
வேதத்தில் அழகிய காட்டு ராணி கவிதை! (Post No.4898)
Research article Written by London Swaminathan
Date: 9 April 2018
Time uploaded in London – 9-25 am (British Summer Time)
Post No. 4898
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.
WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU
உலகிலேயே மிகப் பழைய நூல் ரிக் வேதம் என்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடு இல்லை; உலகிலேயே மிகப் பழைய கவிதைத் தொகுப்பு ரிக் வேதம் என்பதிலும் இரு வேறு கருத்துக்கு இடமே இல்லை. அந்த வேதத்தில் பத்து மண்டலங்கள் உள்ளன. ஆயிரத்துக்கும் மேலான துதிகள் – கவிதை வடிவில் உள்ளன, இதன் காலம் 6000 ஆண்டுகளுக்கு அல்லது 8000 ஆண்டுகளுக்கு முந்தையது (BETWEEN 4000 BCE AND 6000 BCE) என்பது பால கங்காதர திலகர், ஹெர்மன் ஜாகோபி (GERMAN SCHOLAR HERMAN JACOBI) என்ற ஜெர்மன் அறிஞர் ஆகியோரின் கணிப்பு. மாக்ஸ்முல்லர் போன்றோர் இதை 3200 ஆண்டுகளுக்கு முந்தியது ஒரு வேளை 5000 ஆண்டுகளுக்கும் முந்தியதாக இருக்கலாம்- எவரும் வேதத்தின் காலத்தைச் சொல்லுவதற்கு இயலாது என்று சொல்லிவிட்டார்கள். இதில் காட்டு ராணி பற்றிய அற்புதமான ஒரு கவிதை உளது (10-146)

கடைசி மண்டலமான பத்தாவது மண்டலத்தில் (10-146) இது இடம் பெற்றுள்ளது. இதன் அருமை பெருமைகளைக் காண்போம்
இந்தக் கவிதையில் கண்ட சில உண்மைகள்–
- பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே புறச்சூழல் பாதுகாப்பு உணர்வு இருந்திருக்கிறது. காடுகளை கானக தேவதை, காட்டு ராணி என்று புகழ்ந்திருக்கிறார்கள். பூமாதேவி என்று பூமிக்கும் காடுகளுக்கும் நதிகளுக்கும் தாயார் பட்டம் சூட்டிய ரிக் வேதக் கருத்துகளை கிரேக்கப் புலவர்களும் தமிழ்ப் புலவர்களுமப்படியே ஏற்றுக் கொண்டனர்.
2.உலகிலேயே காடுகள் பற்றி எழுதப்பட்ட பழமையான அழகான கவிதை இது
3.காடுகளின் அற்புதமான வருணனை இதில் உளது. வண்டுகளின் ரீங்காரம், பறவைகளின் கீச்சொலி, தொலைதூர கிராம வீடுகளின் தோற்றம், வண்டிகளின் சப்தம், பசு மாடுகளின் ‘அம்மா’ ஒலி, மண் வாசனை, சில விநோதமான குரல்கள், மாடுகளை விரட்டும் ஒலி– என்று கதைகளிலும் நாவல்களிலும் படிக்கும் அத்தனை காட்சிகளும் சிறு கவிதையில் வந்து விடுகிறது.
- கவிஞர் கேட்கிறார்: ஏ கானகமே உனக்குப் பயமே இல்லையா? நீ ஏன் கிராமத்துக்கு வரக்கூடாது?
- இந்தக் கவிதையும் ரிக் வேதத்திலுள்ள சமத்துவக் கவிதைகளும் இந்து நாகரீகம் உலகின் மற்ற நாகரீகங்களைவிடப் பல்லாயிரம் ஆண்டுப் பழமையுடைத்து என்பதை நிலைநாட்டுகிறது.
6.முதல் வரி ‘அரண்யானி! அரண்யானி!’ என்று காட்டு ராணியை அழைக்கிறது. ரிக் வேத சம்ஸ்க்ருதச் சொற்களைத் தமிழர்கள் தன்னுடைடய அன்றாட உரையாடல்களில் பயன் படுத்துகின்றனர். அரண்யம்= காடு என்ற சொல் வேதாரண்யம், தர்பாரண்யம் (திரு நள்ளாறு), வடாரண்யம் (திருவாலங்காடு) என்று தமிழ்நாட்டிலும் நைமிசாரண்யம் தண்டகாரண்யம் என்று வடக்கிலும் புழங்குவதை நாம் நன்கறிவோம்.

ரிக் வேதத்தை வியாசர் தொகுத்த பாணியிலேயே புற நானூறும் ஏனைய சங்கப் பனுவல்களும் தொகுக்கப்பட்டன. கூடிய மட்டிலும் ஒரே கருத்துடைப் பாடல்கள் அடுத்தடுத்து வரும்; வெள்ளி கிரகம் பற்றிய பாடல்கள், இரங்கற்பாக்கள், மிகப் பழைய பாடல்கள் எல்லாம் ஒரு சேர வரும். புலவரின் பெயர் தெரியாவிட்டால் அவர்கள் வழங்கும் அடைமொழிகளைக் கொண்டு அவர்களை அழைக்கும் ரிக் வேத வழக்கமும் ( செம்புலப் பெயல் நீரார், தேய்புரிப் பழங்கயிற்றார்) ரிக் வேதத்தை ஒட்டியதே. ரிக் வேதத்தில் இருபதுக்கும் மேலான பெண் புலவர்கள் இருப்பது போல தமிழ் இலக்கியத்திலும் காணப்படுகிறது. உலகிலேயே மிக மிக முன்னேறிய இலக்கிய- நாகரீக சமுதாயம் – இந்து நாகரீகம் என்பதற்கு இவை அனைத்தும் சான்று பகரும்
இந்தக் கவிதையில் ‘அரண்யானீ! அரண்யானீ’’ என்று இரு முறை அழைக்கும் பாணியையும் புற நானூற்றுப் புலவர்களும் ஏனையோரும் பின்பற்றினர்:
பல் சான்றீரே! பல் சான்றீரே! (246, 301)
கலம்செய் கோவே! கலம்செய் கோவே! (228, 256)
அன்னச் சேவல்! அன்னச் சேவல்!(பாடல் 67)
பாசறையீரே! பாசறையீரே! (285)
இது போல ஐங்குறு நூற்றிலும் பல பாடல்களைக் காணலாம்.
இவ்வாறு இயற்கை வருணனைக்கும், இலக்கிய நயத்துக்கும் முன்னோடியாக இருக்கிறது இந்தக் கானக கவிதை.
கானகம் பற்றிப் பாடிய கவிஞர் எண்ணிக்கை பல ஆயிரம் இருந்தாலும் முதல் கவிஞர் ரிக் வேதப் புலவரே.
இதோ கவிதையின் தமிழ் மொழி பெயர்ப்பு

ஜம்புநாதன் அவர்களின் மொழிபெயர்ப்பைத் தழுவிய எனது மொழிபெயர்ப்பு :-
1.கானக ராணி! கானக ராணீ! காட்சியில் இருந்து மறைபவள் போலத் தோன்றும் கானக ராணியே! நீ ஏன் கிராமத்தை நாடுவதில்லை? உனக்கு பயமே கிடையாதா?
(தொலைவிலிருந்து பார்க்கும் கவிஞனுக்கு புகை மூட்டம் போலப் பனி மூட்டம் மூடிய மலைக் காடுகள மறைவது போலத் தென்படும்! கவிஞனுக்கு வியப்பு; நாங்கள் எல்லோரும் புலி, சிங்கம், மலைப் பாம்பு என்று காடுகள் பற்றி அஞ்சுகிறோமே; உனக்கு பயமே இல்லையா? நீயும் ஏன் எங்கள் கிராமத்துக்கு வரக்கூடாது?)
2.கிரீச் கிரீச் என்று வண்டுகளும், சுவர்க்கோ ழிகளும் வெட்டுக்கிளிகளும் போடும் ஒலிக்கு சிச்சிகப் பறவைகள் கொடுக்கும் பதில்— தாளமும் சுருதியும் சேர்ந்தது போல் உளதே!
(தமிழ் இலக்கியத்திலும் காளிதாசனிலும் இயற்கை ‘ஆர்க்கெஸ்ட்ரா’ பற்றிப் பல பாடல்கள் (ORCHESTRA IN NATURE) உள்ளன அதற்கெல்லாம் முன்னோடி இது!)
3.பசுக்கள் மேய்வதைக் கண்டால், வீடுகள் இருக்கும் இடம் போல இருக்கிறது. வண்டிகள் உன்னை விட்டு உருண்டோடுகின்றனவே
(மாலை வேளை நெருங்கி விட்டது; காட்டில் மேய்ந்த பசுக்களும் காளைகளும் வீடு திரும்புகின்றன; வண்டிக்காரர்கள் நடை கட்டுகின்றனர்; அற்புதமான வருணனை)
4.வனத்தின் தேவியே! ஒருவன் மாடுகளை அழைக்கிறான். மற்றொருவன் மரத்தை வெட்டுகிறான். இங்கு மாலை வேளையில் கேட்கும் ஒலிகளோ வனத்தில் வசிப்பவன் ஏதோ என்னவோ என்று அஞ்ச வைக்கிறது (இதற்கு சாயனர் பாஷ்யம், புலியோ திருடர்களோ என்ற அச்சம் என்று உரைக்கும்)
5.காடுகள் எவரையும் துன்புறுத்தாது —அதை எவரும் துன்புறுத்தாத வரை! இங்கு புசிப்பதற்கு இனிய பழங்கள் கிடைக்கின்றன.
- அருமையான வாசனையும் (பூக்கள்+ மண் வாசனை), பயிரிடப் படாமலேயே வளம் கொழிக்கும் மரங்களும், மிருகங்களுக்கு எல்லாம் தாயாகவும் விளங்கும் வன தேவதையே உன்னை வணங்குகிறேன்

இந்தக் கவிதையை பல வெளி நாட்டினர் பல சொல் மாற்றங்களுடன் மொழி பெயர்த்துள்ளனர். ஆனால் கானகத்தின் விளிம்பில் வசிக்கும் ஒருவன் இதைப் படித்தால் பொருள் நன்கு விளங்கும்; ஏனையோருக்கோ பொறிவிளங்காய் உருண்டையாகவே (பொருள் விளங்கா) நிற்கும்.
ஸரஸ்வதி நதி தீரத்திலும் சிந்து நதிக் கரையிலும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் னால் ஸம்ஸ்க்ருதத்தில் ஒலித்த கவிதை என்பதை எண்ணும் போது மயிர்க் கூச்சம் ஏற்படுகிறது.
காட்டு ராணி வாழ்க! வன தேவதை வெல்க.
அரண்யானீ! அரண்யானீ!

-சுபம்–