
Written by London swaminathan
Date: 22 JULY 2018
Time uploaded in London – 16-27 (British Summer Time)
Post No. 5247
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.
அரக்கர்கள் பற்றி கம்பன் பல அதிசய தகவல்களை அள்ளித் தெளிக்கிறான். ராமனின் மண்டை ஓட்டில் தர்ப்பணம் செய்ய ஒரு பெண்மணிக்கு ஆசையாம்!!
- அரக்கர்கள் தவம் செய்து கடவுள்களிடம் வரம் பெற்றனர்.
- அவர்கள் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்தனர்.
இது மார்கஸீய, திராவிட வாதங்களுக்கு வேட்டு வைக்கும் தகவல்கள். இதைக் கம்பன் ஏராளமான பாடல்களில் கோடிட்டுக் காட்டுகிறான்.
ராமனின் மண்டை ஓடு தேவை!
கர தூஷணர்களை ராமன் வதம் செய்தது ராமாயணத்தின் ஆரம்ப கட்டத்திலேயே வந்து விடுகிறது.
அவனது மகன் மனைவி பற்றிய தகவல்களை கம்பன் யுத்த காண்டத்தில் உரைக்கிறான். ராவணன் அனுப்பிய நான்கு கமாண்டர்களையும் (படைத் தளபதிகளையும்) ராம லக்ஷ்மணர்கள் தீர்த்துக் கட்டி விடுகின்றனர். எஞ்சிய சில தலைவர்களில்
ஒருவன் கரனின் மகன். அவன் ராவணனிடம் வந்து, என்ன ஐய? என்னை மறந்து விட்டீர்கள்? என் தந்தையைக் கொன்ற இராமனைக் கொன்று பழி தீர்க்கக் காத்து இருக்கிறேன். அது மட்டுமல்ல. ராமனின் கபாலத்தில் கரனுக்குத் தர்ப்பணம் செய்ய என் அம்மா ஏங்கிக் கொண்டு இருக்கிறாள். அந்தப் பொன்னாளுக்கு காத்து இருக்கிறேன்.
ராவணனும் ‘போய் வா, மகனே! போய் வா’ என் று அனுப்புகிறான். முடிவு தெரிந்த விஷயம்தான். தர்ம வீரர்களின் வில்லாற்றல் முன்பு, சில்லறைகள் நிற்க முடியுமா?

இதோ கம்பன் பாடல்:
கரனின் மகன் மகரக் கண்ணன் செப்பியது:-
அருந்துயர்க் கடலுள் ஆழும் அம்மனை அழுத கண்ணள்
பெருந்திருக் கழித்தல் ஆற்றாள் கணவனைக் கொன்று பேர்ந்தோன்
கருந்தலைக் கலத்தின் அல்லால் கடனது கழியேன் என்றாள்
பருந்தினுக்கு இனிய வேலாய் இன் அருள் பணித்தி என்றான்
-யுத்த காண்டம், மகரக் கண்ணன் வதைப் படலம்
பொருள்
என் அன்னை அழுத கண்ணோடு துன்பக் கடலில் உழல்கிறாள்; அவளுடைய கணவனைக் கொன்றவன் (ராமன்) தலையில் அல்லாமல் வேறு எதிலும் இறந்தவனுக்குச் செய்ய வேண்டிய நீர்க் கடன்களைச் செய்து முடிக்க மாட்டேன் என்றாள். அதனால் இதுவரை தாலியைக் கூட கழற்றவில்லை. பருந்துகளுக்கு பிண உணவினைக் கொடுத்து மகிழ்விக்கும் ராவணா! இனிய போருக்குச் செல்ல எனக்கு இப்போதே ஆணை இடு.’
கும்பகர்ணனின் தர்ப்பண ஆசை!
கும்ப கர்ணனும் விபீஷணனும் சந்த்தித்த போது, ‘அண்ணா, நீயும் ராமன் தரப்புக்கு கட்சி மாறி விடு; அது தர்மக் கட்சி; கட்டாயம் வெல்லும் கட்சி’- என்கிறான்.
அதற்கு கும்பகர்ணன் தந்த மறு மொழியில்,
‘தர்மக் கட்சி; தாமரை போல மலரும் கட்சி; வெல்லும் கட்சி என்பதெலாம் உண்மைதான்; ஸத்யமே வெல்லும். ஆனால் உப்பிட்டவரை உள்ளளவும் நினை என்ற தர்மத்தை நீ மறந்தாயோ? ராவணன் கட்சி தோற்கப் போவதும் உண்மையே; அந்தக் கட்சி படு தோல்வி அடைந்து ராவணன் மட்டும் தனித்து இருப்பதை காண என்னால் முடியாது; அதற்கு முன்னர் நான் யமலோகத்துக்குச் செல்ல ஆசை; எல்லாவற்றுக்கும் மேலாக நாங்கள் எல்லோரும் செத்தால் எங்களுக்குத் தர்ப்பணம் செய்ய, நீர்க்கடன் ஒருவன் வேண்டுமே! ஆகையால் நீ வெற்றி பெறும் ராமர் கட்சியிலேயே இருப்பா யாக! என்கிறான்.

இதோ அந்தப் பாடல்:
ஐய நீ அயோத்தி வேந்தற்கு அடைக்கலம் ஆகி ஆங்கே
உய்கிலை என்னின் மற்று இவ் அரக்கராய் உள்ளோம் எல்லாம்
எய்கணை மாரியாலே இறந்து பாழ்படுவேம் பட்டால்
கையினால் எள் நீர் நல்கிக் கழிப்பாரைக் காட்டாய்
பொருள்:
இராமன் செலுத்தும் அம்பு மழையில் அரக்கர் அனைவரும் அழிவர். அவ்வாறு அழிந்து விட்டால் அயோத்தி வேந்தனிடம் அடைக்கலம் அடைந்த நீ இல்லாவிட்டால் எள்ளுடன் கூடிய நீரைக் கொடுத்து தர்ப்பணம் செய்ய யார் உளர்? இருந்தால் அவரைக் காட்டுவாய்- என்கிறான் கும்பகணன்.
ஆக இரண்டு பாடல்களும் தரும் செய்தி யாது?
மார்கஸீயங்களும் திராவிடங்களும், ராவணன் ஒரு பெண்பித்தன்; மாற்றான் மனைவி மீது ஆசை கொள்பவன் என்பதால் கட்டாயம் திராவிடனே என்று சொல்வதெல்லாம் தவறு; அவனும் தர்ப்பணம் வேதம், வேள்வியில் நம்பிக்கை உடையவனே; அரக்கர்களின் தபோ பலமே அவர்களுக்கு அரிய பெரிய ஆற்றலை நல்கியது என்பது தெளிவாகிறது.
இது மட்டுமல்ல; இந்திர ஜித், ராவணனிடம் சொல்கிறான்:- ‘’அப்பா என்னிடமும் பிரம்மாஸ்திரம் உள்ளது; லக்ஷ்மணனிடமும் உள்ளது ஆகையால் நான் விட்டால் அவனும் விட்டு வானத்தில் மோதிச் சிதறி விடும்; ஆகையால் நான் போய் குகையில் மாபெரும் யாகம் செய்து அவனைத் தோற்கடிக்க வழி செய்கிறேன் என்கிறான். அந்த யாக விஷயத்தைப் பின்னர் காண்போம்.
-சுபம்–