ஈயத்தைத் தங்கமாக்குவது எப்படி? – 4 (Post No.4179)

Written by S.NAGARAJAN

 

Date: 2 September 2017

 

Time uploaded in London-5-44 am

 

Post No. 4179

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

Pictures are representational only; no link to he article.

 

 

அறிவியல் துளிகள் ஏழாம் ஆண்டு 27வது கட்டுரை

 

ஈயத்தைத் தங்கமாக்குவது எப்படி? – 4

 ச.நாகராஜன்

 

 

“இந்தப் புத்தகத்தில் இருப்பதை உங்களால் தெளிவாகப் புரிந்து கொள்ள முடிவயவில்லை என்றால் நீங்கள் தத்துவம் பற்றிப் படிக்கவே வேண்டாம் – பேஸிலியஸ் வாலெண்டினஸ்

                              

           12 திறவுகோல்கள் (Twelve Keys) என்ற புத்தகத்தைப் புரிந்து கொண்டு அதன் படி செய்தால் ஈயம் தங்கமாக மாறும் என்று சத்தியம் செய்து கூறுகிறார் பேஸிலியஸ் வாலெண்டினஸ்.

 

     முதலில் எனது கொள்கை ரீதியான கருத்துக்களைப் புரிந்து கொள்ளுங்கள். ஒருவேளை அது புரியாவிட்டாலும் கூட செய்முறையில் நான் கூறியதைச் செய்து பாருங்கள் என்கிறார் அவர்.

 

     “ஒரு மருத்துவர் எப்படி ஒருவரின் உடல் பாகங்களை நன்கு உணர்கிறாரோ அது போல தங்கத்தைப் பகுத்து அதன் மூலக்கூறுகளை நன்கு அறிந்து கொள்ளுங்கள். இப்படிச் செய்து தங்கம் தங்கமாக ஆகுமுன்னர் இருந்த நிலையை அடையுங்கள். அதன் விதை,நடு மற்றும் இறுதி நிலை பற்றி அறியுங்கள். அத்துடன் அதன் பெண் சக்தியையும் அறியுங்கள். – இப்படித் தன் விளக்கத்தை ஆரம்பிக்கிறார் அவர்.

 

       இதைப் படித்து ரஸவாதக் கல்லை அடையும் நீங்கள் பாக்கியவான்கள் என்ற ஆசீர்வாதத்துடன் தனது முதல் திறவுகோலை அவர் விளக்க ஆரம்பிக்கிறார்.

 

             எப்படி ஒரு மருத்துவர் முதலில் உடலின் உள் பாகங்களின் அழுக்கையெல்லாம் நீக்குகிறாரோ அதைப் போல எடுத்துக் கொள்ளும் உலோகத்தின் அழுக்கை நீக்குங்கள் என்பது அவரது முதல் அறிவுரை.

 

    தனது இரண்டாவது திறவுகோலில் அவர் தரும் உவமைகள் மிக்க சுவையானவை. ஒரு பெரிய மனிதரின் வீட்டில் பல விதமான பானங்கள் இருக்கும்.ஒவ்வொன்றுக்கும் ஒரு வித சுவை உண்டு.

 

ஒரு மணப்பெண் திருமணத்தின் போது தன் அழகுக்கு அழகூட்டும் விதமாக பல்வேறு ஆபரணங்களை அணிவாள். ஆனால் அவளது மண வாழ்க்கையின் முதல் இரவன்று எத வித ஆடை, அணிகலன் இன்றியே அவள் தன் வாழ்க்கையைத் துவங்குவாள்.

 

அது போலவே நமது தம்பதிகளான அபல்லோவும் டயானாவும் மிக பிரமாதமான ஆடைகளுடனேயே இருக்கின்றனர். அவர்களது தலையும் உடல்களும் வெவ்வேறு விதமான நீரால் கழுவப் படுகிறது. நமது மணமகனை வெவ்வேறு எதிரெதிரான நீரால் கழுவுவது முக்கியம்.

 

இங்கிருந்து சங்கேதமான வார்த்தைகளை பேஸிலியஸ் பயன்படுத்துகிறார்.

இதைச் சரியாகப் புரிந்து கொண்டவர்கள் தங்கமாக்கும் கலையை அறிவர்.

 

அடுத்த திறவுகோலில் கந்தக ஆவி பற்றியும் அதனுடன் சேர்க்க வேண்டிய பொருள்களைப் பற்றியும் விளக்குகிறார். அனைத்தும் சங்கேதச் சொற்களாலேயே தான்!

அடுத்த திறவுகோலில் அனைத்தையும் பாதுகாத்துப் பேணும் உப்பைப் பற்றி விளக்குகிறார்.

 

இவ்வாறு 12 திறவுகோல்களில் தங்கமாக மாற்றும் ரஸவாதக் கலையைச் சொல்லி தான் சொல்வது அனைத்தும் உண்மை, இதைப் பின்பற்றுவோர் ரஸவாதக்கல்லை நிச்சயம் அடைவர் என்றும் உறுதிபடக் கூறுகிறார்.

 

மிக்க பொறுமையுடன் பல்வேறு நூல்களைப் படித்து பல சோதனைகளை மேற் கொண்டால் பேஸிலியஸ் என்ன சொல்கிறார் என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

இந்த ஆராய்ச்சியில் தான் இன்று பலரும் இறங்கியுள்ளனர்.

பிரின்ஸிப் 12 திறவுகோல்கள் நூலைப் படித்த பின்னர் அதில் தங்கம் ‘ஆவியான உருவில் (vapour form) உருவாகும் விதம் தரப்பட்டிருப்பதாகக் கருதினார்.

 

இதே போன்று ஆவியாக தங்கம் உருவாவது பற்றிக் கூறும் இதர ஆவனங்களை அவர் சேகரிக்க ஆரம்பித்தார். பாயிலின் ஆவணங்களைப் பார்த்த போது அதில் பிலாஸபர்ஸ் மெர்குரி அதாவது பாதரஸத்தின் ஒரு திரவ வடிவம் மிக மிக மெதுவாக தங்கத்தைக் கரைப்பது பற்றிக் கூறப்பட்டிருப்பதைப் படித்தார். இது தங்கத்தை உருவாக்குவதில் மிக முக்கியமான ஒரு படியாகும்.

 

நியூடன் பாயிலிடமிருந்து பிலாஸபர்ஸ் மெர்குரி பற்றி அறிய முயன்றார். ஆனால் பாயில் அதை யாருக்கும் சொல்லாமல் ரகசியமாகப் பாதுகாத்து வந்தார்.

 

நியூட்டனும் கூட தனது குறிப்புகளில் பல சங்கேத வார்த்தைகளையே பயன்படுத்தியுள்ளார். ரஸவாதம் பற்றி இதுவரை பிரசுரிக்கப்படாத நியூட்டனின் குறிப்புகள் பத்து லட்சம் வார்த்தைகளுக்கும் அதிகமாக உள்ளன என்பது விந்தையான ஒரு தகவல். அதில் அவர் க்ரீன் லயன் (green lion) நெப்டியூன் டிரைடெண்ட் (neptune trident)  என்றெல்லாம் குறிப்பிடுகிறார். இவற்றின் பொருள் என்னவென்று புரியவில்லை.

 

நியூட்டனை நன்கு புரிந்து கொள்ள பல சோதனைகளை நியூமேன் செய்ய வெண்டியிருந்தது. அதில் ஒரு சோதனையின் பெயர் டயானா மரம் (The Tree of Diana)  என்பதாகும்!

 

பழைய கால உலை, கருவிகள் ஆகையவற்றை இந்தியானா பல்கலைக் கழக இரசாயனப் பிரிவின் உதவியோடு உருவாக்கி பல சோதனைகளை அவர் செய்ய ஆரம்பித்தார்.

இந்த டயானா மர சோதனை பிரமிக்க வைக்கும் ஒன்றாகும்.

அதில் உலோகங்கள் மரம் போல ‘வளர்வதைப் பார்க்கலாம்!

 

       வெள்ளியையும் பாதரஸத்தையும் திடமாக இருக்கும் நிலையில் கலவையாக்கி, பின்னர் கரைக்கப்பட்ட வெள்ளி மற்றும் பாதரஸத்துடன் கூடிய நைட்ரிக் அமிலத்தில் மூழ்க வைத்தால் வெள்ளியின் சில துணுக்குகள் கிளைகள் போல உருவாகும் என்பதை நியூமேன் சோதனையில் தானே நேரில் கண்டறிந்தார்.

இன்று இரசாயனத்தில் இது ஒரு சாதாரண சோதனையாக ஆகி விட்டாலும் கூட நியூட்டன் காலத்தில் அவருக்கு உலோகம் வளர்க்கப்படக் கூடிய ஒன்றே என்பதை அறிய மிகவும் உதவியது.

நியூமேன் போலவே பிரின்ஸிப்பும் மிகப் பெரும் மேதைகளான நியூட்டன், பாயில், ஸ்டார்கி ஆகிய மூவர் கண்டறிந்த பிலாஸபர்ஸ் மெர்குரி என்பதை உருவாக்க முடியும் என்ற முடிவுக்கு வந்தார்.

இதற்கான செய்முறை மிக சிக்கலானது; நீண்டது.

பிரின்ஸிப் பிலாஸபிகல் மெர்குரியுடன் தங்கத்தைச் சேர்த்து அதை சீலிடப்பட்ட ஒரு முட்டை வடிவிலான கண்ணாடியில் வைத்து என்ன நடக்கிறது என்று பார்த்தார். என்ன ஆச்சரியம்! விசித்திரமான விஷயங்கள் ஆரம்பமாயின.

அந்தக் கலவை கொதிக்க ஆரம்பித்தது. பிறகு அது பசை போன்ற திரவமாக மாறியது. பல நாட்கள் கொதிக்க வைக்கப்பட்ட பின்னர் சுரங்கத்தில் தாங்கள் பார்த்ததாக பழைய காலத்தில் சுரங்கத் தொழிலாளிகள் சொன்னார்களே, அந்த விசித்திரத்தைப் பார்த்தார்.

ஆம், முட்டை வடிவிலான கண்னாடிக் குடுவையிலே தங்கமும் பாதரஸமும் (மரம் போல) வளர்ந்திருந்தன.

ஆனால் அந்த மரத்தில் அதிக அளவு தங்கம் உருவாகவில்லை. அவர் போட்ட தங்கத்தை விட புதிதாக உருவாகி இருந்த தங்கம் மிகக் குறைந்த அளவே தான் இருந்தது. என்றாலும் கூட மிகக் கடுமையான சோதனைச் சாலை கட்டுப்பாடுகளின் மூலமாக ஒரு திடமான உலோகம் மீண்டும் மீண்டும் சோதனை செய்யப்பட்ட நிலையில் கொப்பளித்து, நிறம் மாறி, ஒளி விடும் பொறிகளை உருவாக்கி வேறு ஒரு நிலையை அடையும் என்பதை உறுதியாகக் காண முடிந்தது

 

இது நியூமேனுக்கும், பிரின்ஸிப்புக்கும் ஒரு புதிய நம்பிக்கையைத் தந்துள்ளது.

(12 திறவுகோல்கள் புத்தகத்தில் உள்ள 12 படங்களைப் பார்க்க விரும்புவோர் கீழ்க்கண்ட இணையதளத்தில் பார்க்கலாம்: https://en.wikipedia.org/wiki/The_Twelve_Keys_of_Basil_Valentine  

புத்தகத்தை ஆங்கிலத்தில் படிக்க விரும்புவோர் http://www.levity.com/alchemy/twelvkey.html உள்ளிட்ட பல தளங்களிலிருந்து புத்தகத்தைத் தரவிறக்கம் (டவுன்லோட்) செய்து கொள்ளலாம்.)                                       (தங்க ரகசியம் தொடரும்)

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

 

அமெரிக்காவில் பேரறிஞர் ஐன்ஸ்டீன் வாழ்ந்த காலத்தில்,

ஹாரி பாலட் க்ளாதியர்ஸ் (Harry Ballot Clothiers) என்பது பிரின்ஸ்டனில் நாஸா வீதியில் உள்ள ஒரு பெரிய ஆடை நிறுவனமாகப் புகழ் பெற்றிருந்தது. அங்கு நல்ல ஆடைகளை வாங்காதவர்களே இல்லை.

 

பெரிய விஞ்ஞானியான ஐன்ஸ்டீன் தன் உடை விஷயத்தில் அவ்வளவாக கவனம் செலுத்துபவர் இல்லை. அவரது பழைய கோட் மிகவும் அழுக்காக இருந்தது.

 

அவரது உதவியாளராக இருந்த பெண்மணியான ஹெலன் ட்யூகாஸ் (Helen Dukas) அவரது அழுக்கு கோட்டை எப்படியாவது தூக்கி எறிய வேண்டும் என்று கங்கணம் பூண்டிருந்தார்.

ஆனால் ஐன்ஸ்டீனுக்கோ அதில் துளிக் கூட சம்மதம் இல்லை.

 

ஒரு போதும் அந்தக் கோட்டை தூக்கி எறியக் கூடாது என்று அவர் கண்டிப்பாகச் சொல்லி விட்டார்.

 

அதை டிரை க்ளீனரிடம் போட்டால் போதும் என்றார் அவர்.

அடுத்த நாள் ஹெலன் ஹாரி பாலட் கடைக்குச் சென்று அங்கிருந்த கடைக்காரரான வெண்ட் ராஃப் (Wendroff) என்பவரிடம் ஐன்ஸ்டீனின் கோட்டைக் காண்பித்து அதே போல ஒரு புது கோட் கிடைக்குமா என்று கேட்டார்.

புது கோட் கிடைத்தது.

 

அது புதிது என்பதற்கான சீட்டை அதிலிருந்து கிழித்து எறிந்து விட்டு அதை டிரை க்ளீனர் கொண்டு வரும் மூட்டையில் சேர்த்தார் ஹெலன்.

 

டிரை க்ளீனிங்கிலிருந்து வந்த கோட்டைப் பார்த்த ஐன்ஸ்டீன் ‘அட, நான் சொன்னது சரியாக இருக்கிறதே. டிரை க்ளீனிங் செய்யப்பட்ட கோட் எவ்வளவு ஜோராக இருக்கிறது! என்றார்.

 

      நடந்தது என்னவென்று யாருக்கும் தெரியாது. ஹெலனுக்கு மட்டுமே வெளிச்சம்!

****