
Written by S NAGARAJAN
Date: 26 June 2017
Time uploaded in London:- 9-24 am
Post No.4025
Pictures are taken from different sources such as Face book, Wikipedia, Newspapers etc; thanks.
எண் ரகசியம்
காபிரைட் உள்ள தொடர் இது. திரு எஸ்.சுவாமிநாதன் அனுமதி பெற்று www.tamilandvedas.com மற்றும் கட்டுரை ஆசிரியரின் பெயரோடு வெளியிடல் வேண்டும். மீறியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
எண் ரகசியம் – 4
பர்மாவில் 969 இயக்கம்!
ச.நாகராஜன்

எண்கள் வாழ்க்கையில் மட்டும் முக்கிய அங்கத்தை வகிக்கவில்லை.
ஒரு நாட்டின் அரசியல் சூழ்நிலையில் கூட முக்கியத்துவத்தை வகிக்கிறது.
எடுத்துக்காட்டாக மியான்மர் என்று இன்று வழங்கப்படும் பர்மாவை எடுத்துக் கொள்வோம்.
அங்கு 969க்கும் 786க்கும் இடையே ஒரு பெரிய போராட்டமே நடந்தது.
சில வருடங்களுக்கு முன்னர், 2012ஆம் ஆண்டில், மதத்துடன் சம்பந்தப்படுத்தப்பட்ட எண் பெருத்த விளைவை அங்கு, அரசியல் அரங்கத்தில் ஏற்படுத்தியது.
969 என்ற எண்ணை புத்த மதத் துற்விகள் தங்களது இயக்கத்திற்கான எண்ணாக அறிமுகப்படுத்திப் பயன்படுத்த ஆரம்பித்தனர்.
இந்த எண்ணின் மூலமாக அவர்கள் தங்கள் மதத்தினருக்கு அறிவுறுத்திய விஷயம் இது தான்:
புத்த மதத்தினர் தங்கள் மதத்தைச் சார்ந்தவர்கள் நடத்தும் கடைகளில் மட்டுமே பொருள்களை வாங்க வேண்டும். அவர்கள் ஒருக்காலும் முஸ்லிம் மைனாரிட்டியினரின் கடைகளை அணுகக் கூடாது. அவர்களுடன் மண உறவு வைத்துக் கொள்ளக் கூடாது. அவர்களுக்கு எதையும் விற்கவும் கூடாது.
இந்த இயக்கம் நாளடைவில் முஸ்லீம்களின் மீது துவேஷம் ஏற்படுத்தும் ஒன்றாக மாறியது. வன்முறையையும் தூண்டியது.
ஆனால் 969 என்ற எண் உண்மையில் அமைதியையும் சமாதானத்தையும் பரப்புவதற்கான எண்ணாகத் தான் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த எண் எப்படித் தோன்றியது. இதன் இரகசியம் என்ன?
புத்த மத சம்பிரதாயத்தில் ‘த்ரி ரத்ன” எனப்படும் மூன்று ரத்தினங்கள் 24 அருங்குணங்களைக் கொண்டிருப்பவை. புத்தரின் ஒன்பது விசேஷ அம்சங்களையும், புத்த உபதேசங்களைக் குறிக்கும் ஆறு உபதேசங்களும், துறவிகளுக்கான ஒன்பது குணாதிசயங்களும் குறிப்பதே 969 என்ற எண் ஆகும்.
ஒன்பது + ஆறு + ஒன்பது 969 ஆக உருவானது.
அஸ்வின் விராது என்பவரே இந்த 969 ஐப் பரப்ப முக்கிய காரணமாக அமைந்த புத்த பிட்சு. இது முஸ்லீம்களை எதிர்க்கும் போராட்டமாக பின்னர் மாறி விட்டது.
ஸ்டிக்கர்கள்,கொடிகள்,கம்ப்யூட்டர் CDக்கள் என அனைத்திலும் 969 என்ற எண் பொறிக்கப்பட்டது. பர்மாவெங்கும் இவை விற்க்ப்பட்டன.
அத்துடன் வாங்குவோர் அனைவரும் எதை வாங்கினாலும் அதில் 969 என்ற எண் பொறிக்கப்பட்டிருக்கிறதா என்று பார்த்து வாங்குமாறு அறிவுறுத்தப்பட்டனர்.
இந்த 969இன் செய்தி ஒன்றே ஒன்று தான்.தங்கள் தேசத்தின் பொருளாதாரத்தைப் பாழ்படுத்தும் முஸ்லீம்களை ஆதரிக்கக் கூடாது என்பது தான்.
இத்தனைக்கும் பர்மாவில் முஸ்லீம்களின் ஜனத்தொகை ரீதியிலான சதவிகிதம் 4% மட்டுமே!

இஸ்லாமியர் பெரிதும் மதித்துப் போற்றும் எண் 786.
“in the name of Allah, the ever meerciful, the ever compassaonate” என்பதை abjad என்ற பழைய கால அராபிய எண்கணித சாஸ்திரம் குறிக்கிறது. .இந்த சாஸ்திரம் கிறிஸ்துவுக்கு முன்னர் 1500 ஆண்டு பழமையானது என்பதை உர்கார்டி பிரதிகள் காட்டுகின்றன. ஒவ்வொரு எழுத்துக்கும் ஒரு நம்பரை இந்த எண் கணிதம் குறிப்பிடுகிறது. விரிவான இந்த எண் சாஸ்திரப்படி கீழே உள்ள எழுத்துக்கள் 786ஐக் குறிக்கிறது.
பிஸ்மில்லா என்பதன் எண்ணாக 786 அமைகிறது. ஆகவே இந்த எண்ணை இஸ்லாமியர் மிகவும் புனித எண்ணாகக் கருதுகின்றனர். இஸ்லாமியரைப் பொறுத்த மட்டில் மிகவும் மதிப்பு வாய்ந்த 786 ஒரு அதிர்ஷ்ட எண். தெய்வீக எண்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 1981இல் வெளியான தீ என்ற ப்டத்தில் இந்த எண்ணைக் கையில் அணிந்திருந்தார். அமிதாப் பச்சன், சிரஞ்சீவி ஆகியோரும் திரைப்படத்தில் இந்த எண்ணைத் தேர்ந்தெடுத்து மகத்தான வெற்றியைப் பெற்றதுண்டு.
ஆக பர்மாவில் 969 எண்ணைத் தம் இயக்கத்தின் முக்கிய எண்ணாகக் கொண்டவர்கள் 786 என்ற எண்ணுக்கு எதிரானவர்கள் ஆனார்கள்.
ஒரு வழியாக இந்தப் போராட்டம் வலு இழந்தாலும் கூட இன்றும் கூட பிட்சு அஸ்வின் விராது 969 இயக்கத்தை வழி நடத்தி வருகிறார்.
எண் ஆக்கவும் வல்லது; அழிக்கவும் வல்லது என்பதை நாடுகளின் சரித்திரத்திலிருந்து அறிய முடிகிறது!
***
–