ஸ்ரீ ராமரிடமுள்ள ஐந்து வீரங்கள்!

ram-with-dwaja

Article No.2009

Written by London swaminathan

Swami_48@yahoo.com

Date : 22  July 2015

Time uploaded in London : 8-07 காலை

 

இராம பிரானைப் பற்றி உலகம் முழுதும் 300-க்கும் மேலான வெவ்வேறு வகையான ராமாயணங்கள் இருப்பதை முன்னரே எழுதியுள்ளேன். இது தவிர கம்பன், வால்மீகி, துளசிதாசர் ஆகியோர் கூறாத சில சம்பவங்கள், சங்க இலக்கியமான புறநானூற்றில் இரண்டு பாடல்களில் இருப்பதையும், ஆழ்வார் பாடல்களில் மேலும் சில சம்பவங்கள் இருப்பதையும் காட்டினேன். இப்பொழுது உதிரியாக உள்ள ஒரு பாடல் ராமனை எப்படி வருணிக்கிறது என்று காண்போம்.

உலகில் மற்ற நாடுகளில் ஏ.கே.47 துப்பாக்கியாலும் ‘மிஷின் கன்’ எனப்படும் இயந்திரத் துப்பாக்கியாலும் அதிகம் பேரைச் சுட்டுக் கொல்லுவோருக்கு ‘பெரிய வீரன்’ பட்டம் கொடுப்பார்கள். ஆனால் இந்தியாவில் “புலன் ஐந்தும் வென்றான் தன் வீரமே வீரம்” என்று அவ்வையார் பாராட்டுவதை இரண்டு மஹாவீரர்கள் (மஹா வீர அனுமன், சமண தீர்த்தங்கரர் மஹாவீரர் ) பற்றிய கட்டுரையில் தந்தேன்.

ராமனிடம் ஐந்து விதமான வீர குணங்கள் உள்ளன. இவைகளைப் பின்பற்ற ஒருவனுக்கு மஹா வீரம் தேவை. ஏனெனில் கஷ்ட திசையில் மாட்டிக் கொண்ட நல்லவர்களும் கூட, எளிதில் வழுக்கி விழ வாய்ப்பு உண்டு. ஆனால் ராம பிரானோ எவ்வளவு இடர்ப்பாடுகள் வந்த போதிலும் தர்மத்தின் வழியையே கடைப் பிடித்தான். அதனால் அவனிடம் ஐந்து நற்குணங்கள் இருப்பதாகப் புலவர் பெருமக்கள் போற்றுவர்:-

rama-travel

தியாக வீரம்

கைகேயியின் வசப்பட்ட தசரதன் சொல்லிய சொல்லுக்காக, அந்த சத்ய பராக்ரமன் ராமன், தனக்குக் கிடைக்கவேண்டிய பெரும் அரச பதவியைத் தியாகம் செய்தான். இதைவிடப் பெரிய தியாகம் உளதோ! அப்பா, அம்மாவை எதிர்த்து போர்கொடி தூக்குவோம் என்று சூளுரைத்த லெட்சுமணனை அமைதிப்படுத்தி அவனையும் தன் வழிப்படுத்தினான்.

 

தயாவீரம்

வேடர் குலத் தலைவனான குகனையும், குரங்கினத் தலைவனான சுக்ரீவனையும், அரக்கர் குல விபீஷணனையும் தனது சஹோதரர்களாக ஏற்றான். சாதி, குல வேற்றுமைகளை மிதித்து நசுக்கிய முதல் மாவீரன் அவன். எல்லோரிடமும் தயை என்னும் இரக்கம் காட்டினான். சபரிக்கு மோட்சம் கொடுத்தான். மாபெரும் தவறு இழைத்த அஹல்யைக்கு சாப விமோசனம் அளித்தான்.

 

வித்யாவீரம்

அவனுடைய விவேகம், வித்யா வீரம் எனப்படும். போர்க்களத்தில் ஆயுதங்களை இழந்த இராவணனைக் கொல்லாது “இன்று போய் நாளை வா” — என்று இயம்பினான். சீதையை ஒப்படைத்தால் உயிர்ப்பிச்சை போடுவதாகக் கூறினான். ஒரு வண்ணான் சொன்ன சொல்லை மதித்து, தனது மனைவியின் தூய்மையை, கற்பினை நிலநாட்ட அவளை பூக்குழி இறங்க உத்தரவிட்டான். ஜனநாயகக் கொள்கைகளை நடைமுறைப்படுத்திய முதல் தலைவன் அவன். இராமன் இருக்கும் இடத்தில் காமன் இரான்.

 

பராக்ரமவீரம்

21 தலை முறை க்ஷத்ரிய மன்னர்களை அழித்த பரசுராமனையும் வெற்றி கொண்டு தனது பராக்ரமத்தை நிலநாட்டினான் ராமன். ஏழு மராமரங்களை ஒரே அம்பினால் துளைத்ததோடு, ஏழு கோடி அவுணர்களையும் அழித்தொழித்தான். ராவண சம்ஹாரம், அவனது வீர பராக்ரமத்துக்கு முத்தாய்ப்பாக அமைந்தது.

தர்மவீரன்

“இந்த இப்பிறவியில் சிந்தையாலும் இருமாதரைத் தொடேன்” என்று புதுநெறி புதுக்கிய நாயகன் அவன். எல்லா அரசர்களும் பல மனைவியரை மணக்க, சீதையைத் தவிர வேறு ஒரு பெண்ணை சிந்தையாலும் தொடாதவன் அவன். சத்திய நெறி தவறாதவன்

அவன் ஸ்ருதபாஷி= உண்மை விளம்பி

அவன் மிதபாஷி = குறைவாகப் பேசுபவன்

அவன் ஹித பாஷி = இனிமையான சொற்களையே நவில்வான்

பூர்வபாஷி = சிறிதும் தலைக் கனம் இல்லாமல் தானே வலியச் சென்று நலம் விசாரிப்பவன்.

 ராமன்

இதோ அவனைப் புகழும் பாடல்:

பஞ்சவீரா:சமாக்யாதா ராம ஏவ து பஞ்சதா

ரகுவீர இதி க்யாத: சர்வ வீரோப லக்ஷண:

 

வாழ்க இராமபிரான் திரு நாமம்! வளர்க அறம்!!