விஞ்ஞானி, கதாசிரியர், பூட்டைத் திறக்கும் நிபுணர் – ஃபெய்ன்மேன்! (Post No.3842)

Written by S NAGARAJAN

 

Date:23 April 2017

 

Time uploaded in London:-  6-17 am

 

 

Post No.3842

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

 பாக்யா அறிவியல் துளிகள் தொடரில் 21-4-2017 இதழில் வெளியான கட்டுரை                                                                

இயற்பியல் விஞ்ஞானி, கதாசிரியர், பூட்டைத் திறக்கும் நிபுணர் – ஃபெய்ன்மேன்!

 

 

ச.நாகராஜன்

 

“ஃபெய்ன்மேன் பன்முக வண்ணம் கொண்ட வர்ணமயமான மனிதர்!” – ஜான் க்ரிப்பின்

 

 

     சிறந்த இயற்பியல் விஞ்ஞானியான ரிச்சர்ட் பிலிப்ஸ் ஃபெய்ன்மேன் (Richard Phillips Feynman) பன்முகம் கொண்ட ஒரு பெரிய மேதை. சொற்பொழிவாற்றுவதில் அனைவரையும் கவரும் நிபுணர் என்பதோடு கதை சொல்லும் கதாசிரியராகவும் அவர் திகழ்ந்தார்  சித்திரங்கள் வரைவது அவரது பொழுது போக்கு. பாங்கோ டிரம்களை வாசிப்பது அவருக்கு மிகவும் பிடிக்கும். இத்துடன் கூட  இரகசிய எண்களைக் கொண்டு யாராலும் திறக்கவே முடியாது என்று சொல்லப்படும் சிக்கலான பூட்டுகளை ஒரு நொடியில் திறந்து காண்பித்து அனைவரையும் அசத்துவது அவருக்குக் கை வந்த கலை.

 

 

    நியூயார்க்கில் 1918ஆம் ஆண்டு மே மாதம் 11ஆம் தேதி பிறந்த பெய்ன்மேன் இளமையிலேயே கணிதத்திலும் இயற்பியலிலும் மிக்க ஆர்வம் கொண்டிருந்தார்.

 

   அணுகுண்டைத் தயாரிக்கும் பிரம்மாண்டமான திட்டமான மேன்ஹாட்டன் ப்ராஜக்டில் முக்கியமான விஞ்ஞானியாகத் திகழ்ந்தார்.

 

     அவர் பெயரில் “ஃபெய்ன்மேன் டயாகிராம்ஸ்” என்று சிறப்பிக்கப்படும் கொள்கை உருவானது. இதில் குவாண்டம் தியரியில் எலக்ட்ரான்கள் பற்றிய பல கொள்கைகளுக்கு விளக்கம் தந்தார் அவர்.

 

 

1965ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசை மற்ற இரு விஞ்ஞானிகளுடன் அவர் பகிர்ந்து கொண்டார்.

லாஸ் அலாமாஸில் அணுகுண்டு திட்டத்தில் அவர் தீவிரமாகப் பணியாற்றிய போது பொழுதுபோக்காக அவர் ஈடுபட்டது பூட்டைத் திறப்பதில் தான்!

 

அப்போது எல்லோரும் தங்களது இரகசியமான ஆய்வுப் பேப்பர்களை ஒரு பைல் காபினட்டில் வைத்துப் பூட்டுவது வழக்கம். அதில் இருந்த டம்ளர் பூட்டுகளை ஒரு நொடியில் அவர் திறந்து விடுவார்.

 

 

பின்னர் காம்பினேஷன் லாக் என்று சொல்லப்படும் சிக்கலான இரகசிய எண்களைக் கொண்டு மட்டுமே திறக்கப்படும் பூட்டுகள் பயன்பாட்டிற்கு வந்தன.

 

இதை ரகசிய கோட் தெரியாத யாராலும் திறக்க முடியாது என்று அனைவரும் நம்பினர். ஃபெய்ன்மேனுக்கு இந்த சிக்கலான பூட்டுகளின் மீது ஆர்வம் பிறந்தது. ஒரு நாள் தனது அலுவலகத்தில் தனக்குத் கொடுக்கப்பட பூட்டைப் பிரித்து அது எப்படி வேலை செய்கிறது என்பதை ஆராய்ந்தார். மூன்று தட்டுகள் உள்ள பூட்டில் அதைச் சுலப்மாகத் திறக்க முடியாத விதத்தில் ஒரு லட்சம் சிக்கலான காம்பினேஷன்  இணைப்புகள் இருப்பதை அவர் எளிதில் உணர்ந்தார்,

 

 

   தீவிர ஆராய்ச்சி செய்து பூட்டுக்கான இரகசிய கோட் கண்டுபிடிக்க இரண்டு நம்பர்களை டயல் செய்வதன் மூலம் ஒரு லட்சம் காம்பினேஷன் இணைப்புகளை எட்டாயிரமாகக் குறைக்கலாம் என்று கண்டு பிடித்தார்.

 

 

இந்த எட்டாயிரத்தில் எந்த காம்பினேஷனை ஒரு பூட்டு கொண்டிருக்கும்? அதை எப்படிக் கண்டு பிடிப்பது? இடைவிடாத ஆராய்ச்சியின் மூலமாக டயலைத் திருகும் போது இலேசான அழுத்தத்தை ஹாண்டிலில் கொடுத்துப் பார்த்தால் கடைசி இரு எண்களைக் கண்டு பிடிக்கலாம் என்பதை உணர்ந்தார்.

 

 

பிறகென்ன? தெரியாத ஒரே நம்பர் முதலில் இருக்கும் நம்பர் தான். இதைக் கண்டு பிடிக்க இருபதே இருபது வழிகள் மட்டுமே இருக்கும்! அவ்வளவு தான்!

எந்த  சிக்கலான பூட்டையும் அவர் திறக்க ஆரம்பித்தார்.

நண்பர்களின் லாக்கர்களை லேசாக அழுத்தி டயலைச் சுழற்றும் அவர் பழக்கத்தைப் பார்த்து ஏதோ விளையாட்டாக அவர் சுழற்றுகிறார் என்று நண்பர்கள் நினைத்திருந்தனர்.

ஆனால் சீக்கிரமே அவர் ‘எந்த பூட்டையும் திறக்க வல்ல கில்லாடி’ என்று அலுவலகம் முழுவதும் செய்தி பரவி விட்டது.

 

 

    யாரேனும் ஒருவர் விடுமுறையில் சென்றிருக்கும் போது மிகவும் அவசரமாக ஒரு பைலை எடுத்துப் பார்க்க வேண்டும் என்றால் அனைவரும் ஃபெய்ன்மேனிடம் ஓடி வருவர்.

 

   உடனே ஃபெய்ன்மேன் சிக்கலான பெரிய டூல் பெட்டியை எடுத்து வந்து அவர்கள் அனைவரையும் அறையை விட்டு வெளியில் போகச் சொல்வார். ஓரிரு நிமிடங்களில் லாக்கை சுலபமாகத் திறந்து விட்டு அங்கேயே அமரந்து விடுவார். சில நிமிடங்கள் கழித்து மிகவும் கஷ்டப்பட்டு திறக்க வேண்டியதாய் இருந்தது என்று சொல்லியவாறே அறையை விட்டு தனது கருவிகளுடன் வெளியே வருவார்.

நாளடைவில் பூட்டுகளைப் பற்றிய ஏராளமான புத்தகங்களைப் ப்டித்தார். அனைவரும் இரகசிய எண்களாக தங்களது பிறந்த நாள் அல்லது இதர நாள்களையே வைப்பதைக் கண்டும் அதை அவர்கள் டெஸ்கின் ஓரத்தில் கிறுக்கி வைப்பதைப் பழக்கமாகக் கொண்டிருபப்தையும் கண்டு அவர் நொந்து போனார். 

 

 

     ஒரு சனிக்கிழமையன்று நூலகத்தில் இரகசிய ஆவணங்கள் சிலவற்றை எடுக்க வேண்டியிருந்தது. ஆனால் நூலகமோ மூடி இருந்தது. அவருக்கு தனது உதவியாளராகப் பணியாற்றிய பெண்மணி அந்த ஆவணங்களின் ஜெராக்ஸ் நகலை தனது இரகசிய லாக்கரில் ஒன்பது பைல் கேபினெட்டுகளில் வைத்திருந்தது நினைவுக்கு வந்தது. அங்கு சென்று பார்த்த போது அவரது வழக்கமான உத்தி மூலம் கடைசி இரு எண்களை அவரால் கண்டுபிடிக்கவே முடியவில்லை.

 

 

இப்போது தான அவர் நொந்து கொண்டிருந்த மனித இயல்பு அவருக்கு நினவுக்கு வந்தது. அந்தப் பெண்மணி பை என்ற கணித எண்ணான 3.14159 என்பதை மேஜையின் ஒரு ஓரத்தில் கிறுக்கி வைத்திருந்தார்.

 

 ஐந்து இலக்கங்களுடன் பை குறியீட்டை ஏன் அந்தப் பெண்மணி எழுத வேண்டும்? ஃபெய்ன்மேன் யோசித்தார். உடனே அவருக்கு ஒன்பது கேபினட்டுகளின் ரகசிய எண் குறியீடு கிடைத்து விட்டது! 

 

 

திங்கட்கிழமையன்று அலுவலகம் வந்த உதவியாளருக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. அவரது பைல்களில் ஃபெய்ன்மேன் ஏராளமான குறிப்புகளை எழுதியிருந்தார். கூடவே ஒரு எச்சரிக்கையும் இருந்தது. இனிமேல் தேசத்தின் மிக முக்கியமான இரக்சியங்கள் அடங்கிய பைல்கள் உள்ள இரகசிய லாக்கரின் குறியீட்டை மிகுந்த கவனத்துடன் ‘செட்-அப்’ செய்யுமாறு ஒரு ‘அன்புடன் சொல்லப்படும் அறிவுரையும்’ இருந்தது.

 

இது அனைவருக்கும் தெரியவே அனைவரும் ஃபெய்ன்மேனின் திறமையைப் பாராட்டினர்.

இது போல இன்னும் அணுகுண்டு ரகசியங்கள் அடங்கிய லாக்கரை அவர் திறந்த சம்பவங்களும் உண்டு.

ஆனால் அவர் மணவாழ்க்கை தான் சிறப்பாக இல்லை. முதல் மனைவி நோய்வாய்ப்பட்டு இறந்தார். இரண்டாவது மனைவிக்கோ இயற்பியல் என்றாலே கசப்பு. மூன்றாவதாக தன்னை விட் 16 வயது குறைந்த ஒரு மங்கையை அவர் மணம் புரிந்தார். அந்த உறவு இறுதி வரை தொடர்ந்தது.

கேன்ஸரால் பீடிக்கப்பட்ட ஃபெய்ன்மேன் 1988ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15ஆம் தேதி மரணமடைந்தார். உலகம் ஒரு அபாரமான மேதையை இழந்தது.

 

 

அறிவியல் அறிஞர் வாழ்வில்..

 

      உலகின் மிகப் பெரிய் அறிவியல் மேதையான ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மிக மிக எளிமையான மனிதர். ஒரு முறை பாரிஸில் உள்ள சார்போன் பல்கலைக் கழகம் அவருக்கு ஒரு விருதை வழங்கிச் சிறப்பித்தது. இதற்காக ஒரு பெரிய விழா ஏற்பாடு செய்யப்படவே விழா நடந்த பெரிய அரங்கமே உலகின் பிரப்ல அறிஞர்களின் வருகையால் நிரம்பியது.

 

 

    மறு நாள் ஐன்ஸ்டீன் தங்கியிருந்த ஹோட்டலுக்கு அவருடைய உறவினர் ஒருவரிடமிருந்து ஒரு போன் வந்தது. அவர் தங்கியிருந்ததோ பிரபலமில்லாத ஒரு சிறிய ஹோட்டல். “புரபஸர் ஐன்ஸ்டீன் இருக்கிறாரா? அவர் அறைக்குக் கொஞ்சம் கனெக் ஷன் கொடுங்கள்” என்றார் அவர்

 

 

“புரபஸர் ஐன்ஸ்டீன் என்று இங்கு யாரும் கிடையாது” என்று பதில் வந்தது.

 

“என்ன.நேற்று இரவு நான் தானே அவரை விழா முடிந்த பிறகு உங்கள் ஹோட்டலில் கொண்டு வந்து விட்டேன்” என்றார் போனில் பேசிய அவரது உறவினர்.

“நீங்கள் உலகின் மிகப் பெரிய விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீனைப் பற்றியா விசாரிக்கிறீர்கள்?” என்று வியப்புடன் கேட்டார் ஹோட்டலில் இருந்த ரிஸப்ஷன் போனை எடுத்த ஹோட்டல் மேனேஜர்..

 

“எங்கள் ரெஜிஸ்டரில் ஏ. ஐன்ஸ்டீன் என்று பதிவு செய்யப்பட்ட ஒருவருக்கு அறையைக் கொடுத்திருக்கிறோம். ஆனால அவரைப் பார்த்தால் ஒரு சேல்ஸ்மேன் போல அல்லவா இருக்கிறது. டிராவிலிங் சேல்ஸ் மென் என்றல்லவா அவரை நாங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறோம்” என்று வியப்புடன் கூறிய அந்த ஹோட்டல் மேனேஜர் பிரமித்துப் போனார்.

அறிவியல் அறிஞர் ஐன்ஸ்டீன் புகழை விரும்பாத ஒரு எளிமை விரும்பி!

****