பாரதியை வியக்கச் செய்த சிவபக்தன் – உலக மஹா அறிஞன் பாணினி!

maheswara-sutrani

Research Paper written by London swaminathan

Research Article No.1660; Dated 19th February 2015.

“வாக்யகாரம் வரருசிம் பாஷ்யகாரம் பதஞ்சலீம்

பாணினீம் சூத்ரகாரம் ச ப்ரணதோஸ்மி முனித்ரயம்”

வரருசி, பதஞ்சலி, பாணினி ஆகிய மூன்று முனிவர்களையும் வணங்குகிறேன் என்று சொல்லி எல்லோரும் சம்ஸ்கிருதம் கற்பர்.

2700 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த உலக மகா இலக்கண வித்தகன் பாணினியை எண்ணி எண்ணி இன்று வரை உலகம் வியந்து கொண்டே இருக்கிறது. உலக இலக்கண தந்தை என்று பலரும் போற்றும் பாணினி சுமார் 4000 சூத்திரங்களுடன் செய்த அஷ்டாத்யாயி (அஷ்ட அத்தியாயங்கள் = 8 பிரிவுகள்) என்ற நூலை விட விஞ்ஞான முறைப்படி இன்று வரை நூல் எழுதியவர் எவருமிலர்.

“சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல்” என்ற சொற்றொடருக்கு எல்லாம் இலக்கணமாகத் திகழ்ந்தவன் வான் புகழ் வள்ளுவன். அந்த வள்ளுவனையும் விழுங்கிச் சாப்பிட்டுவிடும் அளவுக்கு ரத்தினச் சுருக்கமாக எழுதியவன் பாணினி. இதை உலகிலுள்ள யாருமே நம்பமுடியாது என்னும் அளவுக்கு எழுதினார் என்று பாணினியின் புகழ் பாடுகிறார் சொற்தேரின் சாரதியாம் சுப்பிரமணிய பாரதி!

“நம்பருந்திறலோடொரு பாணினி ஞாலம் மீதில் இலக்கணம் கண்டதும்……………………..”

-என்று பாரதி தனது சுயசரிதை என்னும் கவிதையில் பாராட்டுகிறார்.

இந்தியவியல் நிபுணர் கோல்ட்ஸ்டக்கர், பண்டார்கர், டாக்டர் ராதா குமுத் முகர்ஜீ, பாடக் ஆகியோர் பாணினி வாழ்ந்த காலம் கி.மு ஏழாம் நூற்றாண்டு என்றும், சரித்திரப் பேரறிஞர் கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி கி.மு ஆறாம் நூற்றாண்டுக்கு முன் என்றும் உறுதிபட நிறுவியுள்ளனர்.

ஆரியதரங்கிணி ஆசிரியர் கள்யாணராமன் சொல்கிறார்:

“ஒவ்வொரு மொழியும் வளர சில காலம் பிடிக்கும். இலக்கியம் தோன்றிய பின்னர் இலக்கணம் தோன்றும் — அதற்கு உரை என்பது இலக்கண் நூலுக்குச் பல காலம் தள்ளியே தோன்றும். வரருசி ,பதஞ்சலி ஆகியோரின் காலத்தைப் பார்க்கையில் பாணினி ஏழாம் நூற்றாண்டு என்பது சரியே!”

என் கருத்து: கி.மு.முதல் நூற்றாண்டில் தோன்றியதாகப் பலராலும் எண்ணப்படும் தொல்காப்பியத்துக்கு 1200 ஆண்டுகளுக்குப் பின்னரே உரை எழுந்தது. அதைப் பார்க்கையில் பாணினி இன்னும் முன்னதாக அதாவது கி.மு.800 முதல் 1000 வரையான காலத்தில் இருந்திருக்க வேண்டும்.

nataraja (1)

சிவபெருமான் தந்த இலக்கணம்

வர்ஷ என்ற ஒரு ஆசிரியரிடம் பாணினி கல்வி கற்றார். அவருடைய ஊர் சாலதூர்ய. அது இப்பொழுது பாகிஸ்தானில் இருக்கிறது. அவருக்கு படிப்பு வரவில்லை. குருவின் மனைவி சொன்னார், “பிள்ளாய்! வெளி உலகில் சென்று கொஞ்சம் பொது அறிவு பெற்று வாராய்!” – என்று. பாணினி புறப்பட்டார் இமயமலைக்கு. கடும் தவம் இயற்றினார். சிவனுக்கு மகிழ்ச்சி! உன் தவம் கண்டு மகிழ்ந்தோம், மகனே, என்ன வரம் வேண்டும், என்று கேட்டார். வகுப்பில் மக்குப் பிள்ளை என்று என்னை ஏசி விட்டார்கள். பொன் வேண்டாம், பொருள் வேண்டாம், பெண் வேண்டாம், மண்ணாளும் அரச பதவியும் வேண்டாம். யாம் வேண்டுவது மொழி அறிவு மட்டுமே என்றார்.

சிவனுக்கு ஒரே குஷி! அட இப்படி ஒரு ஒரு பிள்ளையா? என்று வியந்து எடுத்தார் உடுக்கையை! ஆடினார், ஆடினார். உடுக்கையை அடித்த அடியில் இமய மலை குகைகள் எல்லாம் எதிரொலித்தன. பாணினிக்கோ 14 ஒலிகள் மட்டுமே காதில் விழுந்தன. அதிலிருந்து பிறந்தது உலக மகா சம்ஸ்கிருத இலக்கணம்.

அந்த 14 ஒலிகளை வைத்துக் கொண்டே சம்ஸ்கிருத இலக்கணத்தை வரைந்தார். அத்தனையும் அறிவியல் முறைப்படி அமைத்தார்.

14 மஹேஸ்வர சூத்திரங்கள்

அ இ உண்

ருலுக்

ஏ ஓங்

ஐ ஔச்

ஹயவரட்

லண்

ஞம ஙணநம்

ஜ்ஜபஞ்

கடத ஷ்

ஜபகடதச்

க ப ச ட த

சடதவ்

கபய்

சஷஸர்

ஹல்

–இதி மாஹேச்வராணி சூத்ராணி

இதில் சம்ஸ்கிருத எழுத்துக்கள் எல்லாம் இருக்கின்றன. இதைப் பயன்படுத்தி எப்படி சம்ஸ்கிருத சந்தி விதிகள் முதலியவற்றைக் கற்கலாம் என்பதை இன்னும் ஒரு கட்டுரையில் விளக்குகிறேன். இதை வைத்து 281 ‘காம்பினேஷன்’ போடலாம்!

பாணினிக்கும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே சம்ஸ்கிருத மொழி இருந்தது. அவரே தனக்கு முந்தைய இலக்கண கர்த்தாக்களுக்கு கும்பிடும் போடுகிறார். அவர்கள் பெயர்களை மட்டுமே நாம் அறிவோம். நூல்கள் கிடைத்தில.

இன்றும் பிராமணர்கள் ஆண்டுதோறும் பூணூல் மாற்றும் விழாவில் (உபாகர்மா), வேதத்தை மீண்டும் துவக்கும் நாளில் இந்த 14 சூத்திரங்களைச் சொல்லிவிட்டுத்தான் “அக்னி மீளே புரோகிதம்: என்று வேத பாடம் துவங்குவர்.

பாணினிக்குப் பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர் மஹா பாஷ்யம் என்ற பெயரில் மாபெரும் உரை எழுதிய பதஞ்சலி,  — பகவான் என்று போற்றுகிறார் பாணினியை.

இலக்கியம் எழுதிய தாக்ஷீ புத்திரனை உலகமே மகரிஷி என்று போற்றியது. பாணினியின் தாய் பெயர் தாக்ஷீ என்று பதஞ்சலி சொல்லுவார். கையில் தர்ப்பையை வைத்துக் கொண்டு கிழக்கு முகம் நோக்கி அமர்ந்து வடமொழி இலக்கணத்தை எழுதினார்.

ஒரு புள்ளி, கால் புள்ளி, கமா இடத்தைக் கூட வீண் அடிக்காமல் ரத்தினச் சுருக்கமாக, முத்து முத்தாக சூத்திரங்களை எழுதினார். காலப்போக்கில் மக்களுக்கு விளங்காமல் போய் விடுமே என்று வரருசியும், பதஞ்சலியும் உரை எழுதினர்.

இவருடைய இலக்கணம், வேத கால சம்ஸ்கிருதத்தை ஒட்டி உள்ளது என்று ஆன்றோரும் சான்றோரும் பகர்வர். புத்தர் மஹாவீரர் ஆகியோர் காலத்துக்கு முன் வாழ்ந்ததால் அவர்தம் பெயர்கள் பாணிணீயத்தில் இல்லை. 500 ஊர்கள் பெயர்களைச் சொல்லுவதால் இவருடைய பூகோள அறிவும் பாரத்வாஜரின் 51ஆவது தலை முறை போன்ற சொற்றொடர்களை எடுத்துக் காட்டாக விளம்புவதால் அவர்க்கு முன் பாரத நாடு பல்லாயிரம் ஆண்டுகள் இருந்ததும் வெள்ளிடை மலை என விளங்கும்.

nataraja

ஆயிரம் பொற்காசு

காஷ்மீரில் ஒரு மன்னன், எல்லோரும் பாணினி புத்தகத்தைப் பயில வேண்டும் என்று கட்டளையிட்டு அதில் தேறியவர்களுக்கு ஆயிரம் பொற்காசுகள் பரிசளித்தான்.

சீன யாத்ரீகர் யுவாங் சுவாங், 1400 ஆண்டுகளுக்கு முன் பாணினியின் சிலையைக் கண்டதாக எழுதி வைத்துள்ளார். 1400 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு எழுத்தாளனுக்கு சிலை. மன்னனுக்கு அல்ல, நடிகனுக்கு அல்ல! இலக்கண வித்தகனுக்கு!!! எண்ணிஎண்ணி இறும்பூது எய்யலாம்!!

உலகில் பெரும்பகுதியினர் கோவண ஆண்டிகளாகவும், சுமேரியா, எகிப்து முதலிய நாடுகளில் உப்பு-புளி-கணக்கு, இறந்தோர் புத்தகம், ஜில்காமேஷ் என்று அரிச்சுவடி விஷயங்களை எழுதிக் கொண்டிருக்கையில் பாரத மக்கள் உபநிஷத தத்துவங்களையும், வியத்தகு இலக்கணம் அகராதிகள்,மொழி இயல், சொற் பிறப்பியல் முதலியன கண்டதும் ஒப்பிடற்பாலது