கொத்தைக்கு மூங்கர் வழிகாட்டுவதா? அப்பர் கேள்வி (Post No.4234)

Written by London Swaminathan

 

Date: 22 September 2017

 

Time uploaded in London- 10-43 am

 

Post No. 4234

 

Pictures are taken from various sources; thanks.

 

 

தேவாரத்தில் (நாலாம் திருமுறை) அப்பர் என்னும் திருநாவுக்கரசர் ஒரு அழகான உவமையைப் பயன்படுத்துகிறார். குருடனுக்கு ஊமை வழிகாட்ட முடியுமா? என்ன அருமையான கற்பனை.

நான் அமணருடன் (சமணர்) சேர்ந்தேனே! என்ன தவறு? இது குருடனுக்கு ஊமை வழிகாட்டுவது போலல்லவா இருக்கிறது- என்று அங்கலாய்க்கிறார்.

 

இதோ தேவாரப்பாடல்:

 

எத்தைக் கொண்டு எத்தகை யேழை

அமணொடு இசைவித்து எனைக்

கொத்தைக்கு மூங்கர் வழிகாட்டு

வித்துஎன்னக் கோகு செய்தாய்

முத்தின் திரளும் பளிங்கினிற்

சோதியும் மொய்பவளத்

தொத்தினை யேய்க்கும்படியாய்

பொழிற்கச்சி யேகம்பனே

பொருள்:

முத்தின் திரட்சியும், பளிங்கின் சோதியும் பவளத்தின் கொத்தும் அன்ன தன்மையுடைய பொழிற் சிறக்கும் காஞ்சீபுரத்தில் விளங்கும் திருவேகம்பப் பெருமானே! எக்காரணத்தைக் கொண்டு அமணரொடு என்னை இசைவித்துக் குருடனுக்கு ஊமை வழிகாட்டுவதைப் போன்று என்னை இழியுமாறு செய்தீர்?

 

கொத்தை= குருடு, மூங்கர் = ஊமை

கோகு = துன்புறும் பொருட்டுச் செல்லுவித்தல்.

அமணருக்கு மூங்கர் உவமை.

இரட்டைப் புலவரும் அந்தக் கவிராயரும்

 

இளஞ்சூரியர், முது சூரியர் என்னும் பெயர்கொண்ட இரண்டு கவிஞர்களை இரட்டையர் என்று அழைப்பர். இவர்களில் ஒருவர் காலில்லாத முடம் என்றும் மற்றொருவர் கண்பார்வையற்றவர் என்றும் சொல்லுவர். முடமானவரை, குருடர் தூக்கிக் கொண்டு போவார் என்றும் முடமானவர் மேலேயிருந்து வழி சொல்லுவார் என்றும் சொல்லுவர். இவர்கள் சோழ நாட்டில் ஆமிலந்துறையில் பிறந்தவர்கள். இருவரும் ஆளுக்குப் பாதிப்பாதி கவி பாடி பூர்த்தி செய்வராம். இது நம்பக்கூடியதே. இவர்கள் கலம்பகம் பாடுவதில் வல்லவர்கள் என்பதால், “கலம்பகத்திற்கிரட்டையர்கள்” என்று ஒரு பழம்பாடலும் சொல்லும். தில்லைக் கலம்பகம், திருவமாத்தூர் கலம்பகம் ,திருக்கச்சி தெய்வீக உலாக்கள் என்பன இவர்கள் இயற்றியவை, இது தவிர பல தனிப்பாடல்களுமிவர்களின் பெயரில் உள்ளன.

 

இது போல அந்தகக் கவிராயர் என்றொரு கண்பார்வையற்ற புலவரின் பாடல்களும் உள்ளன.

 

ஆனால்     அப்பர் பெருமான் சொல்லும் உவமை குருடனுக்கு ஊமை வழிகாட்டுவது என்பதாகும். அதாவது நடக்க முடியாத செயல். அப்பர் தான் வழிதவறிப்போனதால் தன்னை குருடாகவும் அமணர்களை ஊமையர்களாகவும் உவமிக்கிறார்.

நல்ல உவமை; அருமையான கற்பனை!

 

–சுபம்–