
Written by London swaminathan
Date: 3 March 2017
Time uploaded in London:- 10-59 am
Post No. 3687
Pictures are taken from various sources; thanks.
contact; swami_48@yahoo.com
எகிப்தில் முதல் நாலு வம்சங்களின் ஆட்சி பற்றி இதுவரை பார்த்தோம். முப்பது வம்சங்களில் 5 முதல் 10 வரையுள்ள வம்சங்களின் சிறபுகளைச் சுருங்கக் காண்போம். நாலாவது வம்சத்தின் இறுதியில் குடும்பச் சண்டை வலுத்தது. பெண்வழி அரசாட்சி மூலம் ஐந்தாவது வம்சம் வந்தது. செழிப்பும் அமைதியும் மிக்க பொற்காலம் இது. இந்தக் காலத்தில் பிரமிடுகளின் சுவர்களில் சமயச் சடங்குகள் பற்றி எழுதிவைத்தனர். இதுதான் எகிப்தின் பழமையான இலக்கியம். இதை பிரமிடு இலக்கியம் எனலாம். யூனஸ் (UNAS) என்ற அரசனைன் பிரமிடுகளிலும் அவனைத் தொடர்ந்து ஆண்டோரின் பிரமிடுகளிலும் சடங்குகள் (Pyramid Texts )பற்றிய குறிப்புகள் உள்ளன. எழுத்து வடிவிலுள்ள சமயச் சடங்குகளில் (Oldest written Rituals)இதுவே உலகில் பழமையானது.

நூறு ஆண்டு வாழ்ந்த மன்னன்!
இரண்டாம் பெபி (Pepy II) பற்றிய சில அதிசயச் செய்திகள்:-
இது தவிர இன்னொரு அதிசயமும் உண்டு. இரண்டாம் பெப்பி (Pepy II) என்ற மன்னன் 100 ஆண்டுகள் வாழ்ந்ததாக நம்பப்படுகிறது.
இவன் ஆறு வயதில் பதவிக்கு வந்து 100 வயது வரை வாழ்ந்ததால் இவன் 94 ஆண்டுக்காலம் ஆட்சி புரிந்ததாக சொல்லப்படுகிறது. இது உண்மையானால் உலகில் இவனே நீண்ட காலம் ஆண்டவன் ஆவான்!
இவனுடைய காலம்: கி.மு2278 – 2184
அண்ணன் மேரென்றே (Merenre) ஆட்சியைத் தொடர்ந்து இவன் பதவி ஏற்றான். இன்னொரு அதிசயச் செய்தி. இவனது ஆட்சிக் காலத்தில் தெற்கத்திய படையெடுப்பில் குள்ளமாக வளரும் பிக்மி (pygmy) இன மக்களைப் பிடித்துவந்து ஆடவைத்தனர். ஆடும் குள்ளன் (Dancing Dwarf) என்ற செய்தி பெரிய அதிசயமாகப் போற்றப்பட்டது.
எகிப்தில் கோவில் சொத்துகளுக்கு வரி விலக்கு!
இந்து மன்னர்கள் செய்தது போலவே, கோவில் நிலங்களுக்கு பெபி வரி விலக்கு அளித்தான். இவனது ஆட்சிக் காலத்தில் பிரம்மாண்டமான கட்டிடங்கள் எழும்பின.
பெபி பற்றிய பல சுவையான செய்திகளில் ஒன்று இவன் பல பெண்களை மணந்தான். ஆயினும் அவர்கள் எல்லாம் இறந்தும் இவன் மட்டும் 100 வயது வரை வாழ்ந்தான். இவன் ஒருபால் புணர்ச்சியை (HOMO SEXUAL) விரும்பியவன். சஸ்நெட் (General Sasenet) என்ற படை த்தளபதியுடன் இவனுக்கு ஒருபால் காதல். இரவு நேரத்தில் யாருக்கும் தெரியாமல் அரண்மனையிலிருந்து வெளியேறி தளபதி வீட்டின் சுவர் ஏறிக்குதித்து அவனுடன் படுத்துவிட்டுக் காலையில் திரும்பிவிடுவான் என்று எகிப்தில் ஒரு செய்தி உலவியது.

இவன் கோவிலகளுக்கும் பிரபுக்களுக்கும் நிலங்களைத் தானமாக அளித்தான். பிரபுக்களுக்கு இப்படிக்கொடுத்தால் அவர்கள் விசுவாசமாக இருப்பர் என்ற நம்பிக்கை. இவன் நூபியா, சைனாய் (Nubia and Sinai) முதலிய பகுதிகளுக்குப் படை எடுத்துச் சென்று தங்கத்தையும் ரத்தினக் கற்களையும் கொண்டு தனது கட்டிடங்களை அலங்கரித்தான். ஆனால் இவன் பின்பற்றிய கொளகைகளே இவனுக்குப் பின்னர் நிலையற்ற ஆட்சியை உண்டாக்கியது. இவன் இறந்த பின்னர் சக்கரா என்னும் இடதிலுள்ள பிரமிடில் புதைக்கப்பட்டான். அங்குதான் சுவர் எழுத்துகள் – சமய இலக்கியப் படைப்புகள் தோன்றின.
ஆறாவது வம்சத்தின் இறுதியில் பிளவு அதிகரித்தது. நிச்சயமற்ற நிலை நீடித்ததால் அரசியல் குழப்பம் நீடித்தது. இதை எகிப்தியவியலாளர் முதல் குழப்ப காலம் (இடைவெளி First Intermediate Period) ) என்று சொல்லுவர். அரசாங்க அமைப்புகளும் மன்னரின் கரங்களும் பலவீனம் அடைந்தன. தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் என்னும் பாங்கில் ஒரே சமயத்தில் பலர் வெவ்வேறு பகுதிகளில் ஆளத்துவங்கினர்.
ஆனால் வணிகமும் இலக்கியமும் வளர்ந்தன. குறிப்பாக 9, 10 ஆவது வம்சங்களின் ஆட்சிக்காலத்தில்.
எப்போதும் தென்பகுதியில்தான் எகிப்தின் உயிர்த் துடிப்பு இருக்கும். ஆங்கே தோன்றிய ஒரு இளவரசன் மீண்டும் எகிப்தை ஐக்கியப்படுத்தினான்.

சுவர்களில் எழுதிய அதிசயச் செய்திகள்:-
ஐந்தாவது, ஆறாவது வம்ச காலங்களில் சக்கரா என்னும்பி இடத்தில்ர உள்ள பிரமிடுகளின் சுவர்களிலும் கல்லறைகளிலும் எழுதப்பட்டவையே முதல் படைப்புகள் இவை கி.மு 2400 ஐ ஒட்டியவை. பழைய எகிப்திய மொழியில் எழுதப்பட்டவை. இதிலுள்ள ‘மந்திரங்கள்’ மரணத்துக்குப் பின்னுள்ள வாழ்க்கை பற்றியவை. பாரோவின் ஆவி எப்படியெல்லாம் மேலுகம் செல்ல முடியும் என்றும் அதற்கு ஆஸிரிஸ் என்னும் தேவதை உதவும் என்றும் கூறும். சில’ மந்திரங்கள்’ கடவுளை மிரட்டும் (SPELLS) மந்திரங்கள்!
ஐந்தாவது வம்ச மன்னன் யூனஸ்(Unas), ஆறாவது வம்ச மன்னர்கள் Pepi I, Pepi II பெபி, திதி (Teti) , மேரென்ரே(Merenre) அவர்களுடைய மஹாராணிகள் ஆகியோர் கல்லறைகளில் இந்த ‘மந்திரங்கள் அல்லது கட்டளைகள் உள்ளன. சுமார் 800 மந்திரங்கள் (spells) வெளியிடப்பட்டுள்ளன.
இவைகளில் பல இந்து மத வேத மந்திரங்கள் போல இருக்கின்றன. இறந்த ஆவி பற்றிய வேத மந்திரங்களுடன் இவற்றை ஒப்பிட்டு ஆராய வேண்டும்.
திதி (Teti) என்ற மன்னன் பற்றிய மந்திரம்:
“மன்னனே எழுந்திரு. தலையை நிமிர்த்து; உன் எலும்புகளையும் உறுப்புகளையும் எடு. மண்ணை உதறு. ரொட்டியையும் பீயரையும் எடுத்துக்கொள். சாதாரண மனிதன் கடக்க முடியாத வாசலில் நில்.
வாயிற்காப்போன் வந்து உன்னைக் கரம்பிடித்து , முத்தமிட்டு, அன்பாக, தந்தை (GEB) ஜெபிடம் அழைத்துச் செல்வான். மறைந்திருப்போர்கள், பெரியோர்கள் உனக்கு உதவுவர். உணவு தயாராகிவிட்டது. மாதாந்திர விருந்து தயாராகிவிட்டது”.
இந்துக்களும் முதல் 13 நாட்களுக்குப் பின்னர் மாதம்தோறும் மூன்று நாட்கள் இறந்தோருக்கான கிரியைகளைச் செய்வர்.

ஒரு மந்திரம் சொல்கிறது: “வானம் தோன்றுவதற்கு முன்னரே பிரளயகால நீரில் மன்னன் தோன்றிவிட்டான். மஹா பிரளயத்தில் அரசன் இருவர் சண்டையில் (ஹோரஸ்- சேட்) தீர்ப்பு வழங்குவான்”.
பிரமிட் சுவர் (Pyramid Texts) இலக்கியம் பெரும்பாலும் சம்பாஷணை (Dialogue) வடிவில் இருக்கும். அதாவது மன்னன் (பாரோ) நட்சத்திர மண்டலத்தை தாண்டி பயனம் செய்வதற்கு முன்னர் தன் சேவகர்களுடன் கலந்துரையாடுகிறார் (இந்த இடத்தில் நான் மஹாபாரத வனபர்வத்தில் புண்யாத்மாக்கள் நட்சத்திர மண்டலங்கள் ஆவது பற்றி எழுதியதை நினைவுபடுத்துகிறேன். எனது முந்தைய கட்டுரைகளைப் படிக்கவும்)
நமது வேதங்களைப் போலவே, மறை (ரஹசிய) மொழிகளில் சம்பாஷணை இருக்கும்: (எகிப்திய மந்திரம் 352):– ” ஓ, பசுவே! இரவில் உன்னுடைய நேரத்தில் அரசனுடன் ஒரு வல்லூறு (கழுகு) கர்ப்பம் அடைந்துவிட்டது”.
இதற்கெல்லாம் பொருள் சொல்ல ஆட்கள் இல்லை. ஆராய்ச்சியாளர்கள் ஊகத்திலேயே வண்டி ஓட்டுகின்றனர். இவைகளை மொழி பெயர்ப்பது இயலாத காரியம் என்பர் எகிப்தியவியலாளலர்.
எகிப்தியர்களுக்கு சிலேடையில் பேசுவது பிடிக்கும். இப்படி இருபொருள்பட அவர்கள் சித்திர எக்ழுத்துக்களை எழுதுகையில் அதைப் புரிந்துகொள்வது இன்னும் கடினம். அவர்கள் சிலேடையில் பேசுவதில், நம் காளமேகப் புலவருக்கு அண்ணன்கள்!!
ஊனஸ் பிரமிடில் முதலில் இவைகளைப் பார்த்தாலும், இவை அதற்கு முன்னரே வாய்மொழியாக இருந்திருக்க வேண்டும் முதலில் சுவரில் எழுதிவிட்டு, பின்னர் சவப் பெட்டியின், உட்புறத்தில் எழுதத் துவங்கினர்.

எப்படி வேதங்களை மொழி பெயர்க்கமுடியாதோ அப்படி எகிப்திய விஷயங்களையும் மொழி பெயர்க்கமுடியது. இது ஒரு சிக்கலாலன புதிர்!
தேவி பாகவதத்தில் தேவியின் உலகம் எப்படி வருணிக்கப்படுகிறதோ அப்படி மேலுலகம் வருணிக்கப்படுகிறது “கடவுள் பிறந்த அந்த இடத்தில் எப்போதும் ஒளி இருக்கும். நான் கிழக்கு திசை நோக்கிச் செல்லுகிறேன்
வானத்தின் ரிஷபம் (காளை) மன்னன்;
நினைத்தமாத்திரத்தில் வெல்லுவார்.
அவர் எல்லா கடவுளிடத்திலும் உள்ளார்.
அவர் குடலையும் உறுப்பையும் திண்பார்
முழு உடலுடன் வந்தாலும் அவர் செய்வார்
அக்னித் தீவில் இருந்துகொண்டு. (எகிப்திய மந்திரம் 274)
ஓ ரே! வளைந்து செல்லும் நீர்வழியின் படகோட்டியிடம் என்னை ஒப்படை. அவன் படகு கொண்டு வரட்டும். அவன் அதில்தானே கடவுளரை கிழக்கு திசைக்கு அழைத்துச் செல்லுகிறான் (மந்திரம் 359)!@
இந்துக்கள் சம்சார சாகரம் (பிறவிப் பெருங்கடல்) என்று சொல்லுவதையும், வைதரணி என்னும் நதியை இறந்த ஆவிகள் கடக்க வேண்டும் என்று கூறுவதையும் ஒப்பிடுக; இந்துக்களின் மரணச் சடங்குகளில் ஒரு படகு பொம்மை செய்து வைப்பார்கள்.
எகிப்தியர்கள் சொல்லும் கீழ்திசை, புண்ணிய பூமியான இந்தியாவாக இருக்கும் என்பது என் கருத்து.
தொடரும்……….