
Date: MARCH 25, 2018
Time uploaded in London- 6-32 am
WRITTEN by S NAGARAJAN
Post No. 4848
PICTURES ARE TAKEN from various sources. PICTURES MAY NOT BE RELATED TO THE ARTICLE; THEY ARE ONLY REPRESENTATIONAL.
WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.
நகைச்சுவை நடைச்சித்திரம்
ஓடுங்கள், ஓடுங்கள், உலகத்தோடு ஓடுங்கள்! – 2
ச.நாகராஜன்
T.Q.C.! T.Q.C.!!
அப்படி என்றால்?
TOATAL QUALITY CONTROL!!!
ஜப்பானின் முன்னேற்றத்திற்குக் காரணம் தரம்!
தரம், தரம்,தரம்.
நிரந்தரம் வேண்டும் தரம்!
ஆஹா, கடைக்கு ஓடினேன்.
அள்ளினேன், அனைத்து டி.க்யூ.சி. புத்தகங்களையும்!
எல்லா ஜப்பானிய வார்த்தைகளையும் கற்றுக் கொண்டு அவ்வப்பொழுது அதை விடுவேன்.
அனைவரும் அசந்து விட்டனர்.
சற்று பயபக்தியுடன் பார்த்தனர்.
ஏதாவது சந்தேகம் என்றால் கூட என்னை வந்து பார்க்க ஆரம்பித்தனர்.

நிர்வாகம் சிந்தித்தது.
அப்போது தான் வந்தது க்யூ.சி.
அதாவது க்வாலிடி சர்க்கிள்.
தர வட்டம்.
தரத்தைக் கொண்டு வர தொழிலாளர்களின் சிறு குழுக்களை அமைத்து அவர்களுக்குப் பயிற்சி கொடுப்பது தர வட்டத்தின் நோக்கம்.
அனைத்து மானேஜர்களுக்கும் தர வட்டம் அமைக்க உத்தரவானது.
எனது தொழிலகத்தில் சுமார் ஆயிரம் பேர் பணி புரிகின்றனர்.
அதிகமான தர வட்டம் யாருக்குக் கிடைத்தது?
ஊகிக்கவே வேண்டாம், எனக்குத் தான்!
மாலை 4 மணி முதல் இரண்டு ஷிப்டு தொழிலாளர்களையும் சந்தித்து இரவு 8 மணி வரை க்ளாஸ் எடுத்து அதற்கு மேல் அலுவலக பெண்டிங் வேலையைக் கவனித்து…
சுமார் 800 மனித மணிகள் (மேன் ஹவர்ஸ்) க்ளாஸ் எடுத்தேன்.
பாரடோ சார்ட் என்பது முக்கியம்.
சார், பரோடா கிடைக்குமா சார்!
பரோடா இல்லை, பாரடோ சார்ட்.
அதன் மூலம் உடனடியாக ஒரு பிரச்சினையை இனம் கண்டு தீர்த்து விடலாம்.
சார், அதற்கு என்ன செய்ய வேண்டும்?
ஃபிஷ் போன் டயாகிராம் வரைய வேண்டும்.
சார், ஃபிஷ் என்ன ஃபிஷ் சார்? தருவார்களா, சார்!
அதில்லை, அப்படி ஒரு படம்.
வைடல் ஃபியூ, ட் ரிவியல் மெனி. (VITAL FEW TRIVIAL MANY)
அதாவது முக்கியமான காரணம் சில தான். குட்டி குட்டி வேண்டாத காரணங்கள் பல.
சார், புரியவில்லை.

உங்கள் வீட்டில் உள்ள ஒரு பிரச்சினையைச் சொல்லுங்கள்.
சார், பையன் படிக்கவே மாட்டேன் என்கிறான்.
சரி, அதற்கான காரணத்தை படத்தில் வரைவோம்.
ஏராளமான காரணங்களை படத்தில் ஏற்றினோம்.
வைடல் காரணம்,பணம் இல்லை!
அதை எப்படி சார் கொண்டு வருவது?
அவசரம் அவசரமாக க்ளாஸை முடித்தேன்.
தர வட்ட மாஸ்டர் ஆனதால் எல்லோரும் என்னை மதிப்புடன் பார்த்தனர். தங்கள் பிரச்சினைகளை மனம் விட்டுப் பகிர்ந்து கொண்டனர்.
அதற்குள் நிர்வாகம் அதிரடியாக உத்தரவைப் போட்டது.
ஜஸ்ட் இன் டைம்! JUST IN TIME – JIT
ஜே ஐ டி வந்து விட்டதால் அந்தந்த சாமானை அன்றன்று வரும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.
ஸ்டாக் என்ற பேச்சே இருக்கக் கூடாது.
ஜப்பானில் அப்படியே மூலப் பொருள்கள் லாரி லாரியாக வருகிறதாம். அது லைன் அசெம்பிளிக்கு நேராகப் போய் வண்டியாக – மோட்டார் சைக்கிளாக, காராக மாறுகிறதாம்!
சரி, ஜே ஐ டி வாழ்க.
ஆனால், துரதிர்ஷ்டம் ஆங்காங்கே வண்டிகள் முடியாமல் அலங்கோலமாக அரைகுறையாக நின்றன.
பல ஆண்டு வாடிக்கையாளர்கள் திகைத்தனர். என்ன சார், இது?
நிர்வாகம் அலறியது.
உடனடி மீட்டிங்!
லாரி ஸ்டிரைக், ஆகவே பல பொருள்கள் வரவில்லை.
வந்ததில் ஒரு ஷீட் உடைந்து விட்டது.
கூடவும் வாங்கக் கூடாது, அன்றன்று வந்து சேர்வது போல ஆர்டர் செய்ய வேண்டும்!
சப்ளை மானேஜர் அழுதார்.
வேண்டாம், ஜஸ்ட் இன் டைம்.
இனி அட்வான்ஸ்ட் ப்ளானிங் செய்யுங்கள்.
அப்பாடா, மள மளவென்று வண்டிகள் முடிந்தன.
அடுத்தாற் போல வந்தது – ஃப்ளெக்ஸிபிள் மானுபாக்சரிங் சிஸ்டம்! FLEXIBLE MANUFACTURING SYSTEM!
அதாவது எல்லா அசெம்பிளி பார்ட்டுகளும் நெகிழ்வாக இணைய வேண்டும்.
ஓடு, ஒரு கோர்ஸுக்கு.
ஓடினோம்.
என்ன செய்யலாம்?
ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் கஸ்டம் பில்ட் வண்டி நம்முடையது. அதில் இது ஒத்து வருமா?
முட்டி மோதி, வாடிக்கையாளர்களிடம் கேட்டது ஒண்ணு, தர்றது ஒண்ணு என்று வசவு வாங்கி, முழித்துக் கொண்டோம்.
அப்போது தான் எனக்கு வந்தது அபாயம்!
தேர்ந்தெடுத்த டாப் மானேஜர்கள் சுமார் நூறு பேரைக் கொண்ட ஒரு கூட்டம் மாதாமாதம் எங்கள் குழுமத்தில் நடக்கும்.
அதில் நான் புது டெக்னிக்கைப் பற்றிப் பேச வேண்டும்.
எனக்கு வந்தது – ரீ எஞ்சினியரிங்.
அதாவது இருக்கும் ஆதார வளத்தைக் கொண்டு போட்டியாளர்களை முந்திச் செல்வதோடு அவர்கள் நம்மை எளிதில் அணுகாதவாறு ஒரு தடையையும் ஏற்படுத்த வேண்டும்.
நூறு பேர்களும் புத்திசாலிகள். கேள்வி நேரத்தில் கொத்திக் கொத்தி குலை உயிரும் குற்றுயிருமாக ஆக்கி விடுவார்கள்.
தைரியமாக எனது பேப்பரை தயார் செய்தேன்.
கேள்விகளை குதர்க்கமாக நானே தயார் செய்து அதற்கு நகைச்சுவையுடன் கூடிய பதில்களைத் தயாரித்து முன்னதாகவே வைத்துக் கொண்டேன்.
வெற்றி, மாபெரும் வெற்றி.
இதற்கு நடுவில் ஐ ஆம் ஓகே, யூ ஆர் ஓகே வேறு.
I AM OK, YOU ARE OK!!!
பார்ப்பவர்கள் எல்லாம் ஐ ஆம் ஓகே, ஆர் யூ ஓகே என்று கேட்டுத் திரிந்தோம்.
அடுத்து வந்தது ஆடோ கேட்! கம்ப்யூட்டர் மானுபாக்சரிங்!
ஓடுங்கள், கம்ப்யூட்டர் கோர்ஸுக்கு. படியுங்கள் ஆட்டொ கேட்!
ஆக, இப்படியாக பல்லாண்டுகள் ஓடி விட்டன.
அடுத்தடுத்து ஒரு அலை!
கடைசியாக ஒரு முடிவுக்கு வர முடிந்தது.
புத்தியை உபயோகித்து, நிர்வாகத் தலைமையை அனுசரித்து, வாடிக்கையாளர்களின் தேவையை ப்ளான் செய்து அதைப் பூர்த்தி செய்வதே நமது இந்திய சூழ்நிலைக்கு உகந்தது.
ஆஹா, அருமையான ஞானோதயம் சார்!
ஆனால் அதற்குள் ரிடையர்மெண்ட் வந்து விட்டது.
இருந்தாலும் சொல்கிறேன். ஓடுகின்ற உலகத்தோடு ஓடுங்கள்.நீங்கள் நின்றால் தேக்கம். ஓடினால் சர்வைவல். அதிக ஸ்பீடுடன் ஓடினால் களைப்பீர்கள் அல்லது மற்றவரிடம் திட்டு வாங்குவீர்கள்!
ஓடுங்கள், சார், ஓடுங்கள்! உலகத்தோடு ஓடுங்கள்!!!
எனது ரிடையர்மெண்ட் காலத்தில் உங்களை வேடிக்கை பார்க்கிறேன்!
****
முற்றும்