
Written by London Swaminathan
Date: 9 November 2016
Time uploaded in London: 18-32
Post No.3337
Pictures are taken from various sources; they are representational only; thanks.
contact; swami_48@yahoo.com
தமிழன் புதைத்துக் கெட்டான் என்று ஒரு பழமொழி உண்டு. அதாவது தங்க நாணயங்கள், நகைகள் முதலியவற்றை மற்றவர்களுக்குத் தெரியாமல் புதைத்து வைத்துவிட்டு இறந்தும் போய்விடுவான். பின்னர் அதை யாரோ ஒருவன் புதையலாக எடுத்து பயனடைவான் என்பது இதன் பொருள். இப்போது தமிழன் குடித்துக் கெட்டான் என்று பழமொழியை மாற்றி அமைப்பது சாலப் பொருத்தம்.
குடியும் கூத்தும் தமிழனைக் கெடுத்தது திருவள்ளுவர் காலத்திலிருந்தே இருந்ததை நாம் திருக்குறள் மூலமாக அறிவோம். இதற்காகவே “கள்ளுண்ணாமை, வரைவின் மகளிர், பெண்வழிச் சேரல்” என்று பல அதி காரங்களில் முழங்கியுள்ளார்.
ஆனால் கம்பன் அதை சுக்ரீவன் வாயிலாக கிட்கிந்தாக் காண்டத்தில் வழங்கும் பாங்கு படித்துச் சுவைக்க வேண்டியது.

நறவுண்டு மறந்தேன், நாணுகிறேன்
உறவுண்ட சிந்தையானும் உரைசெய்வான் ஒருவற்கின்னம்
பெறலுண்டோ அவரால் ஈண்டு யான் பெற்ற பேர் உதவி உற்றது
இறலுண்டோ என்னின் தீர்வான் இருந்த பேரிடரை எல்லாம்
நறவுண்டு மறந்தேன் காண நண்ணுவல் மைந்த என்றான்
பொருள்:-
அங்கதனை நோக்கிச் சுக்ரீவன் கூறியது: இராமனிடம் நான் பெற்ற உதவி, மற்றொருவனால் பெறக்கூ டியதா? நான் பெற்ற செல்வத்துக்கு அழிவு உண்டோ? இராமனின் பெருந் துன்பங்களை எல்லாம் மது அருந்தியதால் மறந்துவிட்டேன் ஆகையால் இலக்குவனைப் பார்க்க வெட்கமாக இருக்கிறது.
பஞ்ச மா பாதகம் (5 பெரும் பாவங்கள்)
ஏயின இதுவலால் மற்று ஏழமைப் பாலதென்னோ
தாய் இவள் மனைவி என்னும் தெளிவு இன்றேல் தரும் என் ஆம்
தீவினை ஐந்தின் ஒன்றாம் அன்றியும் திருக்கு நீங்கா
மாயையின் மயங்குகின்றாம் மயக்கின்மேல் மயக்கும் வைத்தாம்
பொருள்:-
என்னிடம் குடிப்பழக்கத்தைத் தவிர வேறு என்ன இருக்கிறது? சீச் சீ! தாய் யார் , மனைவி யார் என்று கூட வித்தியாசம் தெரிவதில்லையே! கள் குடிப்பவனிடம் எவ்வளவு படிப்பு இருந்து என்ன பயன்? பஞ்சமா பாதகங்களில் இதுவும் ஒன்றே (கொலை, களவு, மது பானம் அருந்தல், பொய் சொல்லுதல், குருவை நிந்தித்தல்). ஏற்கனவே மாயையில் சிக்கித் தவிக்கும் எனக்கு குடி வேறு மயக்கம் தருகிறது. இது மிக இழிவானது.

குடித்தால் வஞ்சனை, களவு, பொய் வரும்
வஞ்சமும் களவும் பொய்யும் மயக்கமும் மரபில் கொட்பும்
தஞ்சம் என்றாரை நீக்கும் தன்மையும் களிப்பும் தாக்கும்
கஞ்ச மெல்லணங்கும் தீரும் கள்ளினால் அருந்தினாரை
நஞ்சமும் கொல்வதல்லால் நரகினை நல்காதன்றே
பொருள்:-
குடித்தால் வஞ்சனை, திருடுதல், பொய் கூறல், அறியாமை, மாறான கொள்கை, அடைக்கலம் அடைந்தோரை கைவிடுதல், செருக்கு, ஆகியன வருத்தும். அதே நேரத்தில் தாமரை மகளும் (லெட்சுமி) நீங்கிவிடுவாள் நஞ்சைச் சாப்பிட்டால் உடல் மட்டும் அழியும். இதுவோ உடலையும் அழித்து ஆளை நரகத்திலும் தள்ளும்.
இன்னும் இரண்டு பாடல்களில் மதுவால் கேடுவரும் என்று பெரியோர் சொல்லிக் கேட்டிருக்கிறேன். நல்ல வேளை! அனுமனின் புத்திமதியால் பிழைத்தேன் என்பான் சுக்ரீவன்
கேட்டெனென் நறவால் கேடு வரும் எனக் கிடைத்த அச் சொல்
காட்டியது அனுமன் நீதிக் கல்வியால் ……………….
என்றும்
இதைக் கையால் தொடுவது கெட்டது என்பது எல்லோருக்கும் தெரியும். மனதினால் நினைப்பதே தப்பு!
ஐய நான் அஞ்சினேன் இந்நறவினின் அரிய கேடு
கையினால் அன்றியேயும் கருதுதல் கருமம்
என்றும் சொல்லுவான்.
—சுபம்–