
Written by London swaminathan
Date: 18 FEBRUARY 2017
Time uploaded in London:- 5-38 am
Post No. 3647
Pictures are taken from various sources; thanks.
contact; swami_48@yahoo.com
பெண்களே அவசரப்பட்டு, கோபப்படாதீர்கள்!
திரவுபதியின் அழகை ஒப்பிடும்போது, நீங்கள் எல்லோரும் ……………….
திரவுபதியின் அழகை வருணிக்க வந்த வியாசர் மற்ற எல்லாப் பெண்களையும் குரங்கு ஆக்கிவிட்டார்!
“அழகான திரவுபதியைப் பார்க்கும்போது மற்ற எல்லாப் பெண்களும், பெண் குரங்குகள் (மந்தி) போலத் தெரிகின்றனர்”-மஹாபாரதம் 3-251-3
ஏதாம் த்ருஷ்ட்வா ஸ்த்ரியோ மேந்யா யதா சாகாம்ருகஸ்த்ரியஹ
திரவுபதி எல்லோரையும் விடப் பேரழகி என்று சொல்லி நிறுத்தி இருக்கலாம். ஆனால் வியாசர் ஒருபடி மேலே சென்றுவிட்டார். ஒருவேளை இது அந்தக் கால தமாஷாக இருந்திருக்கலாம். ஏனெனில் கம்ப ராமாயணத்திலும் இப்படி கொஞ்சம் தமாஷ் வருகிறது.
சூர்ப்பநகை ராமனை மயக்கப் பார்க்கிறாள். ராக்ஷசியான சீதையை ஒதுக்கிவிட்டு என்னைத் திருமணம் செய்துகொள் என்கிறாள். இராமனுக்கு ஒரே சிரிப்பு! இது என்னடா? ஈயம் பித்தளையைப் பார்த்து இளித்த கதையாக இருக்கிறதே! என்று எண்ணி, அவர் என் தம்பியிடம் போய்க் கேள் என்று சூர்ப்பநகையை அனுப்பிவிடுகிறார். லெட்சுமணனோ கோபக்காரர். ஒரே வெட்டாக மூக்கை வெட்டி விடுகிறான். அப்பொழுதும் சூர்ப்பநகை விடுவதாக இல்லை. ஏ, ராம! உன் தம்பியிடம் எனக்காக கொஞ்சம் சிபாரிசு செய்யக்கூடாதா?

“எனக்கு மூக்கு இல்லையே என்று நீ நினைக்கலாம். அட இடையே இல்லாத பெண்ணுடன் நீ வசிக்கவில்லையா! அது போல உன் தம்பியும் மூக்கே இல்லாத பெண்ணுடன் வசித்தால் என்னவாம்!”
பெருங்குலா உறு நகர்க்கே பெயரும் நாள்
வேண்டும் உருப்பிடிப்பேன் அன்றேல்
அருங்கலாம் உற்று இருந்தான் என்னினும் ஆம்
இளையவந்தான் அரிந்த நாசி
ஒருங்கு இலா இவளோடும் உறைவெனோ
என்பானேல் இறைவ ஒன்றும்
மருங்கு இலாதவளோடும் அன்றோ நீ
நெடுங்காலம் வாழ்ந்தது என்பாய்
–ஆரண்ய காண்டம், சூர்ப்பநகைப் படலம்
பொருள்:
பெரிய கொண்டாட்டம் மிக்க அயோத்தி நகருக்கு நீங்கள் திரும்பிச் செல்லும்போது, நீ ங்கள் விரும்பும் உருவத்தை நான் எடுத்துக்கொள்வேன். இப்போது உன் தம்பி தணிக்க முடியாத கோபம் கொண்டவனாக இருந்தாலும், அறுக்கப்பட்ட மூக்கு உடைய இவளோடு நான் வாழ்வேனா என்று கூறலாம். அப்படிச் சொன்னால், தலைவனே (ராமா) நீ இடையே இல்லாத பெண்ணொடு நீண்டகாலம் வாழ்ந்து வருகிறாய்; அதை அவனுக்கு எடுத்துச் சொல்லி அமைதி அடையச் செய்!”
மெல்லிடையாள் என்று பெண்களைப் புகழ்வதை இந்திய இலக்கியத்தில் மட்டுமே காணலாம். தமிழிலும் சம்ஸ்கிருதத்திலும்– இமயம் முதல் குமரி வரை, பெண்கள் வருணனை ஒரே மாதிரியாக இருக்கும் ஏனேனில் இது ஒரே பண்பாடு.
உன் மனைவிக்கு இடையே இல்லை என்பதை புகழ்ச்சியாகவே கொள்வர். எந்தப் பெண்ணையாவது பார்த்து நீ குண்டாக — பருமனாக — இருக்கிறாய் என்று சொன்னால் அவருக்குக் கோபம் வருவதோடு நம் மீது வெறுப்பும் வந்துவிடும். ஆனால் இங்கே இடையில்லாத சீதையுடன் மூக்கறுந்த சூர்ப்பநகை தன்னை ஒப்பிடுவது அந்தக் கால ஜோக் (தமாஷ்)

வால்மீகி நகைச்சுவை
கம்ப ராமாயணத்திலும் வால்மீகி ராமாயணத்திலும் சூர்ப்பநகை படலம் முழுதும் நகைச்சுவை அதிகம் இருக்கும். இதோ வால்மீகியிலிருந்து ஒரு பகுதி மட்டும்:-
ராமன் சூர்பநகையை நிராகரிக்கும்போது நான் ஏற்கனவே கல்யாணமானவன். உன்னையும் கட்டிக்கொண்டால் சக்களத்தி சண்டையை என்னால் தாங்க முடியாது! என் தம்பிதான், உனக்குச் சரியான ஆள். இன்னும் திருமண சுகம் அனுபவிக்காதவன்! என்று தமாஷ் செய்கிறான். லெட்சுமணன் சொல்லுகிறான்: நானோ என் அண்ணனைச் சார்ந்து வாழும் “அடிமை”. என்னிடத்தில் என்ன சுகம் காணப்போகிறாய். கொள்ளை அழகு பிடித்தவளே என் அண்ணன் இராமனிடமே செல் என்று தள்ளிவிடுகிறான்.
இவ்வாறு சூர்ப்பநகைப் படலத்தை கிண்டலும் கேலியும் நிறைந்ததாக, உலகின் இரு பெரும் புலவர்கள் வருணித்துள்ளனர். அந்தப் பகுதிகளை நகைச்சுவை உணர்வுடன் படிக்க வேண்டும்!
–சுபம்–