான் முடியும். இந்தத் தேசத்தில் இந்த நிழல் கூட இல்லாமல் கஷ்டப்படும் வித்துவான்கள் எவ்வளவோ பேர்கள் இருக்கிறார்கள். என் இளமையில் மரத்தடியிலும் வீட்டுத்திண்ணை யிலும் இருந்து படித்து வந்த மாகா வித்துவான்களைப் பார்த்திருக்கிறேன்” என்றேன். இவ்விஷயம் அவருக்கு மிகவும் புதுமையாக இருந்தது.”

 

இது போன்று  தமிழ் ஆராய்ச்சியை எந்தெந்த நிலையில் எல்லாம் அவர் செய்ய வேண்டி இருந்தது என்பதை அவரது நூல்களைப் படிப்போர் நன்கு அறிய முடியும். பல்லாயிரக் கணக்கான பக்கங்களில் அவ்வப்பொழுது உதிரியாக அவர் தம்மைப் பற்றிக் குறித்தவை தாம் இவை. தனது கஷ்டங்களைச் சொல்ல வேண்டும் என்ற நோக்கில் எழுதப்பட்டவை அல்ல இவை.

 

91க்கும் மேற்பட்ட நூல்களை அயராது உழைத்த ஆராய்ச்சியால் வெளியிட்டவர் தமிழ்த் தாத்தா. அவரது நல்லுரைக் கோவை (4 பாகங்கள்), நினைவு  மஞ்சரி உள்ளிட்ட பல நூல்களை www.projectmadurai.org  தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து படிக்கலாம்.

தமிழ் வளர்த்த பாண்டியர் நாள் மலருமாக!

அவரை நினைப்பவர் மனதில் அவர் புகழோடு இன்றும் இலங்குகிறார். கெட்ட கலி யுகம் அழிந்து பாண்டியர் நாள் ஒரு நாள் எழும்; அன்று மாமேதை நன்கு போற்றப்படுவார்! தமிழை உளமார நேசிக்கும் நல்லோர்கள் மனதில் அவர் என்றும் இற்வாமல் புகழோடு வாழ்வார்.

அவரது பிறந்த நாளான இன்று உண்மையாக தமிழை நேசிப்போர் அவரை ஒரு கணம் நினைந்து அவரை உளமார வணங்குவோமாக! அப்படி வணங்கும் போது அவரால் மறும்லர்ச்சி கண்ட தமிழ்த்தாய் நம்மை ஆசீர்வதிப்பாள் என்பதில் ஐயமில்லை!

********

2014 டிசம்பர் 14ஆம் தேதி, தினமணி நாளிதழ் வெளியிட்ட செய்தி  கீழே தரப்பட்டுள்ளது:

uvasae_2242800f

சென்னை திருவல்லிக்கேணியில் இடிக்கப்பட்ட தமிழறிஞர் உ.வே.சா வாழ்ந்த வீடு.

சென்னையில் தமிழ் தாத்தா உ.வே.சா. வாழ்ந்த வீடு இடிக்கப்பட்டது.

 

தமிழின் தொன்மையான ஓலைச்சுவடிகளையும், இலக்கியங்களையும் மீட்டுத் தந்தவர் உ.வே. சாமிநாத ஐயர். இவர் தமிழகம் முழுவதும் சுற்றித் திரிந்து ஓலைச் சுவடிகள், கையெழுத்து ஏடுகள், நூல்கள் ஆகியவற்றை பத்திரமாக மீட்டு, பதிப்பித்தார்.

இன்று தமிழில் உள்ள பெரும்பான்மையான இலக்கியங்கள் இவரால் மீட்கப்பட்டவை. புறநானூறு, குறுந்தொகை, சிலப்பதிகாரம் என தமிழில் உள்ள சிறந்த இலக்கியங்கள், இவரின் முயற்சியாலேயே தமிழர்களுக்குக் கிடைத்தது.

 

கும்பகோணம் உத்தமதானபுரத்தில் பிறந்த இவர், சென்னை மாநிலக் கல்லூரியில் பணியாற்ற 1903-ஆம் ஆண்டு சென்னை வந்தார்.

 

அப்போது திருவல்லிக்கேணி திருவட்டீஸ்வரன் பேட்டையில் இருந்த ஒரு வீட்டில் வாடகைக்குக் குடியிருந்தார். பின்னர் அந்த வீட்டையே விலைக்கு வாங்கினார்.

இரண்டாம் உலகப்போரின் போது சென்னையில் இருந்து வெளியேறி, திருக்கழுக்குன்றத்தில் இருந்த திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சொந்தமான இடத்தில் வசித்தார். காலப்போக்கில் உ.வே.சா.வின் உறவினர்களின் பராமரிப்பில் இருந்த திருவல்லிக்கேணி வீடு, பிறருக்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் கடந்த 2012-ஆம் ஆண்டு வீட்டின் உள்பகுதியை இடிக்கும் பணி நடைபெற்றது. அதனைக் கண்டித்து தமிழறிஞர்கள் குரல் கொடுத்தனர்.

 

தமிழின் இலக்கியங்களை மீட்டுத் தந்த உ.வே.சா.வின் நினைவாக அந்த வீட்டை உ.வே.சா. நினைவு இல்லமாக தமிழக அரசு பராமரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

uvesa_table2_420x187

இந்த நிலையில் வீட்டை விலைக்கு வாங்கிய புதிய உரிமையாளர்கள் வீட்டை இடிக்கும் பணியை கடந்த ஒரு வாரமாக மேற்கொண்டுள்ளனர். இப்போது அந்த வீடு முழுமையாக இடிக்கப்பட்டு விட்டது என்று அந்தப் பகுதியினர் தெரிவித்தனர்.

*******