வித்தியாசமான விஞ்ஞானி யுங்! -3

jung

Post No.1057; Dated: 22 May 2014.
ஐந்து பகுதிகள் கொண்ட கட்டுரையில் இது பகுதி

((குறிப்பு: ஆங்கிலத்தில் ஜங் என்று எழுதியபோதிலும் சரியான உச்சரிப்பு யுங்)).

வித்தியாசமான விஞ்ஞானி யுங்! -3
ச.நாகராஜன்

பிற்பகல் நேரம். நல்ல சூரிய ஒளியில் யுங் ஒரு பள்ளத்தாக்கில் நடந்து கொண்டிருக்கிறார். அருகே ஒரு செங்குத்தான மலை. அந்த மலையின் மீது ஒரு கோட்டை. அந்தக் கோட்டையின் மேலிருந்த உயரமான கோபுரம் ஒன்றில் ஒரு பெண்மணி சுவர் தடுப்பின் அருகில் அமர்ந்து கொண்டிருக்கிறார். அவரைப் பார்ப்பதற்காக ஜங் கழுத்தைப் பின்னால் மிக நீட்டிப் பார்க்க வேண்டி இருக்கிறது. ஜங் கழுத்தை நீட்டிய போது……

க்ரிக் என்ற சத்தம் கழுத்தில் கேட்க யுங் உறக்கம் கலைந்து எழுந்தார். தன் கனவில் பார்த்த பெண்மணி மறு நாள் பேச நிச்சயித்திருந்த அதே பெண்மணி தான். ஜங்கிற்கு இப்போது விஷயம் புரிந்து விட்டது. அவரை அவ்வளவு தூரம் கழுத்தை நீட்டிப் பார்க்க வேண்டி இருக்கிறதென்றால்…..

யுங் மறுநாள் தன் கனவை அந்தப் பெண்மணியிடம் அப்படியே சொன்னார். அபாரமான புத்திசாலியான அந்தப் பெண்மணியும் தான் உள்ளபடியே விஷயங்களைச் சொல்லாமல் மறைப்பதை ஜங் கண்டு பிடித்து விட்டார் என்பதைப் புரிந்து கொண்டார். அந்தக் கணத்திலிருந்து அனைத்தையும் ஒழுங்காகச் சொல்ல ஆரம்பித்தார். சிகிச்சை நல்ல முறையில் தொடங்கியது.

நனவு நிலைக்கும் கனவுகளுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. ஒரு நோயாளி ஒரு கனவைச் சொல்கிறார் என்றால் அது எப்படி தன்னைப் பாதிக்கிறது என்று பார்ப்பார் ஜங். பாதிப்பே இல்லை என்றால் ஏதோ ஒரு தவறு இருக்கிறது என்று அர்த்தம். ‘காயப்பட்ட டாக்டர் தான் சரியான சிகிச்சை தர முடியும்’ என்ற பொருள் பொதிந்த வாக்கியத்தை உளவியல் சிகிச்சையாளரான யுங் அடிக்கடி சொல்வார்!

உளவியல் டாக்டராக இருந்தாலும் ஜங்கிற்கு ஏராளமான அமானுஷ்யமான அனுபவங்களும் எதிர்காலத்தைச் சுட்டிக்காட்டும் அபூர்வமான கனவுகளும் அடிக்கடி வந்தன.

1913ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஒரு நாள் யுங் தனியாக பயணித்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென்று அவருக்கு ஒரு காட்சி தோன்றியது. வட கடலுக்கும் ஆல்ப்ஸ் மலைக்கும் இடையில் உள்ள பகுதியில் பிரம்மாண்டமான வெள்ளம் வடக்குப் பகுதியில் உள்ள தாழ்வான நிலப்பகுதியில் பிரவாகமாகப் பாய்வது போன்ற காட்சியை அவர் கண்டார். அது ஸ்விட்சர்லாந்தை நோக்கி நகர்ந்து வரும் போது தனது நாட்டைக் காப்பாற்றுவதற்காக அங்கிருந்த மலை உயரமாக வளர்ந்து கொண்டே போவதையும் அவர் பார்த்தார். ஒரு பேரபாயம் நிச்சயமாக வரப் போகிறது என்பதை யுங் உணர்ந்தார்.

மஞ்சள் அலைகளில் அடித்துச் செல்லப்பட்ட சடலங்களின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் இருந்தது. பிறகு வட கடல் முழுவதும் இரத்தமாக ஆனது. இந்தக் காட்சி ஒரு மணி நேரம் வரை நீடித்தது. யுங் குழம்பிப் போய் மயக்கமடைந்தார்.
இரண்டு வாரங்கள் கழித்து அதே காட்சி திரும்பவும் தோன்றியது. இப்போது காட்சி மிகவும் தெளிவாக இருந்தது, அவருக்குள் ஒரு குரல் தெளிவாகப் பேசியது:” இதோ பார் இது நிச்சயமான உண்மை, இப்படித் தான் நடக்கப் போகிறது. நீ சந்தேகப்படாதே!

அந்த ஆண்டு குளிர் காலத்தில் ஒருவர், ‘சமீப காலத்தில் உலகின் அரசியல் நிலவரம் எப்படி இருக்கும்’ என்று யுங்கிடம் கேட்டார்,”தனக்கு அது பற்றி ஒன்றும் தோன்றவில்லை என்றும் ஆனால் ரத்த ஆறு ஓடுவதைப் பார்ப்பதாகவும்” ஜங் பதில் கூறினார்,

தான் கண்ட காட்சி ஒரு புரட்சியைக் குறிக்கிறதோ என்று சந்தேகப்பட்ட யுங் அப்படி எல்லாம் ஒன்றும் நடக்காது என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டார்.

இதே போல 1914ஆம் ஆண்டு கோடை காலத்திலும், வசந்த காலத்திலும் ஆர்க்டிக்கில் குளிர் அலை அடித்து நிலமெல்லாம் பனிப்பாறைகளாக ஆவதாக அவர் மூன்று முறை கனவு கண்டார்.
இப்படி எல்லாம் கனவுகள் வருகிறதே, ஒரு வேளை தனக்கு சைக்கோஸிஸ் வியாதி வந்து விட்டதோ என்று கூடஅவர் எண்ணலானார்.

ஆனால் நடந்தது என்ன? பல்லாயிரக்கணக்கான உயிர்களை பலி கொண்ட முதலாம் உலகப் போர் அந்த ஆண்டே ஆகஸ்ட் முதல் தேதி அன்று தொடங்கியது.

இப்படித் தமது கனவுகள் எல்லாம் பலிப்பதைக் கண்ட அவர் தீவிர ஆராய்ச்சியை மேற்கொண்டு அவற்றின் மூலம் பல்வேறு உண்மைகளைக் கண்டார்.

கனவுகளுக்கும் நனவு நிலைக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு இருக்கிறது என்பதைக் கண்ட அவர், நோயாளிகளைக் குணப்படுத்த அவர்களின் கனவுகளைக் கேட்டு அதற்கு உரிய உண்மைப் பொருளை அவர்களிடம் விண்டுரைத்து அவர்களைக் குணப்படுத்தினார்.

carl-jung-four-functions

கள்ளம் கபடமற்ற எளியவர்களை அவரால் சுலபமாகக் குணப்படுத்த முடிந்தது, அவரே ஒரு முறை கூறினார் இப்படி:” எனது நோயாளிகளிலேயே நன்றி கெட்டவர்களும் குணப்படுத்துவதில் மிகுந்த கஷ்டங்களைத் தந்தவர்களும் (வழக்கமாகப் பொய் சொல்பவர்களைத் தவிர அவர்களுக்கு அடுத்ததாக உள்ள) புத்திசாலிகள் தாம்! அவர்களின் ஒரு கை என்ன செய்கிறது என்று அடுத்த கைக்குக் கூடத் தெரியாது!”

அவர்களிடம் ஒரு “கம்பார்ட்மெண்ட் சைக்காலஜி” இருப்பதை அவர் அனுபவரீதியாக உணர்ந்தார். எதையும் அறிவு ரீதியாகச் சமாளிக்க முடியும் என்று நம்பும் அவர்கள் உணர்ச்சி கைமீறிப் போகும் சமயத்தில் மிகவும் கஷ்டப்படுகின்றனர் என அவர் கண்டார்.

எளிதில் மனதில் எந்த எண்ணம் ஓடுகிறது என்பதைக் கண்டுபிடிக்க அரிய முறை ஒன்றை யுங் வகுத்தார். நூறு வார்த்தைகளை அவர் சொன்னவுடன் எதிரில் இருப்பவர் உடனடியாக அந்த வார்த்தைகளுடன் தொடர்பு கொண்ட தனக்குத் தோன்றும் வார்த்தைகளைச் சொல்ல வேண்டும். பதில் சொல்ல எடுத்துக் கொண்ட நேரம், சொன்ன வார்த்தை இவற்றின் மூலமாக எதிரில் இருப்பவரின் உண்மையான எண்ணம் என்ன என்பதை ஜங்கால் கண்டுபிடிக்க முடிந்தது. இன்று பரவலாக நடைமுறைக்கு வந்து விட்ட இந்த ‘வோர்ட் அசோசியேஷன் டெஸ்டை’ முதலில் வகுத்தவர் ஜங் தான்!

ஜோதிடத்தையும் ஆவிகளோடு பேசும் மீடியத்தையும் கூட அவர் விடவில்லை. அந்த ஆராய்ச்சியிலும் இறங்கினார்……

சின்ன உண்மை!
மனதிற்கு நான்கு முக்கிய பண்புகள் உண்டு என்பதை முதலில்
சொன்னவர் யுங் தான்! ஐம்புலன்கள் முலமாகச் சுற்றுப்புறத்தை
அறிதல் (SENSING), சிந்தித்தல்(THINKING), உணர்தல்(FEELING),
உள்ளுணர்வு மூலமாக ஆழ்மன ரீதியாக விஷயங்களைப் பகுத்துப்
பார்த்தல் (INTUITING) ஆகிய நான்கு பண்புகள் மனதிற்கு உண்டு
என்பதை அவர் வலியுறுத்தினார்.

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

மாமன்னன் அலெக்ஸாண்டரின் குருவான அரிஸ்டாடில் பல கேள்விகளுக்கு “எனக்குத் தெரியாது” என்று விடை கூறுவது வழக்கம். இதனால் எரிச்சல் அடைந்த சிலர் அவரை நோக்கி, “எதற்கெடுத்தாலும் எனக்குத் தெரியாது, எனக்குத் தெரியாது என்று பதில் சொன்னால் என்ன அர்த்தம்! இதற்குத் தானா மன்னர் உங்களுக்கு இவ்வளவு பணம் கொடுக்க வேண்டி இருக்கிறது?” என்று ஏளனமாகக் கேட்டனர். அதற்கு அரிஸ்டாடில் உடனே,” எனக்கு என்ன தெரியுமோ அதற்குத் தான் மன்னர் பணம் அளிக்கிறார். எனக்குத் தெரியாததற்கெல்லாம் அவர் பணம் கொடுக்க வேண்டும் என்றால் அவர் கஜானா காலி ஆகி விடும்” என்று பதில் சொன்னர்.கேள்வி கேட்டவர்கள் அரண்டு போய் நகர்ந்தனர்.
அலெக்ஸாண்டர் இசையில் மிக்க ஆர்வம் கொண்டவர். அவர் லைர் என்ற நரம்பிசைக் கருவியை வாசிப்பதைக் கேட்ட அரிஸ்டாடில் அவரை நோக்கி,” இன்னமும் நன்கு பயிற்சி செய்யலாமே” என்றார்.
நன்கு பயிற்சி செய்தால் அதில் நிபுணன் ஆகி விடுவேன் என்று பயந்து தான் அதை நன்கு பயிற்சி செய்யவில்லை” என்று பதில் சொன்னார் அலெக்ஸாண்டர். விஞ்ஞானியின் கேள்விக்கு ஏற்ற மாமன்னனின் பதில் இது!

உலகத்தை வெல்ல ஆசைப்பட்டவர் லைர் இசைக்கருவியின் எல்லைக்குள் தன்னை அடக்கிக் கொள்ள முடியுமா என்ன?
***********************

contact: swami _ 48 @ yahoo.com