
Written by S NAGARAJAN
swami_48@yahoo.com
Date: 23 NOVEMBER 2019
Time in London – 6-48 AM
Post No. 7250
நவம்பர் 23. பகவான் ஸ்ரீ சத்ய சாயிபாபா பிறந்த தினம். அவரை வழிபட்டுத் துதிப்போம்!
உரையின் முற்பகுதி : கட்டுரை எண் 7241; வெளியான தேதி 21-11-2019 இரண்டாம் பகுதி கட்டுரை எண் 7245 வெளியான தேதி 22-11-2019 பார்க்கவும்.
ஸ்ரீ சத்ய சாயிபாபா பிறந்த நாள் செய்தி : தூயவராக உங்களை நீங்கள் மாற்றிக் கொள்ளுங்கள்! – 3
ச.நாகராஜன்

சாயி நாமம் மதுரம் மதுரம்
சாயி ரூபம் திவ்யம் திவ்யம்
சாயி மஹிமா அற்புத சரிதம்
சதா நினைப்போம் சாயி நாமம் – ச.நாகராஜன்
ஸ்ரீ சத்ய சாயிபாபா பிரசாந்தி நிலையம், புட்டபர்த்தியில், பிறந்த நாளையொட்டி 23-11-2002 அன்று ஆற்றிய அருளுரையின் தொடர்ச்சி …
பெண்களும் வெளியில் சென்று பணம் சம்பாதித்தால் பணப் பிரச்சினையை தீர்க்க முடியும் ஆனால் வீட்டை எடுத்துக் கொண்டால் அங்கு பல பிரச்சினைகள் இருக்கும். தைரியத்திற்கும் உறுதிக்கும் பெண்களே உருவகங்கள். மனத்திட்பத்துடன் அனைத்துக் கஷ்டங்களையும் எதிர்கொண்டு குடும்பத்தின் கௌரவத்தை அவர்கள் காக்கின்றனர். க்ரிஹிணி என்ற சொல்லின் கௌரவத்திற்கேற்ப அவர்கள் வாழ்கின்றனர்.
ஞானத்தை அடைய மனிதன் சத்தியத்தின் வழியைக் கடைப்பிடிக்க வேண்டும்.
சத்யம் ப்ரூயாத்
ப்ரியம் ப்ரூயாத்
ந ப்ரூயாத் அஸத்யம் அப்ரியம் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
(உண்மையைப் பேசுங்கள், இனிமையாகப் பேசுங்கள்; விரும்பத்தகாத அஸத்தியத்தைப் பேசாதீர்கள்)
இந்த மூன்றும் ஒழுக்கம், தர்மம், ஆன்மீக மதிப்புகளை முறையே குறிக்கிறது.
அனைத்துமே சத்தியத்தில் அடங்கியிருக்கிறது.
நீங்கள் கடவுளைத் தேடி கோவில்களுக்குச் செல்ல வேண்டியதில்லை.
ஸத்தியமே கடவுள்.
எங்கும் பரந்திருப்பது அது. அது எல்லோருக்கும் அளவில்லாத வளத்தை அளிக்கிறது. ஆகவே ஸத்தியத்தின் வழியில் நடப்பீர்களாக. தர்மத்தை கைக்கொண்டு நடப்பீர்களாக. ஞானத்தைப் பெறுங்கள்.
இந்த சாதனைக்கு சரியான உணவை எடுத்துக் கொள்வதே முதல் படியாகும்.
அன்னம் ப்ரம்மம்.
அன்னமே ப்ரம்மத்தின் வடிவம் என்பதை நினவில் கொள்ளுங்கள்.
ரஸோ விஷ்ணு.
உடலெங்கும் பரவுகின்ற அன்னத்தின் சாரமே விஷ்ணு சொரூபம்.
போக்தா தேவோ மஹேஸ்வர:
உணவை எடுத்துக் கொள்பவரே சிவன் – அதுவே சிவ தத்துவம் ஆகும்.
இந்தப் புனிதமான உணர்வுகளை மனிதன் கொள்ளும் போது அவன் சிவனாகவே ஆகிறான்.

துறவுக்கே சிவன்
சிவன் முழு தியாகத்திற்கும் துறவுக்கும் அடையாளச் சின்னமாகிறார்.
இந்த உலகில் ஒவ்வொருவரும் தேஹாபிமானம் கொண்டிருக்கிறார். ஆனால் சிவனுக்கோ தேஹாபிமானம் இல்லை. அவருக்கு ஆத்மாபிமானம் ஒன்றே இருக்கிறது (ஆத்மாபிமானம் – அனைவர் மீதும் அன்பு)
(இங்கு பாபா ஒரு தெலுங்குப் பாடலைப் பாடுகிறார்)
தெலுங்குப் பாடல் :
ஜடாமகுடத்துடன் சந்திரனை அவர் தலையில் கொண்டிருக்கிறார்.
ஜடாமகுடத்தினிடையே கங்கை பாய்ந்தோடுகிறது.
அவரது ஒளி பொருந்திய ஞானக் கண் நெற்றியின் நடுவில் இருக்கிறது.
அவரது இளஞ்சிவப்பான கழுத்து நீல வண்ணம் பொருந்திய மலராக இருக்கிறது.
அவரது உடல் முழுவதும் விபூதி பரவியிருக்கிறது.
அவரது நெற்றி ஒரு குங்குமப் பொட்டுடன் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது.
அவரது சிவப்பு உதடுகள் வெற்றிலைச் சாரால் ஒளி விடுகிறது. வைரம் பதிக்கப்பட்ட தங்கத் தோடுகள் அவரது காதுகளில் அசைந்தாடுகின்றன. அவரது முழு உடலும் தெய்வீக் ஒளியுடன் பிரகாசிக்கிறது.
(தெலுங்குப் பாடல் முடிகிறது)
ஒரு முறை பார்வதி சிவபிரானை அணுகி தமக்கென ஒரு இல்லம் வேண்டுமென்ற தனது ஆசையைக் கூறினார். பார்வதி கூறினார் :” எம்பிரானே! திருவோடேந்தி வீடுதோறும் பிக்ஷைக்காக அலைகிறீர்கள். நமக்கென ஒரு இல்லம் வேண்டும் என்பதைப் பற்றி யோசிப்பதே இல்லை. இருக்க ஒரு சரியான உறைவிடம் இல்லாமல் நாம் எப்படி வாழ்வது?”
சிவபிரான் அவரை சமாதானப் படுத்தினார் இப்படி :” பாரவதி! வீட்டைக் கட்டுவதால் என்ன பிரயோஜனம்? நாம் அதற்குள் நுழைவதற்கு முன்பேயே எலிகள் அதைத் தமது வீடாக ஆக்கிக் கொள்ளும். எலிகளைக் கட்டுப்படுத்த ஒரு பூனை தேவைப்படும். பூனைக்குப் பால் கொடுக்க ஒரு பசு தேவைப்படும். இப்படியாக நமது தேவைகள் பெருகிக் கொண்டே போகும். நமக்கு மன அமைதி போய்விடும். ஆகவே அப்படிப்பட்ட ஆசைகளைக் கொள்ள வேண்டாம்.”
அவர் துறவின் திருவுருவம். முழுத் துறவு ஒருவரை ஞானத்திற்கு அழைத்துச் செல்லும். இதுவே மனித குலத்திற்கு சிவன் தரும் உபதேசம்.
ஞானம் என்பது என்ன? சிந்தனை, சொல், செயல் இந்த மூன்றிலும் தூய்மையாக இருப்பதே ஞானம். உங்கள் உடல், மனம், செயல் தூய்மையானதாக இருக்க வேண்டும்.
இதன் அடிப்படையில் தான், ‘மனித குலத்தைச் சரியாகப் படிக்க மனிதனைப் படிக்க வேண்டும்’ என்று சொல்லப்படுகிறது.
இதன் அர்த்தம் எண்ணம், சொல், செயல் ஆகிய மூன்றும் ஒன்றாக இணைந்திருப்பதே மனிதத்வம் என்பதாகும்.
இது மிக எளிமையானது. பின்பற்றுவதற்கு சுலபமானது.
ஆனால் யாருமே இந்த வழியில் நடக்க முயற்சியை எடுப்பதில்லை.
கங்கை அருகிலே பாய்ந்து கொண்டிருந்தாலும் யாருமே அதில் குளித்து உடலைச் சுத்தம் செய்து கொள்வதில்லை.
மக்கள் தங்களுக்குள்ள வசதிகளைப் பயன்படுத்திக் கொள்வதில்லை.
இது முழு சோம்பேறித்தனம்; தமோ குணத்தின் அடையாளம்.
இந்த விலங்குத் தன்மையிலிருந்து நீங்கள் விடுபட வேண்டும், மனிதத்வத்தை அபிவிருத்தி செய்து தெய்வீக அளவிற்கு உயர வேண்டும்.
(உரை தொடர்கிறது)
***

