சாஸ்தா மலையின் அடியில் மர்ம சித்தர்கள் வசிக்கிறார்களா? (Post 3634)

Written by S NAGARAJAN

 

Date: 14 February 2017

 

Time uploaded in London:-  6-20 am

 

 

Post No.3634

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

 

பாக்யா இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள கட்டுரை                                                            

 

சாஸ்தா மலையின் அடியில் மர்ம சித்தர்கள் வசிக்கிறார்களா?

.நாகராஜன்

t

“14179 அடி உயரமுள்ள மவுண்ட் சாஸ்தா மிகப் புனிதமான மலையாகக் கருதப்படுகிறது.”

                                –    மவுண்ட் சாஸ்தா பற்றிய இணையதளத் தகவல்

   

 

     நாம் வாழும் இந்த பூமியில் சாஸ்தா மலையின் அடியில் உள்ள ஒரு பிரம்மாண்டமான நகரில் பிரபஞ்ச சக்தி இருக்கிறது என்றும் அங்கு வாழும் மர்ம சித்தர்கள் மனித குலத்திற்குத் தங்களின் அபூர்வ ஆற்றலின்  மூலம் உதவி புரிந்து வருகின்றனர் என்றும் சொன்னால் அதிசயமாகத் தானே இருக்கிறது.

 

         அமெரிக்காவில் வடக்கு  கலிபோர்னியாவில் உள்ள இந்த மவுண்ட் சாஸ்தா காலம் காலமாக மிகப் புனிதமான ஒன்றாகவும் பல மர்ம சித்தர்கள் வசிக்கும் இடமாகவும் கருதப்பட்டு வருகிறது. இங்குள்ள விண்டு என்ற பழங்குடியினர் சாஸ்தா பற்றிய பல அதிசய சம்பவங்களைக் கூறுகின்றனர். பழங்காலத் தமிழ் நாட்டுடன் தொடர்பு கொண்ட லெமூரியா அனைவருக்கும் நினைவிருக்கும்.

 

 

     இந்த மலையில் லெமூரியன்களைப் பார்ப்பதாக பலரும் சொல்கின்றனர். அவர்கள் ஏழு அடி உயரம் இருப்பதாகவும் தங்கக் கட்டிகளை கையில் ஏந்திச் செல்வதாகவும் அந்தப் பழங்குடி மக்கள் கூறுகின்றனர். மலையின் உள்ளே தங்கம் கட்டி கட்டியாக இருப்பதாக ஒரு நம்பிக்கை நிலவுகிறது.

 

 

     வழிவழியாக வழங்கி வரும் செய்திகளை ஆராயத் துணிந்தார் ஒரு அமெரிக்கர். அவர் பெயர் கை வாரன்  பெல்லார்ட்.(Guy Warren Ballard) ஆயிரத்தி தொள்ளாயிரத்து  முப்பதாம் வருடம் ஆகஸ்ட் மாதம் சாஸ்தா மலையை ஆராய அந்த மலையின் உட்பகுதிகளில் காடுகளின் உள்ளே அவர் சென்றார். பசிபிக் பெருங்கடலிலிருந்து வந்த ஒரு படகு கரையில் ஒதுங்கிப் பின்னர் பறக்க ஆரம்பித்து சாஸ்தா மலையில் இறங்கியதைக் கண்டதாக அவர் கூறினார்.

மலையின் காட்டுப் பகுதியில் ஒரு நீரூற்று அருகே பெல்லார்ட் சென்ற போது தாகம் எடுக்கவே சிறிது நீரை எடுத்துப் பருகினார். உடனே மின்சாரம் பாய்வது போல அபரிமிதமான சக்தி அவர் உடலில் பாய்ந்தது.

 

 

அப்போது இருபது வயது மதிக்கத் தக்க ஒரு இளைஞர் பெல்லார்ட் முன் தோன்றினார். 1784இல் இறந்த புனிதர் ஜெர்மெய்ன் தான் அவர் என்பதை அறிந்து  கொண்ட பெல்லார்ட் அடிக்கடி அவரைச் சந்திக்க ஆரம்பித்தார். ஐ ஆம் ஃபவுண்டேஷன் (I Am Foundation) என்ற ஒரு இயக்கத்தை ஆரம்பித்து மலை பற்றியும் அங்கு வாழும் சித்தர்களைப் பற்றியும் ஏராளமான இரகசியங்களைச் சொல்ல ஆரம்பித்தார்.

அவர் கூறிய செய்திகள் சுவாரஸ்யமானவை. தலையில் கருவி ஒன்றை மாட்டிக் கொண்டிருக்கும் அவர்களுக்கு உலகில் எந்த மூலையில் யார் பேசினாலும் கேட்க நினைத்தால் கேட்க  முடியுமாம்!

 

 

 

புனிதர் ஜெர்மெய்ன் பெல்லார்டிடம் ஒரு கோப்பை திரவம் ஒன்றைக் குடித்து குடிக்கச் சொல்ல அதைக் குடித்த பெல்லார்ட் உடலை வீட்டு நீங்கி ககன மார்க்கத்தில் உலவ ஆரம்பித்தாராம். அந்தப் புனிதர் வான மார்க்கமாக அவரைப் ப்ல இடங்களுக்கும் அழைத்துச் சென்றாராம். டெக்டான் தொடர் வரிசையில் உள்ள ஒரு மலைக் குகையில் சீலிடப்பட்ட ஒரு குகை இருக்கிறதாம். அதன் உள்ளே சென்றால் ஒரு ந்கரம் இருக்கிறதாம். அங்கு விசாலமான ஹால்கள், பாதாள அறைகள் ஏராளம் உள்ளதாம். ஒவ்வொரு சுவரிலும் அனைத்தையும் பார்க்கும் கண்கள்” (அமெரிக்க ஒரு டாலரில் உள்ள கண்கள்) வரையப்பட்டிருக்கிறதாம்.

 

12 அடி விட்டமுள்ள ஒரு இயந்திரத்தை அங்கு பார்த்த பெல்லார்ட் அதில் தான் அங்குள்ள சித்தர்கள் பெருமளவு அளப்பரிய ஆற்றலைச் சேமித்து வைத்து அங்கிருந்தே மனித குலத்தை உயர்த்த உதவி செய்கிறார்கள் என்று உணர்ந்து கொண்டாராம்.

 

மிகப் பெரும் பிரபஞ்ச சித்தர்கள் என்று அவர்களைக் குறிப்பிடும் பெல்லார்ட் அவர்கள் மூலம் அந்த சக்தி மனித உடலில் உள்ள ஏழு ஆதாரங்களுக்கு வருவதாகத் தெரிந்து கொண்டார். தாவரங்களுக்கும் மிருகங்கள் உள்ளிட்ட ஜீவராசிகளுக்கும் அவர்கள் ஆற்றலை வழங்குவதைக் க்ண்ட அவர், இதைத் தன் அமைப்பின் மூலம் உலக மக்களுக்குத் தெரிவிக்க ஆரம்பித்தார்.

 

சமீப காலத்தில் மிக பிரம்மாண்டமான இயந்திரங்களிலிருந்து கதிரியக்கத்தை வெளியிடச் செய்து சோவியத் யூனியன் மனிதர்களின் நடத்தையில் ஒரு மாறுதலைச் செய்ய அறிவியல் ரீதியாக முயற்சித்தது. அதே போல அந்த மலையில் உள்ள விசேஷ இயந்திரங்கள் கதிரியக்க ஆற்றலைப் பாய்ச்சி மனிதர்களின் நடத்தையில் ஒரு நல்ல மாறுதலை ஏற்படுத்தப் போகிறார்களாம்.

 

 

பெல்லார்ட் கூறிய அனைத்தையும் நம்பிய லட்சக் கணக்கானோர் ஆன்மீக முன்னேற்றம் காண்பதற்காக அவர் இயக்கத்தில் இணைந்தனர். பெல்லார்டின் மறைவுக்குப் பின்னர் அவர் மனைவி எட்னா அதை முன்னின்று நடத்தினார்.

இன்றும் இயங்கி வரும் அந்த இரகசிய இயக்கம் சாஸ்தா மலையே ஆற்றலின் இருப்பிடம் என்று கூறி வருகிறது.

 

 

இது சரிதானா என்பதை ஆராயப் பலரும் அங்கு செல்ல ஆரம்பித்துள்ளனர். பிரபலமாகி வரும் அந்த இடத்திற்கு வருகை புரிவோரின் எண்ணிக்கை வருடத்திற்கு இருபத்தாறாயிரம் என்ற எண்ணிக்கையை அடைந்து விட்டது. நாளுக்கு நாள் இங்கு புத்துணர்வு பெற்று வியாதிகளை குணப்படுத்திக் கொள்வோரின் தொகையும் அதிகரித்துக் கொண்டே போகிறது. இங்கு அடிக்கடி விசேஷ முகாம்கள் வேறு நடைபெறுகின்றன!.

அறிவியல் அறிஞர்கள் அதை ஆராய ஆரம்பித்தால் அங்குள்ள சிறப்பு ஆற்றல் என்ன என்பது உலகிற்குத் தெரியும்!

 

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் ..

கெர்ஹார்ட் டோமக் (Gerhard Domagk 1895-1964)   என்பவர் ஜெர்மனியைச் சேர்ந்த விஞ்ஞானி.  மருத்துவத்திற்கான 1939ஆம் ஆண்டின் நோபல் பரிசு இவருக்குத் தருவதாக அறிவிக்கப்பட்டது. ஸல்போனமைட் என்ற ஆன்டிபாக்டீரியா மருந்தின் கண்டுபிடிப்புக்காக இந்த நோபல் அங்கீகாரம் அவருக்குக் கிடைத்தது. பரிசு பற்றிய் அதிகாரபூர்வமான அறிவிப்பை நோபல் பரிசுக் குழுவினர் 1939 நவம்பரில் அறிவித்தனர்.  இரண்டாம் உலக மகா யுத்தம் ஆரம்பித்து இரண்டு மாதங்களே ஆகியிருந்தன. பரிசு அறிவிப்பு கிடைத்தவுடன் கெர்ஹார்ட் நன்றி தெரிவித்து நோபல் பரிசுக் குழுவின் சேர்மனுக்குக் கடிதம் ஒன்றை அனுப்பினார்.     

 

         இரண்டு வாரங்கள் கழித்து  ஜெர்மானிய ரகசிய போலீஸ் அவரை கைது செய்தது. ஜெர்மானிய ரகசிய போலீஸான கெஸ்டாபோவின் தலைமையகத்தில் பெரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டது. ஜெர்மானிய அரசின் கொள்கையின் படி ஒரு ஜெர்மானியர் அயல்நாடுகள் தரும் எந்த ஒரு விருதையும் பெறக் கூடாது. விசாரணையின் போது உணவு சாப்பிட விஞ்ஞானி மறுத்து விட்டார். ஒரு வாரம் கழித்து அவர் விடுதலை செய்யப்பட்டார். வற்புறுத்தலின் பேரில் நோபல் பரிசை தான் ஜெர்மனிக்கு விசுவாசமான குடிமகன் என்பதால் பெற முடியாது என்று கடிதம் ஒன்றை நோபல் கமிட்டிக்கு அவர் அனுப்பினார்.

   இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற காலம் முழுவதும் அவரையும் அவரது குடும்பத்தினரையும்  ஜெர்மானிய ரகசிய போலீஸ் கண்காணித்துக் கொண்டிருந்தது. சில சமயம் அவரை தலமையகத்திற்குக் கூப்பிட்டு விசாரணை செய்வதும் தொடர்ந்தது.     

 

         ஆனாலும் கூட எல்லா நாடுகளும்  ஸல்போனமைடைப் பயன்படுத்த ஆரம்பித்தன. ஜெர்மனியில் மட்டும் அது பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டது. 1945ஆம் ஆண்டு உலகப் போர் முடிவிற்கு வந்தது.

     1947ஆம் ஆண்டு ஸ்டாக்ஹோமில் நடந்த விழாவிற்கு கெர்ஹார்ட்  அழைக்கப்பட்டார். 1939இல் அறிவிக்கப்பட்ட பரிசிற்கான தங்க மெடல், டோக்கன் அதற்கான டிப்ளமா ஆகிய அனைத்தையும் அவர் பெற்றார். ஆனால் பரிசுத் தொகை  மட்டும் அவருக்கு வழங்கப்படவில்லை. ஏனெனில் நோபல் தனது உயிலில் பரிசை யார் ஒருவர் பத்து மாதங்களுக்குள் பெறவில்லையோ அவர்களுக்கு ரொக்கப் பணம் தரப்படக்கூடாது என்று எழுதி வைத்திருந்தார்.

இப்படி பல அரிய விஞ்ஞானிகளை ஹிட்லரின் அரசு சித்திரவதை செய்து வந்தது. உலகப் போர் முடிந்த பின்னரே இவர்களுக்கெல்லாம் அங்கீகாரம் கிடைத்தது!

****************