Written by London swaminathan
Article No 1698; Dated 7th march 2015
London Time 22-11
பழனி அருகில் உள்ள பொருந்தலில் ஆறு ஆண்டுகளுக்கு முன் ஒரு கல்வெட்டு கிடைத்தது. அது பிராமி (ஸரஸ்வதி என்று பொருள்) லிபியில் எழுதப்பட்டுள்ளது—ஆனால் மொழி சம்ஸ்கிருதம்! இது 2500 ஆண்டுப் பழமை உடையது. இந்த தேதி சரியென்றால் இதுதான் இந்தியாவில் கிடைத்த மிகப் பழமையான கல்வெட்டு! வஜ்ர என்ற வடசொல் வைரத்தையும் வஜ்ரம் போன்ற கடினமான வஜ்ராயுதத்தையும் குறிக்கும். இது புறநானூறு உள்பட பல சங்க இலக்கியப் பாடல்களில் பயன்படுத்தப்பட்ட சம்ஸ்கிருத சொல்.
வஜ்ரம் என்பது தமிழ் விதிகளின் படி வயிரம் ஆனது. அதாவது ஜ (J) என்னும் ஒலி ய (Y) என்னும் ஒலியாகத் திரிந்தது. ஏன்? இது உலகம் முழுதும் நடந்த ஒரு அதிசயம். “மர்மம்” என்றாலும் தவறில்லை.
ஜ (Ja) அல்லது ஆங்கில எழுத்தில் “ஜே” (J) என்ற எழுத்தின் வரலாற்றை கலைக் களஞ்சியங்களில் படித்தால் அவர்கள் பயன்படுத்தும் மொழியியல் கலைச் சொற்களைக் கேட்டு மயக்கம் போட்டு விடுவீர்கள். அவர்களும் குழம்பிப்போய், உங்களையும் குழப்பி விடுவார்கள். பல மொழிகளின் பெயர்களை சம்பந்தா சம்பந்தமில்லாமல் சேர்த்துக்கட்டியவர்கள் தமிழையோ சம்ஸ்கிருதத்தையோ எங்குமே குறிப்பிட இல்லை. உண்மையில் இவ்விரு மொழிகளில் 2500 ஆண்டுகளுக்கு முன்னரே இது காணப்படுகிறது. இவ்விரு மொழிகளையும் பயிலாதோர் இந்திய கலாசாரம் பற்றியோ வரலாறு பற்றியோ எழுதினால் அது தவறாகப் போய்விடும்.
யாமம் =ஜாமம்
யேசு = ஜீஸஸ்
யூத மதம் = ஜூடாயிசம்
யாத்திரை = ஜாத்ரா
யவை = ஜாவா (தீவு)= சாவகம்
யாஸ்மின் = ஜாஸ்மின்
யூசுப் = ஜோசப்
அயன் = அஜன் (தானுமாலயன்)
வயிரம் = வஜ்ரம்
இப்படி எவ்வளவோ சொற்கள் உள்ளன. ஜ-வையும், ய-வையும் மாற்றிப் புழங்குகின்றனர். இதில் எது சரி?
‘ஜே’ (J) என்ற எழுத்தும் ‘வி’ (V) என்ற எழுத்தும் சாமுவேல் ஜான்ஸன் தயாரித்த புகழ் பெற்ற ஆங்கில அகராதியில் கிடையாது! அவர் 1755ல் வெளியிட்ட அகராதியில் ஆங்கில நெடுங்கணக்கில் 24 எழுத்துக்கள்தான்!! 26 இல்லை!! ஆனால் சொற்களின் ஸ்பெல்லிங்குகளில் (Spellings) அவர் இதைப் பயன்படுத்தினார். ஜே என்பது ஒய் Y (ய) என்ற ஒலியிலும் வி V என்பது யு U என்ற ஒலியிலும் பயன்படுத்தப்பட்டன. இதுபோல பழங்கால லத்தீன் எழுத்திலும் இவ்வொலிகள் கிடையா!
ஜே என்ற ஆங்கில எழுத்தை 500 ஆண்டுகளுக்கு முன் பார்த்திருக்க முடியாது– உண்மையில் Ja ஜ-வும் Ya ய-வும் இடம் மாறி ஒலிப்பதுண்டு. ஆகையால் இதை அராபிய மொழியிலும், ஹீப்ரூ மொழியிலும் கூட சொற்களில் காணலாம். ஆனால் படிப்பது ‘ய’ என்றே படிப்பர். (யேசு YESU என்பது சரி; ஜீஸஸ் JESUS என்பது பிழை).
வெளிநாடுகளில் மொழியியல் படித்தவர்கள் தமிழையும் சம்ஸ்கிருதத்தையும் பயிலாததால் பக்கம் பக்கமாகத் தப்பான விஷயங்களை எழுதி வைத்துள்ளனர்.
அவர்கள் சொல்லுவது என்ன?
‘ஜ’ J என்ற எழுத்து இல்லை என்றும் ஐ I (அய்) அல்லது ஒய் Y (ய) என்பதைப் பயன்படுத்த இந்தக் குறியீட்டைப் பயன்படுத்தியதாகவும் காலப்போக்கில் உச்சரிப்பு மாற்றத்தில் அது ஜ J–ஆக மாறிவிட்டதாவும் எழுதி வைத்துள்ளனர். இது முற்றிலும் தவறு.
இந்திய மொழிகளில் ஜ- வும் ய-வும் இடம் மாறும். யவை (Yava in Rig Veda) தானியம் = ஜாவா (Java Islands of Indonesia) , யாமம்= ஜாமம், அஜன் = அயன்/பிரம்மா, யாத்திரை = ஜாத்ரா எனப் பல சொற்கள் உண்டு.
வெள்ளைக்கார ஆராய்ச்சியாளர்கள் இந்த எழுத்தின் 500 ஆண்டு வரலாறு பற்றி மட்டுமே பேசுகின்றனர். ஆனால் பொருந்தலில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டில் ‘வயிர’ என்று வஜ்ரம் (டயமண்ட்) குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் கல்வெட்டு கி.மு. ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்பது அதனுடன் இருந்த நெல்லை அமெரிக்க சோதனைச் சாலைகளில் ஆராய்ந்ததில் தெரியவந்தது. துல்லியமாகச் சொன்னால் கி.மு 499 என்ற தேதி கிடைத்திருக்கிறது. ஆகவே 2500 ஆண்டுகளுக்கு முன்னரே ஜ – ய – ஆக மாறுவதைக் காண முடிகிறது (வஜ்ர= வயிர). இவ்விரு மொழிகளும் தெரியாத “அறிஞர்கள்” பக்கம் பக்கமாக எழுதித் தள்ளிவிட்டனர்.
பொருந்தல் கல்வெட்டு கிடைக்காவிட்டாலும் கூட சங்க இலக்கியத்தில் வயிர, யாமம் என்ற சொற்கள் உள்ளன. இவை சம்ஸ்கிருதச் சொற்கள். லத்தீன், தமிழ் ஆகிய இரண்டும் ஏறத்தாழ சமகாலத்தியவை. இரண்டிலும் கி.மு. மூன்றாம் நூற்றாண்டுக்குப் பின்னரே இலக்கியம். ஆனால் லத்தீன் மட்டுமின்றி, ஹீப்ரூ (எபிரேயம்), அராபிய மொழிகளிலும் ஜ = ய மாற்றம் இருக்கிறது. ஜீஸஸ் என்பது தவறு. அவருடைய அப்பா, அம்மா வைத்த பெயர் ஏசு. ஜூடாயிஸம் என்பது தவறு யூத (யெஹுதி) என்பதே சரி.
தொல்காப்பியத்திலேயே வடசொற்களைக் கடன்வாங்குகையில் தமிழ் ஒலிக்கு மாற்ற வேண்டும் என்று சொல்லி இருப்பதால் வஜ்ர – வயிர ஆனது.
புற நானூறு பாடல் 365 ஐ எழுதியவர் பெயர் மார்க்கண்டேயன். தூய சம்ஸ்கிருதம்! அவர் பாடலில் வயிரக் குறடு என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார். அந்தப் பாடல் முழுதும் வட மொழிக் கருத்துகளே. ரிக்வேதத்தின் புருஷசூக்தம், விஷ்ணு சஹஸ்ரநாமம் முதலியவற்றில் வரும் விராட புருஷன் அதில் வருணிக்கப்படுகிறது. சூரியனும் சந்திரனும் கண்கள். மற்றும் பூமாதேவியை என்றும் கன்னிப் பெண்ணாக இரு என்று பார்வதி சபித்த கதை வருகிறது. பூமாதேவி அழுகிறாள். என்னை மணந்து கொண்ட ஒவ்வொரு அரசனும் போன பின்னரும் நான் மட்டும் என்றும் இங்கே கஷ்டப் படுகிறேனே என்று. பூமி என்பது அரசனின் மனைவி என்பதும் காளிதாசன் பாடலில் வரும் வடமொழிக் கருத்தே. இப்படியெல்லாம் மார்க்கண்டேயனார் சொல்லுவதற்கிடையில் வயிர என்ற சொல்லும் வருகிறது. விஞ்ஞான உண்மைப்படி உலகிலேயே மிகக் கடினமான பொருள் வயிரம் என்பதால், இந்திரனின் ஆயுதத்துக்கு வஜ்ராயுதம் என்று வேதங்கள் கூறும். ஆக ஜ = ய இடமாற்றம் இந்தியாவில் இருந்து உலகிற்குச் சென்றதே அல்லாமல் வெளி நாட்டு அறிஞர்கள் கூறுவது போல “உச்சரிப்பு மாற்றம்” (Pronunciation Shift), ஸ்பெல்லிங் மாற்றம் (Spelling Change) , ஸ்பெல்லிங் குழப்பம் என்பதெல்லாம் பொருந்தா வாதம். மேலும் ஹீப்ரூ, அராபிய, லத்தீன் மொழிகள் வெவ்வேறு குடும்பத்தை சேர்ந்தவை. லத்தீன் சம்ஸ்கிருதத் தொடர்புடைய மொழி! அவர்கள் இப்படி எல்லா மொழிகளையும் முடிச்சுப்போடுவது குழப்பத்தின் உச்சகட்டம்!
உலகில் உள்ள எல்லா மொழிகளையும் தமிழ், சம்ஸ்கிருதம் ஆகிய மூலத்தில் கொண்டு சேர்த்து விடலாம் என்ற என் வாதம் இந்த ஜ=ய (J = Y ) மாற்றத்தால் வலுப்பெறுகிறது. பல மொழிக் குடும்பங்களில் இந்த மாற்றம் இருப்பதும் பொருந்தல் கல்வெட்டில் 2500 ஆண்டுகளுக்கு முன்னர் இது துவங்கியதும் உலக மொழிகள் அனைத்தும் தமிழ் – வடமொழியில் இருந்து சென்றவை என்பதும் தெளிவாகிறது.
முன்னரே சொன்னேன் :– ஆங்கிலத்தில் ஆயிரக்கணக்கான தமிழ் சொற்கள் உள்ளன. இவைகளைப் பட்டியலிட்ட சாத்தூர் சேகரனை 1987-ல் இலண்டன் பி.பி.சி. தமிழோசையில் பேட்டிகண்டு ஒலிபரப்பினேன்.
ஒரே ஒரு எடுத்துக் காட்டு:–ஒன்று, எட்டு என்பதை ஆங்கில எண்களில் உள்ள ONE ஒன், EIGHT எய்ட் என்பதில் காணலாம். ஏனைய எண்கள் எல்லாம் சம்ஸ்கிருத அடிபடையிலானவை: த்வ, த்ரீ (டூ TWO , த்ரீ THREE ). இதே போல ஆங்கிலத்தில் முதலில் சம்ஸ்கிருதப் போக்கில் எண்கள் வரும்: த்ரீ+ டென்=தர்டீன் Thirteen, போர்+டென்= fஓர்டீன் Fourteen, பைவ்+டென்=Fப்டீன் Fifteen. இருபதுக்கு மேல் தமிழ்ப்போக்கில் எண்கள் வரும்; ட்வெண்டி+ஒன்= ட்வெண்டி ஒன் Twenty One, ட்வெண்டி டூ Twenty Two என்று— சம்கிருதத்தில் இப்படி இரா.
சுருக்கமாகச் சொன்னால் ஆங்கிலத்தில் எண்களில்கூட பாதி தமிழ் வழியிலும் பாதி சம்ஸ்கிருத வழியிலும் இருக்கும். இப்படி எல்லாப் பழைய மொழிகளிலும் தமிழ்–வடமொழித் தாக்கம் இருப்பதால் இந்தியர்களே உலகம் முழுதும் சென்று நாகரீகத்தை நிலை நாட்டியது விளங்கும்.
புணர்ச்சி/ சந்தி விதிகள் உலகில் உள்ள இரண்டே மொழிகள்:- தமிழும் சம்ஸ்கிருதமும்தான். இது பாரதீய சிந்தனையில் பிறந்த விதிகள். இன்று வரை சந்தி விதிகளுக்கு இலக்கணம் அமைத்து அவைகளைப் பின்பற்றுவது இவ்விரு மொழிகளே என்பதால் இவை இரண்டுக்கும் உள்ள தொடர்பு வேறு எந்த இரண்டு மொழிகளுக்கும் இடையில் உள்ள தொடர்புகளைவிட அதிகம்! தமிழுக்கு மிக நெருக்கமான ஒரே மொழி சம்ஸ்கிருதம் மட்டுமே.
இரண்டு சொற்கள் இணையும் போது மட்டும் மாறுவதோடு (மா+கோடு= மான்கோடு அல்லது மாங்கோடு) நில்லாமல் சொற்களுக்குள்ளும் மாறும் (பல்+கள்=பற்கள்; ஆள்+கள்= ஆட்கள், கண்+செவி=கட்செவி; மல்லிப் புத்தூர்= வில்லிப் புத்தூர், முழி-விழி). இந்தப் புணர்ச்சிவிதிகளை ஐரோப்பாவில் சம்ஸ்கிருதம் தொடர்பான மொழிகளில் இப்போது கொஞ்சம் காணலாம். தமிழிலும் வடமொழியிலும் முழுவீச்சில் பயிலப்படுவதால் இவ்விரு மொழிகளும் ஒரே சிந்தனையில் ஒரே மூலத்தில் பிறந்தவை! காலப்போக்கில் அதனதன் பாதையில் கிளைவிட்டுப் பிரிந்து சுதந்திரமான மொழிகளாகத் திகழ்ந்தன!
swami_48@yahoo.com






You must be logged in to post a comment.