
டாக்டர் நாகசாமியின் திருக்குறள் நூல் தரும் புதிய செய்திகள் (Post No.4940)
WRITTEN by London Swaminathan
Date: 22 April 2018
Time uploaded in London – 20-54 (British Summer Time)
Post No. 4940
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.
WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

டாக்டர் இரா நாகசாமியை அறியாதோர் தமிழகத்தில் இருக்க முடியாது. தொல்பொருட் துறை இயக்குநராக நீண்ட காலம் பணியாற்றியவர். காஞ்சிப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக இருந்தவர். தமிழ் வரலாறு, தமிழக தொல்லியல் துறையில் கரை கண்டவர். உலகம் முழுதும் சென்று தமிழ்க் கலாசாரம் பற்றி விரிவுரை ஆற்றியவர்; 50-க்கும் மேலான நூல்களின் ஆசிரியர். அவர் திருக்குறள் பற்றி எழுதிய நூல் நிறைய புதிய செய்திகளைத் தருகிறது. சில பழங்கதைகளை உடைத்தெரிகிறது.
அண்மையில் இவருக்கு இந்திய அரசு பத்மபூஷன் விருது கொடுத்து கௌரவித்தது. இதுவே தாமதமாக கொடுக்கப்பட்ட பரிசு என்பது என் கருத்து. அந்தக் காலத்தில் புதை பொருள் இலாகா என்று பத்திரிக்கைகள் எழுதிய புதைந்து போன இலாகாவை பெருமை மிகு தொல்பொருட் துறையாக மாற்றி கொடிகட்டிப் பறக்க வைத்தவர் இவர்.
டாக்டர் நாகசாமியின் திருக்குறள் நூல் ஒரு ஆங்கில நூல். சுமார் 250 பக்கங்களில் அரிய விஷயங்கள் இருந்தும் விலை 150 ரூபாய்தான். நிற்க. புஸ்தகத்துக்குள் நுழைவோம்.
திருவள்ளுவர் தங்கக் காசு உண்மையா?
கல்கத்தாவில் ஒரு தங்கக் காசு கண்டுபிடிக்கப்பட்டது. அதன் முன்புறம் முனிவர் போன்ற உருவமும் பின்புறம் ஐந்து முனை நட்சத்திரமும் உளது. இதை ஐராவதம் மஹாதேவன் ,திருவள்ளுவர் காசு என்று எழுதி அதை தமிழ் அறிஞர் எல்லீஸ் வெளியிட்டிருக்க வெண்டும் என்று கதை கட்டினார். ஆனால் இதற்கும் எல்லீஸ் துரைக்கும் தொடர்புள்ள சான்றும் இல்லை. மேலும் இது திருவள்ளுவரும் இல்லை என்று டாக்டர் நாகசாமி பிட்டுப் பிட்டு வைக்கிறார். இதில் எல்லீஸ் பெயரை சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் இழுத்தனர். இது புத்தரின் காசு. அதில் பூமி ஸ்பர்ஸ முத்ரை உளது என்கிறார் டாக்டர் நாகசாமி.
இந்துகளின் நான்கு வாழ்க்கை மூல்யங்கள் தர்ம, அர்த்த, காம, மோக்ஷம் என்பதாகும். இதே வரிசையில் திருவள்ளுவர் அறம் பொருள் இன்பம் என்று முப்பால் நூலை வகுத்து அறத்துப் பாலில் மோக்ஷம் என்பபடும் வீடு பேற்றையும் வைத்துளார்.
டாக்டர் நாகசாமி திருவள்ளுவரின் முப்பாலும் (அறம் பொருள் இன்பம்) ஸம்ஸ்க்ருதத்தில் உள்ள தர்ம சாஸ்திரம், அர்த்தசாஸ்திரம் காம சாஸ்திரம் நாட்ய சாஸ்திரம் ஆகியவற்றில் இருந்து ஏராளமான விஷயங்களை எடுத்திருப்பதை ஆதரங்களுடன் காட்டியுள்ளார். இதற்குமுன்னர் டாகடர் வி ஆர் ராமசந்திர தீக்ஷிதர் என்ற பேரறிஞர் இதே போல பல ஒப்பீடுகளைச் செய்தபோதிலும் டாக்டர் நாகசாமி கூடுதல் விஷயங்க ளைத் தருகிறார். தம்மபதம் என்னும் புத்தமத நூல், பகவத் கீதை ஆகியனவும் ஒப்பிடப்படுகின்றன.

ஜி.யு. போப் செய்த விஷமங்கள்
ரெவரண்ட் ஜி யூ போப் செய்த விஷமங்களை எடுத்துக் காட்டி அவர் முகத்திரையை கிழி கிழி என்று கிழித்துவிட்டார் டாக்டர் நாகசாமி.
1.புறநானூற்றின் பாடல்களில் 72 பாடல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த போப், கபிலர் என்னும் புலன் அழுக்கற்ற அந்தணாளனை, பிராஹ்மணனை— பறையன் என்று கூறியுள்ளார். கபிலர் தன்னை அந்தணன் என்று பறைசாற்றிய புற நானூற்றுப் பாடலை மறை த்துவிட்டார்.
- வள்ளுவர் எட்டு அல்லது ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் என்று தத்துப் பித்து என்று உளறியும் உள்ளார் ஜி யு போப்.
3.வள்ளுவர் மீது கிறிஸ்தவ மத தாக்கம் இருந்ததாகவும் இந்துக்கள் வரை வெறுத்ததாகவும் ஜி யூ போப் எழுதிய புளுகு மூட்டைகளை டாக்டர் நாகசாமி சொல்லால் எரித்துவிட்டார்.
விஷமக்கார ஜீ யூ போப்- புக்கு ஒரு ஆப்பு!
திருவள்ளுவர் சமணரா?
திருவள்ளுவர் சமணரா, திருக்குறள் சமண காவியமா என்ற விவாதத்துக்கே பொருள் இல்லை. ஏனெனில் இடை சமண நூல் என்று சொல்ல எந்தச் சான்றும் இல்லை என்கிறார். மேலும் திருவள்ளுவரின் சமயப் பிரிவு என்ன என்பதைத் தெரிவிக்கும் எந்த சான்றையும் அவர் அளிக்க விரும்பவில்லை என்றே தோன்றுகிறது என்கிறார்.

திருவள்ளுவரின் காலம்
டாக்டர் நாகசாமியின் புஸ்தகத்தைப் படித்தால் முந்தையவர் கூறிய வாதங்களை எல்லாம் தெரிந்து கொள்ளலாம். அவைகளை எல்லாம் சுருங்கக் கூறி பின்னர் தன் வாதத்தை முன்வைக்கிறார். திருவள்ளுவர் இரண்டாம் நூற்றாண்டில் எழுந்த சிலப்பதிகாரத்தும் முந்தையவர் என்று முடிவு செய்துள்ளார். இதற்கு சங்க நூல் சான்றுகளையும் சூத்ரம் பாணியில் வள்ளுவர் குறள் அமைந்திருப்பதும் அதன் பழமைக்கு சான்று பகரும் என்கிறார்.
காலனியாதிக்கப் பேர்வழிகள் வள்ளுவரை கிறிஸ்தவராகவோ அல்லது கிறிஸ்தவர்களின் நண்பராகவோ காட்ட முயன்றதை எல்லாம் எடுத்துரைத்து அவைகளுக்கு ஆதாரமே இல்லை என்கிறார். ரெவரண்ட் லஸாரஸ் , எல்லீஸ் போன்றோரிம் அரும்பணிகளையும் மொழிந்துள்ளார்.
டக்டர் நாகசாமி ஆங்கிலம், தமிழ், ஸம்ஸ்க்ருதம் ஆகிய மூன்று மொழிகளில் வித்தகர். இப்படிப்பட்ட மும்மொழி அறிஞர்கள் தமிழகத்தில் மிகமிகக் குறைவு.
அவரே புஸ்தகத்தை முடிக்கும் முன் ‘புல்லட் பாயிண்டு’களில் ஒரு சுருக்கத்தைக் கொடுக்கிறார். அதில் அவர் சொல்லுவதாவது: ஸம்ஸ்க்ருதத்தில் உள்ள சாஸ்திரங்களை அறியாதோர் திருக்குறளை நன்கு விளங்கிக் கொள்ள முடியாது என்று சொல்கிறார்.
உ,வே.சா.வின் நாடக வழக்கு, மு.வ.வின் கருத்துக்கள் பற்றி யும் அலசி ஆராய்கிறார் டாக்டர்.
ஸம்ஸ்க்ருத குறிப்புகளை ஸம்ஸ்க்ருதத்திலேயே மொழிபெயர்ப்புடன் கொடுத்திருப்பது எல்லோருக்கும், குறிப்பாக தமிழ் பேசாத வட இந்தியர்களுக்கு ஆசிரியர் எதை ஒப்பிடுகிறார் என்று அறிய உதவும்.
இவ்வளவு பெரிய ஆராய்ச்சி விஷயங்கள் அடங்கிய நூலுக்கு இவ்வளவு குறைவான விலை நிர்ணயித்தது தமிழர்களுக்கும் வட இந்தியர்களுக்கும் ஒரு வரப்பிரசாதமே.
ஜி.யூ.போப், லஸாரஸ், எல்லீஸ் போன்றோர் பற்றி இவ்வளவு விரிவாக எங்கும் காணமுடியாது. Drew ற்றூ என்னும் ஆங்கிலேயர் திருக்குறளின் காமத்துப் பாலை மொழிபெயர்க்கவே முடியாது அவ்வளவு ஆபாசமானது. இதை மொழிபெயர்த்தால் வள்ளுவரின் பேர் ‘ரிப்பேர்’ ஆகிவிடும், மானம் விமானத்தில் பறந்து விடும், கதி ‘சகதி’ ஆகிவிடும் என்று கருதியதையும் டாக்டர் நாகசாமி சுட்டிக்காட்டியுள்ளார். ஆரம்பகால வெள்ளையர்கள், தமிழ் இலக்கிய அகத்துறைப் பாடல்களை ஆபாச இலக்கியம் என்று கருதியதைப் பார்க்கும்போது நமக்கு சிரிப்புதான் வரும்.

திருக்குறளைப் போன்ற ஒரு ரத்தினம் தமிழ் இலக்கிய உலகில் இல்லை என்று அடித்துக் கூறி வான்புகழ் வள்ளுவனின் புகழை மேலும் பரப்புகிறார் டக்டர் நாகசாமி .
அனைவரும் வாங்கிப் படித்து பாதுக்காக வேண்டிய நூல். தள்ளாத வயதிலும் தமிழ் பரப்பும் டாக்டர் நாகசாமி , தமிழ் தாத்தா உ.வே.சா.வை நினைவு படுத்துகிறார் என்றால் மிகையாகாது.
வாழ்க வள்ளுவர்!! வளர்க டாக்டர் நாகசாமி . புகழ்.
Details of the Publication:
Tirukkural- An Abridgement of Sastras
Dr R Nagaswamy
December 2017
Pages 248, Price Rs.150
Published by Tamil Arts Academy and Giri Trading Agency Private Limited
Contact: www.giri.in
-சுபம்-