எவை எவை வேண்டும்? – வள்ளுவரின் அறிவுரை! (Post No.5438)

Written by S NAGARAJAN

Date: 17 SEPTEMBER 2018

 

Time uploaded in London – 6-25 AM (British Summer Time)

 

Post No. 5438

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

ச.நாகராஜன்

 

மனித வாழ்க்கையில் வேண்டுவன எவை? வழிகாட்டியாக நம் முன் நிற்பவர் வள்ளுவரே.

 

அவர் வேண்டும் என்று சொல்பவை :

 

வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை (குறள் 362)

எதையாவது வேண்டும் என்று நீ விரும்பினால் முதலில் பிறவாமை வேண்டும்.

வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது

வேண்டாமை வேண்ட

வள்ளுவர் ஜனனம், மரவரும்ணம் என்ற சுழலிலிருந்து விடுபட வேண்டும் என்கிறார். புனர்ஜென்மம் என்ற கோட்பாட்டைக் கூறும் இந்தக் குறளே வள்ளுவரை ஒரு சிறந்த ஹிந்து என்று எடுத்துக் காட்டுகிறது.

 

 

ஆதி சங்கரரும் புனரபி ஜனனம் புனரபி மரணம் புனரபி ஜனனீ  ஜடரே சயனம் (மீளவும் பிறப்பு மீளவும் இறப்பு மீளவும் தாயின் குடரினில் படுப்பு) என்று பாடியுள்ளார். இதிலிருந்து மீள பஜகோவிந்தம் (கோவிந்தனைத் துதி) என்றார் அவர்.

*

பிறன் கைப்பொருள் வெஃகாமை வேண்டும் (குறள் 178)

உனது செல்வம் சுருங்காமல் இருக்க நீ நினைத்தால் அடுத்தவன் பொருளுக்கு நீ ஆசைப்படக் கூடாது.

அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை

வேண்டும் பிறன் கை

*

 

புலால் உண்ணாமை வேண்டும்

உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன்

புண்ணது உணர்வார்ப் பெறின்  (குறள் 257)

மாமிசம் சாப்பிடாது இருத்தல் வேண்டும். ஏனெனில் அது பிறிதோர் உடலின் புண்.

*

 

அடல் வேண்டும் ஐந்தன் புலத்தை விடல் வேண்டும்

வேண்டிய எல்லாம் ஒருங்கு (குறள் 343)

ஐம்புலன்கள் வழியாக வரும் ஆசையை விடல் வேண்டும். விரும்புகின்ற எல்லாப் பொருளின் மீதுள்ள ஆசையை ஒருசேர விட்டொழிக்க வேண்டும்.

*

எள்ளாத எண்ணிச் செயல் வேண்டும் (குறள் 470)

உலகத்தாரால் இகழப்படாத ஒன்றையே எண்ணிச் செய்ய வேண்டும்.

 

எள்ளாத எண்ணிச் செயல் வேண்டும் தம்மொடு

கொள்ளாத கொள்ளாது உலகு

*

புகழ்ந்தவை போற்றிச் செயல் வேண்டும் (குறள் 538)

பெரியோரால் போற்றிப் புகழ்ந்தவற்றை மட்டுமே செய்ய வேண்டும்.

 

செய்யாது இகழ்ந்தார்க்கு எழுமையும் இல்

அப்படி செய்யவில்லை எனில் ஏழு பிறப்பிலும் நன்மை உண்டாகாது. ஏழு பிறவி என்று கூறுவதால் மறுபிறவித் தத்துவத்தில் நம்பிக்கை உள்ள சிறந்த ஹிந்துவாகிறார் வள்ளுவர்.

*

அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்

பெருமை முயற்சி தரும் (குறள் 611)

ஒரு காரியத்தைச் செய்து முடிப்பது மிகக் கடினமானது என்று மனம் தளராமை வேண்டும். அதைச் செய்வதில் உள்ள முயற்சியே பெருமையைத் தரும்

*

 

 

புகழொடு நன்றி பயவா வினை என்றும் ஒருவுதல் வேண்டும் (குறள் 652)

புகழுடன் அறத்தைக் கொடுக்காத எந்தச் செயலையும் ஒருவன் என்றும் செய்யாது நீக்கி விட வேண்டும்.

என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு

நன்றி பயவா வினை

*

ஓஓதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை

ஆஅதும் என்னு மவர்   (குறள் 653)

மென்மேலும் உயர வேண்டும் என்று விரும்புவர் தன் புகழுக்குக் கேடு வரும் என்னும் தூய்மையற்ற செயல்களைத் தவிர்க்க வேண்டும்.

*

உருவு கண்டு எள்ளாமை வேண்டும் (குறள் 667)

ஒருவரின் உருவத்தைக் கண்டு அவரை எடை போட்டு அவரை இகழாமல் இருக்க வேண்டும்.

உருள் பெருந்தேர்க்கு அச்சாணி அன்னார் உடைத்து

உருண்டு வரும் பெரிய தேருக்கு உதவுவது அச்சாணியே. ஆகவே உருவம் கண்டு எடை போடாதே.

*

 

 

மன்ற அடுத்திருந்து மாணாத செய்வான் பகை கொடுத்தும் கொளல் வேண்டும். (குறள் 867)

கூட இருந்தே குழி பறிக்கும் நம்பிக்கை துரோகியை எதையாவது கொடுத்தாவது பகைவனாக்கிக் கொள்ள வேண்டும்.

*

குடிப்பிறந்து  தன் கட் பழிநாணுவானைக்

கொடுத்தும் கொளல் வேண்டும் நட்பு  (குறள் 794)

நல்ல குடியில் பிறந்து தனக்கு நேருகின்ற பழிபாவத்திற்கு வெட்கப்படுபவனின் நட்பை சிறந்தவற்றைக் கொடுத்தாவது கொள்ளல் வேண்டும்.

 

துரோகியின் பகையை எதையாவது கொடுத்துப் பெறு.

நல்லவரின் நட்பை எதையாவது கொடுத்துப் பெறு என்று இரு குறள்களில் (குறள் 794, 867) பகையையும் நட்பையும் வலியுறுத்துவதை நன்கு நோக்க வேண்டும்.

*

 

நலம் வேண்டின் நாணுடைமை வேண்டும் குலம் வேண்டின் வேண்டுக யார்க்கும் பணிவு (குறள் 960)

நன்மையை ஒருவன் விரும்பினால் நாணுடைமை வேண்டும். அவன் குடிப்பெருமையை விரும்பினால் எல்லோருக்கும் பணிந்து நடக்க வேண்டும்.

*

பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய

சுருக்கத்து வேண்டும் உயர்வு (குறள் 963)

செல்வம் அதிகமாகச் சேர்ந்து விட்ட நிலையில் ஒருவனுக்கு பணிவு வேண்டும். அது சற்று சுருங்கி விட்டாலோ அந்த ஏழ்மை நிலையிலும் தன் தகுதிக்குத் தக்கவாறு உயர்வு பட நடத்தல் வேண்டும்.

*

 

 

இரப்பான் வெகுளாமை வேண்டும் நிரப்பிடும்பை

தானேயும் சாலும் கரி   (குறள் 1060)

பிச்சை எடுத்து வாழ்கின்றவர் அதைப் பெற கால தாமதம் ஆனாலும் கோபம் கொள்ளாமல் இருத்தல் வேண்டும். அனைத்திற்கும் தன் வறுமையே காரணம் என்பதை உணர     வேண்டும்.

*

 

தினைத்துணையும் உடாமை வேண்டும் பனைத்துணையும்

காமம் நிறைய வரின் (குறள் 1282)

பனை அளவினை விட காம நுகர்ச்சி விளைவதாக இருந்தாலும் கூட தினை அளவுக்குக் கூட காதலரோடு ஊடல் கொள்ளாமல் இருத்தல் வேண்டும்.

*

 

 

ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து

வேண்டும் பனுவல் துணிவு  (குறள் 21)

இறுதியாக ஒன்று.

நூல்களின் பயன் என்ன?

அற ஒழுக்கத்தில் சிறந்து நின்று துறந்தவரது பெருமையைக் கூறுவதே நூல்களின் இறுதிப் பயனாகக் கொள்ளல் வேண்டும்.

*

17 குறள்களையும் ஒரு முறை படித்துப் பார்த்துச் சிந்தித்தால் வள்ளுவர் உணர்த்தும் வாழ்க்கை நெறி புரிகிறது இல்லையா!

 

நமக்கு ‘வேண்டும்’ குறள்கள் இவை.

சரி இவை இவையெல்லாம் வேண்டும் என்று கூறிய வள்ளுவர் வேண்டாதவை எவை என்று சொல்லி இருக்கிறாரா? நிச்சயமாக.

அதை இன்னொரு கட்டுரையில் காண்போம்.

 

***