எது கவிதை? (Post No.3742)

Written by S NAGARAJAN

 

Date: 21 March 2017

 

Time uploaded in London:-  5-36 am

 

 

Post No.3742

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

மார்ச் 21 உலக கவிதை தினம் – சிறப்புக் கட்டுரை

எது கவிதை?

 

ச.நாகராஜன்

 

எது கவிதை? இதற்கான இலக்கணத்தை நூற்றுக் கணக்கான அறிஞர்கள், கவிஞர்கள், இலக்கியவாதிக்ள் சொல்லி விட்டனர்.

இவ்ர்கள் சொன்ன இலக்கணத்தின் படி இது தான் கவிதை என்பதோடு இதற்கு அப்பாலும் கவிதை இருக்கிறது என்பது தான் உண்மை!

 

 

எதார்த்ததைச் சொல்வது கவிதை என்பது ஒரு கட்சி; கற்பனையை அழகுறச் சொல்வது கவிதை என்பது இன்னொரு கட்சி.
எதார்த்தம் தான் கவிதை என்றால்.

 

பாக்காவது கமுகம் பழம் பருப்பாவது துவரை

மேற்காவது கிழக்கே நின்று பார்த்தால் அது தெரியும்

நாற்காதமும் முக்காதமும் நடந்தால் அது எழு காதம்

ராக்கா உண்மை சொன்னேன் இனி ரட்சிப்பயோ அல்லது பட்சிப்பயோ”

என்ற இதுவும் கவிதை தானே என்கிறார் பேராசிரியர் முத்துசிவன் தனது அசோகவனம் என்ற புத்தகத்தில் கவிதை என்ற கட்டுரையில்.

 

வெறும் ய்தார்த்தம் மட்டும் கவிதை ஆகாது.

இது போல்வே வெறும் கற்பனை மட்டும் கவிதை ஆகாது.

நிலவு போன்ற முகம், வீனஸ் போன்ற தேவதை என்று சொல்லிக் கொண்டே போவது மட்டும் கவிதை அல்ல.

பின்னர் கவிதை என்பது தான் என்ன?

 

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை கூறுகிறார்:-

 

உள்ளத்துள்ளது கவிதை – இன்பம்

உருவெடுப்பது கவிதை

தெள்ளத் தெளிந்த தமிழில் – உண்மை

தெரிந்துரைப்பது கவிதை

 

 

கவிதைக்கான அழகான இலக்கணம் தான் இது!

ஆனால் கம்பனோ கவிதையில் ஒளி வேண்டும் என்கிறான்.

கோதாவரி ஆற்றின் பிரவாகத்தைப் பார்த்த அவனுக்கு அதை கவிதையுடன் ஒப்பிடத் தோன்றுகிறது.

 

 

புவியினுக்கு அணியாய் ஆன்ற பொருள் தந்து புலத்திற்றாகி

அவியகத் துறைகள் தாங்கி ஐந்திணை நெறியளவில்

சவியுறத் தெளிந்து த்ண்ணென் ஒழுக்கமும் தாங்கிச் சான்றோர்

கவியெனக் கிடந்த கோதா வரியினை வீரர் கண்டார்.

 

 

இதை விட அற்புதமாக எது கவிதை என்பதை விவரிக்க முடியுமா?

 

புவியினுக்கு அணியாய் அமைவது சான்றோரின் கவி.

அது ஆன்ற பொருளைத் தரும்.

தேவ்ர் தம் உணவுக்கொத்த சுவைப் புலங்களில் படிந்ததாக இருக்கும்

 

அவியகத் துறைகள் தாங்கி இருக்கும்,

அதில் ஒளி இருக்கும் (சவி – ஒளி)

 

தண்ணென குளிர்ந்த ஒழுக்கம் நிரம்பி இருக்கும்.

அகன்ற பிரவாகம் போலப் பெருக்கெடுத்து ஓடி இன்பம் தரும் (கோதாவரியைப் போல)

இது கம்பனின் வாக்கு.

இது தான் கவிதையா?

இதை மிஞ்சி ஒரு படி செல்கிறான் காலத்தை வென்ற கவி மஹாகவி பாரதி!

நமக்குத் தொழில் கவிதை நாட்டிற்கு உழைத்தல்

இமைப்பொழுதும் சோராதிருத்தல்

இது தான் பாரதியின் தொழில்.

 

கம்பன் இசைத்த கவியெலாம் நான் என்பது தான் கவிதைத் தொழில் மன்ன்னின் சுய சரிதைச் சுருக்கம்!

 

 

பாட்டினில் அன்பு செய்

நூலினைப் பகுத்துணர்

இது பாரதியின் புதிய ஆத்திசூடி கட்டளைகள்

 

காலத்திற்குத் தக்கபடி பாழும் கலியில் பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் அனைவரையும் மேலேற்றி, குருடரை எல்லாம் குருடு நீக்கி விழி கொடுத்துப் பதவி பெற வைப்பது கவிதை என்கிறான் அவன்.

கவிதையே தொழிலாகக் கொண்ட கவிஞன் க்விதா சக்தி பற்றிய விளக்கம் இது தான்:-

 

உள்ளத்தில் ஒளி உண்டாயின்

   வாக்கினிலே ஒளியுண்டாகும்

வெள்ளத்தின் பெருக்கைப் போற் கலைப்பெருக்கும்

   க்விப்பெருக்கும் மேவுமாயின்

பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெலாம்

    விழிபெற்றுப் பதவி கொள்வார்

தெள்ளுற்ற தமிழமுதின் சுவை கண்டார்

 இங்கமரர் சிறப்புக் கண்டார்

 

 

என்ற் கவிதா வரிகளில் கம்பனின் ச்வி என்னும் ஒளியை பாரதி முன் நிறுத்துகிறான். வாக்கினிலே ஒளி வந்து வெள்ளம் போல கலையும் கவிதையும் பெருகுமாயின் பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடர் விழி பெற்று உன்னதமான நிலையை எய்துவர். அமிழ்தம் நிகர் தமிழின் சுவை கண்டார் தேவர் ஆகிடுவர்.

என்ன அழகிய வார்த்தைகள்! கவிதையின் மகத்தான் சக்தியை ப்ளீரென்று சொல்கிறார் பாரதியார்.

 

 

இது தான் கவிதை! இதைத் தாண்டியும் இருப்பது கவிதை!

எது ஆன்மாவை உயரத்தில் ஏற்றுகிறதோ அது கவிதை!

எது ஆன்மாவைப் போல அழியாமல் இருக்கிறதோ அது கவிதை!

எது இறைவனின் விளக்க முடியா விந்தையை விளக்க முயன்று ஒளிர்கிறதோ அது கவிதை.

இது தான் கவிதையா! இது  க்விதை; இதற்கு அப்பாலும் உள்ள விளக்கத்தைக் கொண்டிருப்பதும் கவிதை!

 

விண்டுரைக்க முடியா விந்தையே கவிதை!!

****