பாட்டுக்கு பத்து ரூபாய்! ஞானியார் அடிகள் கதை

ஞானியார்  அடிகள் படம்

Written by London swaminathan

Article No.1859; Dated 12 May 2015.

Uploaded in London at 14-32

செங்குந்தர் ஜாதியில் பிறந்து பின்னர் துறவறம் மேற்கொண்ட ஞானியார் அடிகள் பல மொழிகளைக் கற்றுத் தேர்ந்தார். அவர் தெலுங்கு மொழியை சென்னை கேசவுலு நாயுடுவிடம் இருந்தும் சம்ஸ்கிருத மொழியை ராமநாத சாஸ்திரிகள் இடமிருந்தும் தமிழ் மொழியை சி.மு.சாமிநாத அய்யர் என்னும் பெரும் புலவரிடமிருந்தும் கற்றார்.

சாமிநாத அய்யர் தினமும் பாடம் சொல்லி முடித்தவுடம் ஒரு பாடலை எழுதி வீட்டுப் பாடமாகக் (ஹோம் ஒர்க்) கொடுப்பார். அந்தச் செய்யுளில் என்ன “சீர், தளை” இருக்கிறது என்பதை ஞானியார் அடிகள் எழுதி வைப்பார். மறுதினம் வரும் போது அதைச் சரிபார்த்துவிட்டு, ஐயர் மேலும் ஒரு பாடல் எழுதுவார்.

ஒருமுறை அவருக்கு பொருள் தட்டுப்பாடு போலும்.அது மனதை வாட்டியதாலோ என்னவோ கீழ்கண்டவாறு ஒரு கவிதையை ‘ஹோம் ஒர்க் நோட்புக்’கில் எழுதிக் கொடுத்துவிட்டுப் போய்விட்டார்.

“நற்பாடலிபுரத்து நாதனே! நாயினேன்

பொற்பாம் நினதடியைப் போற்றினேன் தற்போது

வேண்டுஞ் செலவிற்கு வெண்பொற்காசுப் பத்து

ஈண்டு தருக இசைந்து”—

என்னும் வெண்பாவினை எழுதி வைத்துவிட்டுச் சென்றார். இந்தச் செய்யுளுக்கு இலக்கணக் குறிப்பு எழுத வேண்டியது அடிகளார் வேலை.

மறுநாள், ஐயர் வழக்கம்போல பாடம் கற்பிக்க வந்தார். அன்றைய பாடம் முடிந்த பின் மேலும் ஒரு செய்யுளை எழுதுவதற்காக குறிப்புப் புத்தகத்தைத் திறந்தார். அதில் பத்துரூபாய் பணமும் இருந்தது கண்டு வியந்தார்.

“இது என்ன? நான்பாட்டுக்கு (அதாவது என் மனம் போனவாறு) ஏதோ கவிதை எழுதி வைத்தேன். பொருள்மட்டும்தானே எழுதச்சொன்னேன்” என்றார். உடனே அடிகாளாரும் “நான் பாட்டுக்குப் பொருள் தந்தேன்; வேறு எதுவும் இல்லை” என்றார்.

தமிழ் நயம் உணர்ந்தோர் இதில் வரும் “பாட்டுக்கு”, “பொருள்” என்ற சொற்கள் சிலேடையாகப் பயன்படுத்தப்பட்டிருப்பதைக் அண்டு இன்புறுவர்.

(இதை 1958-ஆம் ஆண்டு சிங்கப்பூர் தமிழ் முரசு ஆண்டு மலரில் படித்தேன்)